Monday, May 13, 2019

முற்று

தீவிர சிகிச்சைப் பிரிவு வாயிலில் இறந்து கிடந்தார் முருகன். அத்துவான இரவில் நோயாளிகளனைவரும் அவரவர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தனர். உடன் வந்திருந்த உறவினரும், நண்பர்களும் காத்திருப்பு அறையில் குறுக்கும்நெடுக்குமாய்ப் பாய்விரித்து அயர்ந்திருந்தனர். வாயில் நுரை வழிய விழுந்து கிடந்த அக்காவலாளி கேட்பாரற்ற நிலையில் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்திருந்தார். கடிகாரம் மூன்று முறை செவிப்பறைகளின் ஆதியைத் தொட்டுவிட்டு அடங்கியது. பிரிந்த உயிரும், பிரியப் போகும், பிழைக்கப் போகும் உயிர்களும் நிசப்தத்தில் கலந்தன.

*****

சார், உங்க தங்கச்சி மருந்தக் குடிச்சிட்டாங்க. கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு ஒடனே வாங்க”. இரண்டு சுற்றுப் போதை மட்டுமே உட்சென்றிருந்ததால் சற்றே தெளிவாக இருந்தான் சின்னமுத்து. சிதறிக்கிடந்த வறுவல்களும், மங்கலாய்த் தெரிந்த காலணிகளும், பச்சை வர்ண ஒளிவிளக்குகளுமாய் இருந்த மதுபானக் கடையின் முப்பதுக்கும் மேற்பட்ட மனிதர்களில், ஒரு மூளை மட்டும் சுதாரித்துக்கொண்டிருந்தது.

*****

யோவ், என்னையவா உள்ள விட மாட்டேன்னு சொல்ற? நான் யாருன்னு தெரியுமா? உன்னக் கொன்னுடுறேன் இருய்யா.” முழு வேகத்துடனும், அரைபோதையுடனும், அதிகபட்ச நடுக்கத்துடனும் ஓடிவந்த சின்னமுத்து, நொடிப்பொழுதில் முருகனைத் தள்ளிவிட்டான்.

சுவரில் இடித்து விழுந்த முருகன் தம்பி இரு தம்பி. அப்டிலாம் போய் இப்போ பாக்க முடியாது. பெட்ல சேத்து அர அவரு கூட ஆவல இன்னும்என்றபடி எழுந்தார். சின்னமுத்துவின் முட்டல்களும், மோதல்களும் அவர் முன் எடுபடவேயில்லை. நெற்றிப்பொட்டு சற்றேனும் சுருங்காமல், புருவம் உயராமல், வார்த்தை உச்சத்தை எட்டாமல், சலனமின்றி சின்னமுத்துவைக் காத்திருப்போர் இடத்தில் அமர வைத்தார்.

ஹேமா சொந்தக்காரங்க யாராச்சும் இருக்கீங்களா?”
”…..”
போங்கம்மா டாக்டர் கூப்பிடுறார்.”

உள்ளே சென்ற முப்பத்தாறாவது நொடியில் அதரங்களை உலுக்கும் கேவலும், கூச்சலுமாக வெளியே ஓடி வந்தாள் வசந்தி. “யோவ் வாட்ச்மேன், இதுக்கு என்னக் கூப்புடாமயே இருந்திருக்கலாமேய்யா. செத்த சேதியச் சொல்ல எதுக்குய்யா என்ன உள்ள போச்சொன்ன? செத்துப்போ. உன் குடும்பமே நாசமாப் போக. போய்ச் சேந்துட்டாளே மகராசி, நான் பெத்த சொத்துஎன்றபடி முருகனின் நெஞ்சில் குத்தினாள். சாளரங்களின் வழியே உள்ளே வந்திருந்த ஓரிரு பறவைகள் விக்கித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அரற்றியபடியே விழுந்த வசந்தியைக் கைத்தாங்கலாய்ப் பிடித்து ஓரமாய் அமர வைத்தார்.
அரை மயக்கத்தில் இருந்த வசந்தி, கண்கள் இருள, சாய்ந்து விழுந்தாள். பின்னல் அவிழ்ந்து தலைவிரிகோலமாயிற்று.

*****

பின்மண்டையில் யாரோ கோடரியால் ஓங்கி அடிப்பதைப் போல வலி பிளந்துகொண்டிருந்தது. சின்னமுத்து தள்ளிவிட்ட வேகத்தில் சுவரில் மோதியிருக்க வேண்டும். இடித்தது போல நினைவில்லை முருகனுக்கு. அதைப் பற்றிச் சிந்திக்கவும் நேரமில்லை. தன் நாற்காலியில் உட்கார்ந்தார். தலையை நிமிர்த்திக் குனிந்தால் இருட்டிக்கொண்டு வந்தது. தடுமாறியபடியே படியில் நடந்துசென்று இரண்டு பரோட்டா தின்றுவிட்டு வந்தார்.

தரையை மெழுகித் துடைக்கும் செங்கேணியம்மா, “என்ன முருகா, அதுக்குள்ள தின்னுட்டியா என்ன?” என்றாள் துடைப்பத்தைத் தரையில் அழுத்தித் தேய்த்தபடியே. மையமாய்த் தலையசைத்த முருகனால் பெரிதாகப் பேச முடியவில்லை. தொண்டை அடைப்பதைப் போலிருந்தது.

*****

கண்விழித்துப் பார்த்தபோது நேரம் 12:30யைத் தாண்டியிருந்தது. தலையில் கீரைக்கூடையை வைத்தது போல் பாரம் அழுத்தியது. முருகன் எழுந்தார். “சாமி, இனிமே முடியாதுப்பா. தெனம் பத்துச் சாவு, தெனம் நூறு ஏச்சு வாங்க இனிமே முடியாதுஎன்று முனகியபடியே மருத்துவமனையின் கிழக்கு வாயில் வழியே வெளியே வந்தார். ஏற்கனவே இரண்டாய்ப் பிரிந்திருந்த சாலை, தலைசுற்றலில் நான்கைந்து பிரிவுகளாய்த் தெரிந்தது. மின்விசிறியைப் போல் சுழன்றது சாலை. சற்றுத்தொலைவில் இருந்த மளிகைக் கடையில், “தென்ன மரத்துல பூச்சி புடிக்குது தம்பி. இந்தத் தோட்டத்துல எல்லாம் போடுவாங்களே பூச்சிக் கொல்லி ஒரம். அது கொஞ்சம் ஒரு மூணு பாக்கெட்டு குடுப்பாஎன்றார்.

Saturday, January 5, 2019

முற்று

முற்றும் துறக்க முயன்று உலகின்
டாம்பீகச் சட்டையைக் கழற்றி நிர்வாணமாய்க்
கண் மூடுகிறான் அவன்
இமைகளுக்குள் அகப்படுகின்றன கருவிழிகள்

அடைந்து தவித்துத் தடுமாறும் விழிகள்
தட்டித் திறக்க முயல்கின்றன
இமைக்கதவுகளை

இறுக மூடிய இமைகளுக்குள்
கருவிழி உறங்குமா? விழித்திருக்குமா?
எனில்
உறக்கமே மாயையன்றோ?

கேள்விக் கணைகள் மூளையைத் தாக்க
விழிக்கிறான் முற்றும் துறந்தவன்
கருவிழியை அடைக்க விருப்பமின்றி
இமை மூடாது, கண் துஞ்சாதிருக்கப்
பருகுகிறான் அரைப்புட்டித் தண்ணீர்

புட்டியில் அடைபட்டிருந்த நீருக்கு வாய்த்தது
ஒன்றரை நொடிச் சுதந்திரம் மட்டுமே
உடலுக்குள் அடைகிறது, அரைகிறது

நீரையும் துறக்க முயல்கிறான்
சிறுநீராய்அதற்குத்
தேவை என்னவோ மேலும் சற்று நீர்தான்!
எனில்
துறத்தலும் பொய்யன்றோ?

Wednesday, October 24, 2018

சருகு

16 வயது. இல்லை, 16 வயதுதான். நாளை அடக்கம் செய்யவிருக்கிறார்கள். என் வகுப்பில் படிக்கும் மாணவனின் அண்ணன். அண்ணன் என்றால் உடன்பிறந்தவனில்லை. அத்தை பையன். பணமிருந்து, மனமில்லாது வாழும் மனிதருக்குத்தாம் “அவன் சொந்தக்காரப் பையன்”, “கஸின்” என்றெல்லாம் சொல்லத் தோன்றும். இறந்தவன் யாரென்று கேட்டால், “சார், ___ அண்ணன் சார்” என்றுதான் அனைவரும் சொன்னார்கள்.

பள்ளி முடிந்து, மாலை வகுப்புகள் முடியும் நேரத்தில் துக்கம் விசாரிக்கச் சென்றேன். துக்கம் விசாரிக்க என்றுகூடச் சொல்ல முடியாது. தம்பியாகிய வகுப்பு மாணவனின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்று அறியும் ஒரு சுயநலத்துடன்தான் போனேன். அவன் என்னிடம் வகுப்பில் பலமுறை வசவுகள் வாங்கியவன். ரொம்பச் செல்லப் பிள்ளையெல்லாம் கிடையாது.

தெரு என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒரு குறுகலான சந்து. அச்சந்தில் உடலை வைக்க முடியாதென்பதால் தெருவிலேயெ குளிர்பதனப் பெட்டியில் கிடத்தியிருந்தார்கள். யாரும் அழவில்லை. நான்கைந்து பேர் வெறித்துப் பார்த்தபடியே இருந்தார்கள். உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது. முகம் மட்டுமே தெரிந்தது. பார்க்கும்படியாக இல்லை.

ஆயுத பூஜையன்று ஐ.எஸ்.எல் கால்பந்தாட்டத்திற்காக அரங்கிற்குச் சென்றுவிட்டு ரயிலில் திரும்ப வந்துகொண்டிருந்திருக்கிறார்கள் ஏழு பேர். மூவர் இவன் படித்த பள்ளியில் படித்தவர்கள், மூவர் இவன் படிக்கும் பள்ளியில் படிப்பவர்கள். இவனுடன் சேர்த்து ஏழு. ரயிலில் வரும்போது எச்சில் துப்புவதற்காக வெளியே தலையை நீட்டியதாகச் சொல்கிறார்கள், கம்பத்தில் தலை மோதி ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறான். இரவு ஏழு மணியிலிருந்து எட்டரை மணி வரையிலான போட்டி என்பதால் இது ஒன்பது மணியிலிருந்து, பத்து மணிக்குட்பட்ட நேரத்தில் நடந்திருக்க வேண்டும். அதிக அளவிலான இரத்தம் வெளியேறிய ஆபத்தான நிலையில் ஸ்டான்லியில் சேர்த்திருக்கிறார்கள்.

மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. நினைவிழந்த நிலையில், கோமாவுக்குத் தள்ளப்பட்டுப் பின்னர் மூளைச்சாவு ஏற்பட்டுக் கடைசி உயிர்நாடியான செயற்கைச் சுவாசமும் பிடுங்கப்பட்டு இன்று கடுங்குளிர் தெரியாதவாறு துணியால் மூடப்பட்டுக் கதகதப்பாக உறங்கிக்கொண்டிருந்தான். முகம் வெளிர்நீலமாய் மாறியிருந்தது. கண்கள் வீங்கிக் கன்னம் அடையாளம் தெரியாமல் ஆறடிப் பெட்டிக்குள் அடங்கியிருந்தான். வெளியில் கேட்கும் விசாரிப்புகள் அவன் காதில் விழ வாய்ப்பில்லை. கண்ணாடிதான் தடுத்துவிடுமே!

”தம்பி” என்ற சத்தம் கேட்டுச் சட்டென விலகினேன். இரண்டு நிமிடங்களுக்கும் மேலாக அவனையே பார்த்துக்கொண்டிருந்து விட்டேன் எனும் உண்மை அப்போதுதான் உறைத்தது. மாலையுடன் ஒருவர் வந்து, பெட்டிக்கு அதை அணிவித்துப் போனார். அதன் பிறகு, சந்திற்குள் சென்றேன். வகுப்பு மாணவனின் அம்மாவிடம், “_____ இருக்கானாம்மா?” என்று கேட்டு முடித்திருக்கவில்லை. “சாஆஆஆஆஆர்” என்று கதறிக்கொண்டே வந்து என் மேல் சாய்ந்தான். “அண்ணன் சாஆஆர்… ஃபுட்பா…ஃபுட்பால் மேச்சு… ட்ரெயின்ல வரும்போது…” என்றபடி பெருங்குரலெடுத்து ஓலமிட்டான். அவனது தோளை ஒரு கையால் இறுகப் பற்றியபடி, முதுகில் இன்னொரு கையால் தட்டிக்கொடுத்தபடியே இருந்தேன்.

அவனது விசும்பல் ஒவ்வொன்றும் சுற்றிலும் கேட்ட மற்ற அனைத்து இரைச்சல்களையும், ஓசைகளையும் விடப் பல மடங்கு அதிர்வு கொண்டதாக இருந்தது. கண்கள் நீர்த்திரையால் மறைக்கப்படுவதை உணர்ந்தேன். சற்றே தலையில் எடை கூடியது போல் இருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வருவது புரிந்தது. உணர்வுகளும், தசைகளும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு செயலிழந்துகொண்டிருந்தன. கால்களில் வலு படிப்படியாகக் குறைந்து முருங்கைக்காயைப் போல் வளைவதைத் தெளிவாக உணர்ந்தேன். இதயத் துடிப்பு இரு மடங்காக பெருகிக்கொண்டே போவது போல் தெரிந்தது. மலையுச்சியை அடைந்த மனிதனின் செவிப்பறையைப் போல் என் காதுகளும் அடைத்துவிட்டிருந்தன.

எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. தட்டிக்கொடுத்துக்கொண்டேயிருந்தேன். அனிச்சைச் செயலாய்த் தொடங்கிய அதுவுமே கூட இயந்திரத்தனமாக மாறியிருந்ததைக் கவனிக்கவில்லை. சில நிமிடங்களுக்கு மேல் என் பிடியிலிருந்து அவன் தன்னை விடுவித்துக்கொண்டான். கண்ணைத் துடைத்தவாறு, “டீ குடிங்க சார்” என்றான். குடிப்பதில்லை என்றேன். வெறுமையாகப் பார்த்தான். கழுத்தின் முன்புறம் வழியாக முதுகெலும்பை ஊடுருவிச் சென்றது அவனது வெளிறிய பார்வை. உடம்பு சில்லிட்டது போலிருந்தது.

அவனது அம்மாவிடம், “பையனைக் கொஞ்சம் ஊருக்கு, சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பிடுங்க. இல்லைன்னா ஸ்கூலுக்கே வரட்டும். வீட்டுல இருந்தாத் திரும்ப திரும்ப அதே ஞாபகமாவே இருக்கும். பாத்துக்கோங்கம்மா” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். தெருமுனைக்கு வந்தபோது நீல முகம் என்னைக் கட்டாயப்படுத்தித் திரும்பிப் பார்க்க வைத்தது.

உடம்பு உலை போலக் கொதித்தது. காதில் யாரோ சீழ்க்கை அடிப்பதைப் போன்ற ஒரு இரைச்சல். வலிந்து காதை மூடிக்கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தபடியே நடந்தேன். சாலையில் இருந்த தார்க்கற்கள் அனைத்தும் திடீரெனப் பிளந்து விழுங்க வருவதைப் போல் தோற்றமளித்தன. கண்களை இறுக மூடியபடியே நடந்தேன். நீல வட்டங்கள் மூடிய கண்களுக்குள் வட்டமடித்தன. அவ்வட்டங்களுள் அவ்வெளிர்நீல முகமும் ஒன்று.

Thursday, October 11, 2018

ஏதிலி

அடையாளங்களால் நிறைந்து வழியும் குப்பைக் கிடங்கில்
அடியெடுத்து வைத்தே நடக்கிறான்
அடையும் இடம் தெரியா மானுட வேட்கை கொண்ட மிருகம்

சிற்சில குப்பை மலைகளாய்க் குவிந்து
சிதறியே ஓடுகின்றன
கவைக்குதவா அடையாளக் குப்பைகள்

காலவெளியெனும் மணல்பரப்பில் குப்பைக்கிடங்கில்
கால்வைத்தே நடக்கையில்
காணும் அனைத்தையும் மிதிக்கிறான்

மிதிபடும் அடையாளங்களில்தாம் எத்துணை எத்துணை வகை?
"நீங்க என்ன ஆளுங்கப்பா?"வில் தொடங்கி
"வாட்ச்மேன்" என்றதட்டும் குரலில் எழும்பி
"ஹலோ, ஒலாவாண்ணா?" எனும் வினாவில் தொக்கி
"நான் மதுரக்காரன்டா"வில் தொடர்ந்து
"ஐ அம் ஆன் ஐ.ஐ.டி. அலும்ன"ஸில் படர்ந்து
"ஐ வாண்ட் டு பிகம் ய கலெக்ட"ரில் ஊர்ந்து
இடறிச் சிதறி ஓடுகின்றன
அனாதையான அடையாளங்கள்
பின்னர் மிதிபடுகின்றன.

மலையே மலைக்கும் குப்பை மலையாய்
எண்ணிக்கையினாலான அடையாளங்கள்
"இருபத்தஞ்சு வயசுதான் ஆகுது" என்ற கல்யாணப் பொய்;
"வருஷத்துக்கு அஞ்சு லட்சம் சம்பளம்" எனும் எலும்புத் துண்டு;
இவ்வாறாகத் தொடங்கி
நால்வருணம்
ஐந்திணை
அவை சார்ந்த மக்கள்
அவர்தம் தொழில், சமூகம்
இத்யாதி இத்யாதி!

கிடங்கின் நடுவில்
குட்டைத் தண்ணீராய்த் தேங்கி
நெடி வீசுகின்றன
பெயர் அடையாளங்கள்;
"மஹாதேவன் ஐயர்" எனவும்,
"முத்தையாத் தேவர்" எனவும்,
"மாரிமுத்துப் படையாச்சி" எனவும்,
"சரவணக் கவுண்டர்" எனவும்
குட்டையில் மிதக்கின்றன
மக்கி அழியாத சாதி ஞெகிழிகள்;
மொய்க்கின்றன
குடலைப் புரட்டி வயிற்றைக் குமட்டும் கிருமிகள்.

கொளுத்தப்படும் குப்பைகள் கருகிச்
சாம்பலாய்ப் போகும் நேரத்திலே
திசைகளற்ற கரும்புகையாய் ஏதிலியாய்ப்
பரபரப்பாய்ப் பறக்கிறது
"நான் யார்?" எனும் கேள்வி

பதிலில்லையோ வானின் எல்லையே?
அண்ட சராசரமே!
பராபரமே!

Wednesday, August 22, 2018

டீச்சர்

”டேய் மச்சான், அந்த சார் ஒரு தூங்குமூஞ்சிடா. கண்டுக்கவே மாட்டான். ஒன் மார்க்ஸ் மட்டும் ஃபர்ஸ்ட் பத்து நிமிஷத்துல க்ராஸ்செக் பண்ணிக்கலாம்.”
“ஓகே டா. ஏ ஆப்ஷனுக்கு நெத்தி, பி-க்கு கண்ணு, சி-க்கு மூக்கு, டீ-க்கு வாய். சேம் சிக்னல்ஸ்தான். ரெடியா இரு. ஃபர்ஸ்ட் டென் மினிட்ஸ்ல முடிச்சிட்டு டூ மார்க்ஸ் போயிடலாம்.”

*****

”மாப்ள, இந்த மிஸ்ஸு ரவுண்ட்ஸ் வரும்டா. எல்லாம் மொதல் ஹாஃப் அவருக்குத்தான். அப்புறம் சமோசாவும், டீயும் வந்தாக் குத்துக்கல்லு மாதிரி உக்காந்துடும். அந்த ட்ரிக்னாமெட்ரி ஃபார்முலா எல்லாத்தையும் எழுதி வெச்சுருக்கல்ல? காப்பி பண்ணிட்டு பிட்டப் பாஸ் பண்ணு.”

*****

”செம்ம ஜாலிடா இன்னிக்கு எக்ஸாம் ஹால்ல. மொக்க சூப்பர்வைசரு ஒருத்தன். அவனுக்கு நம்ம டெக்னிக் எல்லாம் தெரியாது போல. அசால்ட்டா எல்லா ஆன்ஸரும் வெரிஃபை பண்ணியாச்சு.”

*****

இவையும், இன்ன பிற உரையாடல்களும் தேர்வறைக்குச் செல்லுமுன்பும், தேர்வு முடிந்தபின்னரும் தவறாமல் இடம்பெறும். பள்ளி, கல்லூரி என்று பெரிய வித்தியாசம் எல்லாம் இருந்ததில்லை. அம்மூன்றில் குறைந்தபட்சம் இரண்டிலேனும் நானும் இடம்பெற்றிருக்கிறேன் என்பதைச் சொல்லவேண்டியது தலையாய கடமையாகிறது.

மாணவப் பருவத்தின் ஹீரோயிஸக் கற்பிதங்களுள் முக்கியமானது, ‘டிப்பி’ அடித்துப் பிடிபடாமல் வெளிவருதல். அங்கப்பிரதட்சணம் செய்பவர்களையும், அஷ்டாவதானிகளையும் விடப் பெரிய சாகசம் செய்துவிட்டதான ஒரு அதுப்பு தலைதூக்கும் பருவம் அது. என்னதான் தேய்ந்துபோன ஹைதர் காலத்து வானொலிப்பெட்டியைப் போல நொடிக்கு நூறு முறை, “டேய், நானும் உன் வயசைத் தாண்டி வந்தவன் தாண்டா” என்று ஆசிரியர்/ஆசிரியை வாய்வலிக்கக் கத்திக் கதறினாலும் அது மாணவரின் கபாலத்தில் குட்டுவைத்து எட்டிப்பார்த்ததாய்ச் சரித்திரம் இல்லை. தலைமையாசிரியரிடம் மாட்டினால் கூட, “தில்லிருந்தா மொத்தமா வாங்கலே” என்ற ரீதியில், அதையே கதாநாயகத்தனமான பிம்பங்களைக் கட்டமைக்கப் பயன்படுத்தும் மாணவ மார்க்கெட்டிங் உபாயங்களுக்கும் குறைவிருந்ததாய் நினைவில்லை.

இப்படிக் காலரைத் தூக்கிவிட்டுச் சுற்றிக்கொண்டே, கோக்குமாக்கு வேலைகளைப் பார்த்த நானும் கூட ஒருநாள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஆவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. கொடிக்கம்பத்தில் நெட்டுக்குத்தாய் நிற்கவைத்த துடைப்பக்குச்சியைப் போன்ற உயரத்தில், ‘ஆறடிக் காத்தே’ என்ற ரீதியில் இருக்கும் எனக்கு, அமர்ந்த இடத்திலிருந்தே மொத்த வகுப்பறையையும் கண்கொத்திப் பாம்பென நோட்டம் விடும் அரிய வாய்ப்பு ஒவ்வொரு தேர்வின்போதும் கிட்டுகிறது.

1990-2000-2010-2020 என்று பல மாமாங்கமாய் மாறாமல் இருப்பது மாற்றம் மட்டுமல்ல; சரியான விடைகளுக்குக் நெற்றி-கண்-மூக்கு-வாய் என வரிசைப்படுத்தி விடை சொல்லும் நுணுக்கமும்தான் போல. கண்ணைச் சொறிந்துகொண்டே சாவதானமாக ஓரக்கண்ணால் இரண்டு மதிப்பெண் விடைகளை நோக்குவதும், ‘தெரியாமல்’ கீழே விழும் பேனாவையோ, பென்சிலையோ, ரப்பரையோ எடுக்கும்பொருட்டு குனிந்து, விழுந்த பொருளுடன் ‘பிட்டு’க் காகிதத்தையும் சேர்த்து எடுப்பதும், எழுதி முடித்த விடைகளைச் சரிபார்க்கும் சந்தடி சாக்கில் அருகில் இருக்கும் தோழனுக்கோ, தோழிக்கோ தாளை விரித்து வைத்து ஒரு பக்க விடைகளைக் காண்பிப்பதும், வாயில் ஒரு கையோ, இரு கைகளோ வைத்து மூடிக்கொண்டு கிசுகிசுப்பதும், சன்னமாய்த் தொடங்கிப் பின்னர் சற்றே சத்தமாகி ஒருவழியாய் நாராசமாய் மாறும் இருமலை ஆயுதமாய்ப் பயன்படுத்தி வகுப்பறையின் மேதாவியைத் திரும்பவைத்து விடைகேட்பதும், இன்ன பிற இதர மிஸ்ஸலேனியஸ் தந்திரங்களும் மாறவேயில்லை. நீலாம்பரியின் “வயசானாலும்…” என்று தொடங்கும் ‘படையப்பா’ வசனத்தை இவ்விடத்தில் பொருத்திப் பார்த்துச் சிரித்தல் நலம்.

’வாத்தியாராகிய நான்’ என்ற கம்பீரத்துடன் நான் உற்று நோக்கினால் நான் பத்தாவதிலும், பன்னிரண்டாவதிலும் செய்த அதே கொணஷ்டைகளை மாணவமணிகள் செய்கின்றனர். அது சரி! அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழியே அன்றோ? ஆசிரியர் கவனிப்பது தெரிந்தால் காற்றில் கணக்குப் போடுவது போலவும், கண்ணை விட்டத்தை நோக்கிச் செலுத்தி ‘ஆழ்ந்த சிந்தனை’யில் வலிந்து ஈடுபட்டு வெண்பா எழுதும் சங்கத்தமிழ்ப் புலவர் பெருமக்களின் சிந்தனைக்கே சவால் விடுவது போலும், மூக்கைச் சொறிவது போலும் பலவிதமான நாடகங்கள் அரங்கேறும். உச்சக்கட்டமாய் நடக்கும் இரு நிகழ்வுகள்தாம் முத்தாய்ப்பே. கவனிப்பது தெரிந்தவுடன், “சார், மே ஐ ட்ரிங்க் வாட்டர்?” என்று என்னையே அசரடிக்கும் திறமைசாலித் திருடர்களையும், “சார், டவுட் சார்” என்று வினாத்தாளுடன் வந்து கேவலமான ஒரு சந்தேகத்தைக் கேட்டுவிட்டு அப்பாவியாய் இடத்திலமரும் லகுடபாண்டியர்களையும் என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ‘கர்மா இஸ் ய பூமராங்’ என்று நானும் மீசையில் மண் ஒட்டாத கதையாய்க் கண்டுகொள்வதில்லை.

சற்றேறக்குறைய மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், “அந்தாளு சும்மா சீனுதாண்டா, மொறைப்பான்… ஆனா பத்து பைசாக்குப் ப்ரோஜனம் இல்ல”, “அவன் கெடக்காண்டா, உக்காந்தேதான் இருப்பான். எதுவும் கண்டுக்க மாட்டான்” போன்ற ஏச்சுப் பேச்சுக்கள் என்னைப் பற்றி வலம்வந்துகொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள், ‘ஸ்வச் பாரத்’தை விடப் பிரகாசமாய் இருக்கின்றன.

”அடிச்சாலும் பிடிச்சாலும் நீதானே என் ஆம்படையான்?” எனும் விஸ்வரூபம் – 1 வசனம்தான் நினைவுக்கு வருகிறது. எவ்வளவுதான் மாணவர்கள் என்னைக் கலாய்த்தாலும், நான் அவர்களைச் சதாய்த்தாலும் ‘நமக்கு நாமே’ என்று தலைவிதி. சுழி. மாற்ற ஏலாது. “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்! இவன் ரொம்ப நல்லவன்” என்று மாணவச் செல்வங்கள் என் தலைமேல் ஏறி ஆடாத வரையில் அனைத்தும் சுபமே.

ஆனால், இவ்வளவும் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் தெய்வப் பிறவிகளான என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை நினைவில் நிறுத்துகிறேன். உண்மையிலேயே நான் செய்த லோலாலயங்களும், அட்டூழியங்களும் அவர்களுக்குத் தெரியாமல்தான் போயிற்றா? (இல்லை. பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பின்போது வட்டியும், முதலுமாய் வஞ்சம் தீர்த்த ஆசிரியர்கள் பலர்.) வகுப்பறையில் நான் ஒரு கும்பீபாகமாய் இருந்தும், என்னை ஏன் கண்டிக்காமல் விட்டனர்? கருட புராணத்தின் மீது நம்பிக்கைதான் இல்லையோ? (அப்படியும் சொல்ல முடியாது. இரும்பு அளவுகோல்களை வைத்து அடிப்பதை ஓரளவிற்கு வஜ்ரகண்டகத்துடன் ஒப்பிடலாம்.)

தெளிந்த நீரோடையெனப் புலப்படுவது, பொட்டிலடித்தாற்போன்ற ஒற்றை உண்மை மட்டுமே. உலகில் இருக்கும் ஒரு ஆசிரியரும் இளிச்சவாய் அன்று. நாம் செய்யும் அனைத்தையும் பிக் பாஸை விட உன்னிப்பாகக் கவனிக்கும் ஆற்றல் உடையவர்கள் அவர்கள். முதல் பார்வையிலேயே முக்கால்வாசி குணாதிசயங்களை அளந்து எடைபோட்டுவிடும் அற்புத மனிதர்கள் ஆசிரியர்கள். தேர்வறையில் மாட்டாமல் தப்பிவிட்டாலோ, ஒழுக்கச் சீலர்களான தனுஷும், சிவகார்த்திகேயனும் கற்றுத்தரும் ’நற்பண்புக’ளை வெளிப்படுத்திய பின்னரும் கண்டுகொள்ளப்படாமல் தப்பித்தாலோ அது தப்பித்தலே அல்ல. அம்மாணவர் தண்ணீர் தெளித்து விடப்பட்டு விட்டார் என்றே பொருள் கொள்க. ஏனெனில், மேய்ப்பவர் ஆயர், ஆசிரியர் அல்லர்.

ஆசிரியர் தினத்தன்று பதிவிட்டு ’ஹேஷ்டேக்’களால் இப்பதிவை அலங்கரித்திருக்கலாம்தான். ஆனால், ஆசிரியர் தினம் ஒரு நாள்தான் கொண்டாடப்பட வேண்டுமா என்ன? கற்றல் தொடரும் வரை, கற்போர் உள்ள வரை, கல்வி இருக்கும் வரை, ஆசிரியருக்கான நாள், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5 மட்டுமேயல்ல. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும்தான் (’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் ஒலிக்கட்டும்).