கந்தன்சாவடிப் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற வேளச்சேரி நோக்கிச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கூட்ட நெரிசல் மிகுந்திருந்தன. அலுவலகத்திற்கு மிக அருகில் தங்கியிருந்த வீட்டைக் காலிசெய்துவிட்டு, வேளச்சேரியில் மழைக்காலத்தில் வீடு மாறிய தவற்றிற்காக வருந்திக்கொண்டிருந்த அவனுக்கு, தன்னைக் கடந்து செல்லும் ஒவ்வொரு ஏறமுடியாத பேருந்தும் எரிச்சலை வரவழைத்துக் கொண்டிருந்தது.
தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் வேலை செய்யும் இளைஞர்களும், அதே அலுவலகத்தின் அடித்தட்டு வேலைகள் செய்யும் மக்களும் பயணிக்கும் 102களையும், 119களையும் பார்த்தாலே, எவ்வித வரலாற்றுப் பின்புலமும் இல்லாமல் சமூக வேற்றுமைகள் அனைத்தும் சரிவரப் புரியும். கண்ணகி நகரிலிருந்து திருவான்மியூருக்கும், வேளச்சேரிக்கும் செல்லும் பேருந்துகளின் சத்தங்கள் அடக்கி வைக்கப்பட்ட சமூகத்தின் குரலுக்கான ஒரு வெளிப்பாடாகவே ஓ.எம்.ஆரின் தார்ச்சாலைகளில் பயணிக்கும்.
முதலில் கடந்து சென்ற ஓரிரண்டு பேருந்துகளில் ஏறாமல் விட்டதற்கு, "அது டிஜிட்டல் போர்ட்", "இது சுத்திப் போகும்" என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிச் சமாளிக்க முற்பட்டாலும், அதற்கு மேல் சுய ஆறுதல்கள் ஒத்துவரவில்லை. காரணமேயின்றி தன் கையில் இருந்த கைப்பேசியில் தொடங்கி, தன் அருகில் நின்றிருந்த அப்பாவிப் பெரியவர் வரை அனைவரின்/அனைத்தின் மீதும் அளவில்லாத கோபம் வந்துகொண்டிருந்தது.
"மணி என்னப்பா ஆகுது தம்பி?" என்று கேட்ட, சென்னையின் இயல்பு கண்டு மிரண்டு போயிருந்த, ஐம்பது கடந்த மனிதர் ஒருவரை எரித்துவிடுவதைப் போல் பார்த்தான். இவனது பார்வை அவரது மிரட்சியைக் கூட்டியிருக்க வேண்டும்; நகர்ந்து சென்று ஒதுங்கிக் கொண்டார்.
வெறுப்பின் உச்சக்கட்டத்தில் இருந்தவன், தொடர்ந்து வந்த ஒரு கூட்டமான பேருந்தில் ஏறினான்.
நெரிசல் காரணமாகவும், விடலைப் பருவத்தின் விட்டேத்தி மனோபாவத்தின் விளைவாகவும் படிக்கட்டில் தொங்கிக்கொண்டிருந்த பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஏறிய அந்த ஓரிரண்டு நொடி இடைவெளியில் முடிந்தவரை உள்ளே முன்னேறிச் செல்ல முண்டியடித்தான். முக்கி, முனகிப் பார்த்தாலும் இரண்டாவது படியைத் தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை.
மடிக்கணினியைச் சுமந்துகொண்டிருந்த முதுகுப்பை கடைசிப் படிகளில் தொங்கியவர்களின் மூக்கிலும், முகத்திலும் உரசியதால் எழுந்த முனகல்கள், "பையைக் கழட்டித் தொலையேன் டா சாவுக் கிராக்கி" என்பதன் சுருக்க வடிவம். முனகல்கள் கெட்ட வார்த்தைகளாக மாறுவதற்கு முன்பாகப் பையைச் சிரமப்பட்டுக் கால்களுக்கிடையில் வைத்தான். "நீ பாத்து வெச்சுக்கோ சார். பாத்துப் பாத்து, அண்ணாத்தே" என்று ஒரு தாடிக்காரர் படியிலிருந்தபடியே சொல்லிக்கொண்டிருந்தார்.
கடுப்பாகப் பின்னால் திரும்பி அவரை முகத்திற்கு நேராகப் பார்த்தபோது, வாசம் குப்பென்று நாசியைத் துளைத்தது. முட்டக் குடித்திருக்க வேண்டும். இவன் லேசாகத் தும்மிவிட்டுத் திரும்பினான். பேருந்தின் அக்கணநேரத்து ஆட்டம் பக்கத்தில் இருந்தவனின் மீது இடிக்க வைத்தது. தோசைக் கல்லில் நொடிப்பொழுது கையை வைத்து எடுத்தது போன்ற சூடு தன் முழங்கையில் படர்வதை உணர்ந்தான்.
அப்போதுதான் அந்த மெலிந்த பையனைக் கவனித்தான். பார்த்தவுடன் வகைப்படுத்தக்கூடிய வடகிழக்கிந்திய முகம். ஒட்டிய கன்னமும், ஒடுங்கிய கண்களும் அரைச்சம்பளத்துக்கு அவன் செய்யக்கூடிய செக்குமாடு வேலைக்கான சாட்சியங்களாகச் சுரண்டலுக்குக் கட்டியம் கூறின. கடைசிப் படியில் தொங்கிக்கொண்டு, இரண்டு கைகளையும் கைப்பிடிகளில் இறுக்கமாகப் பிடித்திருந்தான். அவ்வப்போது இருமியபோது சளி ஒழுகியது; அதைத் துடைக்க ஒரு கையைப் பிடியிலிருந்து எடுத்தபோதெல்லாம் தானும் தடுமாறிப் பிறரையும் தடுமாற வைத்துக்கொண்டிருந்தான். காய்ச்சலின் விளைவாகக் கண்களில் தேங்கியிருந்த நீர், முகத்திற்கே ஒரு பரிதாபத் தோற்றத்தைத் தந்துகொண்டிருந்தது.
எஸ்.ஆர்.பி. சிக்னலில் பேருந்து நின்றபோது மீண்டும் ஒருமுறை அவனது கையில் இவன் இடித்துவிட்டான். காய்ச்சலேதான். உடல் உலையாகத் தகித்துக் கொண்டிருந்தது. ஒரு கால் படியிலும், ஒரு கால் அந்தரத்திலுமாக அந்த அரை மயக்கத்திலும் பயணித்துக் கொண்டிருந்த அவனது துன்பங்களுக்குச் சிறிதும் தொடர்பில்லாமல், பேருந்தின் முக்கால்வாசிப் பயணிகள் காதுக்கருவிகளில் அனிருத்திலும், அண்ணன் ஹிப்ஹாப் ஆதியிலும் மூழ்கியிருந்தனர். முகநூலில் தோன்றிய ஷெரில் மற்றும் ஓவியாவின் புகைப்படங்கள் மற்றவர்களை ஆட்கொள்ளப் போதுமானதாயிருந்தன.
சிக்னலிலிருந்து பேருந்து புறப்பட்டபோது நிகழ்ந்த ஆட்டத்தின் விளைவாக வடகிழக்கிந்தியப் பையன், குடித்திருந்தவரின் மேல் இடித்துவிட்டான். சிறிதே அடங்கியிருந்த அவரது அலப்பறை மீண்டும் செவ்வனே தொடங்கியது. "என்னப்பா, ஜொரம் அடிக்குதா?" என்று கேட்டார். அவன் வெறுமையாகப் பார்த்தான். மொழி புரியாத நிலையிலும் அவர் என்ன கேட்டிருப்பார் என்று விளங்கியிருக்க வேண்டும். தலையாட்டினான். உண்மையில் அவருக்குப் பதிலேதும் தேவைப் பட்டிருக்கவில்லை. புலம்பத் தொடங்கினார். "யப்பா சாமிங்களா, தெய்வங்களா! யாராச்சும் இந்தத் தம்பிக்கு உக்கார எடம் குடுங்களேன்.கொதிக்குதுய்யா ஒடம்பு" என்று படியிலிருந்தபடியே கத்தினார். செவிப்பறையைக் கிழிக்கும் கிடார் இசையைத் தாண்டிப் பலருக்கு அவரது புலம்பல் கேட்டிருக்க வாய்ப்பில்லை. கேட்டுக் கொண்டிருந்த சிலரும் அதை ஒரு குடிகாரனின் போதை என்ற சினத்திலோ, அல்லது அவரது வார்த்தைக் குழறல்களால் ஏற்பட்ட பரிகாசத்திலோதான் கேட்டனரே தவிர, அது ஒரு கெஞ்சலாக யாருக்கும் கேட்கவில்லை.
தரமணி பேருந்து நிறுத்தம் வரை, "ஜொரம் அடிக்குதாப்பா?" என்று அவனைப் பார்த்துக் கேட்பதும், பின்னர், "யாராச்சும் எடம் குடுங்களேன்" என்று இலக்கே இல்லாமல் கத்துவதுமாக இருந்த அவருக்கு அதற்கு மேல் பொறுக்கவில்லை. நிறுத்தத்தில் இறங்கியவர்களுக்குப் பிறகு, மீண்டும் படியில் ஏறியபோது அனைவரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு பேருந்தின் முன்பக்கமாகச் சென்றார். காய்ச்சலால் அவதியுற்றவன் அப்போதும் கூட இறங்கியேறத் திராணியற்று, சுவற்றில் ஒட்டிய பல்லியைப் போலவே, கம்பியை இறுகப் பற்றியபடி இருந்தான்.
உள்ளே சென்றிருந்த குடிமகன், இப்போது வெறியேறியிருந்தார். "எடம் குடுங்கன்னு மருவாதையா கேட்டுன்னுக்கிறேன்; எவனாச்சும் வழி வுட்றானான்னு பாரு. ஒருத்தனுக்கும் மனிதாபிமானமே இல்ல, செவுட்டுப் பசங்க. காதுல கண்டதையும் மாட்டிக்கினு போவுதுங்க பாரு" என்று கூக்குரலிட்டார். மேலும் முன்னேறி ஓட்டுநருக்கு அருகில் செல்ல முயன்றபோது, ஒருவன் வீம்பாக வழிமறித்து நின்றுகொண்டிருந்தான். தோளைத் தட்டியபோதும், "சார், கொஞ்சம் வழிவுடு சார்" என்று கேட்டபோதும் சிறிதும் அசராமல் நின்றுகொண்டிருந்தான்.
எல்லைகடந்த ஆத்திரத்துடன், "ஓத்தா, வழிவுட மாட்டியா நீ? அவ்ளோ கெராக்கி காட்ற. ஏன், இந்தக் கம்பியத்தான் புடிக்கணுமா நீ? தோ, இந்தக் கம்பியப் புடிக்க மாட்டியா?" என்று பேருந்துக் கம்பியில் ஓங்கிக் குத்தினார். அவருக்கிருந்த போதையில் வலி உறைத்திருக்க வாய்ப்பில்லை. இப்போது மறித்தவன் சற்றே பயந்து வழிவிட்டான். ஆனால், அதற்குள்ளாகப் பேருந்தில் குடிமகனுக்கெதிராக சலசலப்புகள் எழத் தொடங்கியிருந்தன. "அந்தப் புண்ட மவன எறக்கி விடுங்க கண்டக்டர்", "யோவ் போத, சூத்தைப் பொத்திக்கிட்டுக் கமுக்கமா வா. சும்மா சவுண்டு போடாத" போன்ற ஓரிரண்டு கூச்சல்கள், ஏற்கனவே கூட்டத்தில் பயணச்சீட்டு கொடுக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நடத்துனரைக் கோபத்தில் ஆழ்த்தின.
பேபி நகரை நெருங்கியபோது வலுக்கட்டாயமாகக் குடிமகனைப் பிடித்துத் தள்ளிவிடத் தொடங்கியிருந்தனர். பையைக் காலுக்கிடையில் வைத்திருந்த இவன் மேலும் சாய்ந்தார் குடிமகன். பேருந்து நிறுத்தத்தில், "யோவ், இன்னா? எறங்குய்யா. எறங்குய்யா கீழன்றேன்ல" என்றபடி ஓட்டுனர் அவரைக் கீழே தள்ளியபோதுதான், குடிமகன் போட்டிருந்த சட்டையைக் கவனித்தான். முழுமையாகப் படிக்க முடியவில்லை எனினும், "சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை" போன்ற வார்த்தைகள் தெளிவாகத் தெரிந்தன.
பேருந்தின் உள்ளே கவனித்தான். குடிமகன் ஏன் குடித்திருப்பார் என்ற காரணம் கூச்சலிட்டவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; அவருக்கிருந்த அக்கறையான பாசம், பலருக்குக் கேட்டிருக்க நியாயமில்லை. சென்னையின் மக்கள் கூட்டத்தைச் சுமந்துகொண்டு பேருந்து ஓடத் தொடங்கியிருந்தது.
No comments:
Post a Comment