Friday, June 16, 2017

”வா வா” என்று வா. மணிகண்டனை வரவேற்போம்: ’லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ நூல் பற்றிய கருத்துக்கள்

வலைப்பூப் பதிவுகளை சுவாரசியமாக்க முடியும் என எனக்குச் சொல்லித்தந்த மானசீக குரு எழுத்தாளர் வா. மணிகண்டன் அவர்கள். நிசப்தம் வலைத்தளத்தில் இடைவிடாது எழுதிவரும் இவரது எழுத்துக்கள், “நீயும்தான் வெச்சுருக்கியே ஒரு ப்ளாக்கு! ஹும்… பத்து நாளைக்கு ஒரு தடவ சொத்தையா ஒரு பதிவு எழுதிக்கிட்டு” என்று என்னை நானே சுயமதிப்பீடு செய்ய ஏதுவாய் விளங்கும் ஒரு காரணி.

நண்பன் ஒருவன் மூலமாக அறிமுகமான நிசப்தம்.காம், நாள்போக்கில் நான் மூன்று முறையேனும் சொடுக்கும் தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ‘ஏதேனும் புதிய பதிவு வந்திருக்கிறதா?’ எனும் ஆர்வம் என்னையேயறியாமல் என்னுள் தொற்றிக்கொண்டது பெரிய ஆச்சரியம்தான். சிலநேரங்களில் ஒரே மாதிரித் தோற்றம் கொண்ட பதிவுகள் வந்தவண்ணம் இருப்பினும், போதை வஸ்துவாய் மாறியிருக்கிறது நிசப்தம் வலைத்தளம்.

இப்படி அறிமுகமான திரு. மணிகண்டனின் எழுத்துக்கள், அவரது புத்தகமான ‘மசால் தோசை 38 ரூபாய்’ மூலமாய் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு தொகுப்பு நூல் என்றாலே அதில் இலக்கிய நயம் பொருந்திய, அறிவார்ந்த படைப்புகள் சில இருக்க வேண்டும் எனும் மாயையையெல்லாம் உடைத்த இத்தலைமுறை எழுத்தாளர்களுள் என்னளவில் முக்கியமானவர், திரு. மணிகண்டன்.

சமீபத்தில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனைச் சந்திக்கும் பெரும்பேறு அடியேனுக்குக் கிட்டியது. அப்போது அவர் எனக்குக் கொடுத்த புத்தகங்களுள் ஒன்று, மணிகண்டன் எழுதிய ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’. “மணிகண்டன்-னு ஒரு தம்பி, பெங்களூருல இருக்கான். இங்க கோபிச்செட்டிப்பாளையத்துக்காரன்தான். அழகா எழுதுறான். ரொம்ப ஆஹா, ஓஹோன்னு இலக்கு வெச்சு எழுதாம, யதார்த்தமா இருக்கு. அது இருந்தாப் போதும்; போகப் போக அந்த எலக்கியம் எல்லாம் தானா கைக்குள்ள வந்துடும்” என்று சொன்னபோது, அப்பெருந்தகைக்குத் தெரிந்த ஒரு மனிதர் எனக்கும் தெரிந்திருக்கிறார் என்று புளகாங்கிதம் அடைந்தேன்.

புத்தகத்தின் தலைப்பு ஒருவகையில், ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்தின் தலைப்பைப் போன்ற ஒரு திறப்பைத் தந்தாலும், உள்ளே இருக்கும் ஒவ்வொரு பதிவும் மிகவும் ரசனையுடன் எழுதப்பட்டவையாகவே இருக்கின்றது. ’மின்னல் கதைகள்’ என்று முகப்பு அட்டையிலேயே குறிப்பிடப் பட்டிருந்தாலும் – ஒவ்வொரு பதிவும் அதிகபட்சம் ஐந்து பக்கங்களைத் தாண்டுவதில்லை – கதை, கட்டுரை, கவிதை என்பதெல்லாம் வாசகனின் எளிமைக்காகப் பிரிக்கப்பட்டவை எனும் முக்கியமான கருத்தைச் சொல்லாமல் சொல்வதாகவே இப்புத்தகம் தோன்றியது.

கதை என்றோ, கட்டுரை என்றோ, வர்ணனை என்றோ பகுத்துப் பேசமுடியாத அளவிற்கு உண்மையா, கற்பனையா என்றளவில் வாசகனை சிந்திக்க வைக்கும் வெவ்வேறு ‘பதிவு’களின் தொகுப்பாக வந்துள்ள ‘லிண்ட்சே லோஹன்…’ ஒரு வெற்றிப்படைப்பு என்று அறுதியிட்டுச் சொல்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

1)      ஒரு வகைமைக்குள் (கதை/கட்டுரை) அடைபடாத இயல்பான எழுத்தின் மூலம் வாசகனை வாசிப்பிற்குள் இழுக்கும் காந்த சக்தி மணிகண்டனின் படைப்புகளில் பளிச்சிடுகின்றன.

2)      இப்புத்தகத்தைப் படித்துமுடிக்கும்போது, ‘ப்ச். நமக்கும்தான் இந்த மாதிரி எத்தனை நிகழ்வுகள் நடந்திருக்கின்றன! அதில் எத்துணை சம்பவங்களைச் சரியாகப் பதிவு செய்திருக்கிறோம்?’ எனும் சுயகேள்வி தானாக எழுகின்றது.

3)      தமிழில் பேசுவதே குறைந்துவரும் இக்காலக்கட்டத்தில், தமிழில் எழுதும் நபர்களில் எண்ணிக்கை அருகிவருவதைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. எழுதுவதற்குப் பலர் முன்வராமல் இருப்பதற்கான ஒரு காரணமாக எனக்குத் தோன்றுவது, புகழ்பெற்ற பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் படிப்பதற்கு ஏதுவாக இருந்தாலும் அவற்றின் அறிவாளித்தனம் வாசகனை எழுதத் தூண்டுவதில்லை. மாறாக, எழுத வேண்டும் எனும் ஆர்வமுள்ளவன்/ள் கூடப் பயந்து ஒதுங்கும் வகையில்தாம் பல நூல்கள் இருக்கும். அத்தடையை மணிகண்டன் போன்றோரின் எழுத்துக்கள் கண்டிப்பாக உடைக்கின்றன; சுக்குநூறாக்குகின்றன.

4)      புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் கூற்றுப்படி, “அனைவரும் படிக்க வேண்டுமென்றால் அவர்களுக்குப் புரியும்படியாகச் சிறிய புத்தகங்களாய் இருக்க வேண்டும். இல்லையென்றால் அனைவரும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது” என்பதற்கேற்ப அமைந்துள்ளது இந்நூல். ஒவ்வொரு பதிவாகப் படித்துப் பின் சிந்திப்பதற்கும், நம் வாழ்வின் சம்பவங்களை ஒப்புநோக்குவதற்கும் நேரம் ஒதுக்கிப் படிக்கலாம்; அல்லது, ஒரே அமர்வில் முழுமூச்சாக வாசித்துமுடித்துவிட்டு, ‘பயபுள்ள… செம்மையா எழுதுறாருய்யா, நாமளும் எழுதுவோம்’ என்று உத்வேகம் கொள்ளலாம்.

வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் சாமானிய வாசகனையும் ஈர்க்கும் திறன் கொண்ட இப்புத்தகம், சில படைப்புகளின் முடிவுகளின் மூலம் அதிர்ச்சி கொள்ளவும், ‘எப்புடி இவ்ளோ சாதாரணமா இவ்ளோ பெரிய விஷயத்தைச் சொல்லிட்டு போய்ட்டே இருக்காரு’ எனும் வியப்பையும் ஏற்படுத்தவும் தவறுவதில்லை. நூலின் முதல் கதையான ‘சாவதும் ஒரு கலை’யிலேயே மேற்கூறிய ‘அதிர்ச்சி முடிவுகள்’ குறித்து உணர முடியும்.

தனது குழந்தைப்பருவத்தில் கண்ட கிராமத்து வழக்கங்களை ஆங்காங்கே மழைச்சாராலெனத் தூவிவிட்டுக்கொண்டே செல்லும் மணிகண்டன்,, பண்பாட்டு ரீதியிலான பதிவுகளையும் தனது எழுத்துக்களின் மூலம் செவ்வனே செய்கிறார் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமாக இருக்கமுடியாது.

காமத்தைப் பற்றிய இவரது எழுத்துக்கள் அனைத்து விடலைகளையும், ‘நம்ம செய்கைகளையெல்லாம் எங்க இருந்தோ பார்த்துட்டாரோ’ என்று எண்ணுமளவிற்குத் தொடர்புபடுத்திக்கொள்வதற்கு எளிதானவை. ‘காமத்துளி’, ‘நீலப்படம்’ போன்ற பதிவுகள் இதற்கான உதாரணங்கள்.

நூலில் இடம்பெற்றுள்ள ‘சில்க் ஸ்மிதா’ எனும் படைப்பு உண்மையைப் பொட்டிலறைந்தாற்போல் சொல்லும் விதம், பின்மண்டையில் சம்மட்டியால் யாரோ அடித்த விளைவை ஏற்படுத்துகிறது. வெளியுலகிற்காக வேடமிடும் ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்க வாழ்விலும் மறைந்திருக்கும் கருப்புப் பக்கங்களின் படிமமாகவே ‘சில்க் ஸ்மிதா’வின் வாழ்க்கை இருந்திருக்கிறது. அப்பெண்ணை, நடிகையை, “அவ கெடக்குறா #%$@%&8*” என்று திட்டிய பலரும் அவரது படங்களைப் பார்த்து ரசித்திருக்கக்கூடும். இந்த உதாரணத்தின் சமீபத்திய எழுத்துலக ஒப்புமை சேத்தன் பகத். இவரது எழுத்துக்களைக் குப்பை என்றும், தரம் குறைந்தவை என்றும் விமர்சிக்காத ஆட்களே (நான் உட்பட) இல்லை எனினும், அவர்கள் யாவரும் (மீண்டும், நான் உட்பட) இவரது புத்தகங்களை வாசிக்காமல் குறைகூற முடியாது அல்லவா? அந்த ஒரு இனம்புரியாத ஈர்ப்பு எதையேனும் ஒன்றை நோக்கி ஒவ்வொரு மனித மனத்தையும் தள்ளிக்கொண்டேதான் இருக்கிறது. ஈர்ப்புக்கும், விலகலுக்குமான விளையாட்டே மனித வாழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது.

’நடுப்பாளையம் ஜமீனின் சேட்டைகள்’ எனும் கதை, தவிர்க்க முடியாமல் நாஞ்சில் நாடனின் ‘மாமிசப் படப்பு’ எனும் நாவலை இருபக்கங்களில் படித்த உணர்வைத் தருகிறது. கதைக்களமும், காட்சிகளும் வெவ்வேறு என்றாலும், இரு படைப்புகளின் மையக்கோடும் ஒன்றாகவே பயணிக்கின்றது. ஜமீனின் சேட்டைகள் அவரது பெண்ணாசையைப் பற்றியதாகவும், ‘மாமிசப் படப்பு’ வேலைக்காரர்களுக்கும், நிலவுடைமையாளர்களுக்குமான போராட்டமாகவும் இருப்பினும், ஜாதி ரீதியான வெறி, அதன் விளைவாக எழும் கட்டுக்கடங்காத பழிவாங்கும் உணர்ச்சி என்ற ரீதியில் ஒன்றிணைகின்றன இரு எழுத்தாளர்களின் சிந்தனைகளும்.

அமங்கலமாக முடியும் பல கதைகளில் சிலவற்றைத் தவிர்த்துவிட்டு, வேறு வகையிலான படைப்புகள் சிலவற்றைச் சேர்த்திருக்கலாம் எனும் மனக்குறை எழாமலில்லை. எனினும், 80-களில் வெளிவந்த 70 எம்.எம். திரைப்படத்திலிருந்து, 2017-ல் வந்துகொண்டிருக்கும் ‘சாட்டிலைட்’ படங்கள் வரை அனைத்தையும் சுற்றி ஒரு வட்டமடித்தது போன்ற ஒரு உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ ஒரு வெற்றிப்படைப்பே.

பின்குறிப்பு: நூலில் இடம்பெற்றுள்ள ‘போலி’ஸ் என்கவுண்ட்டர்’ எனும் பதிவு, எனது வலைப்பூவில் நான் எழுதிய ‘துப்பாக்கித்தோட்டா’ எனும் பதிவைப் போலவே இருந்ததில், ‘எழுத்தாளர்களை மாதிரியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேனா?’ என்று அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி (’என்ன ஒரு ஆனந்தம் அந்தக் கரடிக்கு?’ என்றும் சொல்லலாம்).

Wednesday, June 7, 2017

என்றும் மாறாக் காதல் - வைக்கம் முகம்மது பஷீரின் ‘காதல் கடிதம்’

வைக்கம் முகம்மது பஷீர் எனும் மிகப்பெரிய ஆளுமையின் எழுத்துக்களைப் பற்றிய முதல் அறிமுகம் அவரதுமதில்கள்’ (மலையாளத்தில்மதிலுகள்’) எனும் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை வாசிக்கும்போது கிடைத்தது. மனித மனத்தின் ஆசைகளை எளிமையான மொழியின் மூலம் அழகாக வாசகரிடம் கடத்தும் அவரது படைப்பு வியப்பை உண்டாக்கியது.

மதில்கள்வாசித்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் தற்செயலாக வீட்டில்காதல் கடிதம்எனும் அவரது நாவலை வாசிக்க நேர்ந்தது. சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ள இந்நூலை வாசிக்கத் தூண்டிய முதற்காரணம், புத்தகத்திலிருந்த பக்கங்களின் எண்ணிக்கை. ஒரு முறை உட்கார்ந்து வாசித்துமுடிக்கக்கூடிய அளவேயிருந்த அப்புத்தகத்தைக் கவனம் சிதறாமல் படிக்க முடிந்தது (மாறிவரும்ஃபாஸ்ட் ஃபுட்காலத்தினால் பாதிக்கப்பட்டு, நூல்களும்கூட சிறிய அளவில் வரவேண்டும் எனும் பைத்தியக்காரத்தனமான எண்ணங்களை வளர்த்துக்கொண்டுள்ள சில்வண்டுத் தலைமுறையைச் சேர்ந்தவன் நான்).

இந்நூலை நாவல் என்றோ, புதினம் என்றோ வகைப்படுத்த முடியுமா, முடியாதா எனும் பண்டித விவாதங்களைத் தாண்டி, நல்ல ஒரு படைப்பை அனுபவித்த உணர்வைத் தருவதுதான் இப்புத்தகத்தின் வெற்றி.

கேசவன் நாயர் எனும் ஆணுக்கும், சாராம்மா எனும் பெண்ணுக்குமான காதல் உரையாடல்களே புத்தகத்தின் சாராம்சம், ஆன்மா, ஆதி, அந்தம் என அனைத்துமாய் இருக்கின்றன. ‘பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் வளர்கின்ற காதல் அதிசயம்எனும் வரிக்கேற்ப விடலைப் பருவத்திற்கேயுரிய சீண்டல்களும், ஏக்கங்களும் கலந்த இயல்பான காதலாய் வெளிப்படுகிறது கேசவன் நாயர்சாராம்மா காதல். 1943-ல் வெளிவந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் கூற்று சற்றேனும் நம்பமுடியாத அளவுக்கு,  நூலானது இன்றும் மிகவும் தொடர்புபடுத்தக்கூடியதாக இருப்பதற்கான ஒரே காரணம், காலத்தால் மாறாத காதல் உணர்வு என்றே எண்ணத் தோன்றுகிறது.

இயல்பாகவே மனத்தில் பட்ட எண்ணத்தை அவசரகதியில் சொல்லும் (அல்லது கேசவன் நாயரைப் போல எழுதும்) விடலைப் பருவ ஆணின் எண்ணங்களும், அதிகமாக யோசித்து நிதானமான, தெளிவான முடிவை எடுக்கும் பெண்ணின் எண்ணங்களும் முட்டிமோதும்போது எழுகின்ற குமுறல்களும், சிறிய ஏமாற்றங்களும, உரையாடல்களின்போது தானாகவே வரும் சீண்டல்களும் எனப் புத்தகம் எழுத்துக்களின் வழியாக, சொற்களின் வழியாக, வாக்கியங்களின் வழியாக வாசகனின் மனத்தில் இனம்புரியாத ஒரு புளகாங்கிதத்தைத் தோற்றுவிக்கிறது.

கேசவன் நாயரை மனத்தில் நினைப்பதற்கு மாதச் சம்பளம் கேட்கும் சாராம்மாவைப் பார்த்து முகஞ்சுளிக்க முயலும் எனது ஆண்பால் மனோபாவத்தைத் தாண்டி, நாவலின் அப்பகுதி குறிப்பால் உணர்த்தும் செய்தி அபாரமானது. அன்றும், இன்றும் ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் இருக்கும் மனவோட்டங்களுக்கும், குடும்ப உறுப்பினர்கள் குறித்த முடிவிலாக் கவலைகளுக்கும், இன்னும் சொல்ல முடியாத, மடைதிறவா உணர்ச்சிகளுக்கும், இன்ன பிற உளைச்சல்களுக்கும் ஈடுஇணையாகப் பணத்தைக் கொடுக்க முடியுமா எனும் அகக்கேள்வி நெருப்பெனச் சுடுகிறது.

கேசவன் நாயர் வெளிப்படையாக உரைக்கும் சொற்களும், சாராம்மா பெரிதாக ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி காதலைச் சிறிதுசிறிதாய் ஏற்பதும் மேலோட்டமாகப் பார்க்கும்போது, நாம் காலங்காலமாய்த் திரையில் பார்த்துப் புளித்துப்போன சமாச்சாரங்கள் நினைவலைகளாக வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், நாவலின் முக்கியமான வெற்றி என்பது முடிவெடுக்கும் உரிமையை அப்பெண்ணிற்கும் அளிப்பதில் புலனாகிறது. கேசவன் நாயர் வெறுமனே தன்னைக் காதலிப்பதாகப் பசப்பு வார்த்தைகளால் சொல்வதை மட்டுமே நம்பி, சாராம்மா ஒரு முடிவை எடுப்பதில்லை; மேலும், திருமணத்திற்குப் பிறகான தாம்பத்திய வாழ்க்கை பற்றிய கேள்விகளும், கவலைகளும் சாராம்மாவுக்கே தோன்றுகின்றன. ‘பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறோம்?’ எனும் கேள்வியில் தொடங்கி, ‘அக்குழந்தைகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள்?’ எனும் வினா வரை அனைத்துமே சாராம்மாவிடமிருந்தே வருகின்றன. மாறாக, தனக்கு அப்பெண் கிடைத்தால் போதும்; அனைத்தையும் சாதித்து விடலாம் எனும் தட்டையான பார்வையே கேசவன் நாயரின் கதாபாத்திரத்திடமிருந்து வெளிப்படுகிறது.

மேலே சொல்லப்பட்ட இரு கேள்விகள், மரத்தின் கிளைகளைப் போல் பிரிந்து பல்வேறு ரீதியிலான கேள்விகளை எழுப்புகின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது குழந்தைகளின் பெயர் என்ற அம்சமே நமக்குத் தெரிந்தாலும், கலப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியரின் அடுத்த தலைமுறை எதிகொள்ளும் சமூக உளவியல் சிக்கல்களைப் போகிறபோக்கில், பொட்டிலடித்தாற்போல் புட்டுவைக்கும் பஷீரின் எழுத்தாளுமை பிரமிப்பூட்டுவதாயிருக்கிறது. ‘பாம்பேதிரைப்படத்தில் வரும் காட்சிகளை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அதேபோல் வாழ்க்கை மீதான அவநம்பிக்கை நம் ஆழ்மனத்தில் திரைக்காட்சிகளால் எப்படித் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன என்று எண்ணுவதற்கான வாய்ப்பாக இந்நூல் அமைந்தது. நாவலில் வரும் இரு காட்சிகளை வைத்து இதனை விளக்க முடியும்.
1)        கேசவன் நாயரைத் தன் மனத்தில் நினைக்க வேண்டும் என்றால் அது ஒரு வேலை என்றும், அதற்குக் கூலி வேண்டும் என்று குறும்பாக சாராம்மா கேட்கும்போது, பணம் தரச் சம்மதிக்கிறான் கேசவன் நாயர். ’எங்கே அவள் அப்பணத்தை எடுத்துக்கொண்டு வேறொருவனைத் திருமணம் செய்துகொண்டு ஓடிவிடுவாளோ?’ எனும் எதிர்மறை எண்ணம்தான் முதலில் மின்னலென வெட்டுகிறது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. உலகம் உண்மையில் நல்லவர்களால் நிறைந்தது, நம் பார்வைதான் மாற வேண்டும் என்று சம்மட்டியால் அடித்து யாரோ மூளையில் உரக்கக் கத்துவது போலிருந்தது.
2)        இருவரும் குடும்பத்தை விட்டு விலகிச் சென்று, திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று முடிவுசெய்யும்போது, ‘ஒருவேளை இருவரில் ஒருவர் வராமல் ஏமாற்றிவிடுவாரோ? அல்லது, வீட்டிற்குத் தெரிந்து அடித்து, உதைத்துக் கொன்றுவிடுவார்களோ?’ எனும் குரூரமான கேள்விகளே எழுகின்றனவேயொழிய, ‘இவர்கள் சேர்ந்து வாழப் போகிறார்கள்எனும் நற்கருத்து மனத்தில் உதித்ததாக நினைவில்லை.

வாழ்க்கை சுவையானது, காதல் இதமானது. அதனால்தான் இரு கதாபாத்திரங்களே இருந்தாலும் சலிப்புத் தட்டாமல் நாவலைப் படிக்க முடிகிறது. உடல் ஈர்ப்பைத் தாண்டிய அற்புதமான சுவாரசியங்கள் நிறைந்த உலகம் காதலினால் ஏற்படும் எனும் அழுத்தமான குரலாக ஒலிக்கிறதுகாதல் கடிதம்’.

Sunday, June 4, 2017

அறுபட்ட உறவு

இன்று

பள்ளியில் படித்த நண்பன் ஒருவனுடன் எதேச்சையாகப் பேச நேர்ந்தது. அவன் கேட்ட முதல் கேள்வி, “என்ன மச்சான், இப்போ எல்லாம் ஸ்கூல் பக்கம் வர்றதேயில்ல?” என்பதுதான். இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் வண்டியைப் பள்ளி வாசலில் நிறுத்திவிட்டு நுழைவாயிற்கதவருகே நின்றதையும், பின்னர் உள்ளே செல்லாமல் வண்டியைச் சட்டென்று எடுத்துக்கொண்டு வேகமாகத் திரும்பிச் சென்றதையும் கண்டதாகச் சொன்னான். “அதெல்லாம் ஒண்ணும் இல்லடாஎன்று மழுப்பலாகச் சொன்னேன். “அதெல்லாம் இல்ல. என்னமோ இருக்கு, சொல்ல மாட்டேன்றஎன்றவனைப் பார்த்தேன்; உண்மையைச் சொல்வதா, வேண்டாமா என்று தெரியவில்லை.


இரண்டு வாரங்களுக்கு முன்

காலையில் அம்மாவைப் பேருந்து நிலையத்தில் விடுவதற்காக வண்டியை வெளியே எடுத்தபோதே அன்று பள்ளிக்குச் சென்று வரவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். பேருந்து நிலையத்திலிருந்து திரும்பும்போதே, ‘றெக்க கட்டிப் பறக்குதையா அண்ணாமல சைக்கிளுஎன்று பள்ளிக்குச் செல்லப்போகும் ஆர்வம் மிகுந்திருந்தது; வண்டியும் அதன் தெம்புக்கு மீறிய வேகத்தில் கர்ணகொடூரமான சத்தத்துடன் பறந்தது.

வீட்டிற்கு வந்தவுடன் வண்டியை நிறுத்திவிட்டு வெகுவேகமாகக் குளியலறை நோக்கி விரைந்த என்னை மருண்டு பார்த்தார் பாட்டி. “என்னாச்சு பயபுள்ளைக்கு? தெனமும் கெஞ்சுனாக்கூட சாயங்காலம் வரைக்கும் குளிக்க மாட்டான். இன்னிக்குப் பயபக்தியாப் போகுது?” என்ற எண்ணம் ஓடியிருக்க வேண்டும்.

ஆனால் வாயைத் திறந்து கேட்க மாட்டார், பாவம். பயம். வீட்டில் என் அதட்டலுக்குப் பயப்படும் ஜீவன்கள் பூனைக்குட்டியும், பாட்டியும்தான். பூனைக்குட்டி இறந்து பல நாட்களாயிற்று. உயிருடன் இருந்தவைகளைக் கோயிலில் விட்டுவிட்டு, “நாய் கடிச்சிடும்னுதான் விட்டோம்என்று தற்சமாதானமும் செய்துகொண்டாயிற்று.

வழக்கமாகக் கைப்பேசியில் ஊரே அலறும்படியான சத்தத்துடன் பாட்டு கேட்டுக்கொண்டேஅவ்வப்போது பாடுதல் என்ற பெயரில் கூட சேர்ந்து கத்திக்கொண்டே (குளியலறையில் கிடைக்கும் பாடல் சுதந்திரம் வேறு எங்கும் கிடைப்பதில்லை) – இரண்டு நாழிகை குளிக்கும் நான், அன்று காக்காக்குளியலுடன் வந்தது இன்னும் பெரிய ஆச்சரியமாயிருந்திருக்க வேண்டும் பாட்டிக்கு.

அம்மா ஆசையுடன் பிசைந்து வைத்திருந்த பருப்பு சேர்த்து, நெய் மணந்த ரசம் சாதத்தை அரக்கப்பரக்க அள்ளிப்போட்டுக்கொண்டு அரைகுறையாய்க் காய்ந்திருந்த தலையை அவசரகோலத்தில் உதறிவிட்டுக்கொண்டு, எவ்வளவு கோதினாலும் நடுவில் புடைத்து நிற்கும் இரு முடிகளைத் திட்டிக்கொண்டு, அதிரடியாய்க் கிளம்பினேன் நான். காதுக்கருவியில் ஒலித்தஷோக்காளிவண்டியின் வேகத்தை பன்மடங்காய்ப் பெருக்கியது.

முத்துக்குமாரசாமி நகர் வழியாக, சங்கர் நகர், விஜயலக்ஷ்மி நகர், ராஜ ராஜேஸ்வரி நகர் கடந்து தங்கராஜ் நகர் தாண்டிக் கம்மியம்பேட்டைப் பாலத்தையும் பிடித்தாயிற்று. அலுங்கிக் குலுங்கும் மேடுபள்ளங்களையும், புழுதியைக் கிளப்பிச் சென்ற மணல் லாரிகளையும் கடந்து செம்மண்டலம் சாலையை அடைந்து பள்ளி நோக்கிச் சென்றேன். பள்ளிக்கு சென்றுகொண்டிருந்ததால் வந்த ஆர்வம், அவ்வப்போது வந்த வேகத்தடைகளையும், அரைபோதையில் குறுக்கே வந்த ஓமக்குச்சி நரசிம்மனின் ன்று விட்டச் சித்தப்பாவையும் சபிக்க வைத்தது. ஒவ்வொரு முறையும், “*த்தா, ***மாளேஎன்றும், “சரியான கிறுக்குக் **” என்றும் வசைச்சொற்கள் வாயிலிருந்து வெளிவரும்போது இனம்புரியாத ஒரு உற்சாகம் புல்லரிக்கச் செய்தது.

உள்ளே செல்வதற்கான வாயில் பாதி திறந்த நிலையில் ஆள் அரவமற்று இருந்தது. வண்டி செல்வதற்குத் தோதாய் இடம் இருந்தபோதும், வெளியே நிறுத்திவிட்டு உள்ளே செல்ல முயன்றேன். கோடை விடுமுறையாதலால் மனித நடமாட்டம் இல்லை. அதற்காகவே அந்நேரத்தில் வந்திருந்தேன், “ஏன் தம்பி இங்க உக்காந்திருக்கீங்க?” போன்ற லொட்டுலொசுக்குக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பாவத்திலிருந்து விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

உள்ளே செல்வதற்கான கடைசிக் காலடியை எடுத்து வைக்கும் கணநேரத்தில் தோன்றிய சில பழைய நினைவுகள் கால்களைப் பின்வாங்க வைத்தன. கண்ணில் நீர் நிறைந்தது. ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டபடி, வெளியிலிருந்தவாறே ஒரு பார்வை பார்த்தேன். பின்னர், வண்டியை எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டேன்.


மூன்று வருடங்களுக்கு முன்பு

நான் இயந்திரவியல் பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தேன். “ஸ்கூலுக்கு நீ எதுக்குடா படிக்கப் போற மாதிரி 9 ணிக்கே போகணும்னு அடம் பிடிக்குற?” என்று கடிந்து கொண்ட அம்மாவிடம், ”ம்மா. இன்னிக்கு ரிஸல்ட் மா. என்ன மார்க் வாங்கிருக்காங்கன்னு பாத்துட்டு அரைமணிநேரத்துல வந்துடுறேன்என்று சொல்லி வண்டியில் கிளம்பினேன். அதற்கு முந்தைய வருடம் பள்ளியில் முதல் மாணவனாக வந்ததால் இருந்த ஒரு ஆர்வமேயன்றி வேறேதும் இல்லை.

9:20-க்கெல்லாம் அங்கு பட்டியல் ஒட்டப்பட்டிருக்கவில்லை. நான்கைந்து மாணவர்கள் கையில் கைப்பேசியுடன் இணையதளத்தில் முடிவுகளைத் தரவிறக்க முயன்றுகொண்டிருந்தனர். “அவ்ளோதான் தம்பி. ஸ்கூலுக்கு வர்றணும்ன்ற எண்ணம் எல்லாம் இன்னிக்கு யாருக்கு இருக்குது? எல்லாம்தான் அந்தச் செல்போனுக்குள்ள வந்துடுச்சுல்ல?” என்று கூட்டம் குறைவாயிருந்ததற்கான காரணங்களை அடுக்கினார் வாட்ச்மேன். மணி 9:30-ஐத் தொட்டிருந்தது. என்னையேயறியாமல் நகத்தைக் கடிக்கத் தொடங்கியிருந்தேன். ‘நம்ம ஸ்கூல் கிருஷ்ணசாமி ஸ்கூலையும், செயிண்ட் மேரிசையும் முந்திடணும்டா’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு எம் நண்பர்களும், நானும் சாதித்திருந்த (மதிப்பெண்தான் சாதனை என்று நம்பிய காலங்கள் அவை) மைல்கல் அது.

பதற்றமாய் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த என் தோளில் பின்னாலிருந்து ஒரு கை தொட்டது. திரும்பினேன். பி.ஈ.டி. வாத்தியார் நின்றுகொண்டிருந்தார்.

“குட் மார்னிங், சார்.”

“…”

“சும்மாத்தான் சார் ரிஸல்ட் பாத்துட்டுப் போலாம்னு…”

“நீ என்ன இந்த வருஷம் பிளஸ் டூவா?”

“இல்ல சார். ஜூனியர் பசங்…”

“இதோ பாரு தம்பி. நீ டிஸ்டிரிக்ட் ஃபர்ஸ்ட் வந்த்து நல்ல விஷயம்தான். அதுக்காக ஸ்கூல்ல யாராச்சும் நம்பள முந்திடுவாங்களோன்னு வேவு பார்க்க எல்லாம் வரக்கூடாது. அப்புடியே முந்துனாலும், ஸ்போர்டிவ்வா எடுத்துக்கணும்.”

“சார், அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார்.”

“இந்த வயசுல ஏன் இந்தப் பொறாமை எல்லாம்?”

“சார், ஒரு நிமிஷம் பேச விடுங்க சார்.”

“டேய், என்ன கைய நீட்டிப் பேசுற? வாட்ச்மேன், வெளிய போகச் சொல்லுங்க இவன.”

அடுத்த நிமிடம் பள்ளிக்கு அந்நியமாகிப்போனேன். என்ன நடந்தது என்று யோசிக்கக் கூட முடியவில்லை. விம்மி, விம்மி அழவேண்டும் போலிருந்தது. வண்டியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

“ரிஸல்ட் என்னடா ஆச்சு?” என்ற அம்மாவிடம், “டைம் ஆகும் போலம்மா. அதான் நான் வந்துட்டேன்” என்றேன்.


ஒரு வருடத்திற்கு முன்பு

“அக்கா, எப்போ ஊருக்கு வர்றீங்க?”

“டேய், நல்லவேளை நீயே கேட்ட. உங்க ஊருல எனக்கு ஒரு வேல இருக்கு. அடுத்த வாரம் போலாம்.”

என்னை முதல்முதலாகக் கல்லூரிப் பத்திரிக்கையில் எழுதத்தூண்டிய சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். என்னை விட இரண்டு வயது மூத்தவர் அவர். எழுதுவது மட்டுமன்றி, பல்வேறு வகையில் எனக்கு தெளிவான ஆலோசனைகள் கொடுத்து உதவியவர்.

வார இறுதி நாட்களுக்காகக் காத்திருந்த நான், வெள்ளிக்கிழமை மாலை மத்திய கைலாசம் சென்று காத்திருந்து, அவரும் அங்கு வந்த பிறகு, கிழக்குக் கடற்கரைச் சாலை மார்க்கமாகக் கடலூர் செல்லும் பேருந்தில் ஏறினேன். வரும்வழியில் அவரது பணியைப் பற்றி விவரித்துக்கொண்டே வந்தார் அவர். பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணியாற்றியபடியே,‘கூகிள் மேப்ஸ்’-ஐப் போன்ற ஒரு உலகளாவிய வரைபடத்தை லாபநோக்கமற்றுத் தயாரிக்கும் ஒரு அணியுடன்  இணைந்து வேலைசெய்து கொண்டிருந்தார். நகர எல்லைகளைத் தாண்டி, சிறுகுறு கிராமங்களிலுள்ள முக்கியமான இடங்களையும் பதிவு செய்வதே நோக்கம் என்று சொன்னார்.

வரும் வழியெங்கிலும் குழந்தையாய் மாறி, “இது என்ன இடம்? அடுத்தது என்ன ஊர் வரும்?” என்று உற்சாகமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார். கோவளம், மஹாபலிபுரம், கல்பாக்கம், கடப்பாக்கம், மரக்காணம் கடந்து, புதுச்சேரியையும் தாண்டி, ஒருவழியாகக் கடலூர் வந்தாயிற்று. அம்மா, அப்பாவின் புன்னகை மாறாத வரவேற்பு பாதி பசியைப் போக்கியதென்றால், சூடான இட்லியும், தேங்காய்ச் சட்னியும், பின்னர் வந்த முறுகலான தோசைகளும் வயிற்றை நிரப்பின.

அடுத்த நாள் காலையில் வண்டியில் இருவரும் கிளம்பினோம். “நம்பளால முடிஞ்ச வரைக்கும் கவர் பண்ணுவோம்டா. இதுல இவ்ளோ முடிக்கணும்னு எந்த டார்கெட்டும் கெடையாது” என்றார். அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் நான் படித்த பள்ளியில் படித்திருந்தபடியால், “அந்த ஸ்கூலுக்குப் போயே ஆகணும். லெஜண்ட்ஸ் எல்லாம் படிச்சிருக்கீங்க” என்று கலாய்த்தபடியே வந்தார்.

ஆட்சியர் அலுவலகம் சென்று, கடலூர் நகராட்சியின் பழைய மாதிரி வரைபடங்கள் எதுவும் கிடைக்குமா என்று விசாரித்தபோது, அவர்கள் ‘முனிசிப்பாலிட்டி ஆஃபீஸ்ல கேளுங்க’ என்றும், அவர்கள் இவர்களைக் கேட்க வேண்டும் என்று அலைக்கழித்ததால் நாங்களே குத்துமதிப்பாகச் சில இடங்களைப் பதிவு செய்வது என்று முடிவு செய்தோம்.

முதலில் சென்ற இடம் நான் படித்த பள்ளி. இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஆறாத வடுவாய்ப் பதிந்திருந்தாலும், “அந்த சார் கூட மட்டும்தானே பிரச்சனை? அந்தாளைப் பார்க்க வேண்டாம். மத்தபடி ஸ்கூலுக்குச் சும்மாப் போயிட்டு வருவோம்” என்று எனக்கு நானே கட்டியம் கூறிக்கொண்டேன். உள்ளே சென்றவுடன் தலைமையாசிரியர் அறைக்குச் சென்று விஷயத்தைக் கூறினோம். சிரித்தபடியே, “ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் வென்சர்” என்று அக்காவுடன் கைகுலுக்கி உள்ளே செல்ல அனுமதித்தார்.
எனக்கு உண்மையிலேயே பறக்க வேண்டும் எனத் தோன்றியது. பள்ளிக்காலத்தின் சனிக்கிழமையாதலால், அன்று வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. “ஃபோர் ஒன் இஸ் ஃபோர், ஃபோர் டூஸ் ஆர் எயிட்” என்று கும்பலாக மாணவர்கள் கத்துவது கேட்ட்து. எல்லா வகுப்பிலும் உரக்க வாய்ப்பாடு சொல்வதற்கென்று ஒரு அருண்ராஜா காமராஜ் / அனுராதா ஸ்ரீராம் இருக்கிறான்(ள்) அல்லது உருவாக்கப்படுகிறார்கள்.

நல்ல வேளையாக அன்று அந்த எமன் வந்திருக்கவில்லை அல்லது நாங்கள் போன நேரம் பள்ளி வளாகத்தில் இருக்கவில்லை. கால்பந்து விளையாடும் இடத்தில் வெயில் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அரும்பிய வியர்வை முத்துக்கள், கண்ணாடியில் படிந்து கண்ணை அவ்வபோது மறைத்தன. ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து வைப்பது சுவாரசியாமாயிருந்தது. புன்முறுவலுடன் என் செய்கைகளைப் பார்த்துக்கொண்டே வந்த அக்கா, அவ்வப்போது கைப்பேசியில் புகைப்படம் எடுத்து, நில அளவைகளையும் ஏதோ ஒரு செயலி மூலமாகப் பதிவு செய்துகொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று முதல் மாடியில் இருந்து என்னை யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது. உயிரியல் வாத்தியார் நின்றிருந்தார். கீழேயிருந்தபடியே கையால் சலாம் அடித்துவிட்டு, விருட்டென்று படிக்கட்டுகளில் விரைந்தேன்.

"குட்… மார்…னிங்… சார்” என்று மூச்சிறைத்தபடியே சொன்னேன்.

“என்ன கிரிதர்? ஹவ் ஆர் யூ?”

“ஐ ஆம் குட், சார்.”

“என்ன இந்தப் பக்கம்?”

“சும்மா ஸ்கூலுக்கு வந்து ரொம்ப நாளாச்சேன்னுதான் சார்.”

“குட் குட். அது சரி, கூட இருக்குறது யாரு?”

அந்தத் தொனியிலேயெ உள்ளர்த்தம் புரிந்தது. அவரது முகத்தில் தவழ்ந்த ஒரு இளக்காரப் புன்னகை நான் நினைத்ததை ஊர்ஜிதப்படுத்தியது. “அக்கா, சார்” என்றேன்.

“அக்கான்னா, கூடப் பொறந்தவங்களா?”

“இல்ல சார். காலேஜ் சீனியர்.”

“அவங்க கூட இங்க என்ன வேல?”

’எதுக்கு வந்திருக்காங்க?’ என்று கேட்டிருந்தால் கூட அவர் மேல் இருந்த கொஞ்சநஞ்ச மரியாதை அப்படியே தங்கியிருக்கும். ஆனால், அவர் கேட்டது கோபத்தை வரவழைத்தது.

“அவங்க ஒரு மேப்பிங் பிராஜெக்ட் பண்ணிட்டிருக்…”

“லுக், கிரிதர். நீ நல்ல அக்காடெமிக்கலி இண்டெலிஜெண்ட்தான். ஐ ஆம் நாட் டினையிங் த ஃபாக்ட். பட் ஆஸ் ய ஸ்டுடண்ட், யூ ஹாவ் டூ மெயிண்டெயின் யுவர் டெகோரம் அண்ட் த ஸ்கூல்ஸ் டெக்கோரம்…”

அவர் சொல்லிமுடிப்பதற்கு முன்னால், நான் படியிறங்கத் தொடங்கியிருந்தேன். “டாப்பர்-னா? பொண்ணுங்கள எல்லாம் கூட்டிட்டு வரலாமா சார்?” என்று மற்றொரு வாத்தியாரிடம் கேட்பதுபோல வேண்டுமென்றே சத்தமாகக் கேட்டார். கீழே இறங்கி அக்காவிடம் சென்றபோது, எதுவுமறியாது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். “என்னடா டாப்பரு? ஒரே புகழ்ச்சிதான் போல ஸ்கூல் பூரா?” என்று தெற்றுப்பல் தெரியச் சிரித்தார். “போலாம் அக்கா” என்ற இரண்டு பொன்வார்த்தைகளை மட்டும் பதிலாக வைத்தேன்.

போகும்வழியில் பூச்செடிகளுக்கு நீரூற்றிக் கொண்டிருந்த செல்வி ஆயா – எப்பொழுதும் நான் நின்று பேசிவிட்டு வரும் எனது பாட்டியின் குரலையொத்த குரலுடைய ஆயா – அழைத்தபடியே இருந்தாள். திரும்பிப்பார்க்க மனமில்லை.


இன்று

“டேய் தலைவரே, யப்பா! நீ ஏன், எதுக்குன்னு கூடச் சொல்ல வேணாம்டா. அதுக்காக இப்புடி ஒரே எடத்தையே வெறிச்சுப் பாக்காத” என்றான் நண்பன். அழைப்பு வராத கைப்பேசியை எடுத்துப் போலியாய்ப் பேசிவிட்டு, ”அம்மா எதோ அவசர வேலையாக் கூப்பிடுறாங்கடா. நான் போயிட்டு இன்னொரு நாள் வர்றேன்” என்றபடி கிளம்பினேன்.


குளமாய் நிரம்பியிருந்த என் கண்களை அவன் கவனித்தானா என்று தெரியவில்லை. கண்ணீர் கண்ணாடியில் பட்டுப் பார்வையை மறைக்கும் என்பதால், கழற்றிச் சட்டைப்பையில் வைத்தேன். வண்டியைத் திருப்பியபோது, “டேய் குருட்டுக் கபோதி, ,கண்ணாடியைப் போடுடா. எங்கேயாச்சும் விழுந்து சாவப்போற” என்றான். அழுகையினூடே சிரித்தேன்; வானத்தில் வானவில் தோன்றியிருந்தது.