Wednesday, April 18, 2018

கதை கதையாம், காரணமாம்!


கல்வியை மேம்படுத்த வந்த ‘கல்வித் தந்தைகள்’ பெருகிவிட்ட இன்றைய சூழலில், கற்றலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளாக விஷுவல் லேர்னிங், ஆக்டிவிட்டி-பேஸ்டு லேர்னிங் என்று புதிய சொலவடைகள் ஆங்கிலத்தில் பிறந்துவிட்டன. முறை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது; அதில் எதைக் கற்பிக்கிறோம் என்பதையும் ஆராயாமல் இருக்க முடியாது. நேராக ‘வாட் இஸ் யுவர் நேம்?’ என்று பரங்கியர் வேடம் அணிவதில் ஏனோ நமக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

தமிழையே ஒழுங்காகக் கற்றிராத குழந்தைகளிடம் ஆங்கிலத்தைத் திணிப்பதும் ஒரு வன்முறைதான். என்னதான் ஆங்கிலம் கற்றாலும் நம்மால் வெள்ளையர்களைப் போல் பேசவும், எழுதவும் முடியாது எனும் நிதர்சனத்தை உணர்தல் நலம். இதனால், தமிழின் அரிச்சுவட்டினையும் அறியாமல், ஆங்கிலத்தையும் அரைகுறையாகப் படித்த அரைவேக்காட்டு மாணவர்களையே உருவாக்க முடிகிறது.

அதை விடுங்கள். சிஸ்டத்தை மாற்றத்தான் தமிழகத்தில் ஒருவர் அரசியலில் பகுதிநேரமாகக் குதித்திருக்கிறாரே! கற்றல் தொடர்பான மேற்கண்ட பத்திகளை எழுதக் காரணம் அவரல்ல, என் பாட்டிதான்.

பாட்டியின் ஒவ்வொரு நாளும் கண்டிப்பான நேர நிர்ணயங்கள் கொண்டவை. காலையில் நான் பதினொரு மணிக்குச் சாப்பிட்டாலும் மதியம் ஒரு மணிக்குச் சரியாக “சாதம் பெசையட்டா?” என்ற கேள்வி திண்ணையிலிருந்து வரும். திண்ணையில்தான் பன்னிரண்டு மணியிலிருந்து ஒரு மணி வரை அமர்ந்து செய்தித்தாளை விரித்துவைத்துக்கொண்டு தலைப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக்கொண்டிருப்பார். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரைச் சிறிய எழுத்துக்களையும் படிக்க முடிந்த அவரால் இன்றைக்கு அதெல்லாம் முடிவதில்லை. இதன் விளைவாகத் தலைப்பை மட்டும் அரைகுறையாகப் படித்துவிட்டு வந்து, “இன்னிக்கு பேங்க் எல்லாம் ஸ்ட்ரைக்காமே? உங்க அப்பா ஆஃபீஸ் போகலதானே?” என்றும், “ரேஷன் அரிசியில் முறைகேடுன்னு போட்டிருக்கான், நேத்திக்கு நீ வாங்கிண்டு வந்த சக்கரையில என்ன இருக்கோ?” என்றும் புலம்புவார் (முன்னது முந்தைய நாள் நடந்த வேலைநிறுத்தத்தைப் பற்றிய செய்தி எனவும், பின்னது புதுச்சேரியிலோ, சிதம்பரத்திலோ, விழுப்புரத்திலோ ஏதோ ஒரு நியாயவிலைக் கடையில் நடந்த சம்பவம் எனவும் நாம்தான் விவரித்துக் கூற வேண்டியிருக்கும்).

கிரிக்கெட்டும், சினிமாச் செய்திகளும் பாட்டியின் வாசிப்பில் முக்கியமான பக்கங்கள். முன்னரெல்லாம் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என்றும் சச்சின் என்றும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தவருக்கு இன்று த்ரிஷா, தனுஷா (தனுஷைத் தனுஷா என்றுதான் சொல்வார்), கோலி, தோனி என்று தெரிவதற்கு அவரது பரந்துபட்ட வாசிப்பனுபவம் (!?) மிக முக்கியமான காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

பாட்டியின் செய்தித்தாள் வாசிப்பில் நுணுக்கமான சில அம்சங்கள் உள்ளன:
தரையில் இருக்கும் செய்தித்தாளுக்குச் சமமாக இவரும் ’நமாஸ்’ செய்வது போல் தலையைக் குனிந்திருந்தால் மிகவும் உன்னிப்பாக ஒரு செய்தியை வாசிக்கிறார் என்று அர்த்தம். பெரும்பாலும் அது மாத ஓய்வூதியம் தொடர்பான செய்திகளாயிருக்கும்.
படிக்கும்போது வாய்விட்டுப் படிப்பது அவரது வழக்கமில்லை. என்றேனும் ஒரு நாள் வாய்விட்டுப் படிக்கத் தொடங்கினாரென்றால், அது ஒரு கவன ஈர்ப்புப் போராட்டம். நம்மிடம் ஏதோ சொல்ல விழைகிறார் என்று இடம் சுட்டிப் பொருளுணர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்க வேண்டும் (நரேந்திர மோடியின் பாட்டி இதையெல்லாம் செய்திருந்தால் மோடிக்கும் கவன ஈர்ப்புப் போராட்டம் குறித்த புரிதல் இருந்திருக்கும்; விவசாயிகளைக் கண்டுகொள்ளாத அரக்கருக்கு அவரது பாட்டி கூட ஒரு காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை). பொதுவாக இப்பேச்சுக்கள் ஒரு செய்தி தொடர்பானதாகத் தொடங்கி, பின்னர் பல்வேறு கதைகளுக்கும், பின்னோக்கு நிகழ்வுகளுக்கும் வழிவகுக்கும்.

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதுதான் நேற்று இரண்டு அந்தாதிக் க(வி)தைகளைச் சொன்னார். பள்ளிப்பருவத்தில் அவற்றைக் கேட்டிருந்தாலும் நினைவில் நின்றதில்லை. ஏனோ தெரியவில்லை, நேற்று அவர் சொன்னது அப்படியே மனப்பாடமாக இருக்கிறது. அவை பின்வருமாறு:

(உண்ணாமல் கனைக்காமல் மௌனமாயிருக்கும் கழுதையின் தியானத்தை உடைக்க)
கொய கொய கன்னே!
கன்னுந் தாயே!
மாடு மேய்க்குற ஆயா!
ஆயன் கை கோலே!
கோலிருக்கும் கொடிமரமே!
கொடிமரத்திலிருக்கும் கொக்கே!
கொக்கு நீராடும் குளமே!
குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலையா!
வலையன் கை சட்டியே!
சட்டி செய்யும் குயவா!
குயவன் கை மண்ணே!
மண் மேல் இருக்கும் புல்லே!
புல்லைத் தின்னும் கழுதையே!
உன் பேரென்ன?
(இதைக் கேட்டவுடன் கழுதை தன் பெயரைச் சொல்வதற்காக ‘இஹிஹி’ என்று இளித்துவிட்டதாம்)
-----
கதை கதையாம், காரணமாம்!
காரணத்துல ஒரு தோரணமாம்!
தோரணத்துல ஓரொழக்காம்!
ஓரொழக்குல புல்லு மொளச்சிதாம்!
புல்லப் பிடுங்கி மாட்டுக்குப் போட்டாளாம்!
மாடு பால் தந்ததாம்!
பாலைக் கொண்டுபோய் பாட்டி கிட்டக் குடுத்தாளாம்!
பாட்டி பட்சணம் தந்தாளாம்!
பட்சணத்தைக் காக்காய்க்குப் போட்டாளாம்!
காக்கா கரி தந்ததாம்!
கரியை கொண்டுபோய்க் கண்ணான் கிட்ட குடுத்தாளாம்!
கண்ணான் குடம் குடுத்தானாம்!
குடத்தை எடுத்துக் கெணத்துல போட்டாளாம்!
கெணறு தண்ணி குடுத்துதாம்!
தண்ணியச் செடிக்கு ஊத்தினாளாம்!
செடி பூ தந்ததாம்!
பூவைப் பிள்ளையாருக்குப் போட்டாளாம்!
பிள்ளையார் கொழுக்கட்டை குடுத்தாராம்!
கொழுக்கட்டையைக் கோமாளிகிட்ட குடுத்தாளாம்!
கோமாளி ‘சைங் சைங்’ என்று கூத்தாடினானாம்!
(இதன் இன்னொரு வடிவம்:
…..
…..
பூவைப் பிள்ளையாருக்குப் போட்டாளாம்!
பிள்ளையார் புத்தி குடுத்தாராம்!
---
(ஓர்+ஒ(உ)ழக்கு; உழக்கு என்பது உணவின் அளவைக் கணக்கிடும் ஒரு முறை;
கண்ணான் – பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழில் செய்பவராம்;
‘சைங் சைங்’ என்று சொல்லும்போது இரு கைகளையும் இடுப்பில் வைத்து ஆட வேண்டும்)

இதைப்போல ‘ஃபுட் செயின்’ என்று சொல்லப்படும் உணவுச் சங்கிலி குறித்த பாடங்களை எளிதாக விளக்கலாம். இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தையால் கூட எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பாடல் முறையை வைத்துக் கணிதம், அறிவியல் என்று எதையும் விவரிக்க முடியும். சற்றே சிரத்தையெடுத்துச் சொல்லிக்கொடுத்தால், குழந்தைகளின் கற்பனாசக்தியையும், புரிந்துகொள்ளும் திறனையும் பல மடங்கு உயர்த்துவதற்குத் துணைபுரியும் இம்முறை, அவர்களது சுற்றுவட்டாரத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது (’கண்ணான் என்றால் யார்?’, ‘ஒழக்கு என்றால் என்ன?’ போன்ற கேள்விகள் குழந்தைகளிடம் எழுவது நிச்சயம்).

அதைவிட்டு விட்டு, ஓ ஃபார் ஓயஸிஸ் (O For Oasis) என்று ஒரு காணொலியைக் காண்பித்துவிட்டால் அக்குழந்தைக்குப் புரிந்துவிடும் என்று நம்புவது நகைப்பிற்குரியது. ‘விஷுவல் லேர்னிங்’ போன்ற முறைகள் மிகவும் பயனுள்ளவைதாம். ஆனால், ‘டீ.ஏ.வி.’ குழந்தைகளுக்கான அளவுகோலிலேயே நாம் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். சாதாரண, சாமானியரின் குழந்தைக்குப் புரிய வைப்பதில்தான் இருக்கிறது தாய்மொழியின் உதவி.

1 comment:

  1. Tamilum Aangilamum Araigorayaai Meindha Araverkaatil Naanum Oruvan

    ReplyDelete