Sunday, February 28, 2016

கவிதையின் வாயிலிலே...

அம்மா சுடும் தோசையின் வாசம் போல
வண்டிச் சத்தம் கேட்டு ஓடி வரும் பூனை போல
எளிதில் நா பழகும் தாய்மொழி போல
எங்கும் இருக்கும் நட்பைப் போல
எளிதில் வருவதில்லை எழுத்து…

சில பல எழுத்துக்கள் அங்குமிங்குமாய் ஓட
கிறுக்கல்களாய் கிழிந்த தாள்கள்
கலவையாய் விழுந்த வார்த்தைகள்
அர்த்தமற்றுப் போன வாக்கியங்கள்

பட்டாம்பூச்சி பிடிக்க எண்ணும் குழந்தை போல
படாடோப வாழ்க்கைக்கு ஏங்கும் மனிதன் போல
கோர்வையாய் கைகூடாத வார்த்தைகளுக்காக
ஏங்கியபடி நிற்கும்போதும்
இரக்கமின்றி நில்லாமல் செல்கிறது காலம்

கல்லாய் இருக்கும் சொற்கள்
சிறந்த சிற்பியைத் தேடி அலைகின்றன
கவிதையெனும் சிற்பமாய் மாற
ஆனால்
அற்பமாய் மாட்டின என்னிடம்

சிறுகச் சிறுகச் சேமித்த சொத்தாக
சிலந்தி வலையாக
எறும்புப் புற்றாக
என்னிடம் இருப்பவை வார்த்தைகள்தாம்
கவிதைகளல்ல

4 comments:

  1. கவிதை இல்ல கவிதை இல்லனு சொல்லிட்டு அருமையா எழுதிருக்கியே !!
    வார்த்தைகளை முறையே அல்லது முறை இல்லாமல் தொடுத்து எழுதுவதே கவிதை !!
    வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. Mikka nandri nanbaa... Kavidhaikku nalla vilakkam koduthamaikku nandri. Thodarndhu vaasikkavum :)

      Delete