Monday, January 8, 2018

கனவு மெய்ப்படும் - சத்தியமாக

கல்வி குறித்தும், நம் பள்ளிகளில் பரவலாகியிருக்கும்பயிற்றுவிக்கும் முறை - கற்கும் முறைகுறித்தும் பேசும்போதெல்லாம்குழந்தைகள் கற்கும் வழிமுறையை மாற்ற வேண்டும்”, “பெற்றோரிடம் தம் குழந்தைகளுக்கான கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்என்ற இரு முதன்மையானவேண்டும்களைத் தாண்டி, “ஆசிரியர்களுக்குக் கற்பிப்பதற்கான சரியான வழிமுறைகளைக் கற்பிக்க வேண்டும்என்பதும் மிக முக்கியமானது.

ஆனால், குழந்தைகளையும், வழிமுறையையும், பெற்றோர்களையும் பற்றிப் பேசும் நாம், ஆசிரியர்களைப் பற்றிய ஒரு கீழ்மையான கண்ணோட்டத்தையே கொண்டிருக்கிறோம். “அவங்க எங்க சார் நடத்தப் போறாங்க?”, “அவங்களையெல்லாம் திருத்தவே முடியாதுஎன்ற ரீதியில் நாம் பேசுவதற்கான காரணிகள் பலவாக இருந்தாலும், ‘வேண்டும்களிலும், ‘முடியும்களிலும் ஆசிரியர்களை நாம் சேர்ப்பதே இல்லை என்பதே நிதர்சனம்.

= குறியீட்டிற்கு இடப்புறம் குழந்தைகள், பெற்றோர்கள் போன்றவர்களை வைக்கும் நாம், வலப்புறம் ஆசிரியர்களை வைத்தால்தானே சமன்பாடு முற்றுப்பெறும்? இக்கண்ணோட்டத்தில், ‘ஆசெஃபா ஃபௌண்டேஷன்எனப்படும் வினோபா பாவேயால் தொடங்கப்பட்ட அமைப்பு நடத்தும் கடலூர் கண்ணாரப்பேட்டையில் இயங்கி வரும்சர்வ சேவ பள்ளியில், ‘டீச் ஃபார் இந்தியாஎனும் அமைப்பு நடத்திய மூன்று நாள் நிகழ்வே (திசம்பர் 28, 29, 30) ‘கனவு கேம்ப்’.

சுமார் 54 ஆசிரியர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளையும் ஒன்று திரட்டி நடத்தப்பட்ட இந்நிகழ்வு, ‘கிண்டர் கார்டென்என்று சொல்லப்படும் பிஞ்சுப் பருவக் குழந்தைகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரையிலான பருவம் வரையிலான அனைவருக்குமான கல்வி எவ்வாறு கற்பிக்கப் படவேண்டும் என்பதான ஒற்றைப் புள்ளியில் சங்கமித்தது. மிகுந்த ஆச்சரியத்தை உண்டு செய்த விஷயம், கலந்துகொண்ட 54 ஆசிரியர்களும், அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளைப் போலவே வசதி, வாய்ப்புகளின்றித் தவிக்கும் மக்கள்தாம் எனும் உண்மைதான். ஆனால், அவர்கள் அனைவரும் - ஒருவர் விடாமல் - மூன்று முழு நாத்களும் குழந்தைகளாகவே மாறிக் கற்றனர் என்பது புதியதொரு சிந்தனைத் திறப்பாக இருந்தது.

ஒருகார்ப்பொரேட்நிறுவனத்தில் சொல்லிக்கொடுக்கப்படும் மேலாண்மை, கூட்டுமுயற்சி போன்ற அனைத்தும் அங்கேடீச் ஃபார் இந்தியாவைச் சேர்ந்தவர்களிடம் அனாயசமாக வெளிப்பட்டது. அதை அவர்கள் கற்க வந்திருந்த ஆசிரியர்களிடமும் கடத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.

நான் பார்த்து வியந்து, சிந்தித்த இரு முக்கியமான அம்சங்கள் ஜாலி ஃபானிக்ஸ் என்று சொல்லக்கூடிய எழுத்துக்களின் ஒலிவடிவங்களின் மூலமாக மொழியைக் கற்பிக்கும் வழிமுறை, மற்றும் லேர்னிங் சர்கிள் என்று அழைக்கப்பட்ட அமர்வு (ஆசிரியர்களைக் குழுக்களாகப் பிரித்துச் சிறிய விளையாட்டுகளின் மூலம் அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களைப் புரிய வைக்கும் வழிமுறை).

“குழந்தை முதலில் சொல்வது ‘அம்மா’ எனும் சொல்லைத்தான், ‘அ’ எனும் எழுத்தை அல்ல; எனவே, ‘அஆஇஈ’யோ, ‘ஏபிசிடி’யோ ஒரு குழந்தைக்கு ஐந்து வயதில் சரியாக எழுத வரவில்லையென்றால் தவறு அவர்களிடம் இல்லை, நம்மிடம் இருக்கிறது; நாம் கற்பிக்கும் தலைகீழான முறையில் இருக்கிறது” என்று தொடங்கிய ‘ஜாலி ஃபானிக்ஸ்’ நேரம் மொழியை எவ்வாறு கற்பிக்க வேண்டும்/கற்க வேண்டும் என்பதற்கான ஒரு கட்டுமானம். ‘பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்டு வீக்கு’ என்ற குறையே ஏற்படாதவாறு மொழிக்கல்வியை முழுமையாக்கும் இம்முறை அனைத்து ‘பேஸ்மெண்டு’களுக்கும் தேவை என்றே தோன்றியது.

“’ஏபிசிடி’ என்ற வரிசையே குழந்தை கற்பதற்கான முறையல்ல; ‘எஸ், ஏ, டி, ஐ, பி, என்’ என்ற ஆறு எழுத்துக்களைத்தாம் பாலர்கள் முதலில் கற்க வேண்டும். ஏனெனில் இந்த ஆறு எழுத்துக்களின் பல்வேறு கலவைகளில்தான் அதிகபட்சமான இரண்டெழுத்து ஆங்கிலச் சொற்கள் உருவாகின்றன. ஓரெழுத்துச் சொற்களிலும், ஈரெழுத்துச் சொற்களிலும்தான் ஒரு குழந்தைக்கான மொழிக்கல்வி தொடங்க வேண்டும்” என்ற கூற்று, நாம் எத்தகைய தவறான முறையில் ஊறியிருக்கிறோம் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது.

“த ஸ்னேக் இஸ் இன் த க்ராஸ், த ஸ்னேக் இஸ் இன் த க்ராஸ், ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் த ஸ்னேக் இஸ் இன் த க்ராஸ்” என்று ஒரு பாம்பு புற்களுக்கிடையே மறைந்திருக்கிறது எனும் எளிமையான வரியைக் கொண்ட பாடலின் மூலம், ‘ஸ்ஸ்ஸ்’ என்ற ‘எஸ்’ எழுத்திற்கான ஓசை வெளிக்கொணரப்பட்டது புதுமையான முறையாக இருந்தது.

கதை -> ஓசை -> பாடல் -> காற்றில் எழுதுதல் -> தரையில் (அல்லது உள்ளங்கையில் எழுதுதல்) -> அவ்வெழுத்தின் ஓசையை வெளிப்படுத்தும் பிற வார்த்தைகள்

இவ்வரிசைப்படிதான் ஒரு குழந்தைக்கு எழுத்துக்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று நம்மில் எத்தனை பெற்றோருக்கும் (ஏன் நமக்கும் கூட), ஆசிரியர்களுக்கும் தெரியும்? குழந்தை மனம் கதை கேட்க இயல்பாகவே ஆர்வமடையும் என்பதனால் கதையில் தொடங்கி, அக்கதையின் ஓரங்கமாக அவ்வெழுத்தின் ஓசையை உள்ளடக்கி, அதனைப் பாடலின் மூலமாக மீட்டுருவாக்கம் செய்து, பின்னர் எழுத்தின் வடிவத்தை காற்றில் வரைந்து (அல்லது, உள்ளங்கையிலோ, தரையிலோ வரைந்து), இறுதியாக அவ்வெழுத்து தொடர்பான மற்ற வார்த்தைகளைக் (சிறுசிறு சொற்கள்) அறிமுகப்படுத்த வேண்டும் எனும் ஒரு வடிவமே சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

இன்னொரு பக்கம் வரலாறு மற்றும் சமூகவியல் பாடங்களில் வரும் ‘பஞ்சாயத்து அமைப்பு முறை’யை விளக்குவதற்கு, வகுப்பறையிலேயே ஒரு மாதிரித் தேர்தலை நடத்துவது மாணவர்களுக்கு பாடத்தின் கருவை எளிதாகக் கொண்டு சேர்க்கும் என்பதும், அவர்கள் பார்க்கும், கேட்கும், அறியும் விஷயங்களினூடே பாடங்களை விளக்குவதுதான் சிறந்த முறை என்பதும் ‘நெற்றிக்கண்’ திறந்த நிஜங்கள்.

‘மார்ஷ்மாலோ சேலஞ்ச்’ எனும் விளையாட்டின் (வேலைக்குச் சேர்ந்த பிதிதில் ‘டிரெய்னிங்’ காலத்தின் போது எங்களையும் இவ்விளையாட்டு விளையாடச் சொன்னதும், நாங்கள் ‘ஈகோ’ வினால் சொதப்பியதும் நினைவுக்கு வந்தது) மூலமாகக் குழு மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற விழுமியங்களை விளக்கிய ஏற்பாட்டாளர்கள், குழு என்றால் பெற்றோர்கள், குழந்தைகள், ஆசிரியர்கள் அடங்கிய ஒரு குழாம் என்றும், சிற்சில போதாமைகளை நாம் ஏற்று அதன்வழி புதிதாகக் கற்பிப்பதற்கான வழிமுறைகளை கண்டறியலாம் என்றும் கூறியபோது, கற்பித்தலைக் கற்க வந்திருந்த அனைத்து ஆசிரியர்களின் கண்களிலும் விவரிக்க முடியாத பிரகாசம். “என் குழந்தைகளுக்கு, என் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு நான் சொல்லித்தர இவ்வளவு இருக்கிறது; இதை நான் செவ்வனே செய்வேன்” எனும் ஒரு ஆர்வம் தென்பட்டது.

கடலூர்க்காரன் என்ற முறையில் 2015-ல் செய்த மழைப்பாதிப்பு உதவிப்பணிகளை விட, இம்மூன்று நாட்கள் அங்கிருந்து செய்த, கற்ற பல்வேறு விஷயங்கள் மனத்திற்கு நிறைவைத் தருவதாக அமைந்தன. “நீங்க இந்தூரேவா தம்பி? எந்த ஏரியா? எங்க ஸ்கூல் படிச்சீங்க?” என்று வந்திருந்த ஆசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் மற்ற ஏற்பாட்டாளர்கள் பார்க்கிறார்களா என்ற ‘மைனர்’ பெருமை வேறு சொல்லி மாளவில்லை.


மூன்று நாட்களின் முடிவில், ஆசிரியர்கள் அனைவரும் ஏகோபித்த குரலில், “அப்பப்போ இந்த மாதிரி வந்து எங்களுக்குச் சொல்லிக்குடுத்துட்டுப் போங்க” என்று சொன்னது, தவறு நம் மனத்தில் தான், ஆசிரியர்களிடத்தில் இல்லை என்பதைப் பொடனியில் அடித்து உருவேற்றியது. ‘கனவு கேம்ப்’ இரண்டு உண்மைகளைத் தெளிவாக உணர்த்தியது: 1) கனவு மெய்ப்படும் - நிச்சயமாக, சத்தியமாக. கல்லியிலிருந்தே அது தொடங்க முடியும்/வேண்டும். 2) வாய்ப்பு கிடைத்தால் யாரும் கனவை நனவாக்க முடியும்.

No comments:

Post a Comment