(முன்குறிப்பு:
தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:
#1 - அகர முதல
#2 - ஆசான், சென்ன வட சென்ன, செரியன் நகர் & அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்
இப்பகுதியின் தலைப்பு எடுக்கப்பட்ட பாடலைக் கேட்க - முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று...)
அரும்பெரும் கனவுகளுடன் காலடி எடுத்து வைத்த நாயகனல்லவா நான்? நிதர்சனமேதும் புரியாமல் “ஃபர்ஸ்ட் டேர்ம் முடிவுல பசங்கள எல்லாம் கதையெழுதப் பழக்குறோம். செக்கண்ட் டேர்ம் கடைசியிலப் பிழையில்லாம எழுத வெக்குறோம். தேர்ட் டேர்ம் எண்ட்ல தொகுத்து ஒரு புக்காப் போடுறோம். சரித்திரத்துல இடம் புடிக்குறோம்” என்று என்னை மையமாக வைத்து மட்டுமே யோசிக்கப் பழகியிருந்தேன். முதல் பருவ முடிவில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கதறிக் காலில் விழாத குறையாக “போர்ஷன் ஃபர்ஸ்ட். படிச்சு முன்னுக்கு வந்தப்புறம் அவங்கவங்களுக்கு என்ன வேணுமோ அதை அவங்களே பாத்துப்பாங்க” என்ற செருப்படி நெற்றியில் அறையும் என்றெல்லாம் அப்போது தெரியாது.
ஜூன்2, 2018. பள்ளி வளாகத்திற்குள் நுழையும்போதே விசாலமான விளையாட்டு மைதானம் கண்ணுக்கு நிறைவாக இருந்தது. அதில் உறுத்தலாகத் தென்பட்ட விஷயம் பள்ளிக்குத் தொடர்பேயில்லாத ஆட்கள் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்ததுதான். “கிரவுண்ட் காமன் பா. பப்ளிக் யூஸ்க்கும் சேர்த்துத்தான்” என்று பாலா தெளிவுபடுத்தினார். அந்நேரத்தில்தான் அன்று உண்மையிலேயே பள்ளி அனைத்து வகுப்புகளுக்கும் தொடங்குகிறது என்றும், ‘டீச் ஃபார் இந்தியா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் தாமதமாக இணைந்து கொள்ளலாம் என்றும் அறிந்தேன்.
பின்னொரு நாளில் மைதானம் தொடர்பான வேறொரு தகவலைத் தெரிந்துகொண்டேன். அது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. முதன்முதலில் பள்ளி வளாகம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியபோது, அதற்குப் பொதுமக்களிடத்தில் பயங்கர எதிர்ப்பிருந்ததாகவும், அவ்விடத்தில் பொதுப் பயன்பாட்டிற்கான எதையேனும் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அதற்கான சமரசமாக பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கான வளாகமாகவும், பிற நேரங்களில் பொதுப்பயன்பாட்டிற்கான இடமாகவும் மைதானம் இருக்கும் என்ற முடிவு எட்டப்பட்டதாகவும் செவிவழிச் செய்தியாய் அறிந்தேன்.
பொது வழிபாட்டு நேரம் தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்களை மைதானத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று பாலா சொன்னார். இரண்டாவது தளத்திற்குச் சென்றபோது அவரது மாணவர்கள் பெரும்பாலானோர் ஏற்கனவே தயாராக வரிசையில் நிற்கத் தொடங்கியிருப்பது தெரிந்தது. மற்றுமொரு வித்தியாசம் பிற வகுப்பு மாணவர்கள் பலர் வண்ண வண்ண உடை தரித்து வந்திருந்தபோது, இவர்களில் நிறைய பேர் சீருடையில் இருந்தனர். நாங்கள் நடந்து வரும்போது வண்டிக்கடையிலிருந்து ஓடி வந்தவர்களும் வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தனர்.
உடனடியாகக் கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கினேன்.
1. “யாருங்க யூனிஃபார்ம் போட்டுட்டு வரணும்னுலாம் இன்ஃபார்ம் பண்ணது?”
2. “புது க்ளாஸ்ரூம் சாவி எப்புடி ஸ்டுடெண்ட்ஸ்க்குக் கெடைச்சுச்சு? யாரு உள்ள விட்டது? மத்த க்ளாஸ்ரூம்லாம் மூடிக்கெடக்குது? எல்லாவனும் வெளிய சுத்திட்டிருக்கான்?”
3. “இன்னைக்கு ஆக்சுவல் ரீ-ஓப்பனிங்னு சொல்லிருக்கலாமே பாலா?”
அவர் அம்பியின் குரலில் எனக்கும், அந்நியனைப் போன்று மாணவர்களிடமும் பேசிக்கொண்டிருந்தார்.
“நாங்க ஹெச்.எம். கிட்ட பர்மிஷன் வாங்கி ஒரு ரெண்டு மூணு நாளாவே க்ளாஸ் தொறந்துட்டுதான்பா இருக்கோம்.” - முதல் கேள்விக்கான பதில்.
“த டைம் இஸ் 8.40. சீக்கிரம் வெளிய வாங்க எல்லாரும்” - இது மாணவர்களுக்குக்கான சத்தம்.
”அக்பர், இலியாஸ்னு ரெண்டு பேரு இருக்கானுக. அவனுக யூஷுவலி நான் லேட்டானாக் கூட தொறந்துருவானுக” - இரண்டாவது கேள்விக்கான பதில்.
“அங்க உக்காந்து இன்னும் என்ன பண்ணிட்டிருக்க? வா டா வெளிய! கேர்ள்ஸ், உங்களுக்குத் தனியா சொல்லணுமா?” - மீண்டும் கர்ஜனை.
“சொல்லியிருந்தா என்னப்பா பண்ணியிருப்ப? நீ ஒரு மணி நேரம் முன்னாடியே வந்திருப்பியா? இல்ல, நேத்து நைட்டே வந்து படுத்திருப்பியா?” - மூன்றாவது வினாவிற்கான விடை.
“ஸ்டார்ட் வாக்கிங் க்விக்லீ டூ த க்ரவுண்ட்” - அடுத்த கட்டளை.
கீழே முதலில் அணிவகுத்துச் சென்றது ஒன்பதாம் வகுப்பு (எனக்களிக்கப்பட்ட வகுப்பு) மாணவர்கள்தாம். பின்னர் ஆறு, ஏழு, எட்டு, பத்து என அனைவரும் வரத்தொடங்கினர். வரிசை நீளப்படி ஒன்பதாம் வகுப்பு ‘அ’ பிரிவு முதலிடத்திலும், ‘ஆ’ பிரிவு இரண்டாமிடத்திலும் இருந்தன. பிற வகுப்புகளின் வரிசைகள் சுருங்கியே கிடந்தன. “நெறைய பேருக்கு இன்னும் ரீ-ஓப்பனிங் பத்தின கான்ஷியஸ்னஸ் வந்திருக்காது. ஊருக்குப் போயிட்டு வராம இருக்குற ஆளுங்கல்லாம் பொறுமையா வருவானுக. ஃபுல் ஸ்ட்ரெங்த் வர்றதுக்கு எப்புடியும் ஒரு ஒரு வாரம், பத்து நாள் ஆகும் பா” என்று பாலா அவ்வப்போது என் எண்ணவோட்டங்களுக்குப் பதிலளித்தபடியே உடன் நடந்து வந்தார். மற்ற வகுப்பு மாணவர்களின் சேட்டைகளைப் பார்த்தபோது ஒன்பதாம் வகுப்பு மட்டும் பெரிய விளையாட்டுகள் ஏதுமின்றி அமைதியாக நின்றிருந்தது வியப்பாயிருந்தது.
ஆசிரியர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். அனைவரும் பாலாவிற்கும், பாலா அனைவருக்கும் வணக்கம் சொல்லியபடி இருந்தார். உடனிருந்த என்னை “யாரு இந்த எலும்புக்கூடு? பாலா கூட நின்னுட்டிருக்குது?” என்ற சந்தேகத்துடனேயே புருவத்தைச் சுருக்கிப் பார்ப்பது போன்றே தோன்றியது. எலும்புக்கூடு ஒன்பதாம் வகுப்பு ஆசிரியனாய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் சுழியமல்லவா? எனில், அவர்கள் “இவன் ஆசிரியனாய் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது” என்று எண்ணாமலிருந்ததில் தவறொன்றுமில்லையே? அவர்கள் அப்போது அறியாதது - ஏன், நானே அறியாதது - எலும்புக்கூட்டில் மேலும் எட்டு, பத்து கிலோ கல்வியாண்டின் இறுதியில் காணாமல் போகும் என்று!
யார் கடவுள் வாழ்த்து பாடுவது, யார் பழமொழி சொல்வது என்று குழப்பங்கள். தலைமையாசிரியை மேடையில் நின்றபடி தயங்காமல் “நைன்த் ஸ்டூடண்ட்ஸ், என்ன பாத்துட்டே இருக்கீங்க? பாலா சார் சொல்லணுமா? ஸ்டேஜ்க்கு வாங்க” என்றார். ஒரு ஐந்து நொடிகள் என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. மூன்று மாணவர்களும், ஐந்து மாணவிகளும் மேடையேறினர். ஒருவன் ஒருங்கிணைத்தான். மாணவிகள் கடவுள் வாழ்த்து பாடினர். ஒருவன் பழமொழி சொன்னான். ஒருவன் பொது அறிவுத் துணுக்கை உதிர்த்தான். “டிஸ்போஸ்” என்று அறிவித்தான் ஒருங்கிணைத்தவன். அனைத்து மாணவர்களும் வந்த வழியே அவரவர் இருப்பிடம் புரியாமல் - பலருக்கும் தங்களது புது வகுப்பிற்கு எங்கு செல்ல வேண்டும், பழைய வகுப்பில் அமர வேண்டுமா, புதிய வகுப்பிற்குச் செல்ல வேண்டுமா என்று பல குழப்பங்கள் போல - ஆங்காங்கே கூடி நின்றனர். அக்குழப்பத்திற்கிடையே பாலா, “வாப்பா ஹெச்.எம். கிட்ட இண்ட்ரொட்யூஸ் ஆகிக்கோ” என்றழைத்தார். தலைமையாசிரியையின் பெயர் சாந்தி என்றறிந்தேன். “ஓ நீங்க தான் புது ஃபெல்லோவா?” என்று பெயர் அறிந்துகொண்டார். பிற ஆசிரியைகள் - மொத்த ஆசிரியப் பெருமக்களில் விளையாட்டு ஆசிரியரும், பாலாவும், நானும் மட்டுமே ஆண்கள் - வரவே அவர்களுடன் வகுப்பறை ஒதுக்கீடு குறித்து மைதானத்தில் இருந்தபடியே உரையாடத் தொடங்கினார்.
வகுப்பறை நோக்கி நடக்கும்போது பாலா சொன்னார், “சாந்தி மேடம் ஹெல்ப்ஃபுல் பா. மத்த ஸ்கூல் மாதிரியே இங்கயும் பாலிட்டிக்ஸ் எல்லாம் உண்டு. புட் இவங்க அதெல்லாம் ஹாண்டில் பண்ணிப்பாங்க. முக்கியமா, ஃபெல்லோஸுக்கு சப்போர்ட்டிவ்வா இருப்பாங்க.” எனக்கு இன்னும் நடந்து கொண்டிருந்தவை எத்தகைய நிகழ்வுகள் என்று பிடிபடவில்லை. எவ்வித முன்னறிவிப்புமின்றி கூப்பிட்ட குரலுக்குச் சட்டென மேடையேறி வழிபாட்டை ஒழுங்காக நடத்த உதவியிருந்தனர் ‘என்’ மாணவர்கள் (அவர்களே உருப்படியாக வேலை செய்தால் அதற்குச் சொந்தம் கொண்டாடும் அரைவேக்காட்டுத்தனம் என்னிடம் மிகுதியாகவே இருந்தது).
வகுப்பறைக்குச் சென்றபோது கிட்டத்தட்ட அனைவரும் அமர்ந்திருந்தனர். சலசலப்பு இருந்தாலும், கூச்சல் குழப்பமோ, அடிதடியோ, மேசை மேல் ஏறி நின்று விளையாடிக்கொண்டிருக்கும் காட்சிகளோ எதுவும் இல்லை (என் பள்ளியில் நான் பல்வேறு தருணங்களில் மேசை மீதேறி ஆடியதற்காகவும், உணவு இடைவேளையின்போது செய்த சேட்டைகளுக்காகவும் பி.ஈ.டி. ஆசிரியர்களிடம் அடி, உதையும் மைதானத்தைச் சுற்றி ஒடும் தண்டனையும் வாங்கிய அனுபவம் உண்டு); என்னுடைய ஒன்பதாம் வகுப்பு மாணவப் பருவத்தையும் நான் சென்ற வகுப்பறையின் நடவடிக்கைகளையும் ஒப்பிடும் இந்த சுயபரிசோதனை ஆண்டு முழுவதும் எனக்குள் அவ்வப்போது ஓடிக்கொண்டே இருந்தது என்பது கொசுறுத் தகவல்.
பாலா உள்சென்றவுடன் தயங்கியபடி கதவை ஒட்டி நின்ற என்னை உள்ளே அழைத்தார். “சூர்யா சார்” என்ற பல குரல்கள் ஒலித்தன (இதே மாணவர்கள் மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பில் படித்தபோது பாலாவுடம் பணியாற்ரிய ஃபெல்லோவின் பெயர் சூர்யா என்றறிந்தேன். பின்னொரு நாளில் அவரது புகைப்படத்தைப் பார்த்தபோது மாணவர்கள் என்னை அவரென நினைத்தது மிகையில்லை என்று புரிந்தது). பின்னர் பாலா என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். என்னை மாணவர்களிடன் பேசிக்கொண்டிருக்குமாறு பணித்து மற்றொரு பிரிவிற்குச் சென்றுவிட்டார்.
அனைவரிடமும் கேட்பதற்குப் பல கேள்விகள் இருந்தன. சிரித்தபடியே பொறுமையாகப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது, பாலா வந்து, “ஓ.கே. இனஃப். ஷெல்ஃப்ல நோட்புக்ஸ் இருக்கும். அட்டை, லேபில் எல்லாம் இருக்கும். என்ன பண்ணணும்னு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தெளிவாத் தெரியும். ஃபார்ம் யுவர் டீம்ஸ் அண்ட் ஸ்டார்ட்” என்று கூறுவதற்கும், கத்துவதற்குமான இடைப்பட்ட ஒரு சத்த அளவில் பேசினார். இசைக்குக் கட்டுப்பட்ட பாம்பைப் போல சாரிசாரியாகச் சென்று நோட்டுப் புத்தகங்களையும், அட்டைகளையும், கத்தரி, பசை, லேபில் போன்ற சாமான்களையும் எடுத்துக்கொண்டு மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்தனர். பக்கத்து வகுப்பறையிலும் அக்கட்டளை பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்தது.
“புக்ஸ் பீ.டி.எஃப்.ஸ் எல்லாம் டவுன்லோட் பண்ணி வெச்சுக்கோ பா. ஹார்ட் காப்பீஸ் வர்றதுக்கு ஒரு டூ டேஸ் ஆகும். நீ அதுக்குள்ள ப்ரிப்பேர் ஆயிட்டன்னா ஈஸியா இருக்கும். இந்த வருஷம் சிலபஸ் சேஞ்ச் ஆயிருக்கு. புது புக்ஸ். போன வருஷம் இருந்தத விட சிலபஸ் காம்ப்ளெக்ஸா இருக்கும்னு தோணுது. நான் எய்த் ஸ்டேண்டர்ட் புக்ஸ் புதுசையும் பழசையும் கம்பேர் பண்ணிப் பாத்துட்டேன். இவனுங்க போன வருஷம் படிச்சத விட டெஃபனட்லி கஷ்டம்தான்” என்று எனக்கான அன்றைய அறிவுரை பாலாவிடமிருந்து வந்தது. “நேம்ஸ்லாம் அப்டியே கேட்டுக் கொஞ்சம் கொஞ்சமா யூ வில் கெட் யூஸ்ட் டூ தெம். ஸோ அதெல்லாம் ரொம்ப அலட்டிக்காத. முக்கியமான சில பேரு மட்டும் தெரிஞ்சு வெச்சிக்கோ இப்பொதைக்கு. அதுதான் ஒய். அக்பர். இனிஷியல் முக்கியம். ஏன்னா இன்னொரு அக்பர் இருக்கான். அவன் எஸ். அக்பர். அதோ, அது இலியாஸ். இவன் ஃபாரூக். அது ஆசீஃப். இது அபினேஷ். அந்தப் பொண்ணு ஷாஹினா. இது இன்பவாணி, ப்ரீத்தி, அஸ்வியா, ஃபாத்திமா, ஸ்ரீமதி” என்று அறிமுகம் செய்துகொண்டே போனார். ஒவ்வொருவருக்கும் என்னென்ன பொறுப்பு அளிக்கப் பட்டிருக்கிறது என்பதையும் மனத்தில் பதிந்துகொள்ளச் சொன்னார். “அவங்களுக்கே டெய்லி என்னென்ன பண்ணணும்ன்ற ரொட்டீன் தெரியும். இருந்தாலும் இட் இஸ் யூஸ்ஃபுல் ஃபார் யூ டு நோ” என்றார். வகுப்பறைக்குள்ளாகவே மாணவர்களே நடத்திப் பராமரிக்கும் ஒரு சிறுசேமிப்புத் திட்டம் இருப்பதை அறிந்தேன்.
அட்டை போட்டு லேபில் ஒட்டும் படலம் நடந்துகொண்டிருக்கும்போதே அடுத்த நாளைக்கான திட்டம் தீட்டப்பட்டது. அக்பர், ரியாஸ், திவாகர், இலியாஸ், கராமதுல்லா உள்ளிட்டோர் எட்டாம் வகுப்பறையிலிருந்து நூலக பீரோக்களை எடுத்து வர வேண்டும் என்பது அதில் முக்கியமான நடவடிக்கை. “லைப்ரரின்னா?” என்று வழக்கம்போலவே இழுத்த என்னிடம், “நம்ம க்யூரேட் பண்ணி, மெயிண்டெயின் பண்றதுப்பா. நம்ம பசங்களுக்காக. வேற யாராச்சும் கேட்டாலும் குடுப்போம். பட் எந்த க்ளாஸ்லயும் கேக்கறதில்ல” என்றார் பாலா (அவர் ‘நாம், ‘நமது’ என்று சொல்வதை அன்றிலிருந்தே உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட நூறு சதவிகித உழைப்பையும் அவரே செலுத்தியிருக்கும் ஒரு விஷயத்தைக் கூட “நாம செஞ்ச எஃபோர்ட் பா இதெல்லாம்” என்று அவருடன் பணியாற்றிய இரண்டாண்டுகளிலும், எவ்வித யோசனையுமின்றி பல பணிகளுக்கான பாராட்டுக்களில் என்னையும் சேர்த்தே பேசி வந்தார்.)
இந்நடவடிகைகளுக்கிடையே உணவு இடைவேளை வந்துவிட்டது. அன்று சத்துணவுச் சாப்பாடு இல்லை, மேலும் பல வகுப்புகளில் முதல் நாளாதலால் மாணவர்கள் அரை நாள் முடிந்தவுடன் கிளம்பத் தொடங்கியிருந்தனர். நான் சாலையின் மறுபுறம் சென்று ‘உடுப்பி ஹோட்டல்’ என்றழைக்கப்படும் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா’வில் எனக்கு இரு சப்பாத்திக்களும், அவருக்கு இரண்டு பரோட்டாக்களும் வாங்கிச் சென்றேன்.
’நம்’ வகுப்பில் வேலை மூன்று மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது. ஒரு சிலரை மட்டும் “நீங்க கெளம்புங்க” என்று அனுப்பிவிட்டிருந்தார். “கண்ட்ரோல் இல்லைன்னா அனுப்புன பசங்களையெல்லாம் ரொம்ப நேரம் உக்கார வைக்க முடியாதுப்பா. மத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்ண ஆரமிச்சுருவானுக” என்று காரணம் கூறினார்.
ஒரு வழியாக மூன்றரை மணியைத் தாண்டி வேலை முடிந்தது. வகுப்பறையைக் கூட்டிச் சுத்தம் செய்வதற்கும் அணிகள் இருந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழு வேலையைச் சுழற்சி முறையில் ஏற்க வேண்டுமென்பது விதிமுறை. சாக்குகளை வெளியே போட்டு, மேசைகளை ஒருபுறம் ஒதுக்கி, துடைப்பத்தால் பெருக்கி, தண்ணீர் பிடித்து வந்து மெழுகித் துடைத்து, மேசைகளை மீண்டும் வரிசைப்படுத்தி, வகுப்பறையைப் பூட்டிச் செல்ல வேண்டும். மேற்பார்வை என்றில்லாமல், பாலாவும் இறங்கி வேலை செய்தார். உடனிருந்து மேசைகளை இழுத்துப்போட்டார். ஸ்தம்பித்து நின்றிருந்த நானும் பெரியவர்கள் விளையாடும் மட்டைப்பந்தாட்டத்திற்கிடையில் புகுந்து ஓடும் மழலைக் குழந்தையைப் போல் பெயரளவிற்கு ஏதேதோ செய்துகொண்டிருந்தேன்.
முடிந்ததும், “உனக்கும் ஒரு கீ ஸெட் டூப்ளிகேட் பண்ணி ரெடியா வெச்சிடுறேன் பா. ஸோ தட் யூ கேன் டேக் சார்ஜ். நாளைக்குப் பாக்கலாம்” என்று பாலா முடித்தபோது, “நீங்க வரலையா?” என்றேன். ‘என்ன என்னைய மட்டும் வழியனுப்புற மாதிரி சொல்றாரு?’ என்பது எனக்குள் எழுந்த கேள்வி. பொதுவாகவே வழிசொல்வதிலும், வழிகளைப் புரிந்து கொள்வதிலும் நான் மந்தமான ஆள். என்னதான் ‘கூகிள் மேப்ஸ்’ எல்லாம் இருந்தாலும் “பாத்துடா, நார்த் சென்னை” என்று பலரும் கூறியிருந்த எச்சரிக்கை வார்த்தைகளால் சற்றே தயக்கம். “நான் செண்டர் போறேன் பா. அங்க கொஞ்சம் வேலையிருக்கு. யூ கேரி ஆன்” என்றபடி அவர் ஒருபக்கம் நடையைக் கட்டினார். ‘செண்டரா? அதென்ன?’ என்று கேள்விகள் எழுந்தாலும், அவரிடம் குடைய விருப்பமில்லை. எனவே மௌனமாகத் தலையாட்டினேன்.
கடற்கரைச் சாலை நோக்கி நடந்த எனக்குள் பல்வேறு கேள்விகள்:
1. ஏன் இவ்ளோ ஸ்ட்ரிக்டாவே இருக்காரு? இன்னைக்குக் கூட நெறைய பசங்கள கண்டபடி திட்டுனாரே!
2. எப்புடி அவர் சொல்லாமலேயே சில விஷயம் தானா நடக்குது? டப்புனு ஸ்டேஜ் ஏறிக் கலக்குறாங்க ஸ்டூடண்ட்ஸ் எல்லாம்?
3. க்ளாஸ்குள்ள ஸ்டூடண்ட்ஸே மெயிண்டெய்ன் பண்ற அளவுக்கு உண்டியல்லாம் வெச்சுருக்காங்க?
4. ஸ்கூலே நோட், புக்ஸ் எல்லாம் இன்னும் ஒரு ரெண்டு நாள் கழிச்சுத்தான் குடுக்கப்போகுது! அதுக்குள்ள இவரு ஏன் நோட்ஸ் எல்லாம் வாங்கி வெச்சாரு? யாரு குடுத்த காசு அது?
5. ஏன் பசங்க எல்லாம் ஸ்கூல்ல வந்து அட்டை போடுறாங்க? நாமல்லாம் ஸ்கூல்ல படிக்கும்போது வீட்டுலயே தானே போட்டுட்டுப் போவோம்?
6. மத்த க்ளாஸுக்கும் இந்தக் க்ளாஸுக்கும் பயங்கரமான வித்தியாசம் இருக்கே? என்ன காரணம்?
இதையெல்லாம் விட முக்கியமான இறுதிக்கேள்வியாக,
7. பாலா - நீங்க நல்லவரா? கெட்டவரா? நீங்க கொடுமக்காரர்னு சொல்றது உண்மையா? பொய்யா?
அன்று ராம்பிரசாத்துடன் உரையாடுவதற்குப் பல விஷயங்கள் இருந்தன. ‘கோவை சாவித்திரி மெஸ்’ஸில் தின்றபடியே பேச வேண்டும் என்று நினைத்தபடி ஷேர் ஆட்டோவில் ஏறினேன்.
(பி.கு.: முதல் இரண்டு மாதங்களுக்குப் பிறகான அனுபவங்களை 2018-ல் எழுதியிருந்தேன். இச்சமயத்தில் அதைப் படிப்பதும் சாலப் பொருத்தமானது. இங்கே சொடுக்கவும்)
No comments:
Post a Comment