Sunday, October 1, 2017

கடவு

என்ன சார், வெளையாடுறீங்களா, கை நீட்டிக் காசு வாங்குனீங்கல்ல? இப்போ நாளைக்கே வேணுமான்னு புதுசாக் கேக்குறீங்க?”
சரி தம்பி, நான் இங்க முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்றேன். நீங்க ஆஃபீஸுக்கு வாங்க; பேசுவோம்.”

காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து கிளம்பி  பாஸ்போர்ட் ஏஜண்டின் அலுவலகத்திற்குப் புறப்பட்டான். மனத்தில், “நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க தம்பி. அப்பா சொல்லிட்டார், நான் கண்டிப்பா ஏற்பாடு பண்ணிக் குடுக்குறேன். ஃபர்ஸ்ட் ஃபாரின் டூர் போகப் போறீங்க. நீங்க ஆக வேண்டிய ஏற்பாட்டப் பாருங்க. இது என்னோட பொறுப்புஎன்று 15 நாளுக்கு முன்பு அவர் நீட்டி முழக்கிப் பேசியது வந்துகொண்டே இருந்தது.

கூடவே இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்களும்

***

என்னப்பூ, மழை சொளையா வரும்னுல்லா பேப்பர்ல போட்ருக்கான்? பெஞ்ச மழைக்கே சென்னை காலியாம்லா? நம்ம ஊருக்கு இதெல்லாம் பழக்கப்பட்ட விஷயம். டீ.வி.க்காரனுக்கும், பேப்பர்காரனுக்கும் சென்னைன்னா மட்டும் கீழ நட்டுக்கிட்டு ஒரு கிளுகிளுப்பு வந்துடும் போல. மொட்டமாடில இருந்து குஞ்சாமணி தெரியச் சின்னப்பய ஒண்ணுக்கு விட்டாக் கூட, ஆஹா ஓஹோன்னு, மழையாம் புயலாம்னு செய்தி போடுவானுவோ” – கடலூர் மாவட்டச் செய்தியைப் படித்துவிட்டு அரற்றினார் அண்ணாச்சி.

வானம் இருட்டிக்கொண்டு நின்றது. காலை 11 மணி என்று சொன்னால் கடிகாரம் கூட நம்பாது எனுமளவிற்கு விடியாத காலையாய், முடியாத மாலையாய் சோம்பல் முறித்தது. சிகரெட்டுகளும், தேநீர்க் கோப்பைகளுமாக ஊர்ப் பெருசுகளும், எளவட்டங்களும்உருப்படாத ஊர்கூடிச் சங்கமாய்த் திரண்டிருந்தனர். ஒரு வாரமாய்ப் பெய்த மழையில், ஏற்கனவே அறைகுறையாய் இருந்த சாலைகள், தரைமட்டமாயிருந்தன.

மின்னிமின்னி எரிந்து கொண்டிருந்த ஒரே ஒரு குண்டு பல்பும், மின்வெட்டில் அணைந்தது. “இந்தா, கட் பண்ணிட்டானுவோ! கல்யாண மண்டபத்துல தெளிக்குற பன்னீரு தப்பித் தவறி ரோட்டுல தெளிச்சிட்டாக் கூட, ‘மழைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைன்னு இங்க மட்டும் கரண்ட்ட கட் பண்ணி வயித்தெரிச்சலக் கொட்டிக்கிறானுவோஎன்று புலம்பியபடியே சிகரெட் பற்றவைக்க ஏதுவாக நுனியில் நெருப்பு எரிந்துகொண்டிருந்த கயிறெடுத்து, மெழுகுவர்த்தியைப் பற்றவைத்தார் அண்ணாச்சி.

ரெண்டு வடை குடுங்க அண்ணாச்சி, நான் கெளம்புறேன்என்றபடியே முப்பது ரூபாயை நீட்டினான், குடித்த தேநீருக்கும் சேர்த்து. வீட்டில் தங்கியிருக்கும் தேவனாம்பட்டினக்கார்கள் இருவருக்கும் ஒவ்வொரு வடை வீதம் கொடுக்க வேண்டும் என்பது மனக்கணக்கு. வானம் லேசாகத் தூறத் தொடங்கியது. கையில் உறைத்த வடையின் சூடும், மெல்ல மெல்லத் தோளிலும், முகத்திலும் விழுந்த மழைத்துளிகளுமாக ஏகாந்தமாயிருந்தது அவனுக்கு. சீழ்க்கையடித்துக் கொண்டே வீடு திரும்பினான்.

மழை பெய்தால் கடற்கரையோரம் இருப்போர், குடியிருப்புகளைக் காலிசெய்து, முகாம்களிலும், பள்ளிகளிலும், அடைக்கலம் கொடுக்கும் வீடுகளிலும் தஞ்சம் புகுந்து விடுவர். கடலோடிகளான அவர்கள், உறங்கியெழத் தற்காலிக இடம் கிடைத்தாலும், உழைத்துச் சாப்பிட முடியாதபடி ஊனமாக்கிவிடும் மழை நிற்கும் வரை, சுயத்தையிழந்தோராய் அல்லல்படுவது பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், ‘நம்மளால வேற என்ன செய்ய முடியும்?’ எனும் நிஜம், வருவதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வழங்கியிருந்தது.

அடுத்த இரு நாட்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தனர். வீட்டுக்குள் தண்ணீர் வராது என்ற சூழ்நிலை இருந்தபோதும், பீரோக்களும், கட்டிலும் இடம் மாற்றப்பட்டன. பீரோவை நகர்த்த முயன்றபோது மேலடுக்கிலிருந்த புத்தகங்கள் சரிந்து கதவைப் பிளந்துகொண்டு விழுந்தன. தஞ்சம் புகுந்தவர்களின் சில பத்திரங்களையும் சேர்த்து அள்ளிப்போட்டு எப்படியோ ஒருவாறாக நகர்த்தியாயிற்று.

தங்கியிருந்தவர்கள் மீது பாட்டிக்கு ஆரம்பத்தில் நம்பிக்கை வராவிட்டாலும், போகப்போக வம்புக்கதை பேசுவதற்கு வசதியாய்ப் போய்விட்டபடியால், நட்பாகிவிட்டார். அவர்களது மீன்பிடி கதைகளும், இவரது கிராமத்து நினைவுகளுமாகச் சேர்ந்து மழையின் வருகையை மீறிய மண்வாசனையை மனத்திற்கு அளித்துக்கொண்டிருந்தது.

தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அறிவித்தது போலவே அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்தது. வீட்டு மேற்சுவர் காரை பெயர்ந்து ஒழுகத் தொடங்கியிருந்தது. ஆனால், அதெல்லாம் பெரிய சங்கடங்களாகத் தெரியவில்லை. ஒரு வாரத்திற்கான மளிகைச் சாமான்களும், காய்கறிகளும் இருந்தமையால் அறுசுவை உணவு பஞ்சமின்றிக் கிடைத்துக்கொண்டிருந்த்து அம்மாவின் கைவண்ணத்தில். இடையிடையே சூடான வாழைக்காய் பஜ்ஜியும், வடைகளுமாய் அந்த ரணகளத்துக்கிடையேயும் கிளுகிளுப்பாகவே இருந்தது. மின்சாரம் இல்லாததால் சாம்பாரும், சப்பாத்தியுமென மிக்ஸி, கிரைண்டர் பயன்பாடு இல்லாமல் நாட்கள் நகர்ந்தன. ஒன்றிரண்டு முறை அம்மா வேலை மெனக்கெட்டு அம்மியில் தேங்காய்ச் சட்னி அரைத்ததும், அதனால் வந்த முதுகு வலிக்காக அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட்தும் தனிக்கதை.

ஒரு வாரம், பத்து நாளைக்கு மின்வெட்டு இருந்தபோதும், வீட்டுத் தோட்டத்தில் இருந்த அடிகுழாய் தெருவிற்கே தண்ணீர் தந்துகொண்டிருந்தது. “எப்போப் பாத்தாலும் உங்க வீட்டுத் தென்னைமரத்துல இருந்து எங்க மாடியில தேங்கா விழுந்துட்டே இருக்குஎன்று  அடாவடி செய்து, முகத்தைக் கோணும் பக்கத்து வீட்டு மாமி கூட, மீசையில் மண் ஒட்டாத கதையாக, வேறுவழியின்றித் தண்ணீர் நிரப்பிச் சென்றார். தெருவில் இருந்த மற்ற இளசுகளுடன் சீட்டுக்கட்டும், சதுரங்கமுமாய்க் கடந்தது மழைக்காலம்.

தண்ணீர் வடியத் தொடங்கியது. மின்சாரம் வந்தபாடில்லையெனினும், முக்கியமான வங்கிகள் மற்றும் பள்ளிகளுக்கு மட்டும் எப்படியோ பிரயத்தனப்பட்டு ஏற்பாடு செய்துவிட்டிருந்தனர். வந்த விருந்தினர் விடைபெற்றுக் கிளம்பினர். “எல்லாம் பத்திரமா இருக்கான்னு பாத்துக்கோங்கஎன்று அம்மா சொல்லிக்கொண்டேயிருந்தார்.

இரண்டு, மூன்று வாரம் கழிந்த பின்னர், வீட்டை மீண்டும் பழையபடி மீட்டெடுப்பதற்கான வேலையைத் தொடங்கியபோதுதான் ஒரு விஷயம் உறைத்தது. அவனுடையதும், அம்மாவினுடையதுமாய் இரண்டு கடவுச்சீட்டுகள் தொலைந்திருந்தன.

நீதானே அங்க வெச்ச? நான் தானே சொன்னேன்?’ என்று அம்மாவும், அப்பாவும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தார்கள். கடைசியில் கவுன்சிலரிடம் ஆலோசனை கேட்பது என்று முடிவானது. “சார், ஒண்ணும் கவலைப்படாதீங்க. அதுக்குன்னு கேம்ப் மாதிரி போடுவாங்க. இப்போ அதெல்லாம் ஈஸி ஆயிடுச்சு சார்என்று தெம்பூட்டினார்.

அவர் சொன்னபடியே, ஊரில் மழை பெய்த சுவடே அழிந்தபின்னர், வெயில் சுட்டெரிக்கும் ஒரு நாளில் முகாம் அமைத்தார்கள். பதினைந்து நாட்களுக்கு முகாம் நடைபெறும் என்றும், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார், கடவுச்சீட்டு என்று தொலைந்தவை, தண்ணீரால் நனைந்தவை, நாசமாகப் போனவை மற்றும் இன்ன பிற இதர வகையறா என அனைத்திற்கும் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதுதான் சாக்கு என்று ஒரு மாமாங்கத்திற்கு முன்னால் பதிவுகளைத் தொலைத்த அனைவரும் கூட வரிசையில் நின்றனர். இவர்கள் விடாக்கண்டர்கள் எனில், வந்திருந்த அலுவலர்கள் கொடாக்கண்டர்கள் அல்லவா? பாலையும், நீரையும் பிரிக்கும் அன்னப்பறவை போல, “நீ வா, நீ போ, நீயெல்லாம் இந்தப் பக்கமே வந்துடாதஎன்ற ரீதீயில் தரம்பிரித்தனர்.


அம்மாவும், அவனும் படிவத்தை நிரப்பித் தந்துவிட்டு வீட்டிற்கு வந்தனர். “என்னப்பா ஆச்சு?” என்றபடி வண்டி துடைத்துக் கொண்டிருந்த அப்பாவிடம், “நாளைக்கு வரச் சொல்லியிருக்காங்கப்பாஎன்றான். ஆனால் அடுத்த நாள் காத்திருந்த அதிர்ச்சி அவனுக்கு அப்போதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment