Friday, September 25, 2015

தொலைக்காட்சியெனும் அடையாளம்

     இன்று ஓலைக்குடிசையில் கூடத் தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கும் தொலைக்காட்சியானது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை செல்வச்சீமான்களுக்கே உரித்தானதாயிருந்தது; மெதுமெதுவாகப் பரவிய இப்பெட்டியில் வந்துகொண்டிருந்த தூர்தர்ஷன் என்னும் இணைப்பைப் பார்ப்பது மானிடப்பேறாக இருந்த காலம் மறைந்து, ‘கேபிள்என்னும் அதிசயம் பட்டிதொட்டியெங்கும் ஊடுருவத்தொடங்கியிருந்தது, பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து. தெருவில் இருந்த கேபிள் இணைப்பு கொண்ட ஒரே வீட்டில் ‘ஜீபூம்பாஎன்னும் நாடகத்தைப் பள்ளிக் குழந்தையாக நான் பார்த்தது பசுமரத்தாணியாக மனதில் பதிந்துள்ளது.

            எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பது, வானில் ‘ஹேலி வால்நட்சத்திரத்தைப் (Halley’s Comet) பார்ப்பதைப் போல மிக அபூர்வமாக நடக்கும் ஒரு நிகழ்வு. ‘ஒலியும் ஒளியும், ‘அமுதசுரபிபோன்ற நிகழ்ச்சிகளைக் குடும்பத்துடன் கண்டுகளித்த கடைசி தலைமுறையைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்போதுமே தனிப்பெருமை உண்டு. நான் எல்.கே.ஜி படித்துக்கொண்டிருந்தபோது தெருவில் ஒரு வீட்டில் மட்டுமே இருந்த இந்த கம்பிவட்த் தொலைக்காட்சி (Cable TV) அடுத்த ஓராண்டுக்குள் அத்தியாவசியான அம்சமானது காலத்தின் விளையாட்டு. 2003 கோடைக்காலத்தில் பெற்றோரிடம் நாங்களும் (நானும், அண்ணனும்) நச்சரிக்கத்தொடங்கினோம். காரணம் கிரிக்கெட் உலக்க் கோப்பை நெருங்கிக் கொண்டிருந்தது. 1983ல் தொடங்கி மட்டைப்பந்து இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. கபில் தேவ் செய்த அச்சாதனை, 20 வருடங்களாக நினைவுச் சின்னமாகவே மனதில் தேங்கிக்கொண்டிருந்தது இந்தியர்களிடம். அந்த ஏக்கம் வெறியாக இளம்பருவத்தினரிடம் தோன்றியதற்குச் சாட்சி, நானும் என் அண்ணனும்.

     சரி. ஆனா ரெண்டு மாசம்தான். வேர்ல்டு கப் முடிஞ்சவுடனே டிஸ்கனக்ட் பண்ணச் சொல்லிடுவேன்” என்ற தந்தையின் கறாரான
ட்டளைக்கு இணங்கினோம். உலகக் கோப்பையை இந்தியா வெல்லவில்லை; ஆனால், எங்கள் கனவான நிரந்தர கேபிள் இணைப்பு வென்றது. இதுதான் கேபிள் டி.வி எங்கள் வீட்டில் கால்பதித்த கதை.

            கேபிள் வந்த பிறகும் அந்த சிறிய பி.பி.எல் தொலைக்காட்சியில் எட்டுச் சேனல்கள் மட்டுமே வரும். பள்ளியில் நண்பர்களனைவரும் டின்டின், ஸ்கூபிடூ கார்ட்டூன்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, நான் வாண்டுமாமா சிறுகதைப் புத்தகங்களில் மூழ்கியிருந்தேன். அப்போது வந்த புதிய வகைத் தொலைக்காட்சிகளனைத்தும் ‘எஸ் பேண்ட்’ (S Band) என்னும் அதிக அலைவரிசை வகையறாக்களாக இருந்தன; ஆனால் எங்கள் வீட்டிலிருந்த BPL ப்ரைம் பேண்ட் (Prime Band) என்னும் ஹைதர் காலத்து வகையைச் சேர்ந்தது. இன்றும் நான் தொலைக்காட்சிக்கு அடிமையாகாமல் இருப்பதற்கு நன்றிக்கடன் பட்டிருப்பது மூன்று காரணிகளுக்கேயாகும் – அம்மா, அப்பா, அந்த அரதப்பழைய தொலைக்காட்சி.

     எங்கள் பகுதி ஆபரேட்டராக இருந்த கோபு அண்ணனுக்குத் தெரியும் அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்கிறவர்களென்று. அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் வருவார் மாதக்கட்டணம் வசூலிக்க. பின்வருபவை மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் நிகழ்வுகளின் வரிசை:

1)      சனிக்கிழமையும் அலுவலகத்திற்குச் செல்பவர்களாதலால், ஞாயிறுகளில் வீட்டுவேலைகள் அனைத்தும் இழுத்துக்கட்டிச் செய்யும் வழக்கம் இருந்தது என்னைப் பெற்றவர்களிடத்தில். துணிதுவைத்து, ஒட்டடை அடித்து, பீரோவில் துணிமணிகளை நாள் பிரகாரம் அடுக்கி, அடுக்களை அலமாரிக்குச் செய்தித்தாள் மாற்றி, காலைச் சாப்பாடு சாப்பிடும்போதே கடிகாரத்தின் சிறிய முள் ஒன்றாம் எண்ணைக் காட்டும்.
2)      சிறிது நேரம் கூடத்திலேயே கண்ணயரும் இருவரையும் எழுப்புவது கோபு அண்ணனின் குரல். அரைத்தூக்கத்தில் எழும் இவர்களின் செவிக்கு எட்டும் அடுத்த வாசகம், “சன் டி.விக்காரன் வந்துட்டான் பாருடி ஜெயஸ்ரீஎன்னும் பாட்டியின் குரலாகத்தான் இருக்கும்.

                                                         ******************

     பாட்டிக்கும் தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வம் பெரிதாகக் கிடையாது. கண்பார்வை நன்றாகத் தெரியுமாதலால், செய்தித்தாள் படிப்பதிலேயே நாளின் பாதிப்பொழுது கழியும் அவருக்கு. இருந்தாலும், அம்மம்மா ஊரிலிருந்து வந்தால், தொலைக்காட்சியை நிறுத்தவே முடியாது. (இவ்வளவு நேரம் பேசப்பட்டுக் கொண்டிருந்த பாட்டியானவர் அப்பாவின் அத்தை) அம்மம்மா சன் டி.வியை வாழ வைத்துக் கொண்டிருந்த, கொண்டிருக்கும் பல லட்சம் தமிழ்ப்பெண்மணிகளில் ஒருவர். ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள், ‘சித்தியில் தொடங்கி, ‘வம்சம்’, ‘வள்ளி’, ‘வாணி ராணிவரை அனைத்துத் தொடர்களையும் பார்த்து, அவையனைத்தையும் நினைவில் வைத்திருக்கும் அபூர்வப்பெண் (இதில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு தொடரில் வரும் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை, தஸ்தவெய்ஸ்கியின் ‘காரமசோவ் சகோதரர்களையே மிஞ்சிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது)

     அம்மம்மா கடலூருக்கு வந்தால், அவருடன் பாட்டியும் சேர்ந்து இத்தொடர்களைப் பார்க்க அமர்ந்து விடுவார். இதில் பெரிய தர்மசங்கடம் பாட்டிக்கு இருக்கும் ஆர்வம்தான். அம்மம்மா பல மாமாங்கங்களாகப் பார்த்து வரும் தொடர்களின் சாரங்களை ஒரே நாளில் அறிய முயற்சிப்பார் பாட்டி. “இவன் யாரு, இப்போ வந்தாளே அவளோட ஆம்படையானா?”, “அவ எதுக்கு இப்பொ அழறா?”, “இவளோட அப்பா இல்லையா? எப்போ செத்துப் போனார்?போன்ற கேள்விக் கணைகள் அம்மம்மாவைத் துளைத்தாலும் முடிந்தவரை பொறுமையாகப் பதிலளிப்பார் அவர்.

     அம்மம்மா டி.வி பார்ப்பதால் சில நேரங்களில் இந்தியா விளையாடும் கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்க்கும் பொன்னான தருணங்களை இழந்திருக்கிறேன். ஆனால், பாட்டி அம்மம்மாவிடம் கேட்கும் தொடர்களைப் பற்றிய சம்பந்தமில்லாத வினாக்கள் அந்த இழப்பை மீறிச் சிரிப்பை வரவழைக்கும்.

     சில நேரங்களில் பாட்டியும் எங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் பார்ப்பார். யாரைப் பார்த்தாலும் “இவன் சச்சின் மாதிரியே இருக்கான்டாஎன்று சொல்வார் (இவ்வாக்கியம் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா விளையாடும் ஆட்டங்களின்போதும் வெளிவரும். ஒருமுறை, ரமேஷ் பவாரைப் பார்த்துப் பாட்டி சச்சின் என்று சொன்னதுதான் உச்சக்கட்டம்). இந்தியர்கள் அடித்து ஆடும்போது கத்தும் என்னைப் பார்த்து, “என்னடா... ச்ச்சின் ஜெயிச்சுட்டானா?என்றும், எதிரணியினர் முன்னேறி வந்தால் சோகமாக இருக்கும் எங்களைப் பார்த்து, “சேவான் தோத்துட்டானா?என்றும் அக்கறையாக விசாரிப்பார் (சேவாக்கைப் பாட்டி சேவான் என்றுதான் கூறுவார்). அவரைப் பொறுத்தவரை, ஒரு ஆட்டத்தில் ஓரணி பலமுறை வெல்லும் என்பதே முடிவாக இருந்தது. எதிரணியின் ஒரு விக்கெட் விழும்போதும் நாங்கள் கத்தினால், இந்தியா ஒருமுறை வென்றுவிட்டது என்று பொருள் பாட்டிக்கு.

                                                          ******************

     கேபிளின் தரம் குறைந்துகொண்டே வந்ததால் இரு ஆண்டுகளுக்கு முன்பு DTH இணைப்பு வீட்டில் கொண்டுவரப்பட்டது. பாட்டியின் கண்பார்வை குறைந்தபடியால், மாலை வேளைகளில் படிக்க முடிவதில்லை. வயோதிகத்தின் தனிமை அவரைத் தொலைக்காட்சியின் பக்கம் இழுத்திருக்க வேண்டும். நானும் சென்னையில் இருப்பதால் அவருக்குப் பேச்சுத்துணை குறைந்திருப்பது, நான் கடலூருக்கு வரும்போதெல்லாம் அவர் நிறுத்தாமல் பேசுவதிலேயே தெரிகிறது. “இப்பொல்லாம் டி.வியப் போட்டா யாரோ ஒரு பொம்பணாட்டி சப்பாத்தி பண்ணிண்டேயிருக்கா. இல்லன்னா, யாரோ ஒரு பையன் கலர், கலரா வெவ்வேற சட்டை – பேண்ட் போட்டுண்டு வந்து நிக்கறான். மாத்தவே தெரியல எனக்குஎன்று DTHன் Home Channelல் வரும் விளம்பரங்களைப் பற்றி வெகுளியாக விளக்குவார். கேபிள் ரிமோட்டை இயக்க அவருக்குச் சொல்லிக் கொடுத்தபின், அவருக்குப் பெரும் மகிழ்ச்சி. அவருக்காகவே இன்றுவரை கேபிள் இணைப்பைத் துண்டிக்கவே இல்லை. இப்போது புதுயுகத்தில் தோன்றும் ‘சனீஸ்வரன்’, ‘நாயன்மார்ஆகிய தொடர்களையும், ஜெயா டி.வியில் ஒளிபரப்பப்படும் ‘ஜெய் வீர ஹனுமான்’, ‘ராமாயணம்ஆகிய தொடர்களையும் விடாது பார்க்கிறார்.

                                                           ****************


     தொலைக்காட்சி நல்லதா, கெட்டதா என்னும் தர்க்கத்துக்குள் நுழைய எனக்கு விருப்பமில்லை. என்னைப் பொறுத்தவரை, என் குழந்தைப்பருவத்தையும், பாட்டியின் முதுமையையும் இணைத்த ஒரு முக்கியப் புள்ளி இப்பெட்டியேயாகும்.

6 comments:

  1. Giri u r always mass da...itha padikumpothu than Enaku Paati Ila apdinu lyta feel Panan...Even tears came n my eyes....u r so lucky da...:)

    ReplyDelete
    Replies
    1. I don't know who this is. But, thanks for your comments, Anonymous. Glad you liked it and it feels even more special that you could relate the post to yourself. That's what gives complete satisfaction to someone who writes :) Keep following!

      Delete
  2. Triggered a lot of memories. Enjoyed reading, especially in Tamil. Thanks for the post Giri :)

    ReplyDelete
    Replies
    1. Thanks for taking time off to read this. Glad you liked it. Keep following and encouraging!!

      Delete
  3. Very good one Giri...My grandpa also watches serials all the time to evade loneliness.. have to spend more time with him :-)

    ReplyDelete
    Replies
    1. Every old soul has this fear of solitude. And mostly, the grandchildren are the perfect reservoirs for them to vent out their buried emotions and feelings. Thanks for the read. Keep following !!

      Delete