Monday, March 19, 2018

இனம்புரியா உணர்வுகளும், ஆண்மனக் காமமும் - இமையத்தின் குறுநாவல் ’எங்கதே’

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு .மாதவனின்கிருஷ்ணப் பருந்துஎனும் நாவலைப் படித்தேன். ஒரே ஒரு முக்கியமான கதாபாத்திரத்தையும், அப்பாத்திரத்தைச் சுற்றிய சில மனிதர்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட அந்நாவல் கூறிய ஆண்மனத்தின் காமம் குறித்த உணர்வுகள் மிக முக்கியமானவை. புலனடக்கம் என்பது சொல்வதற்கு எளிதானது என்பதைப் பொட்டிலடித்தாற்போல் புட்டுப்புட்டு வைத்த நூல் அது. தகாத உறவிற்கு ஏங்கும் ஆண், கடைசியில் முறைதவறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அது வேண்டாமென முடிவு செய்வதுடன் நாவல் முடிவடையும். வேண்டாம் என்ற முடிவுடன் கிளைச்செய்தியாக, காமத்தைக் கட்டுக்கடங்காத அளவிற்கு வளரவிடும் உள்மன ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமளவிற்கு அது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்பதும் வாசகர்களுக்குக் கடத்தப்படும். சமீபத்தில் எழுத்தாளர் பாவண்ணனின் வலைதளத்தில் கூட, அவர் தனது நண்பருடன்கிருஷ்ணப் பருந்துகுறித்து உரையாடியதாக ஒரு பதிவைப் படித்தேன் (அவரது வலைப்பூவில் அதைத் தேடி எடுக்க இயலவில்லை).

அலைபாயும் ஆண்மனத்தின் பேராசையையும் (வக்கிரம் எனும் சொல்லைத் தட்டச்சு செய்ய ஏனோ எனது ஆணாதிக்க மனோபாவம் தடுக்கிறது போலும்), ஆசை நிறைவேறாதபோது எழும் விரக்தியையும் மீண்டும் இமையம் எழுதியுள்ளஎங்கதேவில் வாசிக்க நேர்ந்தது. ‘கிருஷ்ணப் பருந்துஅக உணர்வுகளின் எழுச்சியைப் பேசிய அளவிற்கு, ‘எங்கதேபுற விளைவுகளை உரைக்கிறது. சஞ்சலமும், சபலமும், ஏக்கமும் எழும் ஆணின் எண்ணவோட்டங்களை .மாதவன் விவரித்தாரெனில், அவற்றின் விளைவுகளான பொறாமை, சந்தேகம், விரக்தி, கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளை இமையம் எழுதியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

எனக்குள் இருக்கும்கிருஷ்ணப் பருந்துரசிகனா, அல்லது உண்மையிலேயேஎங்கதேவில் அதன் பாதிப்பும், தாக்கமும் அதிகமாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், கதையின் முடிவும் கூட ஒரே இடத்தில் சங்கமிப்பது தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது. கூடும் வாய்ப்பு கிடைத்தும் அக்கணநேரத்தில் தனிமையாக இருக்க விரும்பி கதவை மூடும் ஆண்பாத்திரம் போலவே, இங்கே பிளேடால் தான் ஆசைப்பட்ட பெண்ணைக் கொல்லத்துணிந்து பின்னர் பின்வாங்கும் ஆண்பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறுநாவலில் ரசிக்கத்தக்கவையாக இருப்பவை ஆசிரியர் பயன்படுத்தும் உவமைகள்.

கருவாட்டுக் குழம்பு வைக்கிற ஊட்டோட வாசல்ல காத்திருந்த நாயிதான் நான்

ஒரு புள்ளே பொறந்திட்டா, மொளக்குச்சியில கட்டிப்போட்ட மாடாயிடுவன்

மடப்பள்ளியில கொடுக்கிற பொங்கலுக்காகக் காவக் காத்திருக்கிற பரதேசி ஆயிட்டாரு பாவாட

நானும் கமலாவும் கார்த்திக மாசத்து நாய்களாட்டம் இருந்தம்

“… அந்த வாத்த எம் மனச பயிரு நட ஓட்டிப்போட்ட வயக்காடா ஆக்கிடும்

போன்றவற்றில் நாம் அன்றாடம் சந்திக்கும் விலங்குகளும், நாம் கிட்டத்தட்ட மறந்தே போன விவசாயமும் சார்ந்த சில உவமைகள் அனாயசமாகத் தெறித்து விழுகின்றன.

கதை எனது ஊரான கடலூரைச் சுற்றி நடப்பதாக எழுதப்பட்டுள்ளதால் படிக்கும் ஆர்வம் இயல்பை விட அதிகமாயிருந்தது. குறிப்பாகக் கடலூர் பற்றிய இந்த ஒரு பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது.

அப்ப ஆட்டோ மணிக்கூண்டத் தாண்டி கலெக்டர் ஆபீஸ் கிட்டே போயிக்கிட்டிருந்துச்சி. கலெக்டர் ஆபீஸப் பாத்தன்.

ராபர்ட் கிளைவோட குதிர லாயம்தாம் இப்ப கலெக்டர் சேம்பர். தெரியுமா?”

தெரியும். வெள்ளைக்காரங்க காலத்திலெ தென்னாற்காடு ஜில்லாவோட தலநகரமா இருந்துச்சி.”

வரலாறு நெறஞ்ச ஊரு. சுனாமி வந்தப்ப நெறயா பேரு இங்கத்தான் செத்துப்போனாங்க.”

ஆமாம்.”

கடலூர் தண்ணி உப்பா இருக்கு. காத்தும் அப்பிடித்தான் இருக்கு.”’

படிக்கும்போதே பேருந்தில் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டிலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகத் திருப்பாதிரிப்புலியூர் பயணிக்கும் அனுபவத்தை அப்பேச்சுப் பரிமாற்றம் அளித்தது என்று சொல்வது துளியும் மிகையல்ல. வரலாற்றுப் பெருமை நிரம்பிய ஊர் எனும் அத்தாட்சியைத் தொடர்ந்து வரும் சுனாமி குறித்தான வாக்கியத்தை வைத்து என்னால் இரண்டு வெவ்வேறான கண்ணோட்டங்களில் யோசிக்க முடிந்தது.

(1) சுனாமியே கடலூரின் வரலாற்றில் முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது எனும் முகத்திலறையும் உண்மை.

(2) சுனாமியில் செத்த மக்கள் கூட்டத்தைப் போலவே கடலூரின் வரலாற்று அரிச்சுவடிகளும் அழிந்துகொண்டிருக்கின்றனவோ என்பதான கேள்வி.

இரண்டாவது கூற்றை மேலும் முக்கியமானதாக மாற்றுகிறது, “இப்ப எங்க ஊருல தங்க நாற்கர சால இருக்கு. ஆனா புளிய மரம்ன்னு ஒரு செடிகூட இல்லஎனும் வர்ணனை. போகிறபோக்கில் எழுத்தாளர் இதைச் சொல்லிச் சென்றாலும், அவ்வாக்கியம் பின்மண்டையில் சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு உணர்வை நொடிப்பொழுதில் தருகிறது.

கமலாவையும், அவள் குறித்த எண்ணங்களுடன் அவளைப் பின்தொடரும், உடனிருக்கும் ஆண் பாத்திரத்தையும் மையமாக்கியே எழுதப்பட்டிருந்தாலும், 43-ஆவது பக்கத்தில்தான் அந்த ஆணின் பெயர் வாசகர்களுக்குத் தெரிய வருகிறது. என்னதான் தன்விகுதியில் அந்த ஆணே கதை சொல்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், ‘இன்னும் பெயரைச் சொல்லவேயில்லையேஎனும் எண்ணமே எழுவதில்லை (பெயர்: விநாயகம்). அதுதான் ஆச்சர்யம்.

நூல் ஆணின் பார்வையிலிருந்து எழுதப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஆணுக்கு ஒரு நொடி கூடவா அப்பெண் மீது ஒரு நற்சிந்தனை வராது எனும் கேள்வியும் எழாமலில்லை. நூல் முழுவதுமே கமலா குறித்தான தவறான எண்ணம் மட்டுமே விநாயகத்திற்கு இருக்கிறது என்பதுஅப்யூசிவ் ரிலேஷன்ஷிப்’, ‘ஆணாதிக்கம்போன்ற சொல்லாடல்களைத் தாண்டிய ஒரு அரக்கத்தனமாயிருக்கிறது. ‘ஏன் கமலாவிற்கு விநாயகத்தின் துணை தேவைப்படுகிறது?’, ‘ஏன் அவள் அவனை வாழ்க்கைத் துணையாக நினைக்கவில்லை?’, ‘எப்படி அவளது உயரதிகாரி மீது திடீரென்று அவளுக்கு அப்படியொரு உணர்வு வருகிறது; அதற்கான அக மற்றும் புறக் காரணிகள் என்ன?’ போன்ற எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதாக இக்குறுநாவல் அமையவில்லை. ‘அப்படி அது இருந்திருக்க வேண்டிய அவசியமில்லைஎனும் சமாதானம் ஏற்புடையதாக இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.

கிருஷ்ணப் பருந்துஒரு அமைதியான சுனை எனில், ‘எங்கதேஒரு ஆக்ரோஷமான அருவி. சொற்பிரயோகங்களும் அதற்கேற்ற வகையில் இரைச்சலாகவே இருக்கின்றன. ஆனால் ஒருவகையில் அது இந்நூலுக்கு மிகவும் தேவையாகவே இருந்திருக்கிறது என்று சொல்லலாம். ‘ஆனந்த விகடன் தடம்’ பத்திரிக்கையின் நவம்பர் இதழில் ஆதவன் தீட்சண்யா இடதுசாரிக் கவிதைகளில் இருக்கும் ‘இரைச்சல்’ குறித்து இப்படிச் சொல்கிறார்: “சொற்களைத் திருகி, சொல்ல வந்ததைப் பூடகப்படுத்தி, நேஷனல் ஜியோகரபி சேனலில் காட்டும் நிலப்பரப்பைத் தமதென்று உருவகித்துக்கொண்டு அமேசான் காட்டுத் தாவரங்களுக்கிடையில் மறைந்தொளிந்து ரகசியம்போல் கீச்சுக்குரலில் அப்படி என்ன அதி உன்னத அரசியலை அமைதியாக எழுதி இருக்கிறார்கள் என்று சொல்லுங்களேன். அவ்வளவு நசுக்கி விடுவதற்கு அதென்ன குசுவா இல்லை கவிதையா?”
ஒருவகையில் இது ‘எங்கதே’விற்கும் பொருந்திப்போகிறது.

நூல்: எங்கதே
ஆசிரியர்: இமையம்
வெளியீடு: க்ரியா பதிப்பகம்
பக்கம்: 110
விலை: 125


1 comment:

  1. It's been a long time since I've read a unbiased analysis of a contemporary Tamil work. Thanks fir this piece!!

    - Surya

    ReplyDelete