Tuesday, March 20, 2018

துதிக்கை உடைய குழந்தைச் செல்வங்கள் - ராமன் சுகுமாரின் ‘என்றென்றும் யானைகள்’

விலங்குகள் குறித்த அறிவியல் பூர்வமான தரவுகளும், தகவல்களும் என் ஆர்வத்தைத் தூண்டியதேயில்லை. ஒரே விதிவிலக்கு, அவற்றின் எண்ணிக்கை குறைவது குறித்த செய்திகள் மட்டுமே. எளிதில் கோபத்தை வரவழைக்கக் கூடியவை அத்தகைய செய்திகள். அதன் நீட்சியாகக் கோயிலில்ஒப்படைக்கப்படும்யானைகள், ‘கோடை விழாவில் சவாரி செய்யப் பயன்படுத்தப்படும் ஒட்டகங்கள், குதிரைகள் போன்றவற்றில் ஈடுபாடும் இருந்ததில்லை (சின்ன வயதில் யானையிடம் ஆசி வாங்கியதை நினைத்து வெட்கப்படுகிறேன்). வீட்டுப் பூனைக் குடும்பமான டுப்பியும் அதன் வாரிசுகளும், பிறகு பப்புவும் அதன் வானரங்களுமாக எனது அன்பைப் பிற ஜீவராசிகளுக்கும் வெளிப்படுத்த வழிசெய்தன (திருவான்மியூரில் நான் தின்பண்டம் ஊட்டி வளர்த்த தாய்ப்பூனை குட்டி ஈன்றபோது, பப்புவின் மறுபிறப்பாகவே அதைக் கண்டேன் - மூடநம்பிக்கையையும், பகுத்தறிவையும் ஒதுக்கிவைத்து).

விலங்குகள் பற்றியதாக நான் வாசித்த முதல் புத்தகம், ஜெயமோகனின்யானை டாக்டர்’. கார்ட்டூன் நெட்வொர்க்கில் காட்டுவதை விட ஒரு நூலில் வார்த்தைகளால் தத்ரூபமாக ஒரு புதிய அனுபவத்தைக் கடத்த முடியும் என்ற நினைப்பே புதியதாகவும், கிளர்ச்சி தருவதாகவும் இருந்தது.

அதன்பின், இப்போதுதான் மற்றொரு விலங்கு தொடர்பான நூலைப் படிப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. ‘யானை டாக்டரை வாசிக்கத் தூண்டிய அப்பா தான் ராமன் சுகுமார் எழுதி, டாக்டர் ஜீவானந்தத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டஎன்றென்றும் யானைகள்எனும் நூலையும் அறிமுகம் செய்துவைத்தார். இரண்டுமே யானை தொடர்பானவை என்பது முற்றிலும் ஆச்சரியமாக இருந்தாலும், யானைகள் குறித்த ஒரு சிறிய அறிமுகத்துடன் இப்புத்தகத்தை அணுகுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இவர் ஒரு ரிஸர்ச் ஃபெல்லோ. அவரோட தீஸிஸ்க்காகக் காட்டுல எல்லாம் இருந்தப்போ கெடைச்ச எக்ஸ்பீரியன்ஸ எல்லாம் தொகுத்து எழுதிருக்கார்என்றபடி அப்பா இந்த நூலைக் கொடுத்தபடியால், கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாகப் படிக்காமலே வைத்திருந்தேன். ‘தீஸிஸ்என்ற ஒற்றை வார்த்தைதான் தயக்கத்திற்கான காரணம். தகவல் களஞ்சியமாக, இயந்திரத் தனமாக, மந்த கதியில் பயணிக்கும் நூல் எனும் அபத்தமான கண்ணோட்டத்துடனேயே இந்நூலை வாசிக்கத் தொடங்கினேன். அதற்காக நெடுஞ்சாண்கிடையாக நூலாசிரியரின் காலடியில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோருகிறேன். ஏனெனில் 96 பக்கங்கள் கொண்ட இந்நூலின் ஒரு வரியிலோ, சொல்லிலோ கூடநான் ஒரு ..எஸ்.சி. ஆராய்ச்சியாளன்எனும் அகந்தை தென்படவில்லை (அதே மூச்சில் இதையும் சொல்லிவிடுகிறேன்; ‘யானை டாக்டரில் ஜெயமோகனின் சில அகஸ்மாத்தான மேதாவித்தனங்களை நினைவில் அசைபோட முடிகிறது).

ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள (ஆறாவது அத்தியாயமான பின்னுரையைக் கணக்கில் சேர்க்கவில்லை) புத்தகத்தின் முதல் பத்தியிலேயே நூலின் சாராம்சம் வாசகனுக்குக் கடத்தப்படுகிறது. ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் எறக்காமல்’, ஒரு குழந்தையின் மனநிலையிலிருந்தே ஆசிரியர் எழுதியிருக்கிறார் என்று அடித்துச் சொல்லலாம். ஜார்ஜ் . ஷெல்லர் எனும் விலங்கியலாளரின் வாசகத்துடன் தொடங்குகிறதுபெரும் பிரச்சனைஎன்று தலைப்பிடப்பட்டுள்ள முதல் அத்தியாயம். பருவமெய்திய பிலிகிரி எனும் யானைக்கு முதன்முறையாக மதம் பிடிக்கும் காட்சியை அசலாக வார்த்தைகளில் விவரிக்கிறார் ஆசிரியர் (இந்நூலைப் படித்துமுடித்துவிட்டு, யானைகள் குறித்த பல காணொலிகளைக் கண்டபோது, அவர் சொல்வது அனைத்தையும் மூன்றாம் பரிமாணத்தில் அனுபவிப்பது போன்ற அமிழுணர்வு ஏற்பட்டது என்பது சத்தியம்). 1980-1990 என கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தைச் சத்தியமங்கலம் மற்றும் அதனைச் சுற்றிய வனப்பகுதிகளிலும், மலைகளிலும் கழித்த ஒருவரின் முதல் விவரணை 16 வயது யானைக்கு மதம் பிடிப்பதாகத் தொடங்குகிறது என்பது முற்றிலும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி.

முதல் வயதில் பால்குடி மறவாப் பச்சிளம் குழந்தையாக அலையும் அழகியலும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் வயதில் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்களும் யானைகளின் மேல் இனம்புரியாத ஒரு பாசத்தை வரவழைக்கின்றன. உதாரணத்திற்கு யானைகளில் கண்கள் கீழ்நோக்கும் இயல்பானது இரண்டாம் வயதிலிருந்துதான் தொடங்குகிறது என்பது எவ்வளவு முக்கியமான பதிவு!

மனிதன் தோன்றிய ஆதிகாலத்தில் பெண்ணே ஒரு கூட்டத்திற்குத் தலைவியாயிருந்தாள் என்பது ஒரு வரலாற்றுப் பதிவாக மாறிப்போன இன்றைய நிலையில், யானைக் கூட்டத்திற்கு இன்றும் ஒரு பெண் யானையே தலைமை தாங்குகிறது என்பது ஆறுதலளிக்கக் கூடிய விஷயம். மூர்க்கத்தனத்தை நொடிப்பொழுதில் வெளிப்படுத்தும் ஆண்யானை கூடப் பெண்யானைக்குக் கட்டுப்படுகிறது. ஆனால், ஆபத்து நேரத்தில் களிற்றின் மூர்க்கத்தை விட, பிடியின் மூர்க்கம் பலமடங்கு அதிக சக்தி வாய்ந்தது என்பது வியப்பளிக்கிறது. முக்கியமாகபுட்புட்புட்என்று காலைத் தரையில் அடித்துச் சன்னமான, ஆனால் நீண்ட தூரம் ஒலிப்பதான ஒரு சப்தத்தின் மூலமாக ஆபத்து வருவத்தை யானைகள் மற்ற யானைக்கூட்டங்களுக்குத் தெரிவிக்கின்றன என்பது உண்மையாகவே மூக்கில் விரலை வைக்கத் தூண்டும் தகவல். "அவ்வோசை குறித்த ஒரு முழுமையான புரிதல் கடைசிவரை ஏற்படவேயில்லை" என்று தெரிவிக்கிறார் ஆசிரியர்,

நூல் முழுவதும் ஆசிரியருக்கு உதவி புரிந்த பல்வேறு ரேஞ்சர்களையும், பாதுகாவலர்களையும், சமையற்காரர்களையும் இன்ன பிற இதர உதவியாளர்களையும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார். அவர்களின் நுண்மையான உதவிகளைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கிறார். ஒரு கட்டத்தில் யானை வேட்டையில் இட்டுபட்டிருந்த வீரப்பனைப் பிடிக்கக் களத்தில் இறங்கி, வீரமரணம் அடைந்த சிதம்பரம் எனும் அதிகாரியைப் பற்றிநேர்மையும், உறுதியும் கொண்ட சிதம்பரம் போன்ற நல்ல வன அலுவலர் சுட்டுக்கொல்லப்படுவது பெரிய துரதிருஷ்டமே. எனக்கு நல்ல நண்பரான அவரது இழப்பு எனக்கு மட்டுமல்ல, காட்டுக்கும், கானுயிர்களுக்கும் பெரும் இழப்புதான்என்று பதிவு செய்கிறார்.

மீனாட்சி, செம்பகா என்று பெண்யானைகளுக்குப் பெயர் வைத்து அதனதன் கூட்டங்களை ஆய்வு செய்கிறார். இவை தவிர, காதில் கீறல் விழுந்திருக்கும் யானை, ஒற்றைத் தந்தம் உடைய விநாய் என்று பல்வேறு யானைகள் ரத்தமும், சதையுமாக உயிர்வாழும் முக்கியப் பாத்திரங்களாகவே நூலெங்கும் வலம்வருகின்றன. செந்நாய்கள், புலிகள் போன்ற விலங்குகளால் ஆபத்து ஏற்படும்போது யானைகள் ஒன்று கூடுகின்றன; குட்டி யானைகள் கூட்டதின் நடுவே பத்திரமாகக் காக்கப் படுகின்றன. பொதுவாகக் குழுவாக நடந்து செல்லும்போது மூத்த பெண்யானை முன்னேயும், ஆண்யானை பின்னேயுமாகச் செல்கின்றன என்று பல்வேறு சம்பவங்களை அனாயசமாகத் தெரிவிக்கிறார்.

ராமன் சுகுமார் எனும் ஆய்வாளரும், அவருக்கு உதவிய ஒரு சில நண்பர்களும், அலுவலர்களும் என்று ஒருசில மனிதக் கதாபாத்திரங்களே நூலை ஆக்கிரமித்திருந்தாலும், அவர் பயணிக்கும்ஜீப்ஒரு குறிப்பிடத்தக்க அங்கம் வகிக்கிறது. அவ்வப்போதுமக்கர்செய்யும் ஹைதர் காலத்து ஜீப்பானது, சே குவேராவின் சுயசரிதையானமோட்டார் சைக்கிள் டைரிஸ்’-ன் சில அத்தியாயங்களை நினைவுபடுத்தியது. சே அந்த வண்டியை வைத்துக்கொண்டு பட்ட பாட்டைப் போலவே, ராமன் அவரது ஜீப்புடன் அல்லோலகல்லோலப்படுகிறார். ஜீப் பள்ளத்தாக்கின் நுனியில் போய் அதலபாதாளத்தை நோக்கி நிற்கும்பொழுது, அவ்வழியே போகும் ஒரு லாரியிலிருந்து ஓட்டுனரும், பிறரும் உதவி செய்து ஜீப்பை மீட்கின்றனர். இதுபோன்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகள் வாசிப்பனுவத்தைச் செப்பனிடுகின்றன.

ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தில் புகைப்படம் எடுத்து யானைகளிடம் மாட்டுவது, அவற்றின் மோப்ப சக்தி வளையத்திற்குள் மறைந்து கொண்டு நோட்டமிட்டு மாட்டுவது என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கத்தி மேல் நடக்கும் வாழ்க்கையையே ஆசிரியர் வாழ்ந்திருக்கிறார் என்பது கண்கூடாகத் தெரிகிறது; எனினும், அவற்றை ஒரு மெல்லிய ஹாஸ்ய வர்ணனையுடன் அவர் விளக்குவதுதான் சுவையைக் கூட்டுகிறது.

தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது அதிகமானது, இறக்குமதி செய்யப்பட்ட தந்தங்களுக்கான வரியைக் கூட்டியபின்னர்தான் என்பது அதிர்ச்சியைத் தருகிறது. இத்தந்த வேட்டைக்குக் காரணம் தந்தங்களிலிருந்து செய்யப்படும் சிற்பங்கள்தாம் என்பது மிகுந்த வலியையும், வேதனையும் அளிக்கிறது. தொழில்நுட்பத்திலும், வேட்டையாடும் தந்திரங்களிலும், ஆயுதங்களிலும் மேம்பட்ட கடத்தல்காரர்கள்/கொலைகாரர்கள் ஒரு புறம் இருக்க, அவர்களை எதிர்க்கக் கிட்டத்தட்ட நிராயுதபாணிகளாகவே நிற்கும் வனச்சரக அலுவலர்களையும், ரேஞ்சர்களையும் நினைக்கும்போதே ரத்தம் சில்லிடுகிறது.

இந்த எல்லையற்ற நாசவேலையின் விளைவாக 3:1லிருந்து 5:1 வரை இருக்கவேண்டிய பெண்:ஆண் யானைகளின் விகிதம், 10:1 வரையெல்லாம் 1990-களின் தொடக்கங்களில் வீழ்ச்சியடைந்ததாகத் தெரிவிக்கிறார் ஆசிரியர். 90களுக்குப் பிறகு இவர் முதுமலைப் பகுதிகளிலும் யானைகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீர்குலையும் இயற்கையின் சமநிலை குறித்த ஒரு கையறுநிலை அவரிடம் தென்படுகிறது. நூலின் தொடக்கப் பக்கங்களிலேயே இடம்பெறும் ஒரு பத்தி, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.

நான் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற பின்னர் எனது இயற்கை அழகு ரசனை உருவானது எனலாம். மனிதன் நிலவைத் தொட்ட காலம் அது. பூமியை விடவும் நிலவின் மீது உலகம் அதிகம் கவனம் செலுத்திய காலம். அதேவேளையில் மனிதனின் வாழ்வாதாரமான பூமியும், இயற்கையும் வரலாறு காணாத மாசுபடுதலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறது.”

இயற்கையைக் காத்தல் எனும் ஆசிரியரின் இலக்கில், யானைகள் என்பவை ஒரு முக்கியமான அங்கமாக மாறிவிட்டன என்றே கூற வேண்டும். யானைகளின் வாழ்வு, உணவு, பழக்கவழக்கம் எனத் தொடங்கி, பருவ மாற்றத்தால் அவை சந்திக்கும் பிரச்சனைகள், தண்ணீரின்றி இறக்கும் அவலம் என்று விரிந்து, கடத்தல், கொள்ளை என அதிர்ச்சியில் ஆழ்த்தி, நல்ல எதிர்காலத்திற்கான ஒரு எதிர்பார்ப்புடன் முடியும் இந்நூல் விலங்கு ஆர்வலர்கள் மட்டுமின்றி, இயற்கை குறித்த புரிதல் வேண்டுமென நினைக்கும் அனைவருமே அவசியம் படிக்க வேண்டிய நூல். தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ள டாக்டர் ஜீவானந்தம் பாராட்டுக்குரியவர். மூலத்தின் சுவை குறையாமல் - இன்னும் சொல்லப் போனால், சுவையைக் கூட்டி - தமிழுக்குக் கொண்டுவந்திருப்பது கவனத்திற்குரியது.

நூல்: என்றென்றும் யானைகள்
ஆசிரியர்: ராமன் சுகுமார்
தமிழில்: டாக்டர் ஜீவானந்தம்
வெளியீடு: தமிழினி பதிப்பகம்
பக்கம்: 96

விலை: 60

1 comment:

  1. Super Superrrrrrrrrrrrr... நானும்இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது நீசொன்னதையெல்லாம் feelபண்ணினேன்.அப்பா ஒரு book சொன்னா நிச்சயம்அது நன்றாகத்தான் இருக்கும். நல்ல ரசனைக்காரர் . Good

    ReplyDelete