Saturday, January 13, 2018

இனியும் தாமரை வெல்லட்டும்!

ஆங்கிலத்தில் ‘கிளிக் பெயிட்’ என்றொரு சொல்லாடல் உண்டு. அதாவது, ஓரிரு வார்த்தைகளையோ, ஒரு புகைப்படத்தையோ பொறியாகப் பயன்படுத்தி, இணையதளத்தில் காண்பிக்கப்படும் இணைப்பைச் சொடுக்க வைப்பதற்கான ஒரு இலகுவான வழிமுறை. ‘வெல்லட்டும்’ எனும் சொல், ‘தாமரை’ எனும் சொல்லைத் தொடர்ந்து வரும்போது இணைப்பைச் சொடுக்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

ஆனால், வாசகப் பெருமக்களே, இது இந்தியாவை அடக்கும் - மன்னிக்கவும், ஆளும் - தாமரை பற்றியதன்று. மாறாக, இருபது வருடங்களாகத் தமிழ்த் திரையுலகில் உண்மையான தமிழ்ப் பாடல்களை எழுதி வரும் கவிஞர் தாமரை குறித்த பதிவு இது. எனவே, முழுமையாகப் படிக்காமல் “நீ அவங்க ஆளு தானேடா ****!” என்று கிளம்பாதீர்.

பரத்வாஜ் ரங்கனின் சமீபத்திய பதிவைப் படித்த பின்னரே, தாமரை எனும் கவிச்சுடர் திரையுலகில் நுழைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன எனும் உண்மையை அறிந்தேன். தாமரை என்றாலே கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் பாடல்கள் இயற்றுபவர் எனும் என் எண்ணத்தை உடைத்த திரைப்படம் ‘நானும் ரௌடிதான்’. ஆனால், ‘நந்தா’, ‘தெனாலி’ என்று அவரது பயணம் எப்போதோ தொடங்கியிருக்கிறது என்பது இன்றுதான் எனக்குத் தெரிந்தது (‘தெனாலி’யில் இடம்பெறும் ‘இஞ்சேருங்கோ’ என்ற பாடல் இவர் எழுதியதுதான்).

தாமரையின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிப் பேசுவதன்று இப்பதிவின் நோக்கம். தாமரை எனும் பாடலாசிரியரின் - கவிஞர் என்று குறிப்பிட்டால் திருவாளர் ஜெயமோகனும், அவரது பக்தாளும் என்னைப் பந்தாடுவார்கள் - ரசிகன்/விசிறி எனும் முறையில், அவரது பாடல்களின் சில தனித்துவமான நுணுக்கங்களைப் பேசுவதே விழைவு.

ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, அனிருத் ஆகியோரின் இசையைத் தாண்டி, தாமரை அவர்களின் பாடல்கள் மனத்தில் பதிவதற்கும், மீண்டும் மீண்டும் முணுமுணுக்கப்படுவதற்குமான காரணங்கள் மிகுதி. அவற்றையும், என் சிற்றறிவிற்கெட்டிய வரை, நான் கவனித்த சிலவற்றையும் எழுத ஆசைப்படுகிறேன். இப்பதிவு கோனார்த் தமிழுரையின் நெடுவினா போன்ற உணர்வைத் தருமாயின் அது என்னுடைய மொண்ணையான எழுத்துத் திறமேயன்றி, வேறில்லை.

அகவுணர்வுகளின் பேரெழுச்சி:

‘இதயம் துடித்தது’, ‘கண்கள் வியர்த்தன’ என்பது போன்ற வரிகளைக் கவிஞர் பலரும் காதல் கணங்களை விவரிக்கப் பயன்படுத்துவர் (நாம் கண்ணதாசனின் காலம் குறித்துப் பேசவில்லை. தற்போதைய - அதாவது, 2000க்குப் பிறகான - திரையுலகப் பாடல்கள் குறித்தே பேசுகிறோம்). புற உணர்வுகளுக்கும், புறச் சூழ்நிலைக்குமான விவரணைகளாகவே அமையும் அப்பாடல்கள் கேட்கக் கேட்கச் சலிப்பை ஏற்படுத்தக் கூடியவை; இவ்வகையான பாடல்கள் புறத்தின் மூலமாக அகவயத்தை அணுக முற்படுபவை. இத்தகைய பாடல்களில் வெகு சில, இசையமைப்பாளரின் மேதைமையால், காலம் கடந்து நிற்கும் பேறு பெற வாய்ப்புண்டு.

ஆனால், தாமரையின் பாடல்கள் அகவுணர்வுகளின் எழுச்சியால் புற உலகின் நிகழ்வுகளை அணுகுபவை. ‘நில்லாமல் வீசிடும் பேரலை, நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை’, ‘பார்த்த முதல் நாளே, காட்சி பிழை போலே’ போன்ற வரிகளில் தொனிக்கும் தனித்துவமே தாமரை எனும் கவிஞரின் (ஜெயமோகனை அலட்சியம் செய்கிறேன், ‘கெடக்குது களுத’ என்ற எக்காளத்துடன்) ஆற்றல்.

இவை தாண்டி, முதல் வரியிலேயே கேட்போரை வசீகரிக்கும் இனம்புரியாத ஏக்க உணர்வு தாமரையின் பாடல்களை அடையாளம் காண்பதற்கான எளிதான வழிமுறை. ‘ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே’ (‘ஹோசன்னா’ - விண்ணைத் தாண்டி வருவாயா), ‘நீயின்றி நானும் இல்லை, என் காதல் பொய்யும் இல்லை’ (வாரணம் ஆயிரம்) போன்ற வரிகள் அவற்றைத் தொடர்ந்து வரும் வரிகளுக்கான முத்தாய்ப்பாக அமைந்து, ரசிகரை உள்ளிழுக்கும் தன்மைகள் நிறைந்தவை.

வானம், மழை, முகில், மேகம்:

வானம் எனும் எல்லையற்ற பரப்பைக் கவித்துவம் நிறைந்த வரிகளில் வடிக்கும் தாமரையின் மகத்துவம், அழகியம் நிறந்த ஒன்று.

தொடுவானம் சிவந்து போகும்
தொலைதூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே
(‘ஓ சாந்தி சாந்தி’ (அ) ‘நீயின்றி நானும் இல்லை’ - வாரணம் ஆயிரம்)

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே
போகப் போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே
(‘நீயும் நானும்’ - நானும் ரௌடிதான்)

சொல்லா வார்த்தையின் சுகமே
மயில்தோகை போலவே என் மீது ஊறுதே;
எல்லா வானமும் நீலம்
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே
(‘அடியே கொல்லுதே’ - வாரணம் ஆயிரம்)

வண்ணம் நீயே, வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
(‘கண்கள் நீயே’ - முப்பொழுதும் உன் கற்பனைகள்)

போன்ற வரிகளில் தென்படும் வானம் சார்ந்த வர்ணனைகள் அனைத்துமே மனம் சார்ந்த உணர்வுகளையும், காலம் கடந்த தவிப்பின் விழுமியங்களையுமே விவரிக்கின்றன.

தாமரையின் தாமரை:

தாமரை எழுதும் நீர் அல்லது மழை குறித்த காட்சிகள் அனைத்திலும் தவறாமல் இடம்பெறும் அங்கம், தாமரை. பல்வேறு இடங்களில் தாமரையின் இயல்புகளை விளக்குவது, தன் பெயர் மேல் கொண்ட காதலா, மழையின் மீது கொண்ட அன்பா அல்லது இரண்டும் கலந்த விவரிக்க முடியாத உணர்வா என்பது கவிஞர் கூற வேண்டிய பதில். ஆனால், விளம்பரமாகத் தெரியாத அளவிற்கு அர்த்தம் பொதிந்த, ரசனை மிகுந்த வரிகள் அவை.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
(வாரணம் ஆயிரம்)

தாமரை இலைநீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
(‘கருகரு விழிகளால்’ - பச்சைக்கிளி முத்துச்சரம்)

ஒரு தாமரை நீரினில் இல்லாமல் இங்கே ஏன்
இரு மேகலைப் பாதங்கள் மண்மீது புண்ணாவதேன்
(‘நான் பிழைப்பேனோ’ - எனை நோக்கிப் பாயும் தோட்டா)

என்று எழுதும் அவர், உதடுகளை மலரிதழ்களுடன் ஒப்புநோக்கும் வரிகள் மேலும் அழகானவை.

இதழென்னும் மலர்கொண்டு கடிதங்கள் வரைந்தாய்(‘மறுவார்த்தை பேசாதே’ - எனை நோக்கிப் பாயும் தோட்டா)

இருவர் இதழும் மலரெனும் முள்தானே’ (‘தள்ளிப் போகாதே’ - அச்சம் என்பது மடமையடா)

அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரமாக அமுதம் ஊற்றெடுப்பது போலவே, தாமரையின் கவிதைகள் பெருகி வருகின்றன.

முதல் நீ, முடிவும் நீ; அலர் நீ, அகிலம் நீஎனும் வரிகளை ஆதிப் பெருவெடிப்பு நிகழ்ந்த காட்சியுடன் சேர்த்துப் பலமுறை சிந்தித்திருக்கிறேன். ஆதியும் அந்தமுமாய்ப் பெருவெடிப்பு நிகழ்ந்த அந்நொடியில் மலர் விரிவதைப் போல் சிதறி, பூமி எனும் கோளம் பிறப்பதான காட்சியின் உருவகமாகவே நான் இக்காதல் வரிகளைக் கருதுகிறேன்.

கேள்விகளும், எதிர்ப்பதச் சொற்களும்:

சற்றே கவனித்துப் பார்த்தால் தாமரையின் பாடல்களின் முதல்வரியிலோ, பாடலின் பெயரிலோ ஆசைகள் அல்லது நிறைவேறாத ஏக்கங்கள் ஆகியவையும், அவை சார்ந்த துடிப்புகள் தெளிவாகத் தென்படும். அவற்றின் வெளிப்பாடாக வரும் எதிர்ப்பதச் சொற்கள் கவித்துவத்தின் உச்சம்.

தள்ளிப் போகாதே - எனையும்
தள்ளிப் போக சொல்லாதே
(அச்சம் என்பது மடமையடா)

மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
(எனை நோக்கிப் பாயும் தோட்டா)

மறுபக்கம், கேள்விகளாக வெளிப்படும் பல்வேறு உணர்வுகளும் ரசிக்கத் தூண்டுபவை.

ராசாளி பந்தயமா?
நீ முந்தியா நான் முந்தியா பார்ப்போம்
(அச்சம் என்பது மடமையடா)

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே?
(‘ஹொசன்னா’ - விண்ணைத்தாண்டி வருவாயா)

நொடிப்பொழுதில் தோன்றிய சில பாடல்களின் வரிகளில் பிடிபட்ட பொருட்களையும், அழகையும் வைத்து மட்டுமே இப்பதிவை எழுதியிருக்கிறேன். முனைவர் பட்டம் பெறும் ஒருவரின் ஆராய்ச்சி மனோபாவத்துடன் அலசினால், இன்னும் பல்வேறு ஆச்சரியப்பட வைக்கும் புதையல்கள் சிக்கும் என்பதில் ஐயமில்லை.

சில நாட்களுக்கு முன்பு வரை, ‘திரைத்துறையில் பணியாற்றும் ஒரு பெண்ணைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் யாரைச் சந்திக்க ஆசைப்படுவாய்?’ எனும் சுய கேள்விக்கு நயன்தாரா, பார்வதி மேனன், அனு வர்தன் போன்றோரை மட்டுமே விடையாக வைத்திருந்தேன். தாமரையை விட்டுவிட்டதில் வருத்தமடைகிறேன் என்று சொல்லும் அதே இடத்தில், தரவரிசைப் பட்டியல் மறுசீரமைக்கப்பட்டு, தாமரை எனும் பெண் அதில் இப்போது முதலிடம் பெறுகிறார் என்று சொல்லவும் விழைகிறேன்.

தாமரையின் பாடல்கள் ஆழ்ந்த அமைதியை விதைக்கக் கூடியவை. அவரது பாடல்களின் பெருமைக்கும், அவை ஏற்படுத்தும் உள்ளமைதிக்கும் தலைவணங்கி, அவரது வரிகளையே அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்.


நீ வேண்டுமே, இந்த பிறவியைக் கடந்திட நீ போதுமே!

2 comments:

  1. அருமை. நல்ல அவதானிப்பு. தாமரைக்கு மரியாதை. காதலை அதில் வழியும் காமத்தை நாசூக்காக அழகாக அவர் வெளிப்படுத்துகிறார். ஆனால் அவரது திறமையை யாரும் இது வரை கொண்டாடியதாகத் தெரியவில்லை. மாறாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில்.... அவர் பெண் 😑😑😑

    ReplyDelete
  2. Thaamarai epoludhum vendru kondirukiradhu. Nam manadhai!

    ReplyDelete