வசவுகளுக்குப் பழக்கப்பட்ட
வடகிழக்கிந்தியன்
திருவான்மியூர் சிக்னலில்
மிதிவண்டியில்
குரங்குப் பெடல் போடத் தயார் நிலையில்
பச்சை விளக்கிற்குக் காத்திருக்கிறான்
பச்சை ஒளிர்ந்த நொடிப்பொழுதில்
பின்னிருந்து ஒலியெழுப்பி
“*ம்மாள” என்றபடி கடக்கிறான்
ஃபோர்டு எண்டேவர்க்காரன்
மிரண்டொதுங்கி
விழிபிதுங்கி
தடுமாறி நிற்கும்
வந்தேறியின் கண்களில் வழிய மறுக்கும்
கண்ணீரினூடே தெரிகிறது
அந்நியனெனும் பீதி
ஃபோர்டும், அதைத் தொடர்ந்து
இரண்டு பேருந்துகளும்
மூன்று ஆட்டோக்களும்
நான்கைந்து வண்டிகளும்
சீறிப் பாய்கின்றன
அவை எழுப்பிய புகை
கண்களை மறைக்க
தெளிவற்ற சாலையில்
நிலையற்ற வாழ்வின் ஒரு நாளைக் கடக்க
எத்தனித்துச் செல்கிறான்
புறக்கணிப்பின் அடையாளமாய்
அவனுக்குச் “சாவு கிராக்கி”யும் தெரியாது;
“கயித கஸ்மால”மும் புரியாது
புரிந்தென்ன ஆகப் போகிறது?
சொந்த நாட்டிலேயே அடையாளம் தொலைத்து அகதியாகிறோம்! 😢
ReplyDeleteஅருமை... பாவம். வயிற்றுப்பிழைப்பு... பாஷை புரியா விட்டாலும் தன்மானம் இழந்து....
ReplyDelete