Monday, March 19, 2018

நைஸ் டூ ஈ-மீட் யூ. ஸப்?

மச்சி, எதுக்குடா கேட்டுக்கிட்டு? கூகிள் மேப்ஸ்ல பாத்துக்கலாம் விடுஎன்ற பதில் நண்பர்களிடமிருந்து வருவது மிகச் சாதாரணமாகி விட்டது. பொதுவாகப் புது இடங்களிலோ, ஊர்களிலோ கூகிளாண்டவரை வழிபடுவது எனக்கு உவப்பானதாக எப்போதுமே இருந்ததில்லை. பக்கத்தில் இருக்கும் டீக்கடை அண்ணாச்சி தரும் சுவாரசியமான கொசுறுச் செய்திகள், கூகிளில் கிடைக்காமல் போய்விடும். கூடவே சில ஊர்களில், “ஊருக்குப் புதுசா தம்பூ(பி)?” என்று கேட்டுவிட்டு, கொடுக்கும் காசுக்கு அதிகமாக ஒரு பஜ்ஜியோ, போண்டாவோ தரும் கருணைமிகு கனவான்களைச் சந்தித்திருக்கிறேன். இவற்றையும் தாண்டி நான் வைத்திருக்கும் சீனத்து கைப்பேசி (லெனொவோ சீனத்துச் சரக்குதானே?) அவ்வப்போது மக்கர் செய்யும். அதன் தகுதிக்கு மீறி நான் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு தகவல்களும், புகைப்படங்களும் அதனை அவ்வபோதுகோமாவிற்குத் தள்ளிவிடுகின்றன. செயல்படாமல் மயக்க நிலையிலேயே இருக்கும் பல செயலிகளில் ஒன்று, ‘கூகிள் மேப்ஸ்’. எனவே வாய்தான் எனக்கு மேப்ஸ், அட்லஸ் எல்லாமும்.

இந்த வரைபடப் பைத்தியங்கள் ஒருபுறம் என்றால், ‘வாட்ஸப் வளவள கோஷ்டிகள்மறுபுறம். புதிதாக வேலைக்குச் சேரும் இடமாகட்டும், வேறொரு வாசகர் வட்டம் போன்ற அமைப்பாகட்டும், ஒரு வாட்ஸப் குழுமம் இவையனைத்திற்கும் இருக்கும். அடுத்த வாரம் நடக்கவிருக்கும் சந்திப்பு ஒன்றுக்காக நான் ஆவலாகக் காத்திருந்தால், “ஹேய், திஸ் இஸ் _____. அடுத்த வாரம் எல்லாரும் மீட் பண்ணும்போது ஸ்ட்ரேஞ்சர்ஸா இருக்கக்கூடாதுன்னுதான் இப்போவே பிங் பண்றேன். நைஸ் டூ -மீட் யூ. ஸப்?” என்று ஸ்டைலாக குறுஞ்செய்தி அனுப்பும் ஆர்வக்கோளாறுகளை எப்படித் திருத்துவது என்றே தெரியவில்லை. இத்தகைய மூன்று, நான்கு முந்திரிக்கொட்டைகளைக் கடந்த ஒரு மாதத்தில்-மீட்செய்துவிட்டேன்.

எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடிவதேயில்லை. அனைவரும் தெரிந்தவர்களாக இருக்க/மாற வேண்டும் என்ற மனப்போக்கை, ஒரு பிறழ்வு நிலையாகவே பார்க்க வேண்டியுள்ளது. புதிதாக இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் முதலாவது முறையாக நேராகச் சந்தித்துப் பேசுவது முக்கியமான நிகழ்வு. முன் தீர்மானங்களும், தவறான முடிவுகளும் இல்லாத அந்த முதல் சில நிமிடங்கள் மனிதருக்கிடையேயான உறவுகளைத் தீர்மானிக்கிறது. பொதுவான விஷயங்களை அறிந்துகொள்ள ஒரு வாயிலாக அமைகிறது. சில நேரங்களில் இருவருக்குமான பொதுவான நண்பர்களோ, உறவினரோ, கல்லூரியோ, பள்ளியோ இடம்பெறும்போது அது ஒரு மறக்கமுடியாத சிலாகிப்பனுபவமாக மாற்றம் அடைகிறது. நம்மையறியாமல் உருவாகும் செய்திப் பகிர்வும், நேரலையான பேச்சுவார்த்தைகளும் அலைகடலாக உருமாற்றம் அடைந்து, கரைக்கு வந்துசேரும்போது எழும் இன்பம் அலாதியானது. இந்த ஒரு பரிமாணத்தை-மீட்களும், ‘பிங்களும் சிதறடித்துவிடுகின்றன. அதன் விளைவாகக் கைகுலுக்குதலில் தொடரும் இறுக்கம், முகத்திலும், பேச்சிலும் தொடர்கின்றது.

இந்த வாட்ஸப் ஆர்வக்கோளாறுகள் செய்வதற்குப் பெயர்தான்நெட்வொர்க்கிங்காம். அந்தமேப்ஸ்பார்க்கும் மேதாவிகள் செய்வதற்குப் பெயர்தான்செல்ஃப்-சஃபிஷியன்ஸியாம். இந்தக் கிறுக்குத்தனத்தை வைத்துத்தான் லாரி பேஜும், மார்க்கும், ஜெஃப் பெஸோஸும் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்கள் சிலர் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும்போது, பல நேரங்களில் நான்திருதிருவென விழித்துக்கொண்டிருப்பதைச் சாப்பாட்டு மேசைகளிலும், திரையரங்குகளிலும் சமீபத்தில் உணர்கிறேன். காரணம், அவர்கள் பேசுவதுட்ரெண்டிங்கான விவகாரங்கள். நான் உன்குழாயைப் (‘யூட்யூப்எனும் சொல்லுக்கான தமிழ் வடிவம். நன்றி: மெட்ராஸ் சென்ட்ரல் சேனல் (சீமானைக் கலாய்த்து அவர்கள் வெளியிட்ட ஒரு காணொலியில் அச்சொல்லைக் கேட்க நேர்ந்தது. பாருங்கள், ‘ட்ரெண்டிங்வியாதிக்கு நானும் அவ்வப்போது பலியாகிக்கொண்டுதான் இருக்கிறேன்) பெரிதாகப் பயன்படுத்துவதில்லை. “டேய், இந்த நியூஸ் தெரியாதா உனக்கு? என்னடா நீ?” என்ற கேள்விகளைத் தினமும் ஒருமுறை எதிர்கொள்கிறேன். முதலில் அவமானமாக இருந்தபோதும், “அய்யய்யோ, நமக்கு ஒண்ணுமே தெரியல போல” என்பதான ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றியபோதும், நாட்போக்கில், “ஆமாம், தெரியாது. இப்ப அதுக்கு என்ன?” என்று கேட்கும்/உள்ளூற நினைக்கும் தெனாவட்டு நிலைக்கு வந்திருக்கிறேன்.

நான் கல்லூரி முதலாமாண்டு முடிக்கும்வரையில் கூட, இந்த பைத்தியக்காரத்தனம் பரவலாக இருந்ததில்லை. இன்னும் நினைவில் இருக்கின்றன, கோயமுத்தூரிலிருந்து, கிண்டி பொறியியல் கல்லூரிக்கு மாறி வந்தபோது புதிய நண்பர்களை நேரில் சந்தித்த நாள். பெட்டி, படுக்கையோடு நானும், அப்பாவும் விடுதியறைக்கு முதன்முறையாகச் சென்றபோது அறைவாசி காற்சட்டையுடன் குப்புறப் படுத்துக்கொண்டுசிலபல சுகானுபவக் காணொலிகளைப் பார்த்துக்கொண்டிருந்தது அப்படியே பதிந்துவிட்டது. அதற்கு முன்பாக ஆறாம் வகுப்பில் புதிய பள்ளிக்குச் சென்றபோது முதல்நாளில் பயமுறுத்திய சூழல் பசுமரத்தாணியாக இருக்கிறது. பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்த தனிப்பயிற்சி வகுப்புகளும், அவற்றின் முதல் வகுப்புகளும் - தனசு சாரும், சகாயம் சாரும், ஜே.பி. சாரும் - நெஞ்சாங்கூட்டில் நிறைவாய் நிற்கின்றன(ர்).

இணையத்திலேயே செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை வந்த பிறகு, வலிந்து சில நாட்கள் புத்தகம் படிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது. சில நாட்கள் வேண்டுமென்றே செய்திகள் எதையும் பார்க்காமல், படிக்காமல் இருந்துவிடுகிறேன்; அவ்வப்போது எனக்கு நானே செய்துகொள்ளும் மனச்சோர்வு நீக்கும் வலிநிவாரணி இதுதான். செய்தித்தாள் படிப்பதும், நம்மைச் சுற்றி நடக்கும் அரசியலைத் தெரிந்துகொள்வதும், ‘நெட்வொர்க்கிங்செய்வதும் நன்று; அதனினும் நன்று நாம் நாமாக இருத்தல்; அதனினும் நன்று, நமக்குப் பிடித்தவற்றைச் செய்தல்.


ஒண்ணும் சொல்றதுக்கில்ல! என்ன நாஞ்சொல்றது?

1 comment: