கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருபது முறையேனும் எழுத வேண்டுமென்று நினைத்தபடியோ, எழுதத் தொடங்கிய பின்னர் முடிக்காமலேயோ கிடப்பில் போடப்பட்டுக் கொண்டேயிருந்த பிறகு, இறுதியாக இன்று அமர்ந்தாகி விட்டது.
பொதுவாக, எழுத வேண்டும் என்றமர்ந்த பிறகு இவ்வளவு யோசித்துக் குழப்பிக் கொண்டதேயில்லை. ஆனால் இம்முறை எழுத வேண்டும் என்று எத்தனித்தது 2018-ல் இருந்து 2020 வரையிலான இரண்டு வருடங்களில் நான் என்ன பணி செய்தேன், என்ன கற்றேன் என்பது குறித்த ஒரு தன்னிலை விளக்கம்.
ஆரம்பத்திலேயே பல குழப்பங்கள்.
1. பல நாட்கள் தொடர்ச்சியாகத் தட்டச்சு செய்து, மிக நீண்ட பதிவாக மொத்தமாகப் பதிவிடலாமா? அல்லது, பல பகுதிகளாக அவ்வப்போது பதிவேற்றலாமா?
2. நிறைய பேர் படிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதலாமா? அல்லது, சரளமாக வரும் தமிழில் எழுதலாமா?
3. வரலாற்றில் எழுதிப் பொன்னெழுத்துக்களால் பொறிக்கும் அளவிற்கு நான் எழுத எத்தனிப்பது உபயோகமானதா?
எனினும் இக்குழப்பங்கள் தாண்டி, சிற்சில நிகழ்வுகள் முக்கி முனகி என்னை எழுத வைத்திருக்கின்றன.
1. இளங்கலைப் படிப்பு முடித்து நான்கு வருடங்கள் சென்ற பிறகு, போதுமான வேலையனுபவத்துடன் மேலாண்மைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தபோது நான் தொடர்ச்சியாக எதிர்கொண்ட “நீ நிலையாக ஒரு வேலையில் இருந்திருக்கவில்லை. Your profile shows professional inconsistency” என்று தொடர்ச்சியாக என்னைக் குற்ற உணர்ச்சிக்குத் தள்ளிய மேதகு நேர்காணல் நடத்தியவர்கள். (பி.கு.: பல நிராகரித்தல்களுக்கும், சில ஒப்புதல்களுக்குமிடையே ஒருவழியாக ஒரு நல்ல மேலாண்மைக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது என்பது வேறு விஷயம்.)
2. தமிழக அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பான “2 லட்சம் பள்ளி மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்யப்படும்” என்பது.
3. நண்பர்கள் பலர் 2019-ல் இருந்தே என்னுடைய வேலை அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று திரும்பத் திரும்பக் கூறி வந்தனர். வெவ்வேறு காரணங்களால் “பிறகு பார்க்கலாம்” என்ற அளவில் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். சமீபத்தில் 2018-2020 காலகட்டத்தில் என்னை வழிநடத்திய நபருடன் பேசுகையில், அவரும் “நாம அனுபவத்த எல்லாம் எழுதணும் பா” என்று சொல்லக்கேட்டு, அடியேனும் வேலை வெட்டியின்றி தண்டச்சோறு தின்று குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறபடியால், எழுதலாமே என்று எண்ணம்.
மேற்சொல்லியபடியே, அப்படி நான் 2018 தொடங்கி 2020 வரையிலான இரண்டாண்டுகளில் அப்படியென்ன சாதித்து விட்டேன் என்று இந்த விளக்கம்? காரணம் இருக்கிறது. இடஞ்சுட்டிப் பொருள் விளக்குவதற்கு முன், சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.
நான் கடலூரைச் சேர்ந்தவன். கிண்டி பொறியியல் கல்லூரியில் 2017-ஆம் ஆண்டு இயந்திரவியல் பிரிவில் படித்து முடித்து, ஐ.டி. நிறுவனமொன்றில் பணியாற்ற முனைந்தவன். உலக ஆன்றோர் சான்றோரால் ’பணிபுரிபவர்களைக் கண்ணியத்தோடு நடத்தும் நிறுவனம்’ என்று அன்போடு அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவ்விடத்தில், எனக்கு அமைந்த மேலாளருக்கும் எனக்கும் வாய்க்கால் தகராறு. தகராறு என்றால் நான் ஏதோ அவரை எகிறிச் சென்று சட்டையைப் பிடித்துவிட்டேன் என்ற ஹீரோயிஸத் தகராறல்ல. “நீயெல்லாம் ஒரு ஆளா? உன்னையெல்லாம் எதுக்கு வேலைக்கு எடுத்தாங்க?” என்ற ரீதியில் தினம் காரணமேயின்றி அவரிடம் பேச்சு வாங்க நேர்ந்ததைத்தான் நாசூக்காகத் ‘தகராறு’ என்கிறேன்.
2017 ஜூன் 21-ஆம் தேதி தொடங்கிய அப்பணியிலிருந்து 2018 மார்ச் 30-ஆம் நாள் விலகினேன். சற்றேறக்குறைய 9 மாதங்கள்; அவ்வளவே. தினமும் வேலைக்குச் சென்று, தேவையில்லாமல் கூனிக் குறுகி நின்று, எதற்கும் லாயக்கில்லை என்று வசவுகளை வாங்கிப் பழகிப் போய்விட்டிருந்த எனக்கு, இழந்த என் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. வேலையிடத்தில் வெற்று அவமானத்திற்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்த நான், எனக்கு என்னையே அடையாளப்படுத்திக் கொள்ள வழிகொடுக்கும் ஒரு வேலையை ஜனவரி 2018-ல் இருந்தே தேடத் தொடங்கிவிட்டிருந்தேன். ‘டாடா ட்ரஸ்ட்ஸ் ஃபெல்லோஷிப்’ (Tata Trusts Fellowship), ‘அஸீம் ப்ரேம்ஜி ஃபவுண்டேஷன் ஃபெல்லோஷிப்’ (Azim Premji Foundation Fellowship), ‘டேட்டா காப்ஸ்’ (Data Cops), ‘காந்தி ஃபெல்லோஷிப்’ (Gandhi Fellowship), ‘லாம்ப் ஃபெல்லோஷிப்’ (LAMP Fellowship) போன்ற இயல்பான கார்ப்பரேட் பணியிலிருந்து சற்றே மாறுபட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தேன்.
எதிர்பார்த்தது போலவே பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. மின்னஞ்சலைத் திறந்துபார்த்தாலே “வீ ரெக்ரெட் டு இன்ஃபார்ம் யூ தட் யுவர் அப்ளிக்கேஷன் ஹாஸ் பீன் ரிஜெக்டட்” ("We regret to inform you that your application has been rejected") எனும் தகவல்கள் முகங்காட்டின. ஒருகட்டத்தில், பிப்ரவரி 2018-ல் எல்லாம், “உண்மையிலேயே நான் லாயிக்கில்ல தான் போல!” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, இருக்கிற வேலையை விட முடியாது போலிருக்கிறது என்ற முடிவுக்கு வந்துவிட்டிருந்தபோதுதான், ‘டீச் ஃபார் இந்தியா ஃபெல்லோஷிப்’பிற்குத் (Teach For India Fellowship) தேர்வாகியிருப்பது தெரிய வந்தது.
தெம்புடன் சென்று மேலாளரின் முகத்திலறையும் தொனியில், “நான் மார்ச் மாத இறுதியில் வேலையை விட்டு விலகுகிறேன்” என்று சொன்னபோது இனம்புரியாத மகிழ்ச்சி. மனதில் உத்வேகம் கூடியிருந்தது. அவரது நடத்தை குறித்துப் பலமுறை புகார் செய்தும் கண்டுகொள்ளாத மனிதவளத் துறை சார்ந்தவர்களிடமும் விவரத்தைத் தெரியப்படுத்தினேன்.
2017-18 என்னைப் பொறுத்தவரையில் அழிக்கப்பட வேண்டிய காலம். ஆனால் ஒரு விஷயத்திற்காக அம்மேலாளருக்கும், நிறுவனத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். என்னைச் சுயமரியாதைக்காரனாய் (’ஒடனே தூக்கினு வந்துட்டான்பா திராவிடத்த’ எனும் குரல் கேட்கிறது’; பிறகு பதில் சொல்லிக்கொள்ளலாம்) மாற்றியதில் பெரும்பங்கு வகித்தது என்னை வேலையை விட்டு விலகச் செய்த புண்ணியவான்களே ஆவர்.
ஆனால், 2018-2020 ஆகிய இரண்டு வருடங்களும் ‘டீச் ஃபார் இந்தியா’ அடையாளத்தின் கீழ் பணியாற்றியிருக்க வேண்டிய நான், 2019-ல் விலக நேர்ந்தது. ஏன்?
2018-19 கல்வியாண்டில் எனக்களிக்கப்பட்டது புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் நகராட்சிப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு. அமைப்பின் விதிமுறைகளுக்கேற்ப நான் 2019-2020 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்குப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால், பத்தாம் வகுப்பு என்பது பொதுத்தேர்வு போன்ற முக்கியமான கட்டங்களைக் கொண்டிருப்பதால் நிரந்தர ஆசிரியர்களுக்கே அவ்வகுப்பு அளிக்கப்பட வேண்டுமென்பதும் விதிமுறை.
எனக்கு இரு வாய்ப்புகளிருந்தது.
1. ‘டீச் ஃபார் இந்தியா’ அமைப்பில் இருந்துகொண்டே வேறொரு வகுப்பிற்கோ, அல்லது வேறொரு பள்ளியிலோ பாடம் நடத்தலாம்.
2. அதே வகுப்பில்தான் பாடம் எடுப்பேன் என்று அடம்பிடித்தால், அமைப்பிலிருந்து விலகி, வேறு ஏதேனும் வழிமுறைகளைக் கையாண்டு பத்தாம் வகுப்பிற்கு ஆசிரியனாய் இருத்தல்.
நான் முதல் வாய்ப்பைத் தவிர்த்து, இரண்டாவதைக் கையிலெடுத்தேன். காரணம், ‘வாசிப்பு’. இதென்ன புதுக்கதை? அதென்ன ‘வாசிப்பு’? அதையெல்லாம் பின்னர் பார்க்கலாம்.
இத்தருணத்தில், இதைத்தான் நேர்காணல்களில் அவர்கள் professional inconsistency என்றழைத்தனர் என்று தெளிவுபடுத்த விழைகிறேன். அவர்களைப் பொறுத்தவரை, நல்ல ப்ரொஃபைல் (profile) என்பது அனைவரும் அறிந்த கொழுத்த நிறுவனங்களில் பணிபுரிவது. ஒரு மனிதனின் தொழில்முறை வாழ்வில் நிறுவனங்கள் மாறுவது என்பது யாரும் விளையாட்டாய்ச் செய்வதில்லை. ஆனால், அதற்கான விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லாத மேதகு மேலாண்மைக் கல்லூரிகளில் என்ன சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
மேலும், பள்ளியில் பணியாற்றிய அவ்விரு ஆண்டுகளிலும் நான் சந்தித்த பலர், என்னுடன் நண்பர்களாகவே இருந்த மேலும் பலர் என்னைப் பின்வரும் இரு கோணங்களில் ஒன்றில் வைத்தே பார்த்தனர்.
1. ‘பைத்தியக்காரன், நல்ல காசு குடுக்குற வேலைய விட்டுட்டு, சம்மந்தமே இல்லாம எங்கேயோ போய்ட்டு குப்ப கொட்டிட்டிருக்கான்’ - உதவாக்கரை பிம்பம்
2. ‘ப்பா... பெரிய ஆளுப்பா இவன். நல்ல வேலைய விட்டுட்டு டப்புனு மாறிப் போறதுக்கெல்லாம் பெரிய தைரியம் வேணும்’ - அதிநாயகப் பிம்பம்
இவற்றையெல்லாம் தாண்டி என் பெற்றோருக்குமே கூட, நான் 2018-ல் திடீரென்று புதியதோர் பணிக்குச் சென்றபோது ஆச்சரியமும், அதிருப்தியும் மிகுந்திருக்கும் என்பது நிதர்சனம். ‘செரி, இவன் செஞ்சா செரியாத்தான் இருக்கும்’ என்ற ரீதியில் தைரியம் கொடுத்திருக்கும் அவர்களுக்கும், 2018-2020 ஆண்டுகளில் கற்றவை, பெற்றவை, இழந்தவை, கொடுத்தவை இவை போக ‘நான் கண்ட மனிதர்கள்’ என்ற பல்வேறு பரிமாணங்களை விளக்குவது அவசியமாகிறது.
சமீபத்தில் கூட நண்பனொருவன் ‘எப்புடியோ மச்சி. எங்கெங்கேயோ சுத்திட்டு ஃபைனலா எம்.பி.ஏ. பண்ணணும்னு முடிவு பண்ணிட்ட. ஒரு வேளை உன் ப்ரொஃபைல இம்ப்ரூவ் பண்றதுக்குத்தான் இந்த சோஷியல் சர்வீஸ்லாம் பண்ணுனியோ?’ என்று நக்கலாகக் கேட்டான். அதற்கான விளக்கமாகவும் இத்தொடர் இருக்கும் என நம்புகிறேன்.
எத்தனைப் பகுதியாக எழுதப் போகிறேன், எதை எழுத வேண்டும் எதை விட வேண்டும் என்ற எவ்விதத் தெளிவும் இல்லை. அவ்வாறிருத்தலே நலம் என்றெண்ணுகிறேன். இதுவரை நான் எடுத்த முடிவுகள் பல ஆழ்ந்து சிந்தித்து, சிலாகித்து, விவாதித்து, கலந்தாலோசித்து எடுக்கப்பட்டவை அல்ல. இன்றியமையாத் தேவையினால் எனக்களிக்கப்பட்டவை. அதன் சாதக, பாதகங்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கும் பக்குவம் எனக்கு வந்துவிட்டதாக உணர்கிறேன்.
‘எண்ணித் துணிக கருமம்’ எனும் கூற்று எனக்கு உவப்பானதல்ல. படிப்படியாக, நொடிநொடியாகத் திட்டமிட்டு நான் செயலில் இறங்கிய பல காரியங்களை விட, கணப்பொழுதில் முடிவெடுத்த முன்னெடுப்புகளே என்னைச் செலுத்தியிருக்கின்றன. மேலும், திட்டமிட்ட பல காரியங்கள் உடனே செயல்கூடியதுமில்லை. அவ்வகையில் திட்டங்கள் ஏதும் இல்லாத இத்தொடரும் முழுமை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தொடக்கத்தில் குறிப்பிட்ட மூன்று குழப்பங்களுக்கு விடைகளாக எனக்கு நானே சொல்லிக்கொண்டவை.
1. மொத்தமாக எழுதி ஒரேயடியாகப் பதிவிட விருப்பமில்லை. நீளம் கருதிப் பலர் படிக்காமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம் (ஏற்கனவே, 50 பேருக்கு அனுப்பினால் 5 பேர் படித்தால் அதுவே அதிசயம்.) என்னை நானே உந்திக்கொண்டு பெரிய ஒரு தொகுப்பாக இதை எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. அவ்வப்போது ஓரிரு பகுதிகளைப் படித்துவிட்டு எவரேனும், “தொடர்ந்து எழுது” என்று சொல்வது வேகத்தைக் கொடுக்கும் என்பது எண்ணம்.
2. எளிதான பதில். தமிழில் எழுதுவது எளிது. பல பகுதிகளில் கோபம், வருத்தம், ஆற்றாமை போன்ற உணர்வுகள் இடம்பெறுமாயின், அவற்றை வெளிப்படுத்துவதற்குத் தமிழே சரியானது. அவ்வளவு ஆங்கிலப் புலமை பெறவில்லை இன்னும்.
3. வரலாறெனச் சொல்லுமளவிற்கு உபயோகமானதானதை மட்டுமே எழுத வேண்டுமெனில் இவ்வலைப்பூவில் இருக்கும் அத்தனைப் பதிவுகளையும் நீக்க வேண்டியிருக்கும். எழுதத் தொடங்கியிருக்கும் இத்தொடர் என்னளவில் என் வாழ்வின் முக்கியமான இரு ஆண்டுகள் குறித்த பதிவுகளாக இருக்க வேண்டும், இருக்கும்.
தினம் ஒரு பகுதியாக எழுத முடியுமா என்று தெரியவில்லை. ஓரிரு நாட்களுக்கொருமுறையேனும் எழுதிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.
**********
தொடரின் பிற பகுதிகளைப் படிக்க:
#2 - ஆசான், சென்ன வட சென்ன, செரியன் நகர் & அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்
நன்று கிரி...உன் அனுபவப்பகிர்வுகள் சுவாரசியம் மட்டுமன்றி சமூகத்தின் பல் வேறு முகங்களையும் பல அமைப்புகளின் உண்மை முகங்களையும் வெளிக் கொண்டு வரும் என நினைக்கிறேன்.ஆரம்பமே அருமை.அருமையான எழுத்து நடை...தொடர்ந்து ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteநன்று.. .
ReplyDeleteஒருவர் வாழ்க்கையின் பதிவுகள் நிறைய மக்களின் வாழ்கைக்கு பாடங்களாக இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
ஆவலோடு எதிர்பார்க்கும்..