Monday, October 2, 2017

கடவு – 3

(முதல் மற்றும் இரண்டாம் பதிவைப் படிக்க)

டேய், டீம் ட்ரிப் கொலொம்போ போறோம்டா. வர்றியா?” என்று அலுவலகத்தில் உடன்பணியாற்றும் நண்பர் கேட்டபோது அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “அவரும் வர்றாரா?” என்று கேட்டான், அந்தஅவர்யாரென்பது நண்பருக்குப் புரியவே செய்தது. “ஆமாம்டா. அதுனால என்ன? நீ பாட்டுக்கு வரப்போற? என்ன சொல்ற?” என்றார். தன்னிடம் கடவுச்சீட்டு இல்லையென்பது நினைவிற்கு வந்தது. இரண்டு வருடங்கள் பின்னோக்கி உருளலாம் என நினைத்த நினைவுப்பந்தைக் காலால் வலுவாக நிறுத்தி, “எப்போப் போறீங்க?” என்றான். “செப்டம்பர் கடைசிஎன்றார். கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஒரு 35 நாட்கள் இருந்தன. நப்பாசை பிறந்தது. “வீட்டுல கேட்டுட்டுச் சொல்றேன்என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட்டான்.

அன்று வீட்டிற்கு வந்ததும் இருப்புக்கொள்ளவில்லை. பாஸ்போர்ட் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிப்பதற்கான படிவத்தை ஒருமுறை பார்த்தான். ஆர்வம் மேலோங்கவே, விவரங்களையெல்லாம் உடனே நிரப்பினான். ‘தட்கல்மற்றும்சாதாஎனும் இரு வழிமுறைகள் இருந்தன. முன்னது, வேகமாகக் கடவுச்சீட்டு பயனாளியைச் சென்றடைவதற்கான, கொஞ்சம் கூடுதலாகச் செலவு பிடிக்கும் வழி; பின்னது நத்தையைப் போல் ஊர்ந்து வரும் வழக்கமான அரசாங்க வழிமுறை. முன்னதைப் பின்பற்றினால், ஐந்திலிருந்து ஏழு நாட்களில் கடவுச்சீட்டு வீடு தேடி வரும், ஆனால் அதற்கு மிகவும் உயரிய பதவிகளில் இருக்கும் ஒரு மனிதர்/மனிதி அத்தாட்சிக் கையெழுத்திட வேண்டும்.

சுரப்பிகள் சூடாக மூளைக்குள் சுரந்தபோதும், ஒரு நிமிடம் நிதானப்படுத்தி யோசித்தான். ‘கண்டிப்பா ஸ்ரீலங்கா போயே ஆகணுமா?’ என்றெல்லாம் யோசனைகள் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி, “அம்மா அப்பாவைத் தொந்தரவு பண்ணக் கூடாது. இந்த முறை நாமளே செய்வோம்என்று முடிவுசெய்து இணையதளத்தில் தட்கல் விதிமுறைகள் அத்தனையும் மனனம் செய்தான். ”இந்தக் கையெழுத்துக்கு மட்டும் ஏதாச்சும் ஒரு ஏற்பாடு பண்ணணும்என்று சொல்லிக்கொண்டான்.

அவனது மனவுறுதிக்கு முதல் வெற்றி கிடைக்கவே செய்தது. அலுவலக நண்பர் ஒருவரின் தாயார் மத்திய அரசு நிறுவனமொன்றில் பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதவியில் இருப்பதாகவும், அவர் அக்கையெழுத்திடத் தகுதியானவர்தாம் என்றும் முடிவானது. ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக்கொண்ட பிறகு, தட்கலில் விண்ணப்பித்தான். விண்ணப்பித்த பிறகு, அப்பாயிண்ட்மெண்ட் தேதியைத் தேர்வு செய்யும் ஒரு பொத்தான் இருந்தது. சொடுக்கும் முன்பாக, அதைப் பற்றிப் படித்துவிடலாம் என்ற நோக்கில், வலையை அலசினான். மூன்று முறை முயற்சிக்கலாம் என்றும், அதற்குப் பிறகு தட்கல் விண்ணப்பம் சாதா விண்ணப்பமாக மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

தட்கல் அப்பாயிண்ட்மெண்ட் பகுதிக்குச் சென்றபோது, அடுத்த வேலை நாளுக்கான அவகாசம் மட்டுமே கொடுக்கப் பட்டிருந்தது. ‘இதென்னடா வம்பாப் போச்சு? தட்கல்ல வர்றவன் கொஞ்சம் அவனுக்கு ஏத்த மாதிரி நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்னு பாத்தா, லுச்சாப் பயலுக மாதிரி வெச்சுருக்கானுகஎன்று தோன்றியது. எனினும் அத்திரையில் வெறும் தேதி மட்டுமே குறிப்பிடப் பட்டிருந்தபடியால், தகுந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்குமாறு அடுத்த திரையில் கேட்கும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த நாளுக்கான தேதியைத் தேர்வு செய்தான். ‘தங்களது பார்வை நேரம், நாள்என்று அனைத்தையும் காட்டியது திரை. இவனுக்கு ஒரு நொடி என்ன நடந்தது என்றே தெரியவில்லை. விக்கித்துப் போயிருந்தான். பொதுவாக அனைத்து இணையதளங்களிலும், “நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பது உங்கள் இறுதியான முடிவா?” என்று கேட்கும் ஒரு திரை வந்த பிறகு, “ஆம்என்று சொன்னால் மட்டுமே தொடரும். இங்கு அப்படியில்லை. ‘கவர்மெண்டு வெப்சைட்ல? அப்புடித்தான் இருக்கும்என்று மனச்சாட்சி கைக்கொட்டிச் சிரித்தது.

தலைவிதியை நொந்துகொண்டு பதிவு செய்யப்பட்ட பார்வை நேரத்தை ரத்து செய்தான். ‘இன்னும் ரெண்டு முயற்சி இருக்குல்ல? அதுல மொதல் முயற்சியிலயே வேல முடிஞ்சிடும்டா, கவலப்படாதஎன்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். எனினும் அவன் செய்த அச்சிறு தவறு, நெஞ்சில் குமைந்துகொண்டே இருந்தது. ’அப்பா அம்மா கிட்ட ஒரு வார்த்தை இதெல்லாம் கேட்டிருக்கலாமோ?’ என்று தோன்றியது. ஆனால் அவர்கள் பாஸ்போர்ட் ஏஜண்டிடம் போகச் சொல்லுவார்கள் என்று தெரியும்; அதெல்லாம் தேவையில்லாத வெட்டிச் செலவு, காசைக் கரியாக்குவதற்கான வழிமுறைகள் என்பது இவனுடைய பார்வை.

இனிமேல் செய்யப்போகும் ஒவ்வொரு முடிவிலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்து, அந்தக் கையெழுத்து வாங்குவதற்கான படிவத்தை தளத்திலிருந்து தரவிறக்கம் செய்தான். நண்பரிடம் விஷயத்தைக் கூறியவுடன், “கிவ் மீ டூ டேஸ். நான் அம்மா கிட்டயிருந்து சைன் வாங்கித் தரேன்என்று சொன்னார். சொன்னபடியே செய்யவும் செய்தார். இப்போது எல்லாப் பத்திரங்களும் தயாராக இருந்தன. வாக்காளர் அட்டையில் மட்டும் அப்பாவின் பெயரில் எழுத்துப்பிழை இருந்தது (முக்கியமான ஆதாரங்களைப் பதிவு செய்யும்போது ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற அக்கறை இல்லாத அரசாங்கப் பிறவிகளுக்கு வாங்கும் காசிற்கான சோறு செரிக்குமா எனத் தெரியவில்லை. குறைந்தபட்சம் ஐந்தில் ஒருவருக்கு வாக்காளர் அட்டையில் பிரச்சனை இருக்கும் என்பது நிதர்சனம்). ஆனால் அது இல்லாமலே மூன்று ஆதாரங்கள் இருந்ததால், நம்பிக்கையுடன் இரண்டாம் முறையாகப் பதிவு செய்தான். திரையில் நேரம், தேதி என அடுத்த நாளுக்கான விவரங்களைக் காண்பித்தபோது தான் ஒரு உண்மை முகத்திலறைந்தது. அரை நாள் விடுமுறை எடுக்க வேண்டும், அல்லது நேர விடுப்பு எடுக்க வேண்டும். அதற்கு மேலாளரிடம் கேட்க வேண்டும். அவருக்கும், இவனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. ‘இதென்னாடா எனக்கு வந்த சோதனை?’ என்று யோசித்துக் கையைப் பிசைந்துகொண்டு, இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டு பேருந்தில் பயணம் செய்யும் குழந்தையைப் போன்ற தர்மசங்கடத்தில் இருந்தபோது, மீண்டும் நண்பர் கைகொடுத்தார். அவரே பேசி நேர விடுப்பு வாங்கிக் கொடுத்தார். இரண்டாவது சிறிய வெற்றி கிடைத்தது. ‘டேய், கொஞ்சம் கொஞ்சமா நல்லது நடக்குதுடா. கவலையே படாத, கண்டிப்பாப் பாஸ்போர்ட் கெடைச்சிடும்என்று பூரிப்புடன் சொல்லிக்கொண்டான்.

அடுத்த நாள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றான். ‘ஸ்டேட் கவர்மெண்டு ஆஃபீஸ்தான் தலவலிக்குப் பொறந்தது. நம்ம அம்மால்லாம் பப்ளிக் செக்டார்லதானே இருக்காங்க? அவங்க எல்லாம் இழுத்துப் போட்டு வேலை செய்யுறாங்களே? ஸோ, இது ஆர்.டி.. மாதிரியெல்லாம் இருக்காதுஎன்று நம்பிக்கையுடன் வீறுநடைபோட்டுச் சென்றான். தட்கல் விண்ணப்பங்கள் அண்ணா சாலையில் உள்ள சென்னை மண்டல அலுவலகத்தில் மட்டுமே பரீசிலிக்கப்படும் என்பதால், வேலையெல்லாம் முடிந்தபின்னர், எல்..சி.யிலிருந்து சாந்தி தியேட்டர் சென்று அங்கு சாலையோரத்தில்சாட்சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். இரண்டுங்கெட்டான் நேரமாக இருந்ததால், மதிய உணவு உண்டிருக்கவில்லை.

 வரிசை எண் முறையில் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். இவன் நாற்காலியில் அமர்ந்திருந்தபோதுதான் ஒரு விஷயம் தெளிவாகப் புலப்பட்டது. மூன்று கட்டங்களாக நடக்கும் பரிசோதனைகளில், முதல் கட்டப் பரிசோதனை செய்யும் நபரின் முக்கிய நோக்கமே ஏதாவதொரு காரணம் சொல்லி, வருபவர்களைத் திருப்பி அனுப்புவதுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. ‘இவரது மனநிலை சரியில்லையா? அல்லது வேலையே இதுதானா?’ என்று குழப்பமும், பீதியும் அடைந்தவனாக உட்கார்ந்திருந்தான். இவனது முறை வந்தபோது, ஆதாரங்கள் எல்லாவற்றையும் காட்டினான். “வோட்டர் .டி. எங்கப்பா?” என்றார் அலுவலர். “இல்லைங்க சார்என்றான். “அப்போன்னா தட்கல்ல அப்ளை பண்ண முடியாது. கெளம்புங்க. நார்மல்ல மாத்தி விட்டுடுறேன்என்று பொரிந்தார். “சார், அதுல வெரிஃபிகேஷன் சர்டிஃபிகேட் இருக்கு சார். கன்சேர்ண்ட் அத்தாரிட்டி கிட்ட சைன் வாங்கியிருக்கேன்என்று அமைதியாக ஆனால் பொட்டிலறைந்தாற்போல் சொன்னான். அடியில் இருந்த அச்சான்றிதழைப் பார்த்துவிட்டு, “ம்.. சரி, இது இருக்கா? அப்போ .கே. இதெல்லாம் தெளிவாச் சொல்ல மாட்டீங்களா?” என்று தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், சப்பைக்கட்டு கட்டினார் அந்த ஆபீசர். ’பார்க்கப் பொதிகை சேனல்ல பி.எஸ்.என்.எல். ஸ்போர்ட்ஸ் க்விஸ் நடத்துற சுமந்த் ராமன் மாதிரி இருந்துட்டு என்னாப் பேச்சுப் பேசுது பயபுள்ளஎன்று உள்ளுக்குள் நினைத்தபடி அடுத்தகட்ட பரிசோதனைக் கூடத்திற்குள் நுழைந்தான்.

அங்கு தொலைக்காட்சித் தொடர்களில் ஈவிரக்கமில்லாத மாமியார் கதாபாத்திரத்திற்கு அளவெடுத்துச் செய்ததைப் போன்ற ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். “யெஸ், கம்என்றார். சென்றமர்ந்து, மீண்டும் அதே காகிதங்களைக் காண்பித்தான். “ஓகே, ஒகேஎன்று ஒவ்வொன்றுக்கும் சொல்லிக்கொண்டே வந்தவர், “இதென்ன?” என்று அந்தக் கையெழுத்து வாங்கியிருந்த சான்றிதழைக் காட்டிக் கேட்டார். “மேடம், வெரிஃபிகேஷன் சர்ட்டிஃபிக்கேட்டு. தட்கல்னா தேவைன்னு சொன்னாங்…” என்று இழுத்தபோதே இடைமறித்து, “அதெல்லாம் எங்களுக்கும் தெரியும். நாங்க இந்த வேலையில தானே இருக்கோம்? எங்களுக்கே பாடம் நடத்துறீங்க?” என்றார். கோபம் வந்தாலும், வேலை ஆக வேண்டும் என்ற நினைப்பில்ஆகே, பீச்சேமூடிக்கொண்டு நின்றான். “என்ன அமைதியாயிட்டீங்க?” என்றார். ‘யம்மா தாயே, இப்போ நான் பேசணுமா, கூடாதா?’ என்று மனத்தில் நினைத்தபடியே, “ஏன் மேடம், ஏதாச்சும் தப்பாயிடுச்சுங்களா?” என்று கேட்டான். “இந்த டெம்ப்ளேட் பழசு தம்பி. யாரு குடுத்தா இது?” என்று முறைத்தார். “மேடம், வெப்சைட்ல இருந்துச்சுஎன்றான். அடுத்த கால் மணிநேரத்திற்கு அவர்களது சொந்த இணையதளத்தில் இருப்பதை அப்படியே நம்பக் கூடாது எனவும், சந்தேகமிருப்பின் அவர்களது வாடிக்கையாளர் சேவைக்கான எண்ணைத் தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

ரிஜெக்ட்ட்என்று அவர் பச்சை மையால் எழுதியது கிலியை மூட்டியது. அவர் திட்டத் திட்ட, நிதானமாக வேறெதுவும் தவறு இருக்கிறதா, திருத்த வேண்டுமா என்று அனைத்தையும் கேட்டுக்கொண்டு, ‘சரி, இது ஒரு தப்புத்தானே? சரி பண்ணிடலாம். கவலைப்படாதடாஎன்று சொல்லி மனத்தைத் தேற்றிக் கொண்டான். வெளியே வந்தபோது சாப்பிடுவதற்கான மன்நிலை இல்லை. கடவுச்சீட்டு எனும் ஒரு தேவையைத் தாண்டி, அவனது மனவுறுதியைச் சோதிக்கும் ஒரு சம்பவமாக அது மாறிக்கொண்டிருந்தது. ‘சந்தேகம் இருந்தாத்தானே ஃபோன் பண்ணிக் கேக்கணும்? அதுக்குச் சரியா, தப்பான்ற கேள்வி வரணும். இவங்க ஒண்ணு குடுத்திருந்தா அது சரின்னுதானே நம்புவோம்?’ என்று பல கேள்விகள் மனத்தில் வட்டமிட்டன. உச்சி வெயிலில் தலை வலித்தது. எல்லாவற்றையும் தாண்டி, இன்னொரு நாள் மீண்டும் வர வேண்டும், அதற்கு மீண்டும் அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்று நினைத்தபோது வயிற்றில் புளியைக் கரைத்தது.

அங்கிருந்து நேராக நண்பரின் வீட்டுக்குச் சென்று அவரிடம் விவரத்தைக் கூறினான். புதிதாக ஒரு சான்றிதழை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார் நண்பர். அந்நம்பிக்கை அதுவரை கேவலமாகச் சென்றுகொண்டிருந்த அந்நாளில் ஒரு சிறு பொறியை ஏற்படுத்தியது. நன்றாகச் சாப்பிட்டு, வீட்டுக்கு வந்தான். அன்றைய அலைச்சலும், மனக்குழப்பங்களும் சேர்ந்து மண்டையைப் பிளந்துகொண்டிருந்தன. அம்மாவிடம் தொலைபேசினான். “கண்டிப்பா அடுத்த முறை அப்ரூவ் ஆயிடும். கவலையே படாதஎன்று நம்பிக்கையூட்டியது பெற்ற ஜீவன். ஆதரவான அவ்வார்த்தைகள் எதைக் காட்டிலும் அந்நொடியில் அவனுக்குத் தேவையாயிருந்தது. படுக்கையில் சுருண்டு விழுந்துதான் தெரியும், அலாரம் அடித்து எழுந்து அடுத்த நாள் அலுவலகம் செல்லத் தயாரானான்.

ஓரிரு நாட்களில் மீண்டும் சென்றான். கடைசி முறை என்பதும், அதை விட்டால் சாதா முறைக்கு மாற்றிவிடுவார்கள் என்ற நினைப்பும் வியர்வை முத்துக்கள் முகத்தில் கோலமிட வழிசெய்தன. முதல் பரிசோதனையில் அதே கேள்விகள். அதே பதில்கள். இரண்டாவது அறைக்குள் இம்முறை வேறொருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் அனைத்து ஆதாரங்களையும் காண்பித்தபோது, அவர் வேறு சிலதவறுகளைச் சுட்டிக்காட்டினார். அவர் சொல்லச் சொல்ல, இவனுக்கு ரத்தம் கொதித்தது. முடிவாக, “படிச்சவங்க தானே நீங்க? வெப்சைட் எல்லாம் ஒழுங்காப் பாக்கமாட்டீங்களா?” என்று அவர் கேட்ட கேள்வியில் இவனுக்கு இருந்த பொறுமை முற்றிலுமாக்க் கரைந்தது.

எக்ஸ்யூஸ் மீ, சார். மைண்ட் யுவர் டங். யூ ஆர் அன் ஆஃபீசர். ஆம் அன் அப்ளிகெண்ட். தப்புன்னா தப்புன்னு சொல்லுங்க. மாத்திட்டு வரேன். படிப்பைப் பத்தியெல்லாம் எதுக்குப் பேசுறீங்க? என்ன சொன்னீங்க, வெப்சைட்டா? அதை ஃபாலோ பண்ணி எடுத்துட்டு வந்தா, அன்னிக்கு ஒரு மேடம் ஃபோன் பண்ணிக் கேக்கச் சொன்னாங்க. அவங்க சொன்னதையெல்லாம் மாத்திட்டு வந்தா இப்போ நீங்க ஒண்ணு சொல்றீங்க. என்னையப் பார்த்தா எப்புடித் தெரியுது? ஆல் ஆஃப் அஸ் ஹூ கம் ஹியர் அவைல் லீவ் அண்ட் கம். டோண்ட் ப்ளே வித் யுவர் இடியாட்டிக் அண்ட் ஷிட்டி ப்ரொசிஜர்ஸ்என்று இவனும் பதிலுக்குப் பொரிந்தான். நிதானமாகக் கேட்ட அவர், “உங்களுக்கு என்ன வேணுமோ கத்திக்கோங்க சார். ஆனா, உங்க கிட்ட சஃபிஷியண்ட் டாக்குமெண்ட்ஸ் இல்லஎன்றபடி ரிஜெக்ட்ட் என்று முத்திரையிட்டார்.

அமைதியாக வெளியே வந்தவன் கழிவறைக்குள் சென்று தொண்டை கிழியக் கத்தினான். உலகமே இருண்டு கண்ணுக்குள் சுருங்கி வருவதைப் போல் இருந்தது. முதல்முறையாக அப்பாவிடம் பேசினான். அழுகையினூடே விவரத்தைக் கூறினான். “சரி சரி விடுப்பா. முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல? ஒண்ணும் கெட்டுப் போகல. எனக்கு ஒரு ஏஜண்ட் தெரியும். அவரைப் போயிப் பாரு அமிஞ்சிக்கரையில. ஹீ வில் ஹெல்ப் யூ அவுட்என்றார். உடனே அங்கிருந்து கிளம்பி ஏஜண்ட்டின் அலுவலகத்திற்குச் சென்றான். தட்கலிலிருந்து, சாதாவிற்கு மாற்றப்பட்டதையும், கடவுச்சீட்டின் உடனடித் தேவையையும்பயணத் தேதி உட்பட - விவரித்தான். “இன்னும் 15 நாள் இருக்கு. கஷ்டம்தான். பட் டோண்ட் வொரி. பண்ணித் தரேன்என்று முன்பணம் வாங்கிக்கொண்டார். அந்நேரத்தில் பணம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ‘கவர்மெண்ட் ஆஃபீஸ் ****** ********* %#&^* கிட்ட மாரடிக்குறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லஎன்று ஆசுவாசமாகத்தான் இருந்தது.

அதற்கடுத்த இரண்டாவது நாளில், அமைந்தகரையிலிருந்த பாஸ்போர்ட் அலுவலகத்தில், அவனது பரிசீலனை இனிதே நிறைவடைந்தது. மண்டல அலுவலகத்தில் இல்லாத ஒரு நேர்த்தி இங்கு இருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டபோதுதான் அவ்வுண்மை பளிச்சிட்டது. இங்கு இருந்த அனைத்து அலுவலர்களும் தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்தவர்கள். ஒப்பந்தத்தின்படி வேலை செய்பவர்கள். வேலையைச்  சரியாக செய்யவில்லையெனின், சீட்டுக் கிழிக்கப்படும் என்ற பயம் அவர்களை நூறு சதவிகித நேர்த்தியில் பணிபுரியச் செய்தது. “போலீஸ் வெரிஃபிகேஷன் சொந்த ஊருக்கும் போடுவாங்க. டெம்ப்ரவரி அட்ரஸ்க்கும் போடுவாங்க. ஊர்ல நீங்க மூவ் பண்ணுங்க. இங்க ஆக வேண்டிய வேலைகளை நான் பாத்துக்குறேன்என்றார் ஏஜண்ட்.

ஏஜண்ட் தொலைபேசியில் கொடுத்த வழிகாட்டுதலின்படி. சென்னையில் வேலையை விரைந்து முடிப்பதற்காக அவனும், அம்மாவும் காவல் நிலையத்திற்கே சென்று பிரசாதம் கொடுத்து வேலையை முடிக்க முயன்றனர். “லேடிஸ் வந்தாக் கொஞ்சம் இரக்கம் வரும்டா ஸ்டேஷன்லஎன்பது அம்மாவின் கூற்றாக இருந்தது. ஆனால் அந்த ஏட்டு, “பொம்பளையத் துணைக்கு அழைச்சிடு வர்றியா? இருடீஎன்றா ரீதியில் மறுநாள் மீண்டும் அழைத்து வறுத்தெடுத்து பின்னர் கடமையைச் செய்தான்(ர்). கடலூரில் எஸ்.பி. அலுவகத்தில் தேங்கிக்கிடந்த அவனுடைய கோப்பை அம்மாவின் நண்பரின் நண்பர் உதவி மூலம் எடுத்து, அவனது வீட்டிற்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அனுப்பி, பிரசாதம் கொடுத்து, வேலையை முடித்தனர். இதற்காக அவன் அவசர கதியில் ஒரு நாள் மாலைப் பேருந்தில் கிளம்பி, ஊருக்குச் சென்று, நேராகக் காவல் நிலையத்தில் ஆஜராகி, கையெழுத்திட்டு, மீண்டும் நள்ளிரவில் கிளம்பி அடுத்த நாள் வேலைக்குச் சென்றது தனிக்கதை.

இவையனைத்தையும் மீறி, கிளம்புவதற்கு இரண்டே நாட்கள் இருந்த நிலையில், ஏஜண்டிடம் பெரிய தகவல் எதுவும் இல்லை. நேரில் சென்றபோது, “சென்னை ரிபோர்ட் மட்டும் பெண்டிங்ல இருக்கு. நீங்க ஒரு எட்டுப் போயிட்டுக் கமிஷனர் ஆஃபீஸ்ல செக் பண்ணிட்டு வாங்கஎன்று பார்க்க வேண்டிய ஆளின் விவரங்களைத் தந்தார். அதை வாங்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஆணையர் அலுவலகம் சென்று அங்கு சில பல வடைகளை வாயில் சுட்ட பின்னர், வேலையாயிற்று. பிரசாதம் எதுவும் தர வேண்டியிருக்கவில்லை. ஏஜண்டிடம் இருந்து கட்டிங் போய்விடும் போல.

இதற்கிடையில் அம்மா அவனுக்கும், அவன் அம்மாவுக்கும், அப்பா அவனுக்கும், அவன் அப்பாவிற்கும், அவர்கள் இருவரும் ஏஜண்டிற்கும் என ஒரு நூறு, நூற்றைம்பது தொலைபேசி உரையாடல்கள் நடந்திருக்கும். “கவலைப் படாதீங்க. தம்பிக்கு நான் இன்னிக்கு முடிச்சித் தர்றேன்என்ற அவரது உறுதிமொழி மட்டுமே அக்கடைசி நொடியிலும் ஆறுதலாயிருந்தது. வேலை முடிந்தவுடன், “சார், இங்க வேலை ஆயிடுச்சு. உங்க ஆஃபிஸ்க்கு வர்றேன்என்று தொலைபேசியபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. “எதுக்கு தம்பி ஆஃபீஸ்க்கு? நீங்க நைட்டு கால் பண்ணுங்க. பாக்கலாம்என்றார். அடுத்த நாள் விமானப் பயணம் என்று அவரிடம் நினைவுபடுத்தியபோது, “, சரி சரி. நீங்க நேர்ல வாங்க, பேசுவோம்என்றார். ஏனோ, நெஞ்சைப் பயம் கவ்வியது. அவரது குரலில் ஒரு நம்பிக்கை இருக்கவில்லையோ என ஐயம் ஏற்பட்டது. அவரது அலுவலகத்தை அடைந்தபோது, “ஏன் தம்பி, இப்போ சொல்றீங்க? இனிமே எப்புடி இன்னிக்குக் கெடைக்கும் பாஸ்போர்ட்? உங்க சொந்த ஊருல வெரிஃபிகேஷன் லேட் ஆயிடுச்சு. நான் ஒண்ணுமே பண்ண முடியாதுஎன்று வாதிட்டார்.


நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தான். ஒரு இருபது, இருபத்தைந்து நாள் பிரயத்தனங்கள் அனைத்தும் நொடியில் சின்னாபின்னமாய்ச் சிதறி விட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவே அவனுக்குச் சில நிமிடங்கள் பிடித்தன. ஊரில் அம்மாவின் கஷ்டங்களும், அவர் சொன்னதற்காக எவ்வளவு பேர் வேலை செய்திருப்பார்களோ என்று எண்ணிப் பார்க்கையில் கண்ணில் ஒரு துளி நீர் எட்டிப் பார்த்த்து. எதுவுமே சொல்லாமல் எழுந்து வெளியே வந்தான். “என்னோட டிக்கெட்டைக் கேன்சல் பண்ணிடுங்க, நான் வரலஎன்று நண்பரிடம் தொலைபேசிவிட்டு, அவரது பதிலுக்குக் காத்திராமல் இணைப்பைத் துண்டித்தான். சத்தமாக அழ வேண்டுமெனத் தோன்றியது. அடக்கி அடக்கி விசும்பியதால் கண்ணீர்த் துளிகள் சூடாகக் கன்னத்தை நனைத்தன. சோவெனப் பெய்து கொண்டிருந்த அடைமழையில் நனைந்தபடியே இலக்கின்றி நடக்கத் தொடங்கினான்.

3 comments:

  1. சில எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அளிக்கும், அது உண்மை...அதற்காக, எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஒருவரால் வாழவும் முடியாது...ஆகையால், யாரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. KaLLathonila Rameswarathla irundhu poha try panni irukkalaam

    ReplyDelete
  3. Giri,indhamaadhiri arputhamana idea vera yaaru kodupaanga?

    ReplyDelete