Sunday, January 14, 2018

இன்னாத்துக்கு அண்ணாத்தே எழுதுற?

கடந்த திங்கட்கிழமை - ‘ஒரே வேலை நாளில் எவ்வளவு வலைப்பதிவுகள் எழுத முடியும்?’ எனும் வினாவைச் சுயபோட்டியாக அமைத்துக் கொண்டேன். வாரத்தொடக்க வேலை நாளாதலால், வழக்கமான களைப்பும், கூடுதலான எரிச்சலும் சேர்ந்தே உளைச்சலைக் கூட்டினாலும், அதையே சவாலாக எடுத்துக்கொண்டு எழுதியபோது, நான்கு பதிவுகளை எழுத முடிந்தது.

சமீபத்தில் குறைந்திருந்த சில கேள்விகள் மீண்டும் எழத் தொடங்கின. அவற்றுள் முக்கியமானவை, “ப்ரோ, நீங்க ஏன் ஒரு புக் எழுதக் கூடாது? இல்ல, இதையே புக்கா ஏன் போடக் கூடாது?”, “எப்புடி இவ்ளோ எழுதுறீங்க?” இரண்டுக்குமான விடையளிப்பது அவசியம் என்ற நோக்கில் இதைத் தட்டச்சு செய்கிறேன்.

முதலில் சற்றே குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தஎப்புடி இவ்ளோ எழுதுறீங்க?”-வை அலசுவோம். முத்தாய்ப்பாக, சில எண்ணிக்கைகளை ஆராய்வோம். சென்னைப் போக்குவரத்து என்பது அனைவரும் பொருத்திப் பார்க்கக் கூடிய ஒரு விழுமியமாக இருக்கும் என நினைக்கிறேன். திருவான்மியூரிலிருந்து கோயம்பேடு செல்வதற்கான கால அவகாசம் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் 45 நிமிடங்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளலாம். இக்கால அவகாசத்தையும், கடக்கிற தூரத்தையும் அளவுகோலாக வைத்துக்கொண்டோமெனில், சராசரியாக ஒரு சென்னைவாசி ஒரு நாளைக்கு அரைமணி நேரத்தையேனும் பயணங்களில் செலவு செய்கிறார் என்று கிட்டத்தட்ட அப்படி-இப்படியான ஒரு முடிவிற்கு வரலாம். இதை மனத்தில் வைத்து ஆராய்வது இன்னமும் சுலபம்.

ஆங்கில-தமிழ்த் தட்டச்சு வழிமுறைகள் வந்த பிறகு கணிப்பொறியில் தமிழ் எழுதுவது என்பது எளிதான காரியமாகிவிட்டது. உங்கள் கணினியில் மென்பொருள் இல்லாவிட்டாலும், ‘இங்கிலிஷ் டு தமிழ் ஃபொனிட்டிக் டைப்பிங் ஆன்லைன்என்று கூகுளைக் கேட்டால், இணையத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யச் செய்யத் தமிழ்ச் சொற்களாக மாற்றும் இணைப்புகளைக் காண்பிக்கிறார் ஆண்டவர் (கூகுளாண்டவரைச் சொன்னேன், ஆழ்வார்பேட்டை ஆண்டவரை அல்ல).

இவ்வழிமுறையில் தமிழ்த் தட்டச்சு செய்யும்போது, அறிமுகமில்லாதவர் கூட, நிமிடத்திற்கு 12-லிருந்து 15 சொற்களைத் தட்டச்சு செய்ய முடியும். 12 சொற்கள் * 30 நிமிடங்கள் = 360 சொற்கள். மேலதிகமாக ஒரு பத்து நிமிடங்களைச் செலவிட்டால், சற்றேறக்குறைய 500 வார்த்தைகளைக் கொண்ட ஒரு கச்சிதமான வலைப்பதிவு தயார். என்ன எழுத வேண்டும் என்ற சிந்தனைக்கும், எழுத வேண்டும் என எண்ணும் கதை/கட்டுரை/இப்பதிவைப் போன்ற எதிலும் சேராத ஒரு மொக்கை குறித்த, கையேட்டிலோ, கைப்பேசியிலோ கிறுக்கப்பட் சில குறிப்புகளுக்கும் உபரியாக ஒரு 10 நிமிடங்களைச் சேர்த்து, குற்றம், குறைகளைச் சரிபார்ப்பதற்கு மேலும் ஒரு 10 நிமிடங்களை ஒதுக்கினால், ஒரு மணி நேரத்தில் ஒரு பதிவு முழுமையடைந்து விடும். அதாவது, பேருந்துப் பயண நேரத்தில் பாதிப் பதிவை முடித்திருக்க முடியும்.

எழுதலாம் என்ற எண்ணம் தோன்றினால் மட்டும் போதும், “ஐய்யய்யோ, அவன் நம்ம எழுதுனதப் படிச்சிட்டு கலாய்ப்பானோ?” என்ற எண்ணத்தைத் தூக்கி எறிவது மிக முக்கியமானது. சுமார் 110 பதிவுகளைத் தொட்டிருக்கும் எனது வலைப்பூவின் முதல் பதிவை இன்று வாசித்தால், எனக்கே சிரிப்பாக இருக்கிறது. இப்பதிவை இன்னும் ஒரு மூன்றாண்டுகளுக்குப் பின்னர் வாசிக்கும்போதும் சிரிப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், அச்சிரிப்பிலும், ஒரு பெருமிதம் தோன்றுகிறதல்லவா? என்னுடைய பழைய எழுத்துகளைப் பார்த்து நான் சிரிக்கிறேன் எனில், எனது தற்போதைய எழுத்தில் முன்னேற்றம் இருக்கிறதென்றுதானே அர்த்தம்?

மேலும், முதன்முதலில் எழுதத் தொடங்கும்போது, நம்மை ஊக்குவிக்கும் சில நபர்களைக் கூடவே வைத்திருப்பது அவசியம். எனக்கு என் பெற்றோர். கழிசடையான ஒரு பதிவிற்குக் கூடக் கைதட்டி ஆதரவளிக்கும் தாய்-தந்தை இருவரும் எனக்கான ஊக்கமருந்து. ஆனால், அவர்கள் செய்யும் மிக முக்கியமான மற்றொரு வேலை, என் எழுத்தை மெருகூட்டுவதற்காக அவ்வப்போது சில கட்டுரைகளையும், கதைகளையும் பரிந்துரைப்பது. அவற்றை வாசிக்கும்போது தோன்றும் சுயவிமர்சனங்களே எனது எழுத்தில் தெரியும் முன்னேற்றதிற்கான காரணம்.

இப்போது, மிக முக்கியமான கேள்வியானநீங்க ஏன் புக் எழுதக் கூடாது?/இதையே ஏன் புக்காப் போடக் கூடாது?”-க்கு வருவோம். ‘புக்என்று அவர்கள் குறிப்பிடுவது சில இடங்களில் நாவல் எழுதுவதையும், வேறு சில இடங்களில் இதைப் போன்ற குப்பைப் பதிவுகளையுமாக இருக்கும். எனக்கு நாவல் எழுதுவதற்கான பக்குவம் இன்னும் வரவில்லை. ஒரு கதையை எப்படித் தொடங்கி, பல்வேறு நிகழ்வுகளை இணைத்து, சிலவற்றை வர்ணித்து, சிலவற்றைத் தவிர்த்து, கோர்வையாக முடிப்பது எனும் ஆயக்கலை எனக்கு இன்னும் கைவரவில்லை. இதுதான் சத்தியம். உண்மையைத் தவிர வேறில்லை.

இரண்டாவதாக, இதைப் போன்ற பதிவுகளை ஏன் ஒரு புத்தகமாக எழுதக் கூடாது எனும் வினாவிற்கான விடை, இது புத்தகத்திற்கான எழுத்து அல்ல. இது என் யாகமோ, நோக்கமோ, தேடலோ அல்ல. எப்படிச் சிலருக்குத் திரைப்படங்கள் பார்ப்பதும், விளையாட்டு நிகழ்வுகளைப் பார்ப்பதும், வண்டியோ மகிழுந்தோ ஓட்டுவதும், வெளியூர்களுக்குப் பயணம் செய்வதும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தருமோ, அது போல எழுதுதல் எனக்கு அமைதியைத் தருகிறது. என் எண்ணவோட்டங்களை மேம்படுத்துகிறது. புதிதாக யோசிக்க வைக்கிறது. அவ்வளவே.

மூன்றாவதாக, இப்பதிவுகளை ஏன் புத்தகமாக வெளியிடக் கூடாது என்ற கேள்வி. நான் ஒன்றும் ஆசையே அற்ற ஞானி அல்ல. எனக்கும் இது போன்ற ஆசைகள் இருந்திருக்கின்றன. எழுதத் தொடங்கிய காலங்களில்ஃபேமஸ் ஆகணும், மத்தவங்கள கவனிக்க வெக்கணும்என்ற நோக்கத்தில் சில பதிவுகளை எழுதியிருக்கிறேன். அது ஒரு கட்டத்தில் உடைபட்டது. நான் குப்பையான சில புத்தகங்களை வாசித்தபோதுயோவ், பதிப்பகத்துல இதையெல்லாம் படிச்சுப் பாத்துட்டுத் தான் பதிப்பிச்சாங்களா?” என்று தோன்றியிருக்கிறது. அவ்வாறான வெளிப்பாடுகள் என்னுடைய இப்புத்தகத்திற்கு வந்துவிடக் கூடாது எனும் சுயநல எண்ணத்தில்தான் அதைச் செய்வதில்லை.

ஒரு நூல் என்பது ஒரு மொழியின் செழுமைக்கான வெளிப்பாடு. மொழியின் மகத்துவத்தை உணர்த்தும் ஒரு கருவி. அந்த எண்ணம் வந்த பிறகுதான் ஆங்கிலப் பதிவுகள் எழுதுவதை முற்றாகக் குறைத்தேன். அவ்வப்போது ஆங்கிலத்தில் எழுதும் பழக்கம் விட்டுப் போய்விடக் கூடாது என்பதால் எழுதுவதுண்டு. ஆங்கிலத்தில் நான் பெரிய பருப்பு கிடையாது என்பதுதான் நிதர்சனம். இப்படி இருக்கும்போது என் தமிழ் மொழிக்கு நான் செய்யக்கூடிய ஆகப்பெரிய துரோகம், அவசரகோலத்தில் கண்டதையும் வெட்டி ஒட்டிப் புத்தகமாக வெளிக்கொணர்வதுதான்.

இவற்றையும் தாண்டி, இலக்கியத்தையும், இசையையும், இன்ன பிற கலைகளையும் வணிகப் படுத்துவதோ, எதிர்பாலினத்தைக் கவர்வதற்கான ஒரு உபாயமாகப் பயன்படுத்துவதோ என்னைப் பொருத்தவரையில் கேவலத்தின் உச்சக்கட்டம். அதைவிட மட்டமான செயல் வேறேதுவும் இருக்க முடியாது. எனவே, “ப்ரோ, புக் எழுதலாமே!” எனும் பரிந்துரையை ஏற்கும் நான், “ப்ரோ, புக்கு கிக்கு ஏதாச்சும் போட்டீங்கன்னா ஃபேமஸ் ஆகலாம்ல? பொண்ணுங்க எல்லாம் கவனிப்பாங்கஎனும் வாக்கியம் முடியும் முன்னரே நாபிக்கமலத்திலிருந்து எச்சிலைத் துப்பியிருப்பேன் என்பதையும் புரிந்து கொள்ளவும்.


எழுத்து என்பது கலை அல்ல, அது ஒரு நிலை. ஒரு மனநிலை. இதைப் புரிஞ்சவன்லாம் கிங்கு, மத்தவனுக்கு சங்கு. நன்றி!

1 comment: