மாலையிலேயே
முடிதிருத்தும் நிலையத்திற்குச் சென்று, அவன்
தனக்கு வேண்டியபடி முடிவெட்டிக்கொண்டான். “என்னடா இது கண்றாவியா இருக்கு?” என்ற
அம்மாவிடம், “நாளைக்குப் பாஸ்போர்ட் புதுசா வரப்போகுதுல்ல? மொதல் தடவ எடுக்கும்போதுதான் எனக்கு ஒண்ணும் தெரியாதுன்றதுனால அப்புடியே கூட்டிட்டுப் போயிட்டு ஃபோட்டோ எடுத்துட்டீங்க? இந்தத் தடவ நல்லா ஸ்டைலாப் போக வேணாமா?” என்று
சிரித்தான். “குடுத்தக் காசுக்கு முடியே வெட்டலையேடா சலூன்காரன்? நல்லா ஏமாத்திட்டான், ஒரு ஓரத்துல மட்டும் எலி மைசூர்பாகு கரம்பிவிடுற மாதிரி” என்று
புலம்பிய தாயிடம், “உனக்கு
ஐம்பது ரூபாய்க்குத் திருப்பதி மாதிரி மொட்டையா அடிச்சு விடுவாங்க?” என்று
சொல்லி வாயைடைத்தான்.
அடுத்த
நாள் காலையில் அம்மா எழுப்புவதற்கு முன்பாகவே எழுந்து நல்லெண்ணெய் தேய்த்துத் தலைக்குளித்து, பளபளவென்று டீ-சர்ட், ஜீன்ஸ் பேண்ட் சகிதம் தயாரானான். முகம்பார்க்கும்
கண்ணாடியைப் பார்த்துத் தலைவாரிய போது, “ரொம்பத்தான்
சீவிச் சிங்காரிக்குற, வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி. என்ன
மஞ்சத்தண்ணியா நடத்துறாங்க?” என்று சீண்டிய அம்மாவைக் கண்டுகொள்ளாமல், கருமமே கண்ணாகச் சிகையை அழகுபடுத்தினான்.
திண்ணையிலிருந்து
வண்டியை வெளிவாசலில் இறக்கி வைத்தான். வேகவேகமாக
இட்லிகளை அள்ளி வாயில் போட்டான். இவன்
சாப்பிடும் வேகத்தைப் பார்த்து, “ஏய், சால்னா, சால்னா” என்று ‘வெண்ணிலா
கபடிக் குழு’ திரைப்படத்தின்
பரோட்டாக் காட்சியைப் போல் நடித்துக் காட்டினாள் அம்மா. இட்லியை
விழுங்கியவாறு பரிதாபமான பார்வை ஒன்றைப் போலியாய்ப் படரவிட்டான். அதற்கு, ‘இட்லி
மட்டும் போதாது; உன்
கையால சூடாக் கொஞ்சம் தோசை போடேன்’ என்று
அர்த்தம். தாயுள்ளத்திற்குப்
புரிந்தது. சுடச்சுட
நெய்த் தோசை பரிமாறினாள். கெட்டித் தேங்காய்ச் சட்னியும், மொறுமொறு
தோசையுமாய் இனிதே தொடங்கியது அந்நாள்.
அப்பாவிடம்
வண்டி எடுத்துச் செல்வதைப் பற்றித் தனியாகச் சொல்லவில்லையெனினும், அது ஒரு மனமொழி. அப்பாவிற்கு
ஏற்கனவே புரிந்திருந்தது. “ஜாக்கிரதையாப் போயிட்டு வா டா. பொறுமையாப்
போ. மதியம்
லஞ்சுக்கு என்னை வந்து கூட்டிட்டு வந்துடு” என்றார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் மகிழ்ச்சியாகத் தலையாட்டினான்.
வாசலுக்கு
வந்து வண்டியை உதைத்து உயிரூட்டியபோது, “மா, பாத்துக்கோம்மா. பூனை எதுவும் இடதுல இருந்து வலதுக்குப் போல. ஒத்தை
ஆம்பள யாரும் தனியா நமக்கு எதிர்ப்பக்கம் வரல. இப்போ
போலாமா, இல்ல
நாளைக்குப் போய்க்கலாமா?” என்று கண் சிமிட்டினான். சகுனம் பார்க்கும் அம்மாவின் முகம் சற்றே சிறுத்தாலும், உடனே புன்னகையை உதிர்த்தாள். “போலாம்டா கண்ணா”.
முகாமை
அடைந்தபோது, நேரம் 9:55. 10 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும், அரைமணி நேரத் தாமதம் என்பது அரசாங்க அதிகாரியின் அகராதி அறம் அல்லவா? அதைப்
பின்பற்றி, அடியொற்றியே
பணிசெய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அவ்விதியை
உடைத்து 10:27-க்கே பணியைத் தொடங்கினர். ‘சொல்ல
மறந்த கதை’ திரைப்படம்
எடுக்கப்பட்ட ஆனந்த பவனிலிருந்து வந்திறங்கிய பொங்கலும், வடையும்
அவர்கள் வயிற்றுக்குள் சென்றிருந்தன.. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், அவர்கள் அன்று செய்த மூன்று நிமிடச் சாதனைக்குக் கடலூரில் மீண்டும் ஒரு மழை பெய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
இரவு முட்டக் குடித்துவிட்டு சுயநினைவுடனோ, தன்னிலை மறந்தோ கடைவாசலிலேயே மட்டையாகிவிட்டு, அடுத்த நாள் காலை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பதற்காக ஆவலோடும், தெளியாத
அரைபோதையோடும் தள்ளாடும் குடிமகன்களின் கூட்டம் போல், சட்டென
எங்கிருந்தோ ஒரு வரிசை உருவானது. முட்டி
மோதிக்கொண்டு, “சார், கொஞ்சம்
வழி விடுங்களேன்; ஆஃபீஸுக்கு பர்மிஷன் சொல்லிட்டு வந்துருக்கேன்” என்ற பணிவான வேண்டுகோள்களும், “என்ன சார்? அராத்து
பண்ணாதீங்க. நான்தானே மொதல்ல வந்தேன்?” என்ற ‘மீசையை முறுக்கு’தலும்
ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டிருந்தன.
கடவுச்சீட்டு
தொடர்பான வரிசையில் பெரிய கூட்டம் இருக்கவில்லை. படிவம் ஒன்றைக் கொடுத்து நிரப்பச் சொன்னார்கள். “எதுக்கும்மா மறுபடியும் ஃபில் பண்ணச் சொல்றாங்க?” என்று
கேட்ட என்னிடம், “ஷ்ஷ்…” என்றார் அம்மா. ஆனால்
அதற்குள் ஏதோ ஒரு ஜீவன், ‘மைண்ட்வாய்ஸ்’ என்று நினைத்துச் சத்தமாகப் போட்டுடைத்துவிட்டது. “நேத்துத்தான் ஒரு ஃபார்ம் வாங்குனானுங்க, இன்னிக்குப் புதுசா இன்னொண்ணு ஃபில் பண்ணச் சொல்லுறானுங்க. என்னக் கருமமோ?” என்று
சொல்லிமுடித்திருக்கவில்லை. “உங்களுக்குப் பாஸ்போர்ட் வேணாம்னாச் சொல்லுங்க. அப்புடியே
உங்கள வீட்டுக்கு அனுப்பிடுறோம்” என்றபடி முறைத்தார், காலையில் குளிக்காதவர் என்ற தோற்றத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஏற்படுத்திய அதிகாரி ஒருவர். அவர்
கூறிய சொற்களைக் காட்டிலும், முத்தாய்ப்பாக அவர் பார்த்த பார்வை, ”இதுவே
என் கட்டளை, என்
கட்டளையே சாசனம்” என்று
சொல்லாமல் சொல்லியது. அலப்பறையைக்
கூட்டிய ஆசாமி, அடங்கி
ஒடுங்கி படிவத்தைப் பூர்த்தி செய்யலானார்.
ஊர்த்திருவிழாவிற்கு
வந்த கச்சேரி வித்வான்களுக்குச் செய்யப்படும் மரியாதை போல், பெருந்திரளாக
மக்கள் கூடியிருந்த அவ்விடத்தில், ஒரு சிறிய கொட்டகை அமைத்து, அதிகாரிகள்
உட்கார்வதற்கு மட்டும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவசர ஆபத்துக்கு எந்த ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருக்கவில்லை. மின்விசிறிகளும் அவர்களுக்கு மட்டுமே ஏதுவாக வைக்கப்பட்டிருந்தன. ரேஷன் அட்டைக்காக நின்ற வரிசையைப் பார்த்தேன்; பல பாட்டிகளும், சில தாத்தாக்களும் நின்றிருந்தனர். வெகு சிலரே நடுவயது மதிக்கத்தக்கவர்களாகத் தென்பட்டனர். அவ்வரிசையைப் பார்த்தே, நியாய
விலைக் கடைகளின் முக்கியத்துவத்தைச் சொல்லிவிடலாம் எனுமளவிற்குக் கிழிந்த சேலைகளும், பரட்டைத்
தலைகளுமாகவே காட்சியளித்தது.
”ஒரு
ஹாஃப் அன் அவர் உக்காருங்க. கூப்பிடுறோம்” – பூர்த்தி செய்த படிவத்தை அளித்தபோது இவ்வாறு கூறினர். உச்சுக்கொட்டல்களும், முனகல்களும், ஆங்காங்கே கெட்ட வார்த்தைகளுமாக, “எங்கய்யா உக்கார்றது? இவனுங்க மட்டும் நல்லாச் சொகுசாக் குண்டியத் தேய்ச்சுக்கிட்டு உக்காந்துடுறாங்க” என்ற பேச்சுக்கள் எழுந்தன. இதற்கிடையில்
ரேஷன் வரிசையில் நின்றிருந்த ஒரு மூதாட்டி மயங்கி விழவே, பரபரப்பு
ஏற்பட்டது. அம்மாவும், நானும் பதறியடித்து ஓடினோம். நல்ல
வேளையாக யாரோ ஒரு கரிசனக்காரர் அங்கிருந்தார். “உடனே கூட்டமாக் கூடாதீங்க. நல்லாக்
காத்து வேணும் அவங்களுக்கு” என்றபடி கூட்டத்தை விலக்கினார். அருகிலிருந்த ஏதோ ஒரு வீட்டிலிருந்து யாரோ ஒருவர் தண்ணீர் வாங்கி வந்தார். அதற்குள் அந்த வீட்டிலிருந்தே ஒரு பெண்மணி வந்து, “ ஒரு ரெண்டு பேரு தாங்கலா வந்து எங்க வீட்டுல விட்டுட்டுப் போங்க சார். நான்
பாத்துக்குறேன்” என்றார். அவ்வாறே
செய்தனர்.
இப்பரபரப்பிலேயே
ஒரு பத்துப் பதினைந்து நிமிடம் கழிந்துவிட்டிருந்தது. ‘ஆனது ஆச்சு, நாம
வந்த வேலையைப் பாப்போம்’ எனும்
மனநிலைக்கு வந்துவிட்டிருந்தனர், வெயிலில் நின்றதால் வியர்வையில் நனைந்திருந்த அனைவரும். இதற்குள்ளாகவே
அதிகாரிகளுக்கு டீயும், சமோசாவும்
வந்தன. கூடியிருந்த
அனைவரும் பேசிய வசவுச்சொற்கள் அவர்களின் செவியில் ஏறியிருக்க வாய்ப்பில்லை. பொறுமையாகத் தேனீர் அருந்தித் தொண்டையைச் செருமி, ‘மக்களால்
நான், மக்களுக்காகவே
நான்’ என்ற
ரீதியில், “சார், உங்களுக்காகத்தான் வேலை மெனக்கெட்டு இப்போ இந்தக் கேம்ப் போட்டுருக்கோம். என்னமோ பொலம்புறீங்க?” என்று முழங்கினார் அதிகாரி. சமோசாவில்
இருந்த உப்புக்காரம் ‘வெ.மா.சூ.சூ’வைக் கொஞ்சம் கூடுதலாகத் தூண்டிவிட்டிருக்கக் கூடும்.
கணினித்
திரையைப் பார்த்துப் பார்த்து ஏதோ செய்து கொண்டிருந்தனர். மேலும் அரைமணிநேரம் கடந்தது. கூடியிருந்தவர்கள்
பொறுமையிழந்து அதிகாரிகளைக் கூடி நையப்புடைப்பதற்கான வாய்ப்புகள், வானில் ஒளிர்ந்த சூரியனைப் போலவே பிரகாசமாயிருந்தன. நீண்ட நேரம் நின்றமையால் ஒரு சிலர் ‘மளுக், மளுக்’ என்று
கையையும், கால்
விரல்களையும் சொடுக்கெடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் நகம் கடித்துக் கொண்டிருந்தனர். பலர் ‘தினத்தந்தி’யைப் பிரித்துவிட்டிருந்தனர். மேலும் சிலர், அதிகாரிகளை
வைத்தகண் வாங்காமல் பார்வையால் ஊடுருவிக் கொண்டிருந்தனர்.
பெயர்களைக்
கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்த அதிகாரிகள், சற்று நேரமாகவே யாரையும் கூப்பிடாததால், சற்றே சந்தேகம் வந்தது அம்மாவிற்கு. “எதுவும் பிரச்சனையோ?” என்று அருகிலிருந்தவரிடம் லேசாகக் கிளப்பிவிட்டார். காட்டுத்தீயாகப் பரவிய அவ்வினா, “சண்டாளனுவோ, அந்தப் போட்டியில என்னத்தத் தான் பாத்துக்கிட்டு இருக்கானுவளோ தெரியல” என்ற
விரக்திக் குரலில் தொடங்கி, “சார், என்ன தான் ஆச்சு?” என்று
விரவி, “யோவ், கேட்டுக்கிட்டிருக்கோம்ல? பதில் சொல்றானா பாரு ஒம்மாள” என்று
முடிந்தது. இரும்பிலே
ஒரு இருதயம் முளைக்குதல்லவா? அது போல, ஞானோதயம்
பிறந்து சுரணை வந்துவிட்டது அதிகாரிக்கு. “இங்க பாருங்க சார், சர்வர்ல
ஏதோ பிரச்சன. டேட்டா
எல்லாம் அப்லோடு ஆக மாட்டேங்குது. ரேஷனுக்கு வந்தவங்க எல்லாம் நாளைக்கு வாங்க, லைசென்ஸ்
வாங்க வந்தவங்க எல்லாத்துக்கும் அந்த ஃபார்மைக் குடுத்துடுறோம். ஆர்.டீ.ஓ. ஆஃபீஸுல
போய்ட்டுப் பாருங்க நாளைக்கு. அங்க
வினோத்னு ஒரு ஆளு இருப்பாரு. ஆதார், பாஸ்போர்ட்டுக்கு வந்தவங்க எல்லாம் திரும்ப ஃப்ரெஷ்ஷா அப்ளை பண்ணிக்கோங்க. டேட்டா ஜேம் ஆயிட்டதுனால கொழப்படி ஆயிடுச்சு. இங்க
வந்தவங்க எல்லாத்தோட விவரங்களையும் டேட்டாபேஸிலிருந்து எடுத்துடுறோம். நீங்க புதுசா அப்ளை பண்ணிக்கலாம்” என்றார்.
அப்பதில்
கோபத்தினால் வந்ததா, அல்லது
உன்மையிலேயே தொழில்நுட்பக் கோளாறா எனத் தெரியவில்லை; தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. அந்நொடிக்கான
கோபத்தைத் தூண்டிவிட்டிருந்தார் அதிகாரி. வாய்த்
தகராறு வாய்க்கால் தகராறாகி, வாய்க்கால்
தகராறு அடிபிடிச் சண்டையானபோது, காவல்துறையினர் வந்து சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
“என்னம்மா
இவ்ளோ இர்ரெஸ்பான்ஸிபிளா நடந்துக்குறாங்க?” என்று பொருமிய அவனிடம், “என்னப்பா
பண்றது? நடப்பது
எல்லாம் நல்லதுக்குன்னு நெனச்சுப்போம். எப்புடியும் இப்போதைக்குத்தான் நமக்குப் பாஸ்போர்ட் தேவையில்லைல்ல? மறுபடியும் அப்ளை பண்ணிப் பொறுமையா வாங்கிக்கலாம், விடு” என்றார். என்னைச் சமாதானப் படுத்தத்தான் அவ்வார்த்தைகளைச் சொன்னார் என்பது சோர்ந்து போயிருந்த அவரது முகத்தைப் பார்த்ததிலேயே தெளிவாகப் புரிந்தது. அவருக்கு
ஒருநாள் வேலை வீணாகப் போயிற்று; அவனுக்குக்
காலையில் செய்த சிகையலங்காரங்கள் அனைத்தும் விழலுக்கிரைத்த நீராகப் போயிற்று.
ஆனால், அன்று ஏற்பட்ட வெறுப்பினால் மீண்டும் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்காமலேயே விட்டது, இரண்டு
வருடத்திற்குப் பின் அவனைத் துரத்தித் துவம்சம் செய்யும் என்று அவனுக்கு அப்போது தெரியாது.
(தொடரும்)
No comments:
Post a Comment