Monday, January 8, 2018

அதாகப்பட்டது…

என்ன ப்ரோ, நியூ இயர் ரெசொல்யூஷனெல்லாம் எடுத்தாச்சா?” என்று ஆரம்பித்து, “ஆமா, அவன் கிழிச்சான். போன வருஷம் கூடக் கெட்ட வார்த்தையே பேச மாட்டேன்னு ரெசொல்யூஷன் எடுத்தான்; பத்து நாள்ல காத்தோட போச்சு. அவன் கெடக்குறான் கபோதிஎன்பது வரை எனது புத்தாண்டு உறுதிமொழிக்கான வம்புதும்பு செய்திகளுக்குக் குறைவில்லை. சிலர் கொடுத்த காசுக்கு மீறிக் கூவுகின்றவர்களாக, “ப்ரோ, இதை வெச்சு எதாச்சும் எழுதவேண்டியதுதானே?” என்று கிளப்பிவிட்டனர்.

நமக்குத்தான் சும்மாவே கை அரிக்குமே? “சர்தான் களுத, அதையும் எளுதித் தொலையுவோம்என்ற எண்ணத்தில் இக்காவியத்தை இங்கு இனிதே தொடங்குகிறேன்.

முதலில் ஃபிளாஷ்பேக். கொஞ்சம் பெரிய்ய்ய்ய ஃபிளாஷ்பேக். என்னங்க செய்வது? தமிழ்ப்படம் பார்த்துப் பார்த்து வளர்ந்த கோலிவுட்டின் குழந்தை நான் (தாங்கள் எடுக்கும் படங்களையேகுழந்தைகள்எனும் வகைமைக்குள் கொண்டுவரும் இயக்குநர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். அதற்குள் இப்போது மூக்கையோ, நாக்கையோ நுழைக்க வேண்டாம். மூத்திரச் சந்தில் வைத்துக் கும்மினாலும் கும்மிவிடுவார்கள்நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிநடத்தி, நடிகர் சங்கக் கட்டடத்திற்கு நிதி திரட்டும் ஏழைகள். * ஆம்பள ஆம்பள ஆஆஆ ஆம்பள *).

கல்லூரி இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். மூன்றாவது செமஸ்டர். முதல் வருடத்தில் விடுதியறையில் தங்கியிருந்த நால்வரில் மூவர் இரண்டாமாண்டிலும் அறைவாசிகளாயிருந்தோம் (எங்கள் அலப்பறை தாங்காமல் நான்காவது ஆள் தலைதெறிக்க ஓடியதும், புதிதாக வந்த நான்காவது நபர் அறையில் தங்கவேயில்லை என்பதும் தனிக்கதை). வார நாட்களில் முதல் வகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு நிதானமாக எழுந்து பல்துலக்கிக் குளித்து (சில நாட்கள் பல் மட்டும் துலக்கி) ‘மெஸ்சில் டிஃபன் சாப்பிடும் எனதருமை அறைவாசிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் அலாரம் வைத்து விடியற்காலை 8:30 மணியளவில் எழுந்து அவசரமாகப் பல்துலக்கிவிட்டு ஓடுவார்கள். அன்று காலையுணவு தோசை. இருப்பதில் சற்றே உண்ணுமளவிற்கு இருக்கும். ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையல்லவா?

வார நாட்களில் வில்லிலிருந்து புறப்படும் அம்பாக வகுப்பிற்குக் கிளம்பும் நான், வாரக் கடைசியில் வெண்கலச் சொம்பாகச் சோம்பல் முறித்து எழுவதற்குள் மணி பத்தோ, பதினொன்றோ கடந்திருக்கும். இந்த லட்சணத்தில் ஒன்பது மணிக்கு ஒருமுறை, ஒன்பதரைக்கு ஒருமுறை அலாரம் வேறு அடிக்கும். உச்சக்கட்டமாகவெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே, விடியும் பூமி அமைதிக்காக விடியவேஎன்று அதற்குத் தோதாகப் பாடல் வேறு.

அப்படிப்பட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான் அது நிகழ்ந்தது. கட்டிலை விட்டு எழுந்து காலைக் கீழே வைத்தபோது வலதுகால் சற்றே சுரணையற்றிருப்பது போலத் தோன்றியது. உதாசீனப் படுத்தியபடி எழுந்து நடக்க முயன்றபோதுதான் விபரீதம் புரிந்தது. வலதுகால் முற்றிலுமாக உணர்வை இழந்திருந்தது. முருங்கைக்காயைப் போல வளைந்து, நெளிந்தது. நிலையாக நிற்க முடியவில்லை. மேலும் ஓரடி எடுத்து வைத்தபோது கீழே விழுந்துவிட்டேன். விழுதல் என்றால் தடுக்கி விழுந்து, விழுப்புண்கள் பெறும் அளவிற்கான விழுதல் அல்ல; ‘பப்பரப்பாஎன்று தடுமாறி தரையில் ஒருமாதிரி உட்கார்ந்துவிட்டேன். ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. காலைத் தடவிக் கொடுத்தேன். பாதத்தில் உள்ளங்கையை வைத்து வேகமாகத் தேய்த்தேன், சூடு பரவினால் சொரணை வந்துவிடும் என்ற எதிர்பார்ப்போடு. மெல்லக் கையைத் தரையில் ஊன்றி, மீண்டும் எழுந்து நிற்க முற்பட்டபோதுஉடலின் மொத்த எடையும் இடதுகாலினால் தாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறதுஎன்ற உண்மை முகத்தை வெளிறச் செய்தது.

கட்டிலில் சாய்ந்துவிட்டேன்; உலகம் இருட்டிக்கொண்டுவருவதைப் போலிருந்தது. கண்ணை மூட முயற்சி செய்தாலும், அவ்விருளிலும் விதவிதமான ஊதாவிலும், பச்சையிலும் ஏதேதோ உருவங்கள் மூடிய இமைகளுக்கும், விழிகளுக்கும் இடையே நடனமாடின. மீண்டும் எழுந்தமர்ந்தேன். சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தேன். இரண்டு, மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும். தொடையில் ஏதோ ஒட்டுவது போலிருந்தது; சிறுநீர் கழித்திருந்தேன் என்னையறியாமல். இப்போது பயம் பல மடங்காகியது. ‘அதுவும் சொரணையற்றுப் போயிருந்தது.

நண்பர்கள் வருவதற்கு முன்பாகக் கால்சட்டையை மாற்றிவிடலாம் என்ற என் எண்ணத்தில் மண்ணையள்ளிப் போட்டான், அறைவாசி இக்பால். “என்ன மச்சான் நொண்டுற?” என்று எக்களித்துச் சிரித்த அவனுக்கும் என் நிலைமை புரிய வெகுநேரம் ஆகவில்லை. வித்யாசாகரும், இக்பாலும் தம் தோள்மீது என் கையைச் சாய்க்கச் செய்து, என்னை விடுதிப் படிக்கட்டின் வழியே தரைத்தளத்திற்கு அழைத்துச் சென்று, ஆட்டோவில் ஏற்றியது நன்றாக நினைவில் இருக்கிறது. முதலில் கல்லூரிக்கருகில் இருக்கும் ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, ‘தவறான பழக்கத்தால் விளைந்த விளைவாக இருக்கலாம் என்று அவர் சொன்னது நினைவிருக்கிறது. ‘ஆண்மைக்குறைவுஎனும் பிரச்சனை பற்றி அவர் கூறியதை, அவசரமாகக் கடலூரிலிருந்து சென்னைக்கு விரைந்து வந்திருந்த அம்மாவிடம் - அவரை அழைத்து வந்திருந்த தி.நகர் பெரியம்மாவிடமும் - சொல்லாமல் விட்டது நினைவிருக்கிறது.

மிகவும் பிரயத்தனப்பட்டு என்னைக் கடலூருக்கு அழைத்து வந்து வீட்டுப் படுக்கையறையில் அம்மாவும், அப்பாவும் கைத்தாங்கலாகப் படுக்க வைத்தது நினைவிருக்கிறது. அவர்கள் இருக்கும் நேரம், “ம்மா, அதெல்லாம் ஒண்ணுமில்லம்மாஎன்று சமாளித்துச் சிரித்து, அவர்கள் அறையை விட்டு அகன்றதும், ‘ஆண்மைக்குறைவாக இருக்குமோ?’ என்ற கேள்வியால் துளைக்கப்பட்டு குப்புறப் படுத்து அழுதது நினைவிருக்கிறது (அழுகையின் விளைவாய் நான் தலை புதைத்திருந்த தலையணையும், அதன் விளைவாக அதனில் அழுந்தியிருந்த என் முகமும் அனலாகக் கொதித்தது நினைவிருக்கிறது).

பின்னர், கடலூரில் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் ஒருவரிடம் சென்றதும், அவர்உங்கள் உயரத்திற்கும், எடைக்குமான சமநிலை பிசகியிருப்பதால் வந்த கோளாறுதான் இது; இதுக்கும் ஸ்டெரிலிட்டிக்கும் சம்மந்தமே இல்லைஎன்று சொன்னது நினைவிருக்கிறது. எக்கோ, எக்ஸ்-ரே போன்ற பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, ‘சையாட்டிக்நரம்பு - முதுகெலும்புக்கும், கால்களுக்கும் பாலமாகச் செயல்படுகிற நரம்பு - எனது உயரத்திற்கேற்ற எடையில்லாததால் வலுவிழந்து அவ்வப்போது வீங்குகிறது என்ற முடிவை உறுதி செய்தது நினைவிருக்கிறது. அதற்குப் பின்பான ஒருமாத கால ஓய்வு நினைவிருக்கிறது. அப்போது வேறு வழியேயின்றி நான் படித்தஉயிர்மை’, ‘காலச்சுவடு’, ‘உயிர் எழுத்துபோன்ற இதழ்கள் நினைவிருக்கின்றன (இப்போது அவை (உயிர்மை தவிர்த்து) வழக்கமாகப் படிக்கும் இதழ்களாக மாறியிருப்பது நற்செய்தி).

அந்த ஒன்றரைமாத காலம் என் எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் ஏற்படுத்திய மாற்றம் சொற்களால் விவரிக்க முடியாதது. முதுகெலும்பின் நுனியில் இருக்கும் ஒரு சிறிய நரம்பு, என் எடை-உயரச்சமத்துவமின்மையைப் (நாட்டின் பெரிய பிரச்சனை நம் உடலில்தான் தொடங்குகிறது என்பது இதனூடே நான் சொல்ல வரும் உபகருத்து, ஹாஹா) பதினெட்டு ஆண்டுகளாகத் தாங்கியிருந்திருக்கிறது என்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. கூடவே, அவ்வளவு ஆண்டுகாலம் என்னைத் தாங்கிப் பிடித்திருந்த ஒரு நரம்பு ஒரே நாளில் வேலையைக் காட்டிவிட்டது என்பது இன்னும் யோசிக்க வைத்தது. ‘என்ன வாழ்க்க டா இது?’ என்பதான சிந்தனை அது.

அப்போது எடுத்த முடிவு கல்லூரி இறுதியாண்டு வரை என்னைச் சுறுசுறுப்பாகவே வைத்திருந்தது; இப்போதும் வைத்திருக்கிறது. “எதாச்சும் செய்யணும்ணேஎன்ற நினைப்பே அது. பல்வேறு பொறுப்புகளை இழுத்துப்போட்டு வேலை செய்திருக்கிறேன். நண்பர்களுக்கு உதவ வேண்டும், முடிந்த வரையில் ஏதேனும் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றியபடி இருந்தது. ஏனெனில் என் முதுகுப் பிரச்சனையின்போதும், அதிலிருந்து மெதுமெதுவே மீண்டு வந்த பின்பும் உதவி செய்த நிறைய நண்பர்கள் எந்த எதிர்பார்ப்புமின்றிச் செய்தனர் என்பதே உண்மை.

சீக்கிரம் எதாச்சும் பெருசா செஞ்சுடணும். அடுத்த தடவ எப்போ கால் சைடு வாங்கும்னு தெரியல. இப்போ நல்லாத்தானே இருக்கோம்? புதுசா எதாச்சும் பண்ணுவோம், தெரிஞ்சிப்போம், முயற்சி பண்ணுவோம்என்ற எண்ணம் ஒவ்வொரு நாளையும் உயிர்ப்பாக மாற்றுகிறது. ஏனென்றால் மரபணு ரீதியாகவே சிலர் ஒல்லியாய் இருப்பதும், சிலர் அளவிற்கு மீறிய எடையுடன் இருப்பதும் மாற்றவியலாத விஷயங்கள். நம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதைத் தானே தலைவா மாற்ற முடியும்?

எனவேஆகஅதாகப்பட்டதுநான் சொல்வது என்னவென்றால்ஓரிரு வருடங்களோ, ஐந்து வருடங்களோ ஏதேனும் உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. குடும்பம், குட்டி, வேலை, வாழ்க்கை என்று வருவதற்கு முன்பாக மட்டுமாவது, நாற்பது வருடங்களுக்குப் பின் நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்குமளவிற்கான சிற்சில மனிதக் கடமைகளை (உதவிகள் என்று சொல்லி ஏதோ நாம் ஞானியாக வேண்டியதில்லை; மனிதராகப் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் மற்றவரிடம் கையேந்திதான் நிற்கிறோம்) ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது.


காசு பணம் துட்டு மணி மணிஎன்ற அழுத்தம் பிற்காலத்தில் வரும்போது, கல்லூரி நினைவுகள் முழுமையாகக் கலைந்திராத இப்பருவத்தில் சொல்லிக்கொள்ளும்படியான செயல்கள் எதையுமே செய்யவில்லையே என்று தோன்றிவிடக் கூடாது என்ற பயம் இருக்கிறது. இவைகள்தாம் நான் பெற்ற கல்வி (‘கற்ற கல்விஎன்று சொல்லிக்கொளுமளவிற்கு இன்னும் வளரவில்லை) - என் பள்ளிகளும், என் கல்லூரியும் - எனக்கு அளித்த பெருங்கொடை என்று கருதுகிறேன்; இச்சிந்தனை. பெற்றோர், நண்பர்கள், உற்றார், உறவினர் புரிந்துகொள்வார்களா என்று தெரியவில்லை. ஆனால், இதாங்க என்னோடநியூ இயர் ரெசொல்யூஷன்’.

No comments:

Post a Comment