Saturday, June 17, 2017

எல்லாம் ஒரு வெளம்பரம்தான்!

’ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில், மட்டைப்பந்து வீரர்களை ஒருமையில் விளிக்கும் ‘தென்னிந்திய நவ்ஜோத் சிங் சித்து’ எனும் பட்டத்திற்குத் தகுதியான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தைத் தாண்டிய சில முக்கியமான மாற்றங்களைக் காண நேர்ந்தது. “என்னோட ஸ்மார்ட்ஃபோன் கிட்ட உடையாம இருக்கணும்னு சொல்லுவேன்” என்று தமிழ் மொழிமாற்றத்தில் மழலையாய்ப் பேசும் வடநாட்டுக் குழந்தைகளும், “அப்பா, நான் பின்னாடி உக்காந்திருக்கேன், எனக்கு ஏர்பேக் எங்கே?” என்று கேட்கும் குழந்தையுமாய்த் திரையில் தோன்றிய விளம்பரங்கள்தாம் கவனத்தை ஈர்த்தன, ஆட்டத்தின் சுவாரசியத்திலிருந்து திசைதிருப்பின.

குழந்தைகள் திரையில் தோன்றுவது என்பது புதிய நிகழ்வல்ல என்பதைப் போலியாகப் பெற்றோரை அழ வைக்கும் பாட்டுப் போட்டிகளும், “அம்மாதான் அப்பாவை அடிப்பாங்க” என்று மழலைகளைச் சொல்லவைக்கும் (அக்குழந்தைகள் தாமாக அவ்வாறு பேசுகிறார்கள் என்று சொன்னால் சிரிப்போ, கோபமோ அந்நேரத்து மனநிலையைப் பொறுத்து முகத்தில் தோன்றும்) ‘ரியாலிட்டி ஷோ’க்களும் நினைவுபடுத்தியபடியே இருந்தாலும், ‘எங்கெங்கு காணினும் குழந்தைகளடா’ எனுமளவிற்கு விளம்பர உலகை இவர்கள் ஆக்கிரமித்திருப்பது நிச்சயமாக ஏதோ எதேச்சையாக நிகழ்ந்த ஒரு மாற்றம் அல்ல.

தொலைக்காட்சி என்பது தலைமுறை இடைவெளிகளைக் கடந்து மனித வாழ்வை அளவற்ற மூர்க்கத்தனத்துடன் ஆட்கொண்டுள்ளது என்பதை வெளிக்காட்டும் ஒரு உதாரணம், விளம்பரங்களில் குழந்தைகள் தோன்றும் காட்சிகள். தகவல் வழங்கும் ஒரு ஊடகமாக விளங்கிய தொலைக்காட்சியானது, நுகர்வோர் கலாச்சாரத்தின் விளைவாகத் தன் முகத்தையே மாற்றிக்கொண்டுள்ளது என எவ்விதத் தயக்கமுமின்றிச் சொல்ல முடியும். அதன் ஒரு விளைவே குழந்தைகளைப் பயன்படுத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் உத்தி. இவற்றைப் பல்வேறு கோணங்களிலிருந்து அலச முடியும்.

உளவியல் சிக்கல்கள்:

முதலாவதாக, குழந்தைகளை விளம்பரங்களில் பயன்படுத்தும் யோசனை எப்படி வந்தது? இதற்கான விடை பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான உறவுமுறையில் உள்ளது. ‘பேரண்டிங்’ என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய குழந்தைகள் வளர்ப்புமுறையானது அதிவேக உலகில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மாறிவருகின்றது. 21 வயதேயான எனக்கே வியப்பை ஏற்படுத்தும் ஒரு கூறாக இருக்கிறது, பள்ளி செல்லும் பருவத்திலும், அதற்கு முந்தைய காலத்திலும் இருக்கும் இன்றைய குழந்தைகள் வளரும் சூழல். ‘அம்புலிமாமா’ கதைகள், ‘வாண்டுமாமா’ எழுதிய ‘நீலன்’ எனும் கதாபாத்திரம் இடம்பெறும் சிறுகதைகள், நாவல்கள், சுட்டி விகடன், ’டிங்கிள் டைஜெஸ்ட்’, மாவட்ட மத்திய நூலகம் என்று கழிந்த எனது குழந்தைப் பருவத்தைப் போலவே தொடர்ந்து வரும் தலைமுறைகளும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறெனினும், பிறக்கும் குழந்தைக்குச் ‘சோட்டா பீமை’க் காட்டிச் சோறூட்டுவதைக் காட்டிலும் அபத்தம் வேறேதும் இருக்க முடியாது.

பிரச்சினையின் வேரானது படிக்கும் பழக்கம் குறைந்து போனதில் இருக்கின்றது. பெற்றோர்கள் பலருமே படிப்பதில்லை. தினசரி செய்தித்தாள்களிலும் கூட, கட்சிப்பிளவு, கொலை – கொள்ளை போன்ற மேலோட்டமான செய்திகளைப் பற்றி மட்டுமே தெரிந்துகொள்ளும் பல பெற்றோர்களை எனக்குத் தெரியும். இதன் உச்சக்கட்டம் என்னவென்றால் தான் படித்த இரண்டு செய்திகளை வைத்து வாயில் வடை சுட்டுக்கொண்டே, ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் பல பெரியவர்களை அன்றாடம் சந்திக்க நேர்கிறது. ‘இதில் என்ன இருக்கிறது?’ எனும் வாதத்தை முன்வைத்தால், இவ்வாறு இருக்கும் பெற்றோர்களை முழுவதுமாகப் புறந்தள்ள முடியாது (செய்தித்தாள்களைப் பார்த்தாலே முகத்தை அஷ்டகோணலாக்கிக்கொண்டு, “நான் டீ.வி.லையே நியூஸ்-ல பாத்துக்கறேன்” என்று சொல்லும் வகையறாக்களுக்கு இவர்கள் எவ்வளவோ தேவலாம்); ஆனால், இவ்வாறு மேம்போக்கான செய்திகளை மட்டுமே தெரிந்துகொள்பவர்களிடம், உளவியல் ரீதியான இரண்டு குறைகள் உள்ளன; பொறுமையில்லாமை, எதையும் ஆராய்ந்து அதன் சரி-தவறுகளைக் கூர்ந்து நோக்கும் தன்மை இல்லாமை.

விளைவாகக் குழந்தைகளிடமிருந்து இயல்பாகவே வெளிப்படும் ’ஏன்? எதற்கு?’ எனும் கேள்விகள் இவர்களைக் கோபப்படுத்துகின்றன, அல்லது பதில் தெரியாததால் வரும் இயலாமை பெருகுகின்றது. இதன் இறுதி வடிவம்தான் குழந்தைகளைத் தொலைக்காட்சியை நோக்கித் திருப்பும் உத்தி. பெற்றோர்களின் இப்பலவீனத்தை உலகின் முக்கியமான ஊடகமானது நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதெல்லாம் இருக்கட்டும், திடீரென்று குழந்தைகள் நம் தொலைக்காட்சி உலகத்தை எப்படித் திரளாக ஆக்கிரமித்தார்கள்? இதற்கான விடை, தொழில்நுட்பப் புரட்சியில் இருக்கிறது.

(தொழில்)நுட்பமான வியாபாரம்:

’சோப்பு டப்பா’ என்று கேலி செய்யப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட நோக்கியாவின் கைப்பேசிகளை ஏறி மிதித்துக்கொண்டு வரத்தொடங்கின ‘ஸ்மார்ட்ஃபோன்’கள். அவசரத்திற்கென வீட்டில் ஒருவரிடம் புழங்கத் தொடங்கிய கைப்பேசியானது இன்று ஏறத்தாழ ஒவ்வொரு மனிதரிடத்திலும் இருக்கிறது. போகிறபோக்கில் கருப்பையில் ஊசியைச் செலுத்தி, பிறக்கும் குழந்தையின் தொப்புள்கொடியில் ஒரு ஸ்மார்ட்ஃபோன் இணைந்தே பிறக்கும்படியான தொழில்நுட்பம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. குடும்பப் பெரியவர்கள் அனைவரிடமும் அணுக்கமாயிருந்த கைப்பேசிகள், குழந்தைகளிடமும் வலம்வரத் தொடங்கியதில் வியப்பேதுமில்லை.

இதன் விரிவாகப் பெருகத் தொடங்கிய இணையம், ‘மார்க்கெட்டிங்’, ‘பிராண்டிங்’ போன்ற வியாபார உலகின் தாரக மந்திரங்களின் சாரத்தை மாற்றத் தொடங்கியது. செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்தால்தான் ஆயிற்று என்ற காலம் முன்னரே மாறிவிட்டாலும், தொலைக்காட்சியில் திரைத்துறைப் பிரபலங்களும், கிரிக்கெட் ஆட்டக்காரர்களும் பொருட்களை ஆதரித்துத் தோன்றுவது சமீப காலம் வரை நடந்தது (இப்போதும் நடக்கிறது). குழந்தைகளின் ஆதர்ச நாயகர்களைக் காட்டி மயக்கும் இத்திட்டமானது, நிறுவனங்களுக்குச் செலவை ஏற்படுத்தும் ஒரு விஷயமே. துறை சார்ந்து ஒரு பிரபலம் சம்பாதிக்கும் ஆண்டுத்தொகை, அவர் விளம்பரங்களின் மூலம் பெறுவதில் கால் பங்கு கூட இருக்காது.

இதற்கிடையில்தான், சமூக வலைத்தளங்கள் புத்தம்புதிய கதவுகளைத் திறந்தன. பாரம்பரிய விளம்பர முறைகளின் சாரத்தை அடியொற்றி, அவற்றிலிருந்து மாறுபட்ட பல புதுமையான அம்சங்கள் தோன்றத்தொடங்கின. ‘சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்’ சூடுபிடிக்கத் தொடங்கிய அதே நேரத்தில்தான், ‘இண்டராக்டிவ் லேர்னிங்’ எனும் வழிமுறையைக் கையாளும் வழக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பல்வேறு பயன்பாட்டுத் தளங்களில் கையாளப்படும் இம்முறையானது, முக்கியமாகக் காலூன்றியிருப்பது விளம்பரத்துறையில்தான். பெயரை அடியொற்றிப் பார்க்கும்போது ‘லேர்னிங்’ என்பதன் அர்த்தம் வேறாக இருப்பினும், இதன் சாராம்சம் முற்றிலும் வேறானது. “தம் வயதொத்த நிஜம்/நிழல் பாத்திரங்களைக் குழந்தைகள் பின்பற்றுகிறார்கள்” என்பதே அது. டோரா ஒரு முப்பது வயதொத்த பாத்திரமாயிருப்பின் அது இவ்வளவு தூரம் குழந்தைகளை ஈர்த்திருக்காது என்பதே நிதர்சனம்.

’டோண்ட் அண்டர் எஸ்டிமேட் கோலு’ எனும் கொசுவர்த்தி விளம்பரத்தையும், ‘டெட்டாலு டெட்டாலுதான்’ எனும் ராகத்துடன் கூடிய சோப்புக்கட்டிக்கான பாடலையும் இந்த ‘இண்டராக்டிவ் லேர்னிங்’-ன் விளைவாகத்தான் இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

குழந்தைகளின் வெளியுலகம்:

’ரியல் எஸ்டேட்’டின் இரும்புக்கரமும், பருவநிலை மாற்றமும் அதனுடன் வரும் பெயர்தெரியாத, இனம்புரியாத நோய் அச்சுறுத்தல்களுமாய்ச் சேர்ந்து குழந்தைகளின் வெளியுலக இணைப்பைச் சற்றேறக்குறைய முற்றிலுமாகத் துண்டித்துவிட்டன. அவர்கள் வெளியே செல்வதற்கான முக்கால்வாசிக் காரணம், பெற்றோர் ‘ஷாப்பிங்’ செய்யும் நேரம் என்றான பிறகு, குழந்தைகளின் பார்வையோட்டம் சக மனிதர்களிடம் பழகுவது என்பதிலிருந்து மாறி, பொருட்களின் மீதான கவனமாய்க் குவிந்துவிட்டது.
வர்ணங்களை வைத்தே குழந்தைகளைக் கவர்ந்த காலமெல்லாம் மலையேறி – இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் அவர்களுக்குத் தேவையான வண்ணமயமான உலகம் கிடைத்துவிடுகிறது – அவர்களைக் கவர்வதற்கு அடுத்தகட்ட உபாயமாய் வந்ததுதான் இவ்விளம்பர யுக்தி.

நிறுவனங்களுக்கும் லாபம்; அவர்கள் கோடிகோடியாய்க் கொட்டிச் செலவு செய்து, பணத்தை வாரியிறைத்து விளம்பரங்கள் தயாரிக்கத் தேவையில்லை; அதற்குப் பெரும்புள்ளிகளை ஒப்பந்தம் செய்யத் தேவையில்லை. நடிக்கும் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறதென்று புரியாது; அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் பார்த்து மகிழ்ந்த ஒரு உலகத்தின் அங்கமாய் ஆகிவிட்ட மகிழ்ச்சியில் விளம்பர உலகின் வணிக நோக்கம் புலப்படுவதில்லை. பெற்றோர்களைப் பொறுத்தமட்டில், குறைந்தபட்ச பெருமிதம் அக்கம்பக்கத்து வீட்டுக்கார்ர்களிடம் பெருமையடிப்பது (நேரில் அல்ல, எல்லாம் வாட்ஸப்பில்தான்; இன்று நேரிலெல்லாம் யாரப்பா பேசிக்கொண்டிருக்கிறார்கள்?) அல்லது, அடுத்த அலியா பட்டாகவோ, சமந்தாவாகவோ தம் குழந்தைகள் ஜொலிப்பதற்கான வாய்ப்பாகவே பார்த்துப் புளகாங்கிதம் அடைவது.

ஆனால் நமக்கென்ன கவலை? நாம் எதையாவது ஒரு தொடரையோ, விளையாட்டுப் போட்டியையோ பார்த்துக்கொண்டிருப்போம். அரைகுறை ஆடைகளுடன் அழகிகள் நடனமாட, ஜொலிக்கும் ஜிப்பாவுடன் போட்டிகளுக்கு நடுவர்கள் அணிவகுக்க, இயல்பாக நடக்கும் குடும்ப நடவடிக்கைக்குச் சற்றும் தொடர்பில்லாத செயற்கையான நாடகங்கள் வரிசை கட்ட நம் பொழுதுபோக்கிற்குச் சற்றும் தொய்வில்லை. கவலைப்பட வேண்டியதெல்லாம் தோனியும், கோஹ்லியும்தான். இக்குழந்தைகள் வேட்டுவைக்கப்போவது அவர்களின் வருமானத்தில்தான்.

Friday, June 16, 2017

”வா வா” என்று வா. மணிகண்டனை வரவேற்போம்: ’லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ நூல் பற்றிய கருத்துக்கள்

வலைப்பூப் பதிவுகளை சுவாரசியமாக்க முடியும் என எனக்குச் சொல்லித்தந்த மானசீக குரு எழுத்தாளர் வா. மணிகண்டன் அவர்கள். நிசப்தம் வலைத்தளத்தில் இடைவிடாது எழுதிவரும் இவரது எழுத்துக்கள், “நீயும்தான் வெச்சுருக்கியே ஒரு ப்ளாக்கு! ஹும்… பத்து நாளைக்கு ஒரு தடவ சொத்தையா ஒரு பதிவு எழுதிக்கிட்டு” என்று என்னை நானே சுயமதிப்பீடு செய்ய ஏதுவாய் விளங்கும் ஒரு காரணி.

நண்பன் ஒருவன் மூலமாக அறிமுகமான நிசப்தம்.காம், நாள்போக்கில் நான் மூன்று முறையேனும் சொடுக்கும் தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ‘ஏதேனும் புதிய பதிவு வந்திருக்கிறதா?’ எனும் ஆர்வம் என்னையேயறியாமல் என்னுள் தொற்றிக்கொண்டது பெரிய ஆச்சரியம்தான். சிலநேரங்களில் ஒரே மாதிரித் தோற்றம் கொண்ட பதிவுகள் வந்தவண்ணம் இருப்பினும், போதை வஸ்துவாய் மாறியிருக்கிறது நிசப்தம் வலைத்தளம்.

இப்படி அறிமுகமான திரு. மணிகண்டனின் எழுத்துக்கள், அவரது புத்தகமான ‘மசால் தோசை 38 ரூபாய்’ மூலமாய் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு தொகுப்பு நூல் என்றாலே அதில் இலக்கிய நயம் பொருந்திய, அறிவார்ந்த படைப்புகள் சில இருக்க வேண்டும் எனும் மாயையையெல்லாம் உடைத்த இத்தலைமுறை எழுத்தாளர்களுள் என்னளவில் முக்கியமானவர், திரு. மணிகண்டன்.

சமீபத்தில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனைச் சந்திக்கும் பெரும்பேறு அடியேனுக்குக் கிட்டியது. அப்போது அவர் எனக்குக் கொடுத்த புத்தகங்களுள் ஒன்று, மணிகண்டன் எழுதிய ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’. “மணிகண்டன்-னு ஒரு தம்பி, பெங்களூருல இருக்கான். இங்க கோபிச்செட்டிப்பாளையத்துக்காரன்தான். அழகா எழுதுறான். ரொம்ப ஆஹா, ஓஹோன்னு இலக்கு வெச்சு எழுதாம, யதார்த்தமா இருக்கு. அது இருந்தாப் போதும்; போகப் போக அந்த எலக்கியம் எல்லாம் தானா கைக்குள்ள வந்துடும்” என்று சொன்னபோது, அப்பெருந்தகைக்குத் தெரிந்த ஒரு மனிதர் எனக்கும் தெரிந்திருக்கிறார் என்று புளகாங்கிதம் அடைந்தேன்.

புத்தகத்தின் தலைப்பு ஒருவகையில், ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்தின் தலைப்பைப் போன்ற ஒரு திறப்பைத் தந்தாலும், உள்ளே இருக்கும் ஒவ்வொரு பதிவும் மிகவும் ரசனையுடன் எழுதப்பட்டவையாகவே இருக்கின்றது. ’மின்னல் கதைகள்’ என்று முகப்பு அட்டையிலேயே குறிப்பிடப் பட்டிருந்தாலும் – ஒவ்வொரு பதிவும் அதிகபட்சம் ஐந்து பக்கங்களைத் தாண்டுவதில்லை – கதை, கட்டுரை, கவிதை என்பதெல்லாம் வாசகனின் எளிமைக்காகப் பிரிக்கப்பட்டவை எனும் முக்கியமான கருத்தைச் சொல்லாமல் சொல்வதாகவே இப்புத்தகம் தோன்றியது.

கதை என்றோ, கட்டுரை என்றோ, வர்ணனை என்றோ பகுத்துப் பேசமுடியாத அளவிற்கு உண்மையா, கற்பனையா என்றளவில் வாசகனை சிந்திக்க வைக்கும் வெவ்வேறு ‘பதிவு’களின் தொகுப்பாக வந்துள்ள ‘லிண்ட்சே லோஹன்…’ ஒரு வெற்றிப்படைப்பு என்று அறுதியிட்டுச் சொல்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

1)      ஒரு வகைமைக்குள் (கதை/கட்டுரை) அடைபடாத இயல்பான எழுத்தின் மூலம் வாசகனை வாசிப்பிற்குள் இழுக்கும் காந்த சக்தி மணிகண்டனின் படைப்புகளில் பளிச்சிடுகின்றன.

2)      இப்புத்தகத்தைப் படித்துமுடிக்கும்போது, ‘ப்ச். நமக்கும்தான் இந்த மாதிரி எத்தனை நிகழ்வுகள் நடந்திருக்கின்றன! அதில் எத்துணை சம்பவங்களைச் சரியாகப் பதிவு செய்திருக்கிறோம்?’ எனும் சுயகேள்வி தானாக எழுகின்றது.

3)      தமிழில் பேசுவதே குறைந்துவரும் இக்காலக்கட்டத்தில், தமிழில் எழுதும் நபர்களில் எண்ணிக்கை அருகிவருவதைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. எழுதுவதற்குப் பலர் முன்வராமல் இருப்பதற்கான ஒரு காரணமாக எனக்குத் தோன்றுவது, புகழ்பெற்ற பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் படிப்பதற்கு ஏதுவாக இருந்தாலும் அவற்றின் அறிவாளித்தனம் வாசகனை எழுதத் தூண்டுவதில்லை. மாறாக, எழுத வேண்டும் எனும் ஆர்வமுள்ளவன்/ள் கூடப் பயந்து ஒதுங்கும் வகையில்தாம் பல நூல்கள் இருக்கும். அத்தடையை மணிகண்டன் போன்றோரின் எழுத்துக்கள் கண்டிப்பாக உடைக்கின்றன; சுக்குநூறாக்குகின்றன.

4)      புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் கூற்றுப்படி, “அனைவரும் படிக்க வேண்டுமென்றால் அவர்களுக்குப் புரியும்படியாகச் சிறிய புத்தகங்களாய் இருக்க வேண்டும். இல்லையென்றால் அனைவரும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது” என்பதற்கேற்ப அமைந்துள்ளது இந்நூல். ஒவ்வொரு பதிவாகப் படித்துப் பின் சிந்திப்பதற்கும், நம் வாழ்வின் சம்பவங்களை ஒப்புநோக்குவதற்கும் நேரம் ஒதுக்கிப் படிக்கலாம்; அல்லது, ஒரே அமர்வில் முழுமூச்சாக வாசித்துமுடித்துவிட்டு, ‘பயபுள்ள… செம்மையா எழுதுறாருய்யா, நாமளும் எழுதுவோம்’ என்று உத்வேகம் கொள்ளலாம்.

வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் சாமானிய வாசகனையும் ஈர்க்கும் திறன் கொண்ட இப்புத்தகம், சில படைப்புகளின் முடிவுகளின் மூலம் அதிர்ச்சி கொள்ளவும், ‘எப்புடி இவ்ளோ சாதாரணமா இவ்ளோ பெரிய விஷயத்தைச் சொல்லிட்டு போய்ட்டே இருக்காரு’ எனும் வியப்பையும் ஏற்படுத்தவும் தவறுவதில்லை. நூலின் முதல் கதையான ‘சாவதும் ஒரு கலை’யிலேயே மேற்கூறிய ‘அதிர்ச்சி முடிவுகள்’ குறித்து உணர முடியும்.

தனது குழந்தைப்பருவத்தில் கண்ட கிராமத்து வழக்கங்களை ஆங்காங்கே மழைச்சாராலெனத் தூவிவிட்டுக்கொண்டே செல்லும் மணிகண்டன்,, பண்பாட்டு ரீதியிலான பதிவுகளையும் தனது எழுத்துக்களின் மூலம் செவ்வனே செய்கிறார் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமாக இருக்கமுடியாது.

காமத்தைப் பற்றிய இவரது எழுத்துக்கள் அனைத்து விடலைகளையும், ‘நம்ம செய்கைகளையெல்லாம் எங்க இருந்தோ பார்த்துட்டாரோ’ என்று எண்ணுமளவிற்குத் தொடர்புபடுத்திக்கொள்வதற்கு எளிதானவை. ‘காமத்துளி’, ‘நீலப்படம்’ போன்ற பதிவுகள் இதற்கான உதாரணங்கள்.

நூலில் இடம்பெற்றுள்ள ‘சில்க் ஸ்மிதா’ எனும் படைப்பு உண்மையைப் பொட்டிலறைந்தாற்போல் சொல்லும் விதம், பின்மண்டையில் சம்மட்டியால் யாரோ அடித்த விளைவை ஏற்படுத்துகிறது. வெளியுலகிற்காக வேடமிடும் ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்க வாழ்விலும் மறைந்திருக்கும் கருப்புப் பக்கங்களின் படிமமாகவே ‘சில்க் ஸ்மிதா’வின் வாழ்க்கை இருந்திருக்கிறது. அப்பெண்ணை, நடிகையை, “அவ கெடக்குறா #%$@%&8*” என்று திட்டிய பலரும் அவரது படங்களைப் பார்த்து ரசித்திருக்கக்கூடும். இந்த உதாரணத்தின் சமீபத்திய எழுத்துலக ஒப்புமை சேத்தன் பகத். இவரது எழுத்துக்களைக் குப்பை என்றும், தரம் குறைந்தவை என்றும் விமர்சிக்காத ஆட்களே (நான் உட்பட) இல்லை எனினும், அவர்கள் யாவரும் (மீண்டும், நான் உட்பட) இவரது புத்தகங்களை வாசிக்காமல் குறைகூற முடியாது அல்லவா? அந்த ஒரு இனம்புரியாத ஈர்ப்பு எதையேனும் ஒன்றை நோக்கி ஒவ்வொரு மனித மனத்தையும் தள்ளிக்கொண்டேதான் இருக்கிறது. ஈர்ப்புக்கும், விலகலுக்குமான விளையாட்டே மனித வாழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது.

’நடுப்பாளையம் ஜமீனின் சேட்டைகள்’ எனும் கதை, தவிர்க்க முடியாமல் நாஞ்சில் நாடனின் ‘மாமிசப் படப்பு’ எனும் நாவலை இருபக்கங்களில் படித்த உணர்வைத் தருகிறது. கதைக்களமும், காட்சிகளும் வெவ்வேறு என்றாலும், இரு படைப்புகளின் மையக்கோடும் ஒன்றாகவே பயணிக்கின்றது. ஜமீனின் சேட்டைகள் அவரது பெண்ணாசையைப் பற்றியதாகவும், ‘மாமிசப் படப்பு’ வேலைக்காரர்களுக்கும், நிலவுடைமையாளர்களுக்குமான போராட்டமாகவும் இருப்பினும், ஜாதி ரீதியான வெறி, அதன் விளைவாக எழும் கட்டுக்கடங்காத பழிவாங்கும் உணர்ச்சி என்ற ரீதியில் ஒன்றிணைகின்றன இரு எழுத்தாளர்களின் சிந்தனைகளும்.

அமங்கலமாக முடியும் பல கதைகளில் சிலவற்றைத் தவிர்த்துவிட்டு, வேறு வகையிலான படைப்புகள் சிலவற்றைச் சேர்த்திருக்கலாம் எனும் மனக்குறை எழாமலில்லை. எனினும், 80-களில் வெளிவந்த 70 எம்.எம். திரைப்படத்திலிருந்து, 2017-ல் வந்துகொண்டிருக்கும் ‘சாட்டிலைட்’ படங்கள் வரை அனைத்தையும் சுற்றி ஒரு வட்டமடித்தது போன்ற ஒரு உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ ஒரு வெற்றிப்படைப்பே.

பின்குறிப்பு: நூலில் இடம்பெற்றுள்ள ‘போலி’ஸ் என்கவுண்ட்டர்’ எனும் பதிவு, எனது வலைப்பூவில் நான் எழுதிய ‘துப்பாக்கித்தோட்டா’ எனும் பதிவைப் போலவே இருந்ததில், ‘எழுத்தாளர்களை மாதிரியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேனா?’ என்று அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி (’என்ன ஒரு ஆனந்தம் அந்தக் கரடிக்கு?’ என்றும் சொல்லலாம்).

Wednesday, June 7, 2017

என்றும் மாறாக் காதல் - வைக்கம் முகம்மது பஷீரின் ‘காதல் கடிதம்’

வைக்கம் முகம்மது பஷீர் எனும் மிகப்பெரிய ஆளுமையின் எழுத்துக்களைப் பற்றிய முதல் அறிமுகம் அவரது ‘மதில்கள்’ (மலையாளத்தில் ‘மதிலுகள்’) எனும் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை வாசிக்கும்போது கிடைத்தது. மனித மனத்தின் ஆசைகளை எளிமையான மொழியின் மூலம் அழகாக வாசகரிடம் கடத்தும் அவரது படைப்பு வியப்பை உண்டாக்கியது.

’மதில்கள்’ வாசித்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் தற்செயலாக வீட்டில் ‘காதல் கடிதம்’ எனும் அவரது நாவலை வாசிக்க நேர்ந்தது. சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ள இந்நூலை வாசிக்கத் தூண்டிய முதற்காரணம், புத்தகத்திலிருந்த பக்கங்களின் எண்ணிக்கை. ஒரு முறை உட்கார்ந்து வாசித்துமுடிக்கக்கூடிய அளவேயிருந்த அப்புத்தகத்தைக் கவனம் சிதறாமல் படிக்க முடிந்தது (மாறிவரும் ‘ஃபாஸ்ட் ஃபுட்’ காலத்தினால் பாதிக்கப்பட்டு, நூல்களும்கூட சிறிய அளவில் வரவேண்டும் எனும் பைத்தியக்காரத்தனமான எண்ணங்களை வளர்த்துக்கொண்டுள்ள சில்வண்டுத் தலைமுறையைச் சேர்ந்தவன் நான்).

இந்நூலை நாவல் என்றோ, புதினம் என்றோ வகைப்படுத்த முடியுமா, முடியாதா எனும் பண்டித விவாதங்களைத் தாண்டி, நல்ல ஒரு படைப்பை அனுபவித்த உணர்வைத் தருவதுதான் இப்புத்தகத்தின் வெற்றி.

கேசவன் நாயர் எனும் ஆணுக்கும், சாராம்மா எனும் பெண்ணுக்குமான காதல் உரையாடல்களே புத்தகத்தின் சாராம்சம், ஆன்மா, ஆதி, அந்தம் என அனைத்துமாய் இருக்கின்றன. ‘பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் வளர்கின்ற காதல் அதிசயம்’ எனும் வரிக்கேற்ப விடலைப் பருவத்திற்கேயுரிய சீண்டல்களும், ஏக்கங்களும் கலந்த இயல்பான காதலாய் வெளிப்படுகிறது கேசவன் நாயர் – சாராம்மா காதல். 1943-ல் வெளிவந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் கூற்று சற்றேனும் நம்பமுடியாத அளவுக்கு,  நூலானது இன்றும் மிகவும் தொடர்புபடுத்தக்கூடியதாக இருப்பதற்கான ஒரே காரணம், காலத்தால் மாறாத காதல் உணர்வு என்றே எண்ணத் தோன்றுகிறது.

இயல்பாகவே மனத்தில் பட்ட எண்ணத்தை அவசரகதியில் சொல்லும் (அல்லது கேசவன் நாயரைப் போல எழுதும்) விடலைப் பருவ ஆணின் எண்ணங்களும், அதிகமாக யோசித்து நிதானமான, தெளிவான முடிவை எடுக்கும் பெண்ணின் எண்ணங்களும் முட்டிமோதும்போது எழுகின்ற குமுறல்களும், சிறிய ஏமாற்றங்களும, உரையாடல்களின்போது தானாகவே வரும் சீண்டல்களும் எனப் புத்தகம் எழுத்துக்களின் வழியாக, சொற்களின் வழியாக, வாக்கியங்களின் வழியாக வாசகனின் மனத்தில் இனம்புரியாத ஒரு புளகாங்கிதத்தைத் தோற்றுவிக்கிறது.

கேசவன் நாயரை மனத்தில் நினைப்பதற்கு மாதச் சம்பளம் கேட்கும் சாராம்மாவைப் பார்த்து முகஞ்சுளிக்க முயலும் எனது ஆண்பால் மனோபாவத்தைத் தாண்டி, நாவலின் அப்பகுதி குறிப்பால் உணர்த்தும் செய்தி அபாரமானது. அன்றும், இன்றும் ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் இருக்கும் மனவோட்டங்களுக்கும், குடும்ப உறுப்பினர்கள் குறித்த முடிவிலாக் கவலைகளுக்கும், இன்னும் சொல்ல முடியாத, மடைதிறவா உணர்ச்சிகளுக்கும், இன்ன பிற உளைச்சல்களுக்கும் ஈடுஇணையாகப் பணத்தைக் கொடுக்க முடியுமா எனும் அகக்கேள்வி நெருப்பெனச் சுடுகிறது.

கேசவன் நாயர் வெளிப்படையாக உரைக்கும் சொற்களும், சாராம்மா பெரிதாக ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி காதலைச் சிறிதுசிறிதாய் ஏற்பதும் மேலோட்டமாகப் பார்க்கும்போது, நாம் காலங்காலமாய்த் திரையில் பார்த்துப் புளித்துப்போன சமாச்சாரங்கள் நினைவலைகளாக வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், நாவலின் முக்கியமான வெற்றி என்பது முடிவெடுக்கும் உரிமையை அப்பெண்ணிற்கும் அளிப்பதில் புலனாகிறது. கேசவன் நாயர் வெறுமனே தன்னைக் காதலிப்பதாகப் பசப்பு வார்த்தைகளால் சொல்வதை மட்டுமே நம்பி, சாராம்மா ஒரு முடிவை எடுப்பதில்லை; மேலும், திருமணத்திற்குப் பிறகான தாம்பத்திய வாழ்க்கை பற்றிய கேள்விகளும், கவலைகளும் சாராம்மாவுக்கே தோன்றுகின்றன. ‘பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறோம்?’ எனும் கேள்வியில் தொடங்கி, ‘அக்குழந்தைகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள்?’ எனும் வினா வரை அனைத்துமே சாராம்மாவிடமிருந்தே வருகின்றன. மாறாக, தனக்கு அப்பெண் கிடைத்தால் போதும்; அனைத்தையும் சாதித்து விடலாம் எனும் தட்டையான பார்வையே கேசவன் நாயரின் கதாபாத்திரத்திடமிருந்து வெளிப்படுகிறது.

மேலே சொல்லப்பட்ட இரு கேள்விகள், மரத்தின் கிளைகளைப் போல் பிரிந்து பல்வேறு ரீதியிலான கேள்விகளை எழுப்புகின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது குழந்தைகளின் பெயர் என்ற அம்சமே நமக்குத் தெரிந்தாலும், கலப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியரின் அடுத்த தலைமுறை எதிகொள்ளும் சமூக உளவியல் சிக்கல்களைப் போகிறபோக்கில், பொட்டிலடித்தாற்போல் புட்டுவைக்கும் பஷீரின் எழுத்தாளுமை பிரமிப்பூட்டுவதாயிருக்கிறது. ‘பாம்பே’ திரைப்படத்தில் வரும் காட்சிகளை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அதேபோல் வாழ்க்கை மீதான அவநம்பிக்கை நம் ஆழ்மனத்தில் திரைக்காட்சிகளால் எப்படித் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன என்று எண்ணுவதற்கான வாய்ப்பாக இந்நூல் அமைந்தது. நாவலில் வரும் இரு காட்சிகளை வைத்து இதனை விளக்க முடியும்.
1)        கேசவன் நாயரைத் தன் மனத்தில் நினைக்க வேண்டும் என்றால் அது ஒரு வேலை என்றும், அதற்குக் கூலி வேண்டும் என்று குறும்பாக சாராம்மா கேட்கும்போது, பணம் தரச் சம்மதிக்கிறான் கேசவன் நாயர். ’எங்கே அவள் அப்பணத்தை எடுத்துக்கொண்டு வேறொருவனைத் திருமணம் செய்துகொண்டு ஓடிவிடுவாளோ?’ எனும் எதிர்மறை எண்ணம்தான் முதலில் மின்னலென வெட்டுகிறது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. உலகம் உண்மையில் நல்லவர்களால் நிறைந்தது, நம் பார்வைதான் மாற வேண்டும் என்று சம்மட்டியால் அடித்து யாரோ மூளையில் உரக்கக் கத்துவது போலிருந்தது.
2)        இருவரும் குடும்பத்தை விட்டு விலகிச் சென்று, திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று முடிவுசெய்யும்போது, ‘ஒருவேளை இருவரில் ஒருவர் வராமல் ஏமாற்றிவிடுவாரோ? அல்லது, வீட்டிற்குத் தெரிந்து அடித்து, உதைத்துக் கொன்றுவிடுவார்களோ?’ எனும் குரூரமான கேள்விகளே எழுகின்றனவேயொழிய, ‘இவர்கள் சேர்ந்து வாழப் போகிறார்கள்’ எனும் நற்கருத்து மனத்தில் உதித்ததாக நினைவில்லை.

வாழ்க்கை சுவையானது, காதல் இதமானது. அதனால்தான் இரு கதாபாத்திரங்களே இருந்தாலும் சலிப்புத் தட்டாமல் நாவலைப் படிக்க முடிகிறது. உடல் ஈர்ப்பைத் தாண்டிய அற்புதமான சுவாரசியங்கள் நிறைந்த உலகம் காதலினால் ஏற்படும் எனும் அழுத்தமான குரலாக ஒலிக்கிறது ‘காதல் கடிதம்’.