Sunday, March 25, 2018

மணி சார் சொம்புகளும், ‘செக்கச் சிவந்த வேலை’யும்

ஒரு கதையின் முடிவானது வாசகனின் சிந்தனைக்கான திறப்பை உருவாக்க வேண்டும் என்பது பரவலான கருத்தாக்கம். ஆண்டன் செக்காவின்வான்காவில் தொடங்கி, சுஜாதாவின்வானத்தில் ஒரு மௌனத் தாரகைவரைஓப்பன்-எண்டட்சிறுகதைகளுக்கான உதாரணங்களாகக் கூற முடியும். ஒரு குறிப்பிட்ட நிகழ்வு சார்ந்த முற்றுப்பெறாத கண்ணிகளாக இவை வாசகர்களைஅதன் பிறகு என்னவாயிருக்கும்?” என்று சிந்திக்கத் தூண்டுபவை.

சில நேரங்களில் எழுத்தாளர்களே மனத்தில் நினைக்காத சில தேற்றங்கள் வாசகர்களின் சிந்தனை அலைகளால் தோற்றம் பெரும். இன்றைய இணைய உலகில்ஃபேன் தியரிஎன்று சொல்லப்படும் வகையறாக்கள் இவை. ‘ஃபேன் தியரிக்கள் ஒரு இங்கிதத்துடன் இருப்பதுதான் பொதுவான இயல்பு, அல்லது நகைப்புக்குரியதாக இருக்கும். ஆனால், நம் தமிழ்த்திரையுலகின் முக்கியமான இயக்குனராகப் போற்றப்படும் மணிரத்னம் () மணி சாரின் திரைப்படங்கள் குறித்தான அவரது தொண்டர்கள்/பக்தாள்களின் கருத்தாக்கங்கள்அதுக்கும் மேலரகம். தெரியாத்தனமாக கேமராவை ஒரு இடத்தில் வைத்துப் படம்பிடிக்கப்படும் ஒரு காட்சி கூடஅது மணி சாரால தான் அப்டி யோசிக்க முடியும். ஹீ ஹேஸ் ட்ரைட் டூ கேப்ச்யூர்…” என்று புகழப்படுகிற இடத்தில் அவர் வைக்கப்படுள்ளதால் தான், ‘காற்று வெளியிடைபோன்ற குப்பைகளை எடுத்துவிட்டு அவரால் இன்றும் திரையுலகில் வண்டி ஓட்ட முடிகிறது (மணிரத்னம் ஒரு நல்ல இயக்குன்ரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் அவர்தான் தலைசிறந்தவர் என்று சொல்வதை விட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது).

இப்படி மணி சாரைப் புகழ்ந்து, போற்றி, வணங்கி, வழிபட்டு, ஆராதித்து, பூஜித்து, தெய்வமாக மதிக்கும் ஒரு விசிறிக்கு மூளையில் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. மணி சாரின் காவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப் புளகாங்கிதம் அடைந்த அவர், ‘வேலைக்காரன்திரைப்படத்தைப் பார்க்கச் செல்கிறார். அவரது அனுபவங்களும், அனாலிஸிஸுமே இனிவரும் பத்திகள்.

——

படம் பாக்கப் போனேன்டா அம்பி. ஒரே கூச்சலும், விசிலும், சத்தமுமாத் தியேட்டர்ல உக்கார முடியலை. டீசன்ஸி தெரியாத ஆடியன்ஸா இருக்கா அவா எல்லாரும். ஆனா நல்ல வேளை நம்ம பரத்வாஜ் ரங்கன் இருந்தார். அவர்கூட உக்காந்து படத்தைப் பாத்துட்டேன்.

(1) ‘நாயகன்’கள்: என்னத்துக்கு இப்போ சிவகார்த்திகேயனும், ஃபஹத் ஃபாசிலும் நடிக்கணும்? இருக்கவே இருக்கா நம்ம மாதவனும், அரவிந்த சாமியும். ஒண்ணும் சொல்றதுக்கில்லை. என்னத்தையோ கண்றாவியா எடுத்து வெச்சுருக்கான் இந்த மோகன் ராஜா.

(2) தலைப்பு: எதுக்கு இப்டி ‘வேலைக்காரன்’னு லோக்கலாப் பேரு வெச்சுருக்கான்னே தெரியலை. படம்தான் கம்யூனிஸம் பேசறதோல்லியோ? அழகாக் கவித்துவமாசெக்கச் சிவந்த வேலைன்னு வெச்சுருக்கலாம். செவப்பு தானே எப்புடியும் அவாளோட கலர்! ஹ்ம்அதெல்லாம் இந்த மோகன் ராஜா சண்டாளனுக்கு எங்க தெரியப் போறது?

(3) வசனங்கள்: நீளம், நீளமாப் பேசிண்டே இருக்கா, “உலகத்தின் மிகச் சிறந்த சொல், ‘செயல்’”ன்னு. “சிறந்தது செயல்”ன்னு சின்னதா முடிச்சிருக்கலாம். டையலாக்கே எழுதத் தெரியலை இவாளுக்கு. சுஹாசினி மேடம் பெருசு பெருசா எழுதினாலும் எப்டி ஒரு லிட்டெரரி வேல்யூ இருக்கும்! இங்க அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எதோ எழுதி வெச்சுருக்கான்.

(4) பாடல்கள்: எதுக்கு மூணரை நிமிஷத்துக்குப் பாட்டு ஓடறது? அதுவும் அந்த மாதிரி மூணு பாட்டு வெச்சுருக்கான். ஒரே பாட்டை மட்டும் வெச்சு அதையே பிச்சுப் பிச்சுப் படம் முழுக்க அங்கங்க இன்க்லூட் பண்ணிருக்கலாம். அதுக்கெல்லாம் உலக சினிமா அறிவு வேணும், ஒரு ரசனை வேணும். எல்லாரும் மணி சார் ஆயிட முடியுமா? பாட்டுக்கு நடுவுல பேசிண்டே இருக்கணும். அப்போதான் இயல், இசை, நாடகம்ன்னு எல்லாத்தையும் ஸ்க்ரீன்ல ஒரே நேரத்துல காமிக்க முடியும். அந்த ஸ்ட்ராட்டெஜி எல்லாம் இந்த லோக்கல் பய மோகன் ராஜாவுக்கு எங்க தெரியும்?

(5) லொக்கேஷன்: படத்துல ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாட்டுல மட்டும்தான் ரயில்வே ஸ்டேஷனே வருது. இவா படம் எடுத்துருக்கற கம்யூனிட்டியச் சுத்தி எத்தனை ரயில்வே ஸ்டேஷன் இருக்கு? வாஷர்மேன்பேட், சென்ட்ரல் அதெல்லாம். அங்க போயிட்டு ஒரு மூணு சீன் எடுத்துருக்கலாம். தட் வுட் ஹேவ் ஆடட் மோர் வேல்யூ டு த மூவி வாட்சிங் எக்ஸ்பீரியன்ஸ். பிகாஸ், ரயில்வே ஸ்டேஷன்ல எல்லாம் போர்ட்டர்ஸ் இருப்பாளோன்னோ? அவா எல்லாரும் செவப்பு ட்ரெஸ் தான் போட்டுண்டிருப்பா. அப்டியே கேமராவ அங்க ஃபோக்கஸ் பண்ணி கம்யூனிஸம்ங்கற ஐடியாலஜியக் கன்வே பண்ணிருக்கலாம். ரயில்வே ஸ்டேஷன் இல்லாத படம் எப்டி ஒரு க்வாலிட்டியக் குடுக்க முடியும்? இம்பாசிபிள்!

(6) தியரி: மோகன் ராஜா மணி சாரோட டெக்னிக்ஸ் எல்லாம் நெறைய அப்ஸார்ப் பண்ணிருக்கார். அதுனாலதான் இந்தப் படம் ஓரளவுக்குப் பாக்கற மாதிரி இருக்கு.  அஃப் கோர்ஸ், மணி சாரோட இன்ஸ்பிரேஷன் இல்லாம உலக சினிமால யாருமே படம் எடுக்க முடியாது. நாம இதெல்லாம் சொன்னா ஒத்துக்க மாட்டா. சோ, நான் என்னோட தியரியச் சொல்லிடறேன்.

படத்தோட ஸ்டார்ட்ல சிவகார்த்திகேயன் ஒரு ரேடியோ சேனல் ஆரம்பிக்கறார். அது மாடில இருக்குற ஒரு ரூம்ல செட்டப் எல்லாம் பண்ணி வெச்சுட்றார். ஆனா, ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாட்டுக்கு டேன்ஸ் ஆட்றதுக்குக் கீழ வர்றார். சோ, மேல இருந்து கீழ எறங்குற ஒரு ‘சைனுசாயிடல் கேர்வ்’ ஆரம்பிக்கறது இங்கதான். இது ஒரு மெட்டஃபர். அதாவது லோக்கல் ஆடியன்ஸ்க்குப் புரியுற மாதிரி சொல்லணும்னா ‘குறியீடு’.

அந்தப் பாட்டுல ‘தக்காளி’ன்னு ஒரு வார்த்தை வருது. அது ஒரு மைண்ட்ப்ளோயிங் தாட் ப்ராஸஸ். என்னன்னு நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், தக்காளி என்ன கலர்ல இருக்கு? செவப்பு. அதாவது, தக்காளி இஸ் ய சிம்பல் ஆஃப் கம்யூனிஸம். அதே போல, தக்காளியோட வெலை எப்புடி இருக்கு? ஏறி, எறங்கிண்டே இருக்கோல்லியோ? அந்த மாதிரி இந்த வேலைக்காராளோட வாழ்க்கை ஒரு ஸ்டெபிலிட்டி இல்லாம இருக்குன்னு சொல்ல வரா. இதுவும் அந்த ‘சைனுசாயிடல் கேர்வ்’ ரெஃபெரன்ஸ் தான்.

இதோட கண்டின்யுவேஷன் அடுத்த எல்லாப் பாட்டுலயும் தெரியறது. ‘இறைவா’ சாங்ல நயன்தாராவோட காஸ்ட்யூம் கலர யாராவது நோட் பண்ணேளா? செவப்பு. அகெய்ன் ய கம்யூனிஸம் ரெஃபெரன்ஸ். அதுல பாத்தேள்னா ‘எரிமலையிலும் நீராடலாம்’ன்னு ஒரு லைன் வருது. இதுவும் ஒரு மெட்டஃபர். எரிமலை காவிக்கலர்ல இருக்கும்; நீர் நீலக்கலர்ல இருக்கும். அதாவது, ஹிந்துத்துவாவையும், ஸப்ரெஸ்ட் பீப்புளையும் கன்வேர்ஜ் பண்ற பாயிண்ட் அதுதான். இதுவும் ஒரு கம்யூனிஸ்ட் தாட் ப்ராஸஸ்ன்னு வெச்சுக்கோங்கோளேன்.

‘எழு வேலைக்காரா’ பாட்டுல கூட பாத்தேள்னா, கம்யூனிஸ்ட் கொடியெல்லாம் வெச்சுண்டு ஆடிண்டிருக்கா எல்லாரும். சோ, படத்தோட நேரேஷன் ஒரு ஸீம்லெஸ்ஸாப் போறது. இப்போ இந்தப் பாட்டுல சில பெக்யூளியாரிட்டிஸ் எல்லாம் நாம பாக்க வேண்டியிருக்கு. “ஓயாதே, தேயாதே, சாயாதே”, “ஆறாதே, சோராதே, வீழாதே”ன்னு ரெண்டு லைன் வருதோன்னோ அந்தப் பாட்டுல? அதுல கேர்ஃபுல்லாக் கவனிச்சேள்ன்னா “சாயாதே” அண்ட் “வீழாதே” ரெண்டு வார்த்தைலயும் கரெஸ்பாண்டிங்கா இருக்குற ஸ்வரங்கள் வந்து அஸெண்டிங்கா இருக்கும். அதுல என்ன சொல்ல வரான்னா, லேபரர்ஸோட ஒரு ரெவல்யூஷனை, ஒரு அப்ரைஸ் அகெய்ன்ஸ்ட் த கேப்பிடலிஸ்ட்ஸை எக்ஸ்ப்ளெய்ன் பண்றா.

இது எல்லாத்தையும் வெச்சுப் பாக்கும்போது மணி சார் அளவுக்கு யாராலயும் படம் எடுக்க முடியாதுங்கறது மறுபடியும் ப்ரூவ் ஆயிருக்கு. இருந்தாலும், நம்ம மணி சாரோட இன்ஸ்பிரேஷன்ல படம் எடுத்த மோகன் ராஜா இன்னும் கொஞ்சம் ‘கடல்’, ‘காற்று வெளியிடை’ எல்லாம் ரிப்பீட்டடாப் பாத்தார்னா ஒரு க்ளியரான விஷனோட அவரால படம் பண்ண முடியும்னு தோண்றது.


——

Wednesday, March 21, 2018

பாலை மட்டும் கொடுத்தாப் போதும், காமதேனு!

கௌதம் வாசுதேவ் மேனன்டூயல் ஜானர்திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று நடிகர் செம்மல் தொப்பை சிலம்பரசனை நடிக்க வைத்துஅச்சம் என்பது மடமையடாஎன்றொரு காவியத்தைப் படைத்தார். ‘எங்கப்பா டீ.ஆரு, நான் அடிப்பேன்டா பீருஎன்று படப்பிடிப்புக்கு வராமல்பெப்பேகாட்டிய சிம்புவை முன்பின்னாக எப்படியோ படம்பிடித்துப் படத்தை ஒப்பேற்றி விட்டார்கள். ஆனால் பிரச்சனை அதுவல்ல; ‘டூயல் ஜானர்படமாக வந்திருக்க வேண்டியது, ‘இடைவேளைக்கு முன், இடைவேளைக்குப் பின்என்று இரண்டு வெவ்வேறு திரைப்படங்களையே பார்ப்பது போன்ற குழப்பத்தை ஏற்படுத்தியதுதான்.

இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தை விளக்குகிறேன். சமீபத்தில்தமிழ் இந்துகுழுமம், ‘காமதேனுஎன்ற வார இதழ் ஒன்றைத் தொடங்கியுள்ளது. ஒன்றரை இதழ்களைப் படித்து முடித்துவிட்ட நிலையில், இந்தமள்டிப்பிள் ஜானர்பிரச்சனை அப்பட்டமாகத் தெரிகிறது. பாலை மட்டுமே கொடுக்க வேண்டியகாமதேனுவிடம் சாராயம், தண்ணீர், ரசாயனம் என அனைத்தையும் கறக்க முயன்று தோற்றிருக்கின்றனர். இதிலிருக்கும் குழப்பங்களைப் பலவகையாகப் பிரிக்கலாம்.

(1) நாளிதழ் - வார இதழ்:

முதலில் ஒரு வார இதழோ, மாத சஞ்சிகையோ நாளிதழைப் போல் அனைத்து வகையான செய்திகளையும் தொகுக்கத் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. ‘காமதேனுவின் முதல் சறுக்கல் அங்குதான் தொடங்குகிறது. விளையாட்டு, திரைப்படங்கள், சமூகம், ஆக்ரோஷமான பதிவுகள், அரசியல், வரலாறு, புவியியல், பூகோளம், அறிவியல், தமிழ் (முதல் மற்றும் இரண்டாம் தாள்), ஆங்கிலம் (முதல் மற்றும் இரண்டாம் தாள்) என்று ஏதோ பொதுத்தேர்வின் மாதிரி வினாத்தாள் போல அனைத்தையும் குழப்பியடித்து ஏதோ முயற்சி செய்திருக்கிறார்கள். சற்றே விசனத்துடன், “கேவலமா இருக்கு; தயவு செஞ்சு இப்டிக் கூமுட்டத்தனமாப் பண்ணாதீங்கஎன்றுதான் மன்றாட வேண்டியிருக்கிறது.

(2) தெளிவின்மை:

ஆனந்த விகடனில் இலக்கியத்திற்கான பெரிய பரப்பு இல்லையென்று ஆசிரியர் குழுவிற்குப் புரிந்த பின்னர், சற்றே மெனக்கெட்டுதடம்என்ற இதழை வெளியிடுகிறார்கள். வெகுசன இலக்கிய வெளியில்தடம்ஒரு முக்கியமான பத்திரிக்கை. ‘ஆனந்த விகடனின் பரந்த வாசகர் வட்டமும், இலக்கிய ஆர்வமுள்ளவர்களும் படிப்பதற்கான ஒரு பொதுப்புள்ளியாக இருக்கிறதுதடம்’. திராவிட இலக்கியம், தமிழ் இடதுசாரிப் படைப்புகள் குறித்த சில தொடக்க நிலை புரிதலுக்காகவேனும் கண்டிப்பாக அது உதவுகிறது (என்ன ஆச்சரியமென்றால், “இலக்கியம் புனிதமானது; திராவிட இலக்கியம் குப்பைஎன்று உளறிக்கொண்டிருக்கும் ஜெயமோகன் மாதிரியான ஆட்களும் எழுதுகிறார்கள். எங்கே போயிற்றோ இலக்கியப் பாசமும், நேசமும்? ஆனால் அந்த அதிமேதாவி  தடத்தில் எழுதும் விஷயங்களில் தற்பெருமைதான் முக்கால்வாசி நிறைந்திருக்கிறது என்பது முக்கியமானது). இதைத்தான் செய்யப்போகிறோம் என்பதில் தெளிவான ஒரு வரையறைகளை வைத்துக்கொண்டு அவர்கள் செயல்படுவதுதான்தடத்தின் வெற்றிக்குக் காரணம்.

ஆனால், ‘காமதேனுவை எப்படிக் கொண்டுசேர்ப்பது எனும் ஆசிரியர் குழுவின் தெளிவின்மை, தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. ‘ரூல்ஸ் ராமானுஜம்அம்பியைப் போல் சமூக விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கும்போது, “அய்யய்யோ, ரொம்ப நேரமா கருத்து சொல்லிட்டோமோ!” என்று சுதாரித்து, உடனேரெமோவாக மாறி, கிசுகிசு பக்கங்கள் வருகின்றன.

(3) வரிசையின்மை:

‘தினத்தந்தி’யைப் போல் கண்ட இடத்தில் கண்ட செய்தியைப் பதிவிடும் நாளிதழை நான் இதுவரை கண்டதில்லை. வார இதழ்களில் ‘காமதேனு’விற்கு நிச்சயம் அந்த இடத்தைக் கொடுக்கலாம். ஒரு வரைமுறையேயின்றி, திடீரென்று ஒரு விளையாட்டுச் செய்தி, அடுத்தது அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஏதோ ஒரு பெட்டிச் செய்தி என்று ‘ஏனோதானோ’ செய்திருக்கிறார்கள். 25 ரூபாய் கொடுத்து வாங்கும் இளிச்சவாயன்கள் எல்லாம் ‘இந்து’ என்ற ஒரே பெயருக்காக மட்டுமே வாங்குகிறோம் என்பதை ஆசிரியர் குழு விரைவில் உணர்தல் நலம். “உன் பேருக்குப் பின்னாடி இருக்குர சுப்பிரமணியம்ன்ற பேர எடுத்துட்டா உனக்கு அடையாளமே கெடையாது” என்ற வி.ஐ.பி. திரைப்பட வசனம் போல, இவர்களும் குழுமத்தின் பெயரைக் கூவி விற்றுக் காசாக்க முடியாது என்பதைக் கூடிய சீக்கிரம் அறிய வேண்டும்.

(4) வாசகர்களைக் குறைத்து மதிப்பிடல்:

‘காலச்சுவடு’, ‘உயிர் எழுத்து’, ‘உயிர்மை’ போன்ற  இதழ்கள் குறுகிய வாசகர் வட்டம் உடையவை. ஆண்டுச் சந்தா, ஆயுள் சந்தா கட்டும் உறுப்பினர்களை நம்பியே நடத்தப்படும் இதழ்கள் இவை. ஆழமான இலக்கிய உரையாடல்களும், படைப்புகளும் நிறைந்து வழியும் அவற்றை லேசாக மாற்றியமைத்தால் கூட அவர்களது வியாபாரம் கணிசமாகப் பெருகும். ஆனால், இலக்கியத்தையும், இதழியலையும் வெறும் வியாபாரமாக மட்டுமே பார்க்காமல் இயங்கும் ஆசிரியர் குழுக்கள் மேற்கூறிய அனைத்து இதழ்களிலும் உண்டு (மனுஷ்யபுத்திரன் குறித்து கருத்து கூற விரும்பவில்லை).

தரமான படைப்புகளை வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டுமென்ற நோக்கில், நீண்ட நெடிய 16 பக்க, 24 பக்க நேர்காணல்களையும், கதைகளையும் அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். ‘அட்டேன்ஷன் ஸ்பேன்’ என்று சொல்லப்படும் விஷயம் இணைய உலகில் குறைந்துகொண்டே வந்தாலும் கூட, தரத்தில் எவ்விதக் குறைபாடும் இல்லாமல் இயங்கிவரும் இதழ்களுக்கு மத்தியில், எந்தக் கட்டுரை/கதை/இன்ன பிற இதர விஷயங்களையுமே இரண்டு, மூன்று பக்கங்களுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வது கயமைத்தனம்.

இந்த மூன்று பக்க நெரிசலின் விளைவு, வாசகனுக்கு அவசரகோலத்தில் ‘எடிட்’ செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவமே கிடைக்கிறது. ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெஸ்ஸர்ட் என்று ‘பார்பெக்யூ புஃபே’ சாப்பிடும்போது ‘ஆர்கஸம்’ போன்ற ஒரு பரவச நிலை கிட்டினாலும், அந்த நாள் முழுவதும் மயக்கமாக, வயிற்று வலியுடன் அவஸ்தைப்படுவதைப் போல, நிறைய படித்ததைப் போலிருந்தாலும், கடைசியில் ஒரு திருப்தியே இல்லை.

(5) ஈயடிச்சான் காப்பி:

‘இந்தியா டுடே’, ‘புதிய தலைமுறை’யிலிருந்து முதல் ஐந்தாறு பக்கங்களுக்கான வடிவமைப்பைத் திருடிக்கொண்டவர்கள், ‘ஆனந்த விகட’னில் வரும் அந்தக் குறும்புக் குரங்காரை மாற்றி இங்கும் ஒரு கோமாளியை அலைய விட்டிருக்கிறார்கள். முக்கியமாக அந்தக் குரங்கு கூறும் ஒற்றைவரி நையாண்டிகள் சிரிக்க வைப்பதும், சிந்திக்க வைப்பதுமாக இருக்கும்; இங்கோ, எதையோ சொல்ல வேண்டுமென்ற நோக்கில் ஒற்றைவரி நக்கல்களை அங்குமிங்குமாய்த் தூவி விட்டிருக்கிறார்கள்.

இன்னும் நிறைய வருத்தங்களும், கோபங்களும் இருக்கின்றன. ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், “50 ரூபாயை இந்த ரெண்டு இதழ்களுக்கு வேஸ்ட் பண்ணியிருக்க வேண்டாமோ?” என்ற கேள்விதான் எழுகிறது. வரும் நாட்களில் கொஞ்சம் அறிவுடன் செயல்படுவார்கள் என நம்புவோம். ஏனெனில், “எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிட்டிருக்கோம்என்று வேறு யாராவது சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், ‘இந்துகுழுமத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் குழு அப்படிச் சப்பைக்கட்டு கட்டினால், அது முழுப்பொய்.


கேட்டதெல்லாம் கிடைக்கும்என்று அட்டையில் அவர்களது தாரக மந்திரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘ஆன்மீக அரசியல்என்ற சொற்பதத்திற்குப் பிறகு நான் அறியும் இரண்டாவது முட்டாள்தனமான பதம் இதுதான். கேட்டதெல்லாம் கிடைப்பதற்கு இது ஒன்றும்நீல்கிரிஸ்’, ‘மோர்போன்ற சூப்பர் மார்க்கெட் அல்ல; வார இதழ்.

Tuesday, March 20, 2018

துதிக்கை உடைய குழந்தைச் செல்வங்கள் - ராமன் சுகுமாரின் ‘என்றென்றும் யானைகள்’

விலங்குகள் குறித்த அறிவியல் பூர்வமான தரவுகளும், தகவல்களும் என் ஆர்வத்தைத் தூண்டியதேயில்லை. ஒரே விதிவிலக்கு, அவற்றின் எண்ணிக்கை குறைவது குறித்த செய்திகள் மட்டுமே. எளிதில் கோபத்தை வரவழைக்கக் கூடியவை அத்தகைய செய்திகள். அதன் நீட்சியாகக் கோயிலில்ஒப்படைக்கப்படும்யானைகள், ‘கோடை விழாவில் சவாரி செய்யப் பயன்படுத்தப்படும் ஒட்டகங்கள், குதிரைகள் போன்றவற்றில் ஈடுபாடும் இருந்ததில்லை (சின்ன வயதில் யானையிடம் ஆசி வாங்கியதை நினைத்து வெட்கப்படுகிறேன்). வீட்டுப் பூனைக் குடும்பமான டுப்பியும் அதன் வாரிசுகளும், பிறகு பப்புவும் அதன் வானரங்களுமாக எனது அன்பைப் பிற ஜீவராசிகளுக்கும் வெளிப்படுத்த வழிசெய்தன (திருவான்மியூரில் நான் தின்பண்டம் ஊட்டி வளர்த்த தாய்ப்பூனை குட்டி ஈன்றபோது, பப்புவின் மறுபிறப்பாகவே அதைக் கண்டேன் - மூடநம்பிக்கையையும், பகுத்தறிவையும் ஒதுக்கிவைத்து).

விலங்குகள் பற்றியதாக நான் வாசித்த முதல் புத்தகம், ஜெயமோகனின்யானை டாக்டர்’. கார்ட்டூன் நெட்வொர்க்கில் காட்டுவதை விட ஒரு நூலில் வார்த்தைகளால் தத்ரூபமாக ஒரு புதிய அனுபவத்தைக் கடத்த முடியும் என்ற நினைப்பே புதியதாகவும், கிளர்ச்சி தருவதாகவும் இருந்தது.

அதன்பின், இப்போதுதான் மற்றொரு விலங்கு தொடர்பான நூலைப் படிப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. ‘யானை டாக்டரை வாசிக்கத் தூண்டிய அப்பா தான் ராமன் சுகுமார் எழுதி, டாக்டர் ஜீவானந்தத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டஎன்றென்றும் யானைகள்எனும் நூலையும் அறிமுகம் செய்துவைத்தார். இரண்டுமே யானை தொடர்பானவை என்பது முற்றிலும் ஆச்சரியமாக இருந்தாலும், யானைகள் குறித்த ஒரு சிறிய அறிமுகத்துடன் இப்புத்தகத்தை அணுகுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இவர் ஒரு ரிஸர்ச் ஃபெல்லோ. அவரோட தீஸிஸ்க்காகக் காட்டுல எல்லாம் இருந்தப்போ கெடைச்ச எக்ஸ்பீரியன்ஸ எல்லாம் தொகுத்து எழுதிருக்கார்என்றபடி அப்பா இந்த நூலைக் கொடுத்தபடியால், கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாகப் படிக்காமலே வைத்திருந்தேன். ‘தீஸிஸ்என்ற ஒற்றை வார்த்தைதான் தயக்கத்திற்கான காரணம். தகவல் களஞ்சியமாக, இயந்திரத் தனமாக, மந்த கதியில் பயணிக்கும் நூல் எனும் அபத்தமான கண்ணோட்டத்துடனேயே இந்நூலை வாசிக்கத் தொடங்கினேன். அதற்காக நெடுஞ்சாண்கிடையாக நூலாசிரியரின் காலடியில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோருகிறேன். ஏனெனில் 96 பக்கங்கள் கொண்ட இந்நூலின் ஒரு வரியிலோ, சொல்லிலோ கூடநான் ஒரு ..எஸ்.சி. ஆராய்ச்சியாளன்எனும் அகந்தை தென்படவில்லை (அதே மூச்சில் இதையும் சொல்லிவிடுகிறேன்; ‘யானை டாக்டரில் ஜெயமோகனின் சில அகஸ்மாத்தான மேதாவித்தனங்களை நினைவில் அசைபோட முடிகிறது).

ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள (ஆறாவது அத்தியாயமான பின்னுரையைக் கணக்கில் சேர்க்கவில்லை) புத்தகத்தின் முதல் பத்தியிலேயே நூலின் சாராம்சம் வாசகனுக்குக் கடத்தப்படுகிறது. ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் எறக்காமல்’, ஒரு குழந்தையின் மனநிலையிலிருந்தே ஆசிரியர் எழுதியிருக்கிறார் என்று அடித்துச் சொல்லலாம். ஜார்ஜ் . ஷெல்லர் எனும் விலங்கியலாளரின் வாசகத்துடன் தொடங்குகிறதுபெரும் பிரச்சனைஎன்று தலைப்பிடப்பட்டுள்ள முதல் அத்தியாயம். பருவமெய்திய பிலிகிரி எனும் யானைக்கு முதன்முறையாக மதம் பிடிக்கும் காட்சியை அசலாக வார்த்தைகளில் விவரிக்கிறார் ஆசிரியர் (இந்நூலைப் படித்துமுடித்துவிட்டு, யானைகள் குறித்த பல காணொலிகளைக் கண்டபோது, அவர் சொல்வது அனைத்தையும் மூன்றாம் பரிமாணத்தில் அனுபவிப்பது போன்ற அமிழுணர்வு ஏற்பட்டது என்பது சத்தியம்). 1980-1990 என கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தைச் சத்தியமங்கலம் மற்றும் அதனைச் சுற்றிய வனப்பகுதிகளிலும், மலைகளிலும் கழித்த ஒருவரின் முதல் விவரணை 16 வயது யானைக்கு மதம் பிடிப்பதாகத் தொடங்குகிறது என்பது முற்றிலும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி.

முதல் வயதில் பால்குடி மறவாப் பச்சிளம் குழந்தையாக அலையும் அழகியலும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் வயதில் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்களும் யானைகளின் மேல் இனம்புரியாத ஒரு பாசத்தை வரவழைக்கின்றன. உதாரணத்திற்கு யானைகளில் கண்கள் கீழ்நோக்கும் இயல்பானது இரண்டாம் வயதிலிருந்துதான் தொடங்குகிறது என்பது எவ்வளவு முக்கியமான பதிவு!

மனிதன் தோன்றிய ஆதிகாலத்தில் பெண்ணே ஒரு கூட்டத்திற்குத் தலைவியாயிருந்தாள் என்பது ஒரு வரலாற்றுப் பதிவாக மாறிப்போன இன்றைய நிலையில், யானைக் கூட்டத்திற்கு இன்றும் ஒரு பெண் யானையே தலைமை தாங்குகிறது என்பது ஆறுதலளிக்கக் கூடிய விஷயம். மூர்க்கத்தனத்தை நொடிப்பொழுதில் வெளிப்படுத்தும் ஆண்யானை கூடப் பெண்யானைக்குக் கட்டுப்படுகிறது. ஆனால், ஆபத்து நேரத்தில் களிற்றின் மூர்க்கத்தை விட, பிடியின் மூர்க்கம் பலமடங்கு அதிக சக்தி வாய்ந்தது என்பது வியப்பளிக்கிறது. முக்கியமாகபுட்புட்புட்என்று காலைத் தரையில் அடித்துச் சன்னமான, ஆனால் நீண்ட தூரம் ஒலிப்பதான ஒரு சப்தத்தின் மூலமாக ஆபத்து வருவத்தை யானைகள் மற்ற யானைக்கூட்டங்களுக்குத் தெரிவிக்கின்றன என்பது உண்மையாகவே மூக்கில் விரலை வைக்கத் தூண்டும் தகவல். "அவ்வோசை குறித்த ஒரு முழுமையான புரிதல் கடைசிவரை ஏற்படவேயில்லை" என்று தெரிவிக்கிறார் ஆசிரியர்,

நூல் முழுவதும் ஆசிரியருக்கு உதவி புரிந்த பல்வேறு ரேஞ்சர்களையும், பாதுகாவலர்களையும், சமையற்காரர்களையும் இன்ன பிற இதர உதவியாளர்களையும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார். அவர்களின் நுண்மையான உதவிகளைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கிறார். ஒரு கட்டத்தில் யானை வேட்டையில் இட்டுபட்டிருந்த வீரப்பனைப் பிடிக்கக் களத்தில் இறங்கி, வீரமரணம் அடைந்த சிதம்பரம் எனும் அதிகாரியைப் பற்றிநேர்மையும், உறுதியும் கொண்ட சிதம்பரம் போன்ற நல்ல வன அலுவலர் சுட்டுக்கொல்லப்படுவது பெரிய துரதிருஷ்டமே. எனக்கு நல்ல நண்பரான அவரது இழப்பு எனக்கு மட்டுமல்ல, காட்டுக்கும், கானுயிர்களுக்கும் பெரும் இழப்புதான்என்று பதிவு செய்கிறார்.

மீனாட்சி, செம்பகா என்று பெண்யானைகளுக்குப் பெயர் வைத்து அதனதன் கூட்டங்களை ஆய்வு செய்கிறார். இவை தவிர, காதில் கீறல் விழுந்திருக்கும் யானை, ஒற்றைத் தந்தம் உடைய விநாய் என்று பல்வேறு யானைகள் ரத்தமும், சதையுமாக உயிர்வாழும் முக்கியப் பாத்திரங்களாகவே நூலெங்கும் வலம்வருகின்றன. செந்நாய்கள், புலிகள் போன்ற விலங்குகளால் ஆபத்து ஏற்படும்போது யானைகள் ஒன்று கூடுகின்றன; குட்டி யானைகள் கூட்டதின் நடுவே பத்திரமாகக் காக்கப் படுகின்றன. பொதுவாகக் குழுவாக நடந்து செல்லும்போது மூத்த பெண்யானை முன்னேயும், ஆண்யானை பின்னேயுமாகச் செல்கின்றன என்று பல்வேறு சம்பவங்களை அனாயசமாகத் தெரிவிக்கிறார்.

ராமன் சுகுமார் எனும் ஆய்வாளரும், அவருக்கு உதவிய ஒரு சில நண்பர்களும், அலுவலர்களும் என்று ஒருசில மனிதக் கதாபாத்திரங்களே நூலை ஆக்கிரமித்திருந்தாலும், அவர் பயணிக்கும்ஜீப்ஒரு குறிப்பிடத்தக்க அங்கம் வகிக்கிறது. அவ்வப்போதுமக்கர்செய்யும் ஹைதர் காலத்து ஜீப்பானது, சே குவேராவின் சுயசரிதையானமோட்டார் சைக்கிள் டைரிஸ்’-ன் சில அத்தியாயங்களை நினைவுபடுத்தியது. சே அந்த வண்டியை வைத்துக்கொண்டு பட்ட பாட்டைப் போலவே, ராமன் அவரது ஜீப்புடன் அல்லோலகல்லோலப்படுகிறார். ஜீப் பள்ளத்தாக்கின் நுனியில் போய் அதலபாதாளத்தை நோக்கி நிற்கும்பொழுது, அவ்வழியே போகும் ஒரு லாரியிலிருந்து ஓட்டுனரும், பிறரும் உதவி செய்து ஜீப்பை மீட்கின்றனர். இதுபோன்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகள் வாசிப்பனுவத்தைச் செப்பனிடுகின்றன.

ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தில் புகைப்படம் எடுத்து யானைகளிடம் மாட்டுவது, அவற்றின் மோப்ப சக்தி வளையத்திற்குள் மறைந்து கொண்டு நோட்டமிட்டு மாட்டுவது என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கத்தி மேல் நடக்கும் வாழ்க்கையையே ஆசிரியர் வாழ்ந்திருக்கிறார் என்பது கண்கூடாகத் தெரிகிறது; எனினும், அவற்றை ஒரு மெல்லிய ஹாஸ்ய வர்ணனையுடன் அவர் விளக்குவதுதான் சுவையைக் கூட்டுகிறது.

தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது அதிகமானது, இறக்குமதி செய்யப்பட்ட தந்தங்களுக்கான வரியைக் கூட்டியபின்னர்தான் என்பது அதிர்ச்சியைத் தருகிறது. இத்தந்த வேட்டைக்குக் காரணம் தந்தங்களிலிருந்து செய்யப்படும் சிற்பங்கள்தாம் என்பது மிகுந்த வலியையும், வேதனையும் அளிக்கிறது. தொழில்நுட்பத்திலும், வேட்டையாடும் தந்திரங்களிலும், ஆயுதங்களிலும் மேம்பட்ட கடத்தல்காரர்கள்/கொலைகாரர்கள் ஒரு புறம் இருக்க, அவர்களை எதிர்க்கக் கிட்டத்தட்ட நிராயுதபாணிகளாகவே நிற்கும் வனச்சரக அலுவலர்களையும், ரேஞ்சர்களையும் நினைக்கும்போதே ரத்தம் சில்லிடுகிறது.

இந்த எல்லையற்ற நாசவேலையின் விளைவாக 3:1லிருந்து 5:1 வரை இருக்கவேண்டிய பெண்:ஆண் யானைகளின் விகிதம், 10:1 வரையெல்லாம் 1990-களின் தொடக்கங்களில் வீழ்ச்சியடைந்ததாகத் தெரிவிக்கிறார் ஆசிரியர். 90களுக்குப் பிறகு இவர் முதுமலைப் பகுதிகளிலும் யானைகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீர்குலையும் இயற்கையின் சமநிலை குறித்த ஒரு கையறுநிலை அவரிடம் தென்படுகிறது. நூலின் தொடக்கப் பக்கங்களிலேயே இடம்பெறும் ஒரு பத்தி, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.

நான் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற பின்னர் எனது இயற்கை அழகு ரசனை உருவானது எனலாம். மனிதன் நிலவைத் தொட்ட காலம் அது. பூமியை விடவும் நிலவின் மீது உலகம் அதிகம் கவனம் செலுத்திய காலம். அதேவேளையில் மனிதனின் வாழ்வாதாரமான பூமியும், இயற்கையும் வரலாறு காணாத மாசுபடுதலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறது.”

இயற்கையைக் காத்தல் எனும் ஆசிரியரின் இலக்கில், யானைகள் என்பவை ஒரு முக்கியமான அங்கமாக மாறிவிட்டன என்றே கூற வேண்டும். யானைகளின் வாழ்வு, உணவு, பழக்கவழக்கம் எனத் தொடங்கி, பருவ மாற்றத்தால் அவை சந்திக்கும் பிரச்சனைகள், தண்ணீரின்றி இறக்கும் அவலம் என்று விரிந்து, கடத்தல், கொள்ளை என அதிர்ச்சியில் ஆழ்த்தி, நல்ல எதிர்காலத்திற்கான ஒரு எதிர்பார்ப்புடன் முடியும் இந்நூல் விலங்கு ஆர்வலர்கள் மட்டுமின்றி, இயற்கை குறித்த புரிதல் வேண்டுமென நினைக்கும் அனைவருமே அவசியம் படிக்க வேண்டிய நூல். தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ள டாக்டர் ஜீவானந்தம் பாராட்டுக்குரியவர். மூலத்தின் சுவை குறையாமல் - இன்னும் சொல்லப் போனால், சுவையைக் கூட்டி - தமிழுக்குக் கொண்டுவந்திருப்பது கவனத்திற்குரியது.

நூல்: என்றென்றும் யானைகள்
ஆசிரியர்: ராமன் சுகுமார்
தமிழில்: டாக்டர் ஜீவானந்தம்
வெளியீடு: தமிழினி பதிப்பகம்
பக்கம்: 96

விலை: 60

Monday, March 19, 2018

இனம்புரியா உணர்வுகளும், ஆண்மனக் காமமும் - இமையத்தின் குறுநாவல் ’எங்கதே’

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு .மாதவனின்கிருஷ்ணப் பருந்துஎனும் நாவலைப் படித்தேன். ஒரே ஒரு முக்கியமான கதாபாத்திரத்தையும், அப்பாத்திரத்தைச் சுற்றிய சில மனிதர்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட அந்நாவல் கூறிய ஆண்மனத்தின் காமம் குறித்த உணர்வுகள் மிக முக்கியமானவை. புலனடக்கம் என்பது சொல்வதற்கு எளிதானது என்பதைப் பொட்டிலடித்தாற்போல் புட்டுப்புட்டு வைத்த நூல் அது. தகாத உறவிற்கு ஏங்கும் ஆண், கடைசியில் முறைதவறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அது வேண்டாமென முடிவு செய்வதுடன் நாவல் முடிவடையும். வேண்டாம் என்ற முடிவுடன் கிளைச்செய்தியாக, காமத்தைக் கட்டுக்கடங்காத அளவிற்கு வளரவிடும் உள்மன ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமளவிற்கு அது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்பதும் வாசகர்களுக்குக் கடத்தப்படும். சமீபத்தில் எழுத்தாளர் பாவண்ணனின் வலைதளத்தில் கூட, அவர் தனது நண்பருடன்கிருஷ்ணப் பருந்துகுறித்து உரையாடியதாக ஒரு பதிவைப் படித்தேன் (அவரது வலைப்பூவில் அதைத் தேடி எடுக்க இயலவில்லை).

அலைபாயும் ஆண்மனத்தின் பேராசையையும் (வக்கிரம் எனும் சொல்லைத் தட்டச்சு செய்ய ஏனோ எனது ஆணாதிக்க மனோபாவம் தடுக்கிறது போலும்), ஆசை நிறைவேறாதபோது எழும் விரக்தியையும் மீண்டும் இமையம் எழுதியுள்ளஎங்கதேவில் வாசிக்க நேர்ந்தது. ‘கிருஷ்ணப் பருந்துஅக உணர்வுகளின் எழுச்சியைப் பேசிய அளவிற்கு, ‘எங்கதேபுற விளைவுகளை உரைக்கிறது. சஞ்சலமும், சபலமும், ஏக்கமும் எழும் ஆணின் எண்ணவோட்டங்களை .மாதவன் விவரித்தாரெனில், அவற்றின் விளைவுகளான பொறாமை, சந்தேகம், விரக்தி, கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளை இமையம் எழுதியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

எனக்குள் இருக்கும்கிருஷ்ணப் பருந்துரசிகனா, அல்லது உண்மையிலேயேஎங்கதேவில் அதன் பாதிப்பும், தாக்கமும் அதிகமாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், கதையின் முடிவும் கூட ஒரே இடத்தில் சங்கமிப்பது தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது. கூடும் வாய்ப்பு கிடைத்தும் அக்கணநேரத்தில் தனிமையாக இருக்க விரும்பி கதவை மூடும் ஆண்பாத்திரம் போலவே, இங்கே பிளேடால் தான் ஆசைப்பட்ட பெண்ணைக் கொல்லத்துணிந்து பின்னர் பின்வாங்கும் ஆண்பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறுநாவலில் ரசிக்கத்தக்கவையாக இருப்பவை ஆசிரியர் பயன்படுத்தும் உவமைகள்.

கருவாட்டுக் குழம்பு வைக்கிற ஊட்டோட வாசல்ல காத்திருந்த நாயிதான் நான்

ஒரு புள்ளே பொறந்திட்டா, மொளக்குச்சியில கட்டிப்போட்ட மாடாயிடுவன்

மடப்பள்ளியில கொடுக்கிற பொங்கலுக்காகக் காவக் காத்திருக்கிற பரதேசி ஆயிட்டாரு பாவாட

நானும் கமலாவும் கார்த்திக மாசத்து நாய்களாட்டம் இருந்தம்

“… அந்த வாத்த எம் மனச பயிரு நட ஓட்டிப்போட்ட வயக்காடா ஆக்கிடும்

போன்றவற்றில் நாம் அன்றாடம் சந்திக்கும் விலங்குகளும், நாம் கிட்டத்தட்ட மறந்தே போன விவசாயமும் சார்ந்த சில உவமைகள் அனாயசமாகத் தெறித்து விழுகின்றன.

கதை எனது ஊரான கடலூரைச் சுற்றி நடப்பதாக எழுதப்பட்டுள்ளதால் படிக்கும் ஆர்வம் இயல்பை விட அதிகமாயிருந்தது. குறிப்பாகக் கடலூர் பற்றிய இந்த ஒரு பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது.

அப்ப ஆட்டோ மணிக்கூண்டத் தாண்டி கலெக்டர் ஆபீஸ் கிட்டே போயிக்கிட்டிருந்துச்சி. கலெக்டர் ஆபீஸப் பாத்தன்.

ராபர்ட் கிளைவோட குதிர லாயம்தாம் இப்ப கலெக்டர் சேம்பர். தெரியுமா?”

தெரியும். வெள்ளைக்காரங்க காலத்திலெ தென்னாற்காடு ஜில்லாவோட தலநகரமா இருந்துச்சி.”

வரலாறு நெறஞ்ச ஊரு. சுனாமி வந்தப்ப நெறயா பேரு இங்கத்தான் செத்துப்போனாங்க.”

ஆமாம்.”

கடலூர் தண்ணி உப்பா இருக்கு. காத்தும் அப்பிடித்தான் இருக்கு.”’

படிக்கும்போதே பேருந்தில் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டிலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகத் திருப்பாதிரிப்புலியூர் பயணிக்கும் அனுபவத்தை அப்பேச்சுப் பரிமாற்றம் அளித்தது என்று சொல்வது துளியும் மிகையல்ல. வரலாற்றுப் பெருமை நிரம்பிய ஊர் எனும் அத்தாட்சியைத் தொடர்ந்து வரும் சுனாமி குறித்தான வாக்கியத்தை வைத்து என்னால் இரண்டு வெவ்வேறான கண்ணோட்டங்களில் யோசிக்க முடிந்தது.

(1) சுனாமியே கடலூரின் வரலாற்றில் முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது எனும் முகத்திலறையும் உண்மை.

(2) சுனாமியில் செத்த மக்கள் கூட்டத்தைப் போலவே கடலூரின் வரலாற்று அரிச்சுவடிகளும் அழிந்துகொண்டிருக்கின்றனவோ என்பதான கேள்வி.

இரண்டாவது கூற்றை மேலும் முக்கியமானதாக மாற்றுகிறது, “இப்ப எங்க ஊருல தங்க நாற்கர சால இருக்கு. ஆனா புளிய மரம்ன்னு ஒரு செடிகூட இல்லஎனும் வர்ணனை. போகிறபோக்கில் எழுத்தாளர் இதைச் சொல்லிச் சென்றாலும், அவ்வாக்கியம் பின்மண்டையில் சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு உணர்வை நொடிப்பொழுதில் தருகிறது.

கமலாவையும், அவள் குறித்த எண்ணங்களுடன் அவளைப் பின்தொடரும், உடனிருக்கும் ஆண் பாத்திரத்தையும் மையமாக்கியே எழுதப்பட்டிருந்தாலும், 43-ஆவது பக்கத்தில்தான் அந்த ஆணின் பெயர் வாசகர்களுக்குத் தெரிய வருகிறது. என்னதான் தன்விகுதியில் அந்த ஆணே கதை சொல்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், ‘இன்னும் பெயரைச் சொல்லவேயில்லையேஎனும் எண்ணமே எழுவதில்லை (பெயர்: விநாயகம்). அதுதான் ஆச்சர்யம்.

நூல் ஆணின் பார்வையிலிருந்து எழுதப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஆணுக்கு ஒரு நொடி கூடவா அப்பெண் மீது ஒரு நற்சிந்தனை வராது எனும் கேள்வியும் எழாமலில்லை. நூல் முழுவதுமே கமலா குறித்தான தவறான எண்ணம் மட்டுமே விநாயகத்திற்கு இருக்கிறது என்பதுஅப்யூசிவ் ரிலேஷன்ஷிப்’, ‘ஆணாதிக்கம்போன்ற சொல்லாடல்களைத் தாண்டிய ஒரு அரக்கத்தனமாயிருக்கிறது. ‘ஏன் கமலாவிற்கு விநாயகத்தின் துணை தேவைப்படுகிறது?’, ‘ஏன் அவள் அவனை வாழ்க்கைத் துணையாக நினைக்கவில்லை?’, ‘எப்படி அவளது உயரதிகாரி மீது திடீரென்று அவளுக்கு அப்படியொரு உணர்வு வருகிறது; அதற்கான அக மற்றும் புறக் காரணிகள் என்ன?’ போன்ற எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதாக இக்குறுநாவல் அமையவில்லை. ‘அப்படி அது இருந்திருக்க வேண்டிய அவசியமில்லைஎனும் சமாதானம் ஏற்புடையதாக இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.

கிருஷ்ணப் பருந்துஒரு அமைதியான சுனை எனில், ‘எங்கதேஒரு ஆக்ரோஷமான அருவி. சொற்பிரயோகங்களும் அதற்கேற்ற வகையில் இரைச்சலாகவே இருக்கின்றன. ஆனால் ஒருவகையில் அது இந்நூலுக்கு மிகவும் தேவையாகவே இருந்திருக்கிறது என்று சொல்லலாம். ‘ஆனந்த விகடன் தடம்’ பத்திரிக்கையின் நவம்பர் இதழில் ஆதவன் தீட்சண்யா இடதுசாரிக் கவிதைகளில் இருக்கும் ‘இரைச்சல்’ குறித்து இப்படிச் சொல்கிறார்: “சொற்களைத் திருகி, சொல்ல வந்ததைப் பூடகப்படுத்தி, நேஷனல் ஜியோகரபி சேனலில் காட்டும் நிலப்பரப்பைத் தமதென்று உருவகித்துக்கொண்டு அமேசான் காட்டுத் தாவரங்களுக்கிடையில் மறைந்தொளிந்து ரகசியம்போல் கீச்சுக்குரலில் அப்படி என்ன அதி உன்னத அரசியலை அமைதியாக எழுதி இருக்கிறார்கள் என்று சொல்லுங்களேன். அவ்வளவு நசுக்கி விடுவதற்கு அதென்ன குசுவா இல்லை கவிதையா?”
ஒருவகையில் இது ‘எங்கதே’விற்கும் பொருந்திப்போகிறது.

நூல்: எங்கதே
ஆசிரியர்: இமையம்
வெளியீடு: க்ரியா பதிப்பகம்
பக்கம்: 110
விலை: 125


நைஸ் டூ ஈ-மீட் யூ. ஸப்?

மச்சி, எதுக்குடா கேட்டுக்கிட்டு? கூகிள் மேப்ஸ்ல பாத்துக்கலாம் விடுஎன்ற பதில் நண்பர்களிடமிருந்து வருவது மிகச் சாதாரணமாகி விட்டது. பொதுவாகப் புது இடங்களிலோ, ஊர்களிலோ கூகிளாண்டவரை வழிபடுவது எனக்கு உவப்பானதாக எப்போதுமே இருந்ததில்லை. பக்கத்தில் இருக்கும் டீக்கடை அண்ணாச்சி தரும் சுவாரசியமான கொசுறுச் செய்திகள், கூகிளில் கிடைக்காமல் போய்விடும். கூடவே சில ஊர்களில், “ஊருக்குப் புதுசா தம்பூ(பி)?” என்று கேட்டுவிட்டு, கொடுக்கும் காசுக்கு அதிகமாக ஒரு பஜ்ஜியோ, போண்டாவோ தரும் கருணைமிகு கனவான்களைச் சந்தித்திருக்கிறேன். இவற்றையும் தாண்டி நான் வைத்திருக்கும் சீனத்து கைப்பேசி (லெனொவோ சீனத்துச் சரக்குதானே?) அவ்வப்போது மக்கர் செய்யும். அதன் தகுதிக்கு மீறி நான் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு தகவல்களும், புகைப்படங்களும் அதனை அவ்வபோதுகோமாவிற்குத் தள்ளிவிடுகின்றன. செயல்படாமல் மயக்க நிலையிலேயே இருக்கும் பல செயலிகளில் ஒன்று, ‘கூகிள் மேப்ஸ்’. எனவே வாய்தான் எனக்கு மேப்ஸ், அட்லஸ் எல்லாமும்.

இந்த வரைபடப் பைத்தியங்கள் ஒருபுறம் என்றால், ‘வாட்ஸப் வளவள கோஷ்டிகள்மறுபுறம். புதிதாக வேலைக்குச் சேரும் இடமாகட்டும், வேறொரு வாசகர் வட்டம் போன்ற அமைப்பாகட்டும், ஒரு வாட்ஸப் குழுமம் இவையனைத்திற்கும் இருக்கும். அடுத்த வாரம் நடக்கவிருக்கும் சந்திப்பு ஒன்றுக்காக நான் ஆவலாகக் காத்திருந்தால், “ஹேய், திஸ் இஸ் _____. அடுத்த வாரம் எல்லாரும் மீட் பண்ணும்போது ஸ்ட்ரேஞ்சர்ஸா இருக்கக்கூடாதுன்னுதான் இப்போவே பிங் பண்றேன். நைஸ் டூ -மீட் யூ. ஸப்?” என்று ஸ்டைலாக குறுஞ்செய்தி அனுப்பும் ஆர்வக்கோளாறுகளை எப்படித் திருத்துவது என்றே தெரியவில்லை. இத்தகைய மூன்று, நான்கு முந்திரிக்கொட்டைகளைக் கடந்த ஒரு மாதத்தில்-மீட்செய்துவிட்டேன்.

எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடிவதேயில்லை. அனைவரும் தெரிந்தவர்களாக இருக்க/மாற வேண்டும் என்ற மனப்போக்கை, ஒரு பிறழ்வு நிலையாகவே பார்க்க வேண்டியுள்ளது. புதிதாக இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் முதலாவது முறையாக நேராகச் சந்தித்துப் பேசுவது முக்கியமான நிகழ்வு. முன் தீர்மானங்களும், தவறான முடிவுகளும் இல்லாத அந்த முதல் சில நிமிடங்கள் மனிதருக்கிடையேயான உறவுகளைத் தீர்மானிக்கிறது. பொதுவான விஷயங்களை அறிந்துகொள்ள ஒரு வாயிலாக அமைகிறது. சில நேரங்களில் இருவருக்குமான பொதுவான நண்பர்களோ, உறவினரோ, கல்லூரியோ, பள்ளியோ இடம்பெறும்போது அது ஒரு மறக்கமுடியாத சிலாகிப்பனுபவமாக மாற்றம் அடைகிறது. நம்மையறியாமல் உருவாகும் செய்திப் பகிர்வும், நேரலையான பேச்சுவார்த்தைகளும் அலைகடலாக உருமாற்றம் அடைந்து, கரைக்கு வந்துசேரும்போது எழும் இன்பம் அலாதியானது. இந்த ஒரு பரிமாணத்தை-மீட்களும், ‘பிங்களும் சிதறடித்துவிடுகின்றன. அதன் விளைவாகக் கைகுலுக்குதலில் தொடரும் இறுக்கம், முகத்திலும், பேச்சிலும் தொடர்கின்றது.

இந்த வாட்ஸப் ஆர்வக்கோளாறுகள் செய்வதற்குப் பெயர்தான்நெட்வொர்க்கிங்காம். அந்தமேப்ஸ்பார்க்கும் மேதாவிகள் செய்வதற்குப் பெயர்தான்செல்ஃப்-சஃபிஷியன்ஸியாம். இந்தக் கிறுக்குத்தனத்தை வைத்துத்தான் லாரி பேஜும், மார்க்கும், ஜெஃப் பெஸோஸும் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்கள் சிலர் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும்போது, பல நேரங்களில் நான்திருதிருவென விழித்துக்கொண்டிருப்பதைச் சாப்பாட்டு மேசைகளிலும், திரையரங்குகளிலும் சமீபத்தில் உணர்கிறேன். காரணம், அவர்கள் பேசுவதுட்ரெண்டிங்கான விவகாரங்கள். நான் உன்குழாயைப் (‘யூட்யூப்எனும் சொல்லுக்கான தமிழ் வடிவம். நன்றி: மெட்ராஸ் சென்ட்ரல் சேனல் (சீமானைக் கலாய்த்து அவர்கள் வெளியிட்ட ஒரு காணொலியில் அச்சொல்லைக் கேட்க நேர்ந்தது. பாருங்கள், ‘ட்ரெண்டிங்வியாதிக்கு நானும் அவ்வப்போது பலியாகிக்கொண்டுதான் இருக்கிறேன்) பெரிதாகப் பயன்படுத்துவதில்லை. “டேய், இந்த நியூஸ் தெரியாதா உனக்கு? என்னடா நீ?” என்ற கேள்விகளைத் தினமும் ஒருமுறை எதிர்கொள்கிறேன். முதலில் அவமானமாக இருந்தபோதும், “அய்யய்யோ, நமக்கு ஒண்ணுமே தெரியல போல” என்பதான ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றியபோதும், நாட்போக்கில், “ஆமாம், தெரியாது. இப்ப அதுக்கு என்ன?” என்று கேட்கும்/உள்ளூற நினைக்கும் தெனாவட்டு நிலைக்கு வந்திருக்கிறேன்.

நான் கல்லூரி முதலாமாண்டு முடிக்கும்வரையில் கூட, இந்த பைத்தியக்காரத்தனம் பரவலாக இருந்ததில்லை. இன்னும் நினைவில் இருக்கின்றன, கோயமுத்தூரிலிருந்து, கிண்டி பொறியியல் கல்லூரிக்கு மாறி வந்தபோது புதிய நண்பர்களை நேரில் சந்தித்த நாள். பெட்டி, படுக்கையோடு நானும், அப்பாவும் விடுதியறைக்கு முதன்முறையாகச் சென்றபோது அறைவாசி காற்சட்டையுடன் குப்புறப் படுத்துக்கொண்டுசிலபல சுகானுபவக் காணொலிகளைப் பார்த்துக்கொண்டிருந்தது அப்படியே பதிந்துவிட்டது. அதற்கு முன்பாக ஆறாம் வகுப்பில் புதிய பள்ளிக்குச் சென்றபோது முதல்நாளில் பயமுறுத்திய சூழல் பசுமரத்தாணியாக இருக்கிறது. பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்த தனிப்பயிற்சி வகுப்புகளும், அவற்றின் முதல் வகுப்புகளும் - தனசு சாரும், சகாயம் சாரும், ஜே.பி. சாரும் - நெஞ்சாங்கூட்டில் நிறைவாய் நிற்கின்றன(ர்).

இணையத்திலேயே செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை வந்த பிறகு, வலிந்து சில நாட்கள் புத்தகம் படிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது. சில நாட்கள் வேண்டுமென்றே செய்திகள் எதையும் பார்க்காமல், படிக்காமல் இருந்துவிடுகிறேன்; அவ்வப்போது எனக்கு நானே செய்துகொள்ளும் மனச்சோர்வு நீக்கும் வலிநிவாரணி இதுதான். செய்தித்தாள் படிப்பதும், நம்மைச் சுற்றி நடக்கும் அரசியலைத் தெரிந்துகொள்வதும், ‘நெட்வொர்க்கிங்செய்வதும் நன்று; அதனினும் நன்று நாம் நாமாக இருத்தல்; அதனினும் நன்று, நமக்குப் பிடித்தவற்றைச் செய்தல்.


ஒண்ணும் சொல்றதுக்கில்ல! என்ன நாஞ்சொல்றது?