Monday, January 8, 2018

அடக்குனா அடங்குற ஆளா நீ: #கேஸ்ட்லெஸ்_கலெக்டிவ் கான்சேர்ட் எனும் குரல்

கல்லூரிக் காலங்களில், “எதுக்குடா கேஸ்ட் பேஸ்ட் ரிசர்வேஷன்? எக்கனாமிக் பேஸ்டா இருந்தாத்தானே நல்லது?” போன்ற கேள்விகளைக் கேட்டு கத்திக் கருவிக் கொண்டிருந்த பலருள் நானும் ஒருவன். பட்டப்படிப்பை முடித்து வேலைசெய்யத் தொடங்கிய பின்னர்தான், என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் பொதிந்திருக்கும் மனிதர்களிடையேயான ஏற்றத்தாழ்வு மெல்லமெல்லப் புலப்படத் தொடங்கியது. வேலை செய்யும் இடத்தில் இருந்த பல்வேறு படிநிலைகள் - நான் சொல்வது மேனேஜர், பாஸ், எம்ப்ளாயீ எனும் படிகளல்ல - சிந்தனையோட்டத்தைச் சற்றே தூண்டிவிட்டது. வேலைபார்க்கும் நிறுவனம் தொடர்பான வேலை செய்பவர்களை ஒரு குழாமாகக் கருதினால், அதற்குக் கீழேயுள்ள படியில் வருபவர்கள், நிறுவனம் தொடர்பான வேலை செய்பவர்களின் வசதிக்காக வேலை செய்பவர்கள், அதற்கும் கீழே இருப்பவர்கள் மேலே சொன்ன இரு படிகளில் இருப்பவர்களின் சக்கைகளாகப் பயன்படுத்தப்படுபவர்கள் (ஒரு சிறிய உதாரணம்: முதல் படி: சாஃப்ட்வேர் தெரிந்த இஞ்சினியர், இரண்டாம் படி: அவரைக் கொண்டுவந்து கூட்டிச்செல்லும் மகிழுந்து ஓட்டுநர், மூன்றாம் படி: இவர்கள் எல்லாம் சாப்பிட்ட தட்டைக் கழுவுபவர்கள், கழிப்பறைகளைச் சுத்தம் செய்பவர்கள்).

இதில் முதல் படியில் இருப்பவர்கள்தாம் இரண்டு மற்றும் மூன்றாம் படியில் இருப்பவர்களை தள்ளுகிறார்கள் என்று பார்த்தால், இரண்டாம் படியில் இருப்பவர்களும் மூன்றாம் படியிலிருப்பவர்களைத் தள்ளுகிறார்கள். இந்த பல்வேறு தட்டுகளைக் கொண்ட சமூகக் கட்டுமானத்தின் பாதாளத்தில் தொங்கிக் கொண்டிருப்பவர்களின் ஒரு எழுச்சிக் கொண்டாட்டமேநீலம் பண்பாட்டு மையம்கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடத்தியகேஸ்ட்லெஸ் கலெக்டிவ்இசை நிகழ்ச்சி.

கீழ்பாக்கம் சி.எஸ்.. பெயின்ஸ் பள்ளி மைதானத்தில் மாலை ஆறு மணிக்கு நிகழ்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 6.05-க்கு உள்ளே சென்ற எனக்கு ஆச்சரியம். நான் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. ‘போறோம், சேர்ல உக்காந்து கெத்தா நம்ம சென்னைக் கானா, ராப் எல்லாத்தையும் கேட்டுட்டு வர்றோம்என்ற மிதப்பில் வந்த என்னை அந்த ஆரவாரம் அடக்கியது. எனது கல்லூரியின் கலைவிழாவானடெக்கோஃபெஸ்ஸிற்கு இணையாக மேடை அமைக்கப்படிருந்தது. இறுதி ஒலிப் பரிசோதனைகள் நடந்தேறிக்கொண்டிருந்தன. மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில்கபாலி’, ‘மெட்ராஸ்திரைப்படங்களின் காணொளிக் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.

சரியாக 6.15 மணியளவில் குழுமியிருந்த அனைவரின் தன்னிச்சையான, ஒட்டுமொத்த ஆரவாரக் குரலுக்கு மத்தியில்கோட், சூட்சகிதம் சுமார் இருபது பேர் மேடையேறினர். திறந்தவெளி அரங்கையும் மீறி, அப்பெருமிதக் கூச்சல் காற்றில் கலந்துவிடாமல் அரங்கின் சுற்றுப்புறங்களிலேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்தது போலத் தோன்றியது.

முதலில் சென்னையைப் பற்றிய கானா பாடலில் தொடங்கிய நிகழ்ச்சி, அடுத்தபடியாக வந்த உரிமைகள் குறித்த ராப் பாடலில் சூடுபிடித்தது. “எங்க உரிமை எங்க கையில, நீங்க சொன்னத ஏண்டா செய்யிலஎனும் ஒற்றை வரி ஓட்டுப்போடும் அப்பாவி மக்களின் ஆள்காட்டி விரல் மையிலிருந்து, காலங்காலமாக ஏமாற்றும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியைப் பட்டவர்த்தனமாகக் காட்டியது. தொடர்ந்து வந்தது மெதுவான தாள லயத்தில் ஒலித்த ராக் வகையிலானமெட்ராஸின் மகிழ்ச்சிஎனும் பாடல். இம்மண்ணிற்கே உரிய இசையின் தன்மையை லேசாகக் கோடிட்டுக் காட்டுவதாகவும், ‘அந்நிகழ்ச்சி ஏன் நடக்கிறது?’ என்பதற்கான ஒரு மேலோட்டமான பதிலாக அமைந்தது இது. ‘மெட்ராஸின் மகிழ்ச்சி, அது நாம் தானே மச்சி; இது கானா நிகழ்ச்சி, இனி செய்வோம் புரட்சிஎனும் வரிகள் உணர்த்திய கருத்துக்கள் ஏராளம்.

இசைக் கலைஞர்கள் அனைவருமே ஆக்ரோஷமான இசை அம்சங்கள் கூடிய ஒரு பாடலுக்கு நடுவே, சற்றே மிருதுவான ஒலியமைப்புடன் கூடிய பாடல்கள் இடம்பெறுமாறு செய்திருந்தனர் என்பது, நான்காவதாக வந்த சென்னை மக்களின் இழிவைச் சொல்லும் பாடல். ‘ஊருக்குச் சொந்தக்காரன் ஊருக்கு வெளிய நின்னான்; பேருக்குச் சென்னைக்காரன் ஏதேதோ சட்டம் சொன்னான்’ எனும் ஒற்றை வரியில் கண்ணகி நகரின் அவலத்தைப் பேசிய ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாடலின் அடிநாதத்திற்குச் சற்றும் சளைக்காததாக இருந்தது இப்பாடல்.நீ வந்து சென்ற ஊரு டா, நான் இங்கயே பொறந்த வேரு டாஎனும் வரிகள்கருத்தவன்லாம்…’ பாடலின் ரௌத்திரத் தொனியாக இருந்தது.

நிகழ்ச்சியில் பாடிய, இசையமைத்த, மேற்பார்வை செய்த அனைவருமே சிறந்த கலைஞர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லையென்றபோதிலும், அறிவு (எ) அறிவரசன் எனும் ராப் பாடகர்/கவிஞரின் பாதிப்பு மட்டும் என் மனத்தில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். குடிமைப் பணித் தேர்வுகளுக்காக அவர் படித்துக் கொண்டிருப்பதாக நிகழ்ச்சியின் இறுதிக்கட்டங்களில் இயக்குநர் பா. ரஞ்சித் அறிவித்தது ஒரு காரணம் என்றே வைத்துக்கொண்டாலும் கூட, அறிவு-வின் பாடல்களின் அழுத்தமும், அவரது குரலின் வேகமும், அவ்வேகத்திலும் பிழையற்ற தமிழ் உச்சரிப்பே பிரதானமான காரணமாயிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

நம்ம நாட்டுல ரெண்டு வகையான கொலை நடக்குது; ஒண்ணு, மீனவக் கொலை; இன்னொண்ணு, ஆணவக்கொலை” என்று சீறிய அவர், “தள்ளுபடி செய்யுறாண்டா பணக்காரன் கடன, வெவசாயியத் தள்ளுறாண்டா கெணத்துல உடனே” எனும் வரியில் ஈர்த்தார்.

ஊருக்கு முன்னால பேசுறடா நீதிய, யாருக்குமே தெரியாம கேக்குறடா சாதிய”, “தலமுற தலமுறையாச் சாதி பாக்குற, நான் படிக்க வந்த அதையும் ஏன்னு கேக்குற” எனும் இட ஒதுக்கீட்டையும், அது சார்ந்த அரசியல் படிநிலைகளையும் பேசிய பாடல் மிக முக்கியமான ஒன்று.

ஜெய் பீம்” ராப் சிலிர்ப்பை ஏற்படுத்தியது எனில், தொடர்ந்து வந்த மீனவக்கொலை தொடர்பான பாடல் மற்றும் மனித மலங்களை மனிதரே அள்ளும் அவலம் பற்றிய பாடல் ஆகியவை நெகிழ்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தின.

ஒவ்வொரு பாடலின் ஒவ்வொரு வரியுமே சமூகத்தின் மீதான கேள்விகளை அடுக்கின, சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தாக்கின என்றாலும், மேலே குறிப்பிட்டவை தவிர்த்து சில வரிகள் மிக முக்கியமானவை:

கருவாடு கருவாடு நீ செத்துப் போனாக் கருவாடு
ஒரவாடு நீயும் ஒரவாடு வாழுற வரைக்கும் ஒரவாடு

ஐந்தறிவு உள்ளவரெல்லாம் மிருக ஜாதிடா
ஆறறிவு மனிதருக்கு ஒரே நீதிடா

வடசென்ன எப்புடி இருக்கும் யாருக்காச்சும் தெரியுமா
உண்மைய எடுத்து சொன்னா ஒருத்தனுக்கும் புரியுமா

உன் பாட்டனெல்லாம் வெச்சாண்டா என் பாட்டனுக்கு வேட்டு
அதனால தாண்டா தரான் இப்போ கோட்டாவுல சீட்டு

நாங்க ப்ளாட்ஃபாரம் எங்க நெலம எப்ப மாறும்?’ எனும் கடைசிப் பாடலின் மெட்டை அசைபோட்டுக்கோண்டே இதைத் தட்டச்சு செய்கிறேன். இவ்வேளையில், தமிழ்வாணி என்ற பெண் இசைக்கலைஞரை உள்ளடக்கிய (அவரே பேசும்போது சொன்னார், “பொதுவாக கானான்னா ஆம்பளைங்களத்தான் பாத்திருப்பீங்க. இப்போ லேடிஸோட உரிமையப் பேசுறதுக்கு, பாடுறதுக்கு நான் இருக்கேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது) சுமார் இருபது பேர் கொண்ட குழுவின் அனைத்து உறுப்பினர்களும் நிகழ்ச்சியின் முழு அவகாசத்திலும் ஒன்றாகவே இருந்தது சொல்லியே ஆக வேண்டிய ஒற்றுமைக்கான குறியீடு.

சுய அறிமுகத்திற்கான நேரத்தில் ஒவ்வொருவரும் தன்னை இசைக்கு அறிமுகப்படுத்தியதாக மற்றொருவரைக் குறிப்பிட்டதும், தாராவியின் குடிசைப் பகுதியிலிருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்களைச் சென்னைக் கலைஞர்களுடன் இணைத்த அம்மேடையும் காலத்தின் குரலாக எப்போதும் நினைவுகூறப்படும்.


இறுதியாகப் பேசிய ஒரு இசைக்கலைஞர் கூறிய “இனிமே லுங்கி கட்டின்னு தான் பாடணும்னு எங்கள யாரும் சொல்லக்கூடாது; நாங்களும் கோட், சூட் போட்டுன்னு பாடுவோம்” எனும் அறிவிப்பும், ரஞ்சித் கூறிய கம்பீரமான “இது அரசியல் மேடைதான். இசை எனும் கலையின் வழியே இங்கே அரசியல்தான் பேசப்பட்டது” எனும் கூற்றும் அடக்குமுறை எதிர்ப்பின் குரலாக ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

2 comments:

  1. பதிவு செம நண்பா ...மகிழ்ச்சி

    ReplyDelete