Wednesday, February 28, 2018

பாட்டி எனும் மனிதி

மம்மியும் டாடியும் ஆண்ட்டியும் அங்கிளும்
ரெட் சட்னியும் வைட் சட்னியும் மிண்ட் சட்னியும்
ரைசும் டாலும் டொமாட்டோவும் ஆனியனும்
எங்கும் பரவிய சிங்கார நகரத்திலும் கூட
மாறாத ஒரே பொதுப்பெயர்
பாட்டிதான் போலும்

கட்டிலில் படுத்தபடி வெற்றுவாயில் எச்சிலூற
அண்டசராசரத்தையே அரைத்துச்
செரிமானக் குழாய்க்குள் தள்ளுவாள்
என் பாட்டி
கண் மங்கிச் செவியடைத்துத்
தோல் சுருங்கி மயிர் நரைத்து
வலுவிழந்து எடை குறைந்து
தனித்து விடப்படும் நிலையிலும்
தன்னைச் சுற்றிய, தனதான
எல்லையில்லாப் பரப்புடன்
எந்நேரமும் உரையாடும் பாட்டிக்குப்
புத்தகங்களல்ல
காற்றுதான் உற்ற துணை

டி.எஸ். பட்டணம் பொடி மட்டையைப்
பிரித்துச் சலித்து
ஒரு சிட்டிகைப் பொடியைக்
கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே வைத்து
காற்றின் துணையுடன் உறிஞ்சுவாள்
அழகாக;
அலாதியான நட்பு பாட்டிக்கும் காற்றுக்குமானது.
அவள் பொடியுறிஞ்ச உதவும் காற்று
அவளது கடந்தகாலக் கதை கேட்டுச் சிலிர்க்கும்;
என்றும் ஓயாத தன் ஓட்டத்தைக் காற்று பகிர
ஓய்ந்து சாய்ந்த தன் வாழ்க்கையைப் பாட்டி பேசுவாள்;
தனியாய்ப் பேசுகிறாள் என்று சொல்வோம் நாம்.

புட்டி மருந்தும் உருண்டை மாத்திரையும்
இவைபோக அவ்வப்போது
பாட்டியின் அமைதியைத் துளைக்கும் ஊசியும்
பிரதான உணவுகளான பின்னர்
அவள் என்ன ருசிப்பாள்? எப்படிப் புசிப்பாள்?
வாய் கோணி, கண்ணை இறுக்கி மூடுவாள்
ஒருமுறை இருமுறை
மும்முறை பலமுறை
நாம் பார்க்கும் வரையில்
பரிதாபமாய்.
உச்சுக்கொட்டலினூடே கொடுக்கப்படும்
ஒரே பிஸ்கட்டை
வேணாம்டாஎன்றபடி அணைப்பாள்
இருகரம்கொண்டு.
உடலுக்குத்தானே சர்க்கரை நோய்?
மனத்திற்கும் உண்டோ பிணி!

என்னைத் தெரியுதா பாட்டி?” -இவ்வினாதான்
பாட்டியைத் தொந்தரவு செய்யும்.
அருகில் வந்து அமர்பவர் அனைவரும்
நினைவின் சூன்யத்தால் அந்நியரான பொழுதில்
துருபிடித்த காலச்சக்கரத்தைச் சுழற்றுவாள்
பின்னோக்கி;
பயனில்லை என்று அவளுக்குத் தெரியும்,
நமக்கும்தான்.
கண்ணைச் சுருக்கி உற்றுப் பார்ப்பாள்;
மூக்குக் கண்ணாடியின் இருமருங்கிலும்
இருகரம் குவித்துக்
கட்டுக்குள் அடக்க முயல்வாள்
நினைவோடையை.

தெரியாத அடையாளமும், அறியாத மானுடரும்
அடக்கியதில்லை
அவளது பாசத்தை!
தலைகோதிக் கன்னத்தை வருடுவாள் - பின்னர்
வருடிய கரங்களைத் தலையிலிடித்துச்
சொடுக்கெடுப்பாள் வாஞ்சையாய்;
திருஷ்டிஎன்று சிரிப்பாள்
இருமலினூடே.

கடலூரின் கூத்தப்பாக்கத்திலும் மருதாடிலும்
குமரப்ப நாயக்கன் பேட்டையிலும்
சென்னையின் ஆர்..புரத்திலும்
திருச்சியின் தில்லை நகரிலும்
இன்னும் பல இடங்களிலும்
பாட்டிகள் இருந்தார்கள்
இருக்கிறார்கள்
இருக்கப்போகிறார்கள்
அனைத்துப் பாட்டிகளும் அவ்வாறேதான்.

நிலையாமையால் வருந்தும் காற்று
தவிக்காமல் வீசும் - தம்
இயலாமையிலும் கதைபேசும்
பாட்டிகளுக்காக
என்றென்றும்

எப்போதும்!

3 comments:

  1. "மனதிற்கும் உண்டோ பிணி" எண்ணத் தூண்டும் வரிகள்!
    வைட் சட்னி ரெட் சட்னி என்று தமிழ் கூறும் நல்லுலகை என்னதான் செய்வதோ!

    ReplyDelete
  2. பொக்கைபொவா சிரிப்புடன் திருஷ்டி கழிக்கிறேன்

    ReplyDelete
  3. நம் வீட்டு பாட்டிகளுக்கு சமர்ப்பணம்..

    ReplyDelete