Thursday, April 19, 2018

இயல்பு நவிற்சி: மாதவ பூவராக மூர்த்தியின் ‘இடம் பொருள் மனிதர்கள்’ நூலை முன்வைத்து


நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள், அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், கடந்த காலத்தின் சுவைமிகு நிகழ்வுகள்/பொருட்கள் போன்றவற்றை/போன்றவர்களைக் கதைக்களம்/கதை மாந்தர்களாக்கி எழுதப்படும் இயல்பான பதிவுகளுக்கான உதாரணங்களாகநிசப்தம்வா.மணிகண்டனின் வலைப்பதிவுகளைச் சொல்வேன். என்னளவிலான வாசிப்பனுபவத்தின் விளைவாக நான் முன்வைக்கும் பரிந்துரை என்றாலும், அதற்கு அவரதுமசால் தோசை 38 ரூபாய்மற்றும்லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்எனும் இரு நூல்களும் கட்டியம் கூறும் (’காமதேனு’வில் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதும் ‘சொட்டாங்கல்’ இங்கு அவசியம் எடுத்துக்காட்டப் படவேண்டிய தொடர்).

இதன் நீட்சியாக சமீபத்தில்இடம் பொருள் மனிதர்கள்என்ற நூலை வாசிக்க நேர்ந்தது. அப்பா பணியாற்றும் வங்கியில் இந்நூலின் ஆசிரியரான மாதவ பூவராக மூர்த்தியும் ஒரு பணியாளர் எனும் முறையில் அப்பாவின் கைக்குச் சிக்கிய இப்புத்தகத்தை அப்பா வழக்கம்போலவே படித்துமுடித்த பின்னர் என்னிடம் ஒப்படைத்தார்.

நூலின் முன்னுரையிலேயே இது மா.பூ.மூர்த்தி அவர்களின் முகநூல் சுவரில் பதிவிடப்பட்ட நிலைதகவல்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு என்றறிந்தேன். திருக்குறளின் அறம், பொருள், இன்பம் போலவே இந்நூலும்இடம்’, ‘பொருள்’, ‘மனிதர்கள்என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நூலடக்கத்தைப் பார்க்கும்போதே ஆசிரியரின் தேர்வுகளில் இருக்கும் தெளிவு நன்றாகவே புலப்படுகிறது. இப்புத்தகத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாகிறது. மொத்தம் 26 கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பு 5, 11, 10 என்ற எண்ணிக்கையில் மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறது.

இடம் எனும் குடையின் கீழ் ஆசிரியர் தேர்வு செய்திருக்கும் ஐந்து கட்டுரைகளுமே தனித்துவமானவை. புழக்கம் குறைந்து கேட்பாரற்றுக் கிடக்கும் ஒரு உணவகத்தைப் பற்றிய பதிவில் தொடங்குகிறது நூல். ‘ஒரு புளியமரத்தின் கதை’யில் அம்மரம் அதைச் சுற்றி நடக்கும் அனைத்து மாற்றங்களுக்கும், நியாய அநியாங்களுக்கும் மௌன சாட்சியாய் இருப்பதைப் போல, இங்கு அந்த டிரைவ்-இன் உணவகமானது பல்வேறு மனிதர்களின் எதிர்காலக் கனவுகளை – குறிப்பாக, திரையுலகில் நுழைய வேண்டும் எனும் இளைஞர்களின் கனவுகளை – வளர்க்கும் சொர்க்கபுரியாய்த் திகழ்கின்றது. பலர் வந்து வணிகப் பேச்சுக்களும், வியாபார ரகசியங்களும், திரைக்கதைகளும் பேசிச் செல்கின்றனர். நேரம் குறித்த பிரக்ஞை இன்றி அவர்களால் அங்கு சுதந்திரமாக உரையாட முடிகின்றது. தற்காலத்தில் இதற்கு ஈடாக ‘கஃபே காஃபீ டே’வை மட்டுமே நினைத்துப் பார்க்க முடிகிறது (’முருகன் இட்லிக் கடை’ போன்ற இடங்களில் ஏதோ அன்னதானச் சாப்பாடு உண்ணும் ஏதிலிகளைப் போல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகும் அமர்ந்திருந்தால் நம்மைத் துரத்தும் பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது). பி.பீ.ஸ்ரீநிவாஸ் அவர்கள் வந்து அமர்ந்து ஏகாந்தமாய்த் தனிமையில் ரசித்த பொழுதுகளை பற்றிய குறிப்புகள் நெஞ்சைக் கனக்கச் செய்கின்றன. அனைத்துப் பதிவிகளிலும் முடிவுப் பத்தியானது நினைவலைகளைப் பின்னோக்கி இழுக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு இணையாக, இக்கட்டுரையின் முடிவையே சுட்டிக்காட்டலாம். “பீ.வி.ஆரும், எஸ்கேப்பும் ஜெமினியை ஈடுகட்டலாம். ஆனால், உட்லேண்ட்ஸ் டிரைவ்-இன்னை ஈடுசெய்ய எதுவுமில்லை”.

தொடர்ந்து வரும் சர்க்கஸ் குறித்த பதிவும் சுவாரசியமானது. ஆரம்பப் பள்ளிக்காலத்தில் நாம் பார்த்து ரசித்திருக்கக்கூடிய இக்கேளிக்கை குறித்த ஒரு மீள்பதிவாகவே அமைகிறது என்று கூறினால் அது மிகையல்ல.

‘இடம்’ எனும் தலைப்பின் கீழ் இருக்கும் ஐந்தாவது கட்டுரையான ‘வீடு மாற்றம்’ குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பதிவு. ஆசிரியர் வர்ணிக்கும் ஓட்டு வீடும், அதிலிருக்கும் ’முத்த’மும் (’உம்மா’ அல்ல, முத்தம்/முற்றம் என்பது வீட்டின் ஒரு பகுதி), நீண்டு செல்லும் வீட்டில் இருக்கும் பல அறைகளும் அதில் வசிக்கும் தனிகுடித்தனங்களும், கடைசியில் இருக்கும் கிணறும், அதைத் தொடர்ந்து இருக்கும் (திறந்தவெளிக்) கழிப்பறையும் பாட்டி வாழ்ந்த எங்கள் பரம்பரை வீட்டை அச்சுஅசலாகப் பிரதியெடுத்ததைப் போலவே இருந்தது.

நூலில் முக்கியமான அம்சமாக அறுதியிட்டுச் சொல்லவேண்டியது, ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ள தலைப்புகள். ‘ஷண்முக விலாஸ் ராமநாதன்’ என்ற தலைப்பைப் பார்த்தவுடன் “மீண்டும் உணவகப் பதிவா?” என்று சலிப்புடன் வாசிக்கத் தொடங்கினால், அது தட்டச்சுப் பயிலகத்தின் பெயராக இருக்கிறது. ‘அப்பரும் நானும்’ என்ற தலைப்பைப் படித்தவுடன் ‘ஆன்மிக அரசிய’லுக்கு மனம் தயாரானால், அது ரயிலில் இருக்கும் ‘அப்பர் பெர்த்’ எனும் மேலடுக்கும், அதனால் ஆசிரியருக்கு விளைந்த தொந்தரவுகளும் என்று விரிகிறது. இத்தகைய எதிர்பார்ப்புகளும், அதனால் விளையும் ஏமாற்றங்களும், அந்த ஏமாற்றங்களையே தூக்கிச் சாப்பிட்டுவிடும் சுவாரசியாமான எழுத்து நடையுமாகச் சேர்ந்து, வாசகருக்கும் எழுத்தாளருக்குமான மனரீதியான ஒரு உறவை ஏற்படுத்துக்கின்றன.

நாஞ்சில் நாடனுக்கு அடுத்தபடியாக சமையல் காரியங்களை வர்ணிப்பதில் மா.பூ.முர்த்தியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. ’பொருள்’ பகுதியில் இடம்பெற்றுள்ள ‘அப்பாவின் அரிவாள்மனை’யில் வரும் வர்ணனை அபாரமானது.

“பூசணிக்காய் சாம்பார் என்றால் அச்சு வெல்லம் போல் நறுக்கி வைப்பார். கூட்டு என்றால் க்யூபிக் பொல இருக்கும். பாத்திரத்தைப் பார்த்தால் சீராக இருக்கும். பரங்கிக்காய் ஹுலிபல்யம் (எழுத்தாளர் கன்னடத்துக்காரர்) என்றால் மாங்காய் பத்தை பீச்சில் விற்குமே அப்படி பல் பல்லாய் வடிவம் பெறும். கத்திரிக்காய் சாம்பாருக்கு நீட்டு வாக்கில் நீரில் மிதக்கும். பொரியலுக்குக் கட்டம்கட்டமாய் நீரில் மிதக்கும். பிட்லைக்கு (பிட்லை என்பது கிட்டத்தட்ட சாம்பார் போலத்தான்) காய்கள் தட்டில் சீர்பொல வைத்திருப்பார்…..” என்று வளரும் இக்காட்சி எண்ணிப்பார்க்கையிலேயே நாவில் நீர் சொட்ட வைக்கிறது (அசைவ உணவுக்குப் பழகியவர்களுக்கு இவ்வர்ணனை அதே அளவு நீரைச் சொட்ட வைக்குமா என்று தெரியவில்லை).

தலைமுறை இடைவேளைக்குச் சாட்சியாய் ஒரு வரியேனும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம்பெறுகிறது. ‘அப்பாவின் அரிவாள்மனை’யில், வெங்காயம் நறுக்கும் ‘கட்ட’ருக்கும், அரிவாள்மனைக்குமான வேறுபாடு முக்கியமானது. கட்டரில் ஒரே அழுத்தத்தில் நறுக்கப்படும் ஒரே அளவிலான துண்டங்களில் என்ன சுவாரசியம் இருக்க முடியும் என்ற தொனியில் அமையும் ஆசிரியரின் கேள்வி, வாசகராகிய நம்மையும் பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது.

‘மனிதர்க’ளில் இடம்பிடித்திருக்கும் ‘கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்’ நம் பள்ளி கேண்டீனையோ, தெருவில் இருக்கும் ‘அண்ணாச்சி கடை’யையோ தவறாமல் நினைவுபடுத்தும். ஊர் உலகத்தில் எங்கேயும் கிடைக்காத சிறுசிறு பொருட்கள் கிடைக்கும் புதையலாகவே விளங்குகிறது கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர். டிபார்டமெண்ட் ஸ்டோர் என்றால் நம் கண்முன் விரியும் ‘எம்டன் மகன்’ திரைப்படத்தில் வருவது போன்ற மிகப் பிரம்மாண்டமான ‘ஜினல் ஜினல் ஒரிஜினல்’ கடையல்ல அது. ஒரு சின்ன பெட்டிக் கடையை ஒத்த அளவுடையது. அவ்வளவே. என் பேனா முனையை உடைத்தபின்னர் அதற்கான புதிய ‘நிப்’ – எந்தப் பெரிய ‘பேப்பர் ஸ்டோர்’ஸிலும் இல்லாதது – கேண்டீனில் வாங்கியது ஞாபகம் வந்தது. அதை வைத்துத்தான் பொதுத்தேர்வின் இரு தேர்வுகளை எழுதினேன் என்பதும் சொல்லியே ஆக வேண்டிய தகவல்கள். இவ்வாறு படிக்கும்போது எண்ணங்களைப் பின்னோக்கிச் சுழற்றிப் பெருமூச்சையோ, புன்சிரிப்பையோ வரவழைப்பதில் ஆசிரியரின் வெற்றி இருக்கிறது.

ரஷ்ய எழுத்தாளர்களைக் கொண்டாடிக் கூத்தாடும் எழுத்தாளர்களின் எழுத்துப் பாணியைப் பார்த்துப் பார்த்துப் புளித்துச் சலித்த எனக்கு, நிச்சயமாக இந்த இயல்பான எழுத்து ஒரு புத்துணர்சியை அளித்தது என்று சொல்வேன். ‘பெஸ்ட் செல்லர்’ வரலாற்றில் இடம்பிடிக்க முடியாவிட்டாலும் – அது தமிழிற்குக் கிடைத்த மிகப்பெரிய ‘வரம்’ (!?) – காலத்தின் கண்ணாடியாக விளங்குகிறது ‘இடம் பொருள் மனிதர்கள்’.

நூல்: இடம் பொருள் மனிதர்கள்
ஆசிரியர்: மாதவ பூவராக மூர்த்தி
வெளியீடு: விருட்சம் பதிப்பகம்
பக்கங்கள்:156
விலை: 130

தம்பி


ரஜினியின் ‘படிக்காதவன்’ தொடங்கி தனுஷின் ‘வேலையில்லாப் பட்டதாரி’ வரை அண்ணன் எனும் உறவைத் தெய்வத்தினும் மிகைப்படுத்தியாயிற்று. அல்லாவை வணங்கும் அனைவரும் தீவிரவாதிகள் என்றும், பட்டை நாமம் போட்டவன் எல்லோரும் சாதி-மதம் பார்ப்பவர்கள் என்றும் பதிந்துவிட்ட எழுதப்படாத விதி போல, அண்ணன் என்றால் தியாகி, தம்பி என்றால் ஊமைக் குசும்பன் என்றும் ஒரு நியதியை நிலைநாட்டிவிட்டோம். (இது ஒருபுறமென்றால் கல்லூரியில், “அண்ணங்கடா, தம்பிங்கடா” என்றும், “தங்கச்சி, நல்லாயிருக்கியாம்மா?” என்றும் வெளியில் பேசிவிட்டு உள்ளே கூத்தடிக்கும் கும்பல்கள் மறுபுறம். அவற்றைப் பற்றிப் பேச இது நேரமல்ல.)

உண்மையில் குழந்தை வளர்ப்பும் அனுபவத்தில் மிளிரும் ஒரு கலையே. எனவே மூத்த வாரிசுக்கில்லாத சில வாய்ப்புகள் இளையவர்களுக்குக் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் சற்றே அதிகம். அவ்வளவே. அதற்காக ஒரேயடியாக மாடிக்குச் சென்று சாராயத்தைக் குடித்துவிட்டு, ‘ஊதுங்கடா சங்கு’ என்று ஆடும் அண்ணன்கள் எல்லாம் “தியாகிடா” என்று வசனம் பேச முடியாது. உளவியல் ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் ஒரு கண்ணோட்டம் இது.

பார்த்திபன் நடித்திருந்த ‘கண்ணாடிப் பூக்கள்’ என்ற திரைப்படம் இதன் உச்சக்கட்டம். கண்டுகொள்ளப்படாமல் விடப்படும் ஒரு சிறுவன் (மூத்த மகன்), இளைய வாரிசுக்குக் (கைகுழந்தை) கிட்டும் அன்பையும், அரவணைப்பையும் கண்டு வெதும்பி வன்மம் கொள்வதாகச் சித்தரிக்கும் இத்திரைப்படத்தைப் போல, உண்மையான குடும்பங்கள் இருக்குமா எனும் கேள்வியை ஆராய வேண்டியிருக்கிறது.

சரி, அப்படி என்ன இந்த அண்ணன்கள் தியாகங்கள் செய்துவிட்டனர் என்றுதான் பார்ப்போமே! ’தாமரை’க் கட்சிக்குப் பிடித்தமான புராணங்களில் (புருடாக்களில்) ஒன்றான இராமாயணத்தை எடுத்துக்கொள்வோம். இராமர் சீதையுடன் காட்டுக்குச் சென்றார் என்பதற்காக உடன் இலக்குவன் செல்கிறான் என்றால் யார் தியாகி? ‘டூயட்’டும், ‘கிளைமாக்ஸ்’ ஹீரொயிஸமும் இராமருக்குத்தான் என்றால், எதற்கு இப்படி ஒரு அல்லக்கைக் கதாபாத்திரம்? (உடனே பொங்கியெழுந்து ‘கம்பராமாயண’த்திலிருந்து “இலக்குவனும் ஹீரோதான்” என்பதற்கான சான்றுகளை முன்வைக்கும் முன்பாக மனசாட்சியைத் தொட்டுச் சிந்தியுங்கள். இலக்குவன் எனும் தம்பி ‘செகண்ட் ஃபிடில்’ தானே?)

அட, புராணங்களை விடுங்க! தினசரி சம்பவங்களையே பார்ப்போம். அப்பா, அம்மா இல்லாத நேரத்தில் வரும் விருந்தினர்கள் கூட, “அண்ணன் கிட்ட சொல்லிட்டுப் போறோம்” என்று தம்பிகளைப் பொருட்டாகவே மதித்ததாக ‘எஸ்.டி.டி.’ இல்லை. அவர்கள் கையில் வைத்திருக்கும் பழங்கள், இனிப்பு வகைகளைக் கூட்த் தப்பித்தவறித் தரமாட்டார்கள். அவ்வளவு இளக்காரம்!

ஒரே பள்ளியில் இருவரும் படித்தால் யாரும் “இவனோட அண்ணன் அவன்” என்று சொன்னதில்லை. அண்ணன் படித்தவன், படிக்காதவன் எவனாயிருந்தாலும் தம்பியாகப் பட்டவன் “அவனோட தம்பி”தான். நல்லதோ கெட்டதோ, “உங்க அண்ணன் அப்படியெல்லாம் இருந்தான், செய்தான்” என்று முதலில் சொல்லிவிட்டுத்தான் ஆசிரியர்கள் தம்பியான என் போன்றவர்கள் குறித்துப் பேசுவார்கள். பேச்சின் ஆரம்பம், முதன்மைப் பாத்திரம் அனைத்தும் அண்ணன்களாகவே இருப்பர்.

தம்பி என்பவன் ஒரு காரியத்தில் தோல்வியுற்றால், “உங்க அண்ணன் அப்படி செஞ்சான்” என்று தோற்றவனைத் தேற்றாமல், வென்றவனைப் புகழ்வார்கள். அதே தம்பி அக்காரியத்தில் வெற்றி பெற்றாலும், “உனக்கென்னப்பா? செல்லப்பிள்ளை நீ! உனக்குக் கெடைச்ச பல விஷயம் உங்க அண்ணனுக்குக் கிடைச்சதில்லை” என்று எளிதாகக் கடந்துவிடுவார்கள். உண்மையில் ‘திறமை’ எனும் சொல்லுக்கான அர்த்தம் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அப்பாவி தம்பி மட்டும்தான். மகிழ்ச்சியான ஒரு வெற்றி கிட்டினால் கூட, “உண்மைலயே இது நம்ப தெறமையாலதான் கெடைச்சுச்சா? இல்ல, அம்மா-அப்பா நமக்குச் கொஞ்சம் அதிகமா செல்லம் குடுத்ததுனால வந்ததா இதெல்லாம்?” என்று தொடங்கி, “நமக்குத் தெறமையே இல்லையோ? உண்மைலயே நாம எதுக்கும் லாயக்கு இல்லதான் போல” என்பது வரை சிந்தித்து மைண்ட்வாய்ஸிலேயே சோகப் பாட்டுக்களை ஓடவிட்டுக் குமுறுவது தம்பி மட்டும்தான்.

குடும்பத் தலைவராகப்பட்டவர் கல்யாணம், காட்சி என்று எதற்கேனும் போகமுடியாத சமயங்களில் அண்ணன் சென்றால், “தலைச்சன் வந்துட்டான்” என்று மெச்சும் சமூகம், தம்பி சென்றால் “அண்ணன் எங்கப்பா? நீ மட்டும் வந்துருக்க?” என்றுதான் வினவும். அந்தக் கேள்வியோடு விட்டால் பரவாயில்லை. “சின்னப்புள்ளைய அனுப்பி அவமரியாத பண்ணிட்டாங்க” என்று வீறுகொண்டெழுந்து, உறவைப் பகைத்துக்கொண்ட ‘கலாச்சாரக் காவலர்க’ளைப் பார்த்த அனுபவம் எனக்குண்டு. தம்பியாகப்பட்டவன் நசையாக உணரும் தருணங்கள் இவை. “*த்தா, என்னையெல்லாம் பாத்தா மனுஷனாத் தெரியலயா?” என்று அடிவயிற்றிலிருந்து கிளம்பும் புகை வாயடைப்பினால், காது வழியே வெளியேறும்.

தம்பிக்கு முன்பாகவே படிப்பை முடிக்கும் அண்ணன், வேலைக்குச் சென்றுவிட்டால், “அய்யய்யோ… நாமளும் சாத்திட்டு ஒழுங்காப் படிச்சு வேலைக்குப் போகணும்” என்ற நடுத்தர வர்க்க அழுத்தம் தானாக உள்சென்றுவிடும். மாறாக அண்ணன் என்பவனுக்கு வேலை கிடைக்காவிட்டாலும் “அய்ய்ய்யோ… அம்மா அப்பா சீக்கிரம் ரிட்டையர் ஆயிடுவாங்க. நாம ஒழுங்கா வேலைக்குப் போயிடணும் கடவுளே” எனும் பாரமும் தம்பியுடையதுதான். இதையெல்லாம் சொல்ல எந்த வி.ஐ.பி.யும் சிகரெட் புகையை ஊதிக்கொண்டு வரமாட்டார்கள்.

அண்ணன் மேற்படிப்புப் படித்தால், “அவன் அவ்ளோ படிச்சிருக்கான்; நீயும் படி” என்றொரு பரிந்துரையையும், அவன் மேற்படிப்பு வேண்டாம் என்று முடிவெடுத்தால், “அவன் படிக்கலை, நீ படி” என்ற கிறுக்குத்தனத்தையும் பக்கத்துவீட்டு வம்பு மாமியிடமும், எதிர்வீட்டுப் பென்ஷன் தாத்தாவிடமும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் எதிர்கொள்வது தம்பிதான்.

’அடையாளம்’, ‘தனித்தன்மை’ என்றெல்லாம் பெனாத்திக்கொண்டிருக்கிறார்களே இந்தத் தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் எனும் கொள்ளைக்கூட்டம்… அந்தக் கும்பலில் தம்பியாக ஒரே ஒருவர் பிறந்திருந்தால் கூட, இந்த தனித்தன்மையை ஏற்படுத்திக்கொள்வது எவ்வளவு பெரிய வேலை என்பது தெரிந்திருக்கும்.

கடமைக்குத் ‘தம்பியுடையான் படைக்கஞ்சான்’ என்று பழமொழியை மட்டும் வைத்துக்கொண்டு தம்பி எனும் உறவைப் பெருமைப்படுத்திவிட்டோம் என்று எவனாவது மார்தட்டினால், அவனது பொடனியில் அடித்து முதலில், “சீ… மூடிட்டு உக்காரு” என்று சொல்லவேண்டும். அரிதினும் அரிது மானிரடாய்ப் பிறத்தல்! அதனினும் அரிது தம்பியாய்ப் பிறத்தல்! அதனினும் அரிது சொந்தமாய் ஓர் அடையாளம் ஏற்படுத்துதல்!

Wednesday, April 18, 2018

கதை கதையாம், காரணமாம்!


கல்வியை மேம்படுத்த வந்த ‘கல்வித் தந்தைகள்’ பெருகிவிட்ட இன்றைய சூழலில், கற்றலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளாக விஷுவல் லேர்னிங், ஆக்டிவிட்டி-பேஸ்டு லேர்னிங் என்று புதிய சொலவடைகள் ஆங்கிலத்தில் பிறந்துவிட்டன. முறை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது; அதில் எதைக் கற்பிக்கிறோம் என்பதையும் ஆராயாமல் இருக்க முடியாது. நேராக ‘வாட் இஸ் யுவர் நேம்?’ என்று பரங்கியர் வேடம் அணிவதில் ஏனோ நமக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

தமிழையே ஒழுங்காகக் கற்றிராத குழந்தைகளிடம் ஆங்கிலத்தைத் திணிப்பதும் ஒரு வன்முறைதான். என்னதான் ஆங்கிலம் கற்றாலும் நம்மால் வெள்ளையர்களைப் போல் பேசவும், எழுதவும் முடியாது எனும் நிதர்சனத்தை உணர்தல் நலம். இதனால், தமிழின் அரிச்சுவட்டினையும் அறியாமல், ஆங்கிலத்தையும் அரைகுறையாகப் படித்த அரைவேக்காட்டு மாணவர்களையே உருவாக்க முடிகிறது.

அதை விடுங்கள். சிஸ்டத்தை மாற்றத்தான் தமிழகத்தில் ஒருவர் அரசியலில் பகுதிநேரமாகக் குதித்திருக்கிறாரே! கற்றல் தொடர்பான மேற்கண்ட பத்திகளை எழுதக் காரணம் அவரல்ல, என் பாட்டிதான்.

பாட்டியின் ஒவ்வொரு நாளும் கண்டிப்பான நேர நிர்ணயங்கள் கொண்டவை. காலையில் நான் பதினொரு மணிக்குச் சாப்பிட்டாலும் மதியம் ஒரு மணிக்குச் சரியாக “சாதம் பெசையட்டா?” என்ற கேள்வி திண்ணையிலிருந்து வரும். திண்ணையில்தான் பன்னிரண்டு மணியிலிருந்து ஒரு மணி வரை அமர்ந்து செய்தித்தாளை விரித்துவைத்துக்கொண்டு தலைப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக்கொண்டிருப்பார். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரைச் சிறிய எழுத்துக்களையும் படிக்க முடிந்த அவரால் இன்றைக்கு அதெல்லாம் முடிவதில்லை. இதன் விளைவாகத் தலைப்பை மட்டும் அரைகுறையாகப் படித்துவிட்டு வந்து, “இன்னிக்கு பேங்க் எல்லாம் ஸ்ட்ரைக்காமே? உங்க அப்பா ஆஃபீஸ் போகலதானே?” என்றும், “ரேஷன் அரிசியில் முறைகேடுன்னு போட்டிருக்கான், நேத்திக்கு நீ வாங்கிண்டு வந்த சக்கரையில என்ன இருக்கோ?” என்றும் புலம்புவார் (முன்னது முந்தைய நாள் நடந்த வேலைநிறுத்தத்தைப் பற்றிய செய்தி எனவும், பின்னது புதுச்சேரியிலோ, சிதம்பரத்திலோ, விழுப்புரத்திலோ ஏதோ ஒரு நியாயவிலைக் கடையில் நடந்த சம்பவம் எனவும் நாம்தான் விவரித்துக் கூற வேண்டியிருக்கும்).

கிரிக்கெட்டும், சினிமாச் செய்திகளும் பாட்டியின் வாசிப்பில் முக்கியமான பக்கங்கள். முன்னரெல்லாம் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என்றும் சச்சின் என்றும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தவருக்கு இன்று த்ரிஷா, தனுஷா (தனுஷைத் தனுஷா என்றுதான் சொல்வார்), கோலி, தோனி என்று தெரிவதற்கு அவரது பரந்துபட்ட வாசிப்பனுபவம் (!?) மிக முக்கியமான காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

பாட்டியின் செய்தித்தாள் வாசிப்பில் நுணுக்கமான சில அம்சங்கள் உள்ளன:
தரையில் இருக்கும் செய்தித்தாளுக்குச் சமமாக இவரும் ’நமாஸ்’ செய்வது போல் தலையைக் குனிந்திருந்தால் மிகவும் உன்னிப்பாக ஒரு செய்தியை வாசிக்கிறார் என்று அர்த்தம். பெரும்பாலும் அது மாத ஓய்வூதியம் தொடர்பான செய்திகளாயிருக்கும்.
படிக்கும்போது வாய்விட்டுப் படிப்பது அவரது வழக்கமில்லை. என்றேனும் ஒரு நாள் வாய்விட்டுப் படிக்கத் தொடங்கினாரென்றால், அது ஒரு கவன ஈர்ப்புப் போராட்டம். நம்மிடம் ஏதோ சொல்ல விழைகிறார் என்று இடம் சுட்டிப் பொருளுணர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்க வேண்டும் (நரேந்திர மோடியின் பாட்டி இதையெல்லாம் செய்திருந்தால் மோடிக்கும் கவன ஈர்ப்புப் போராட்டம் குறித்த புரிதல் இருந்திருக்கும்; விவசாயிகளைக் கண்டுகொள்ளாத அரக்கருக்கு அவரது பாட்டி கூட ஒரு காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை). பொதுவாக இப்பேச்சுக்கள் ஒரு செய்தி தொடர்பானதாகத் தொடங்கி, பின்னர் பல்வேறு கதைகளுக்கும், பின்னோக்கு நிகழ்வுகளுக்கும் வழிவகுக்கும்.

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதுதான் நேற்று இரண்டு அந்தாதிக் க(வி)தைகளைச் சொன்னார். பள்ளிப்பருவத்தில் அவற்றைக் கேட்டிருந்தாலும் நினைவில் நின்றதில்லை. ஏனோ தெரியவில்லை, நேற்று அவர் சொன்னது அப்படியே மனப்பாடமாக இருக்கிறது. அவை பின்வருமாறு:

(உண்ணாமல் கனைக்காமல் மௌனமாயிருக்கும் கழுதையின் தியானத்தை உடைக்க)
கொய கொய கன்னே!
கன்னுந் தாயே!
மாடு மேய்க்குற ஆயா!
ஆயன் கை கோலே!
கோலிருக்கும் கொடிமரமே!
கொடிமரத்திலிருக்கும் கொக்கே!
கொக்கு நீராடும் குளமே!
குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலையா!
வலையன் கை சட்டியே!
சட்டி செய்யும் குயவா!
குயவன் கை மண்ணே!
மண் மேல் இருக்கும் புல்லே!
புல்லைத் தின்னும் கழுதையே!
உன் பேரென்ன?
(இதைக் கேட்டவுடன் கழுதை தன் பெயரைச் சொல்வதற்காக ‘இஹிஹி’ என்று இளித்துவிட்டதாம்)
-----
கதை கதையாம், காரணமாம்!
காரணத்துல ஒரு தோரணமாம்!
தோரணத்துல ஓரொழக்காம்!
ஓரொழக்குல புல்லு மொளச்சிதாம்!
புல்லப் பிடுங்கி மாட்டுக்குப் போட்டாளாம்!
மாடு பால் தந்ததாம்!
பாலைக் கொண்டுபோய் பாட்டி கிட்டக் குடுத்தாளாம்!
பாட்டி பட்சணம் தந்தாளாம்!
பட்சணத்தைக் காக்காய்க்குப் போட்டாளாம்!
காக்கா கரி தந்ததாம்!
கரியை கொண்டுபோய்க் கண்ணான் கிட்ட குடுத்தாளாம்!
கண்ணான் குடம் குடுத்தானாம்!
குடத்தை எடுத்துக் கெணத்துல போட்டாளாம்!
கெணறு தண்ணி குடுத்துதாம்!
தண்ணியச் செடிக்கு ஊத்தினாளாம்!
செடி பூ தந்ததாம்!
பூவைப் பிள்ளையாருக்குப் போட்டாளாம்!
பிள்ளையார் கொழுக்கட்டை குடுத்தாராம்!
கொழுக்கட்டையைக் கோமாளிகிட்ட குடுத்தாளாம்!
கோமாளி ‘சைங் சைங்’ என்று கூத்தாடினானாம்!
(இதன் இன்னொரு வடிவம்:
…..
…..
பூவைப் பிள்ளையாருக்குப் போட்டாளாம்!
பிள்ளையார் புத்தி குடுத்தாராம்!
---
(ஓர்+ஒ(உ)ழக்கு; உழக்கு என்பது உணவின் அளவைக் கணக்கிடும் ஒரு முறை;
கண்ணான் – பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழில் செய்பவராம்;
‘சைங் சைங்’ என்று சொல்லும்போது இரு கைகளையும் இடுப்பில் வைத்து ஆட வேண்டும்)

இதைப்போல ‘ஃபுட் செயின்’ என்று சொல்லப்படும் உணவுச் சங்கிலி குறித்த பாடங்களை எளிதாக விளக்கலாம். இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தையால் கூட எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பாடல் முறையை வைத்துக் கணிதம், அறிவியல் என்று எதையும் விவரிக்க முடியும். சற்றே சிரத்தையெடுத்துச் சொல்லிக்கொடுத்தால், குழந்தைகளின் கற்பனாசக்தியையும், புரிந்துகொள்ளும் திறனையும் பல மடங்கு உயர்த்துவதற்குத் துணைபுரியும் இம்முறை, அவர்களது சுற்றுவட்டாரத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது (’கண்ணான் என்றால் யார்?’, ‘ஒழக்கு என்றால் என்ன?’ போன்ற கேள்விகள் குழந்தைகளிடம் எழுவது நிச்சயம்).

அதைவிட்டு விட்டு, ஓ ஃபார் ஓயஸிஸ் (O For Oasis) என்று ஒரு காணொலியைக் காண்பித்துவிட்டால் அக்குழந்தைக்குப் புரிந்துவிடும் என்று நம்புவது நகைப்பிற்குரியது. ‘விஷுவல் லேர்னிங்’ போன்ற முறைகள் மிகவும் பயனுள்ளவைதாம். ஆனால், ‘டீ.ஏ.வி.’ குழந்தைகளுக்கான அளவுகோலிலேயே நாம் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். சாதாரண, சாமானியரின் குழந்தைக்குப் புரிய வைப்பதில்தான் இருக்கிறது தாய்மொழியின் உதவி.

Sunday, March 25, 2018

மணி சார் சொம்புகளும், ‘செக்கச் சிவந்த வேலை’யும்

ஒரு கதையின் முடிவானது வாசகனின் சிந்தனைக்கான திறப்பை உருவாக்க வேண்டும் என்பது பரவலான கருத்தாக்கம். ஆண்டன் செக்காவின்வான்காவில் தொடங்கி, சுஜாதாவின்வானத்தில் ஒரு மௌனத் தாரகைவரைஓப்பன்-எண்டட்சிறுகதைகளுக்கான உதாரணங்களாகக் கூற முடியும். ஒரு குறிப்பிட்ட நிகழ்வு சார்ந்த முற்றுப்பெறாத கண்ணிகளாக இவை வாசகர்களைஅதன் பிறகு என்னவாயிருக்கும்?” என்று சிந்திக்கத் தூண்டுபவை.

சில நேரங்களில் எழுத்தாளர்களே மனத்தில் நினைக்காத சில தேற்றங்கள் வாசகர்களின் சிந்தனை அலைகளால் தோற்றம் பெரும். இன்றைய இணைய உலகில்ஃபேன் தியரிஎன்று சொல்லப்படும் வகையறாக்கள் இவை. ‘ஃபேன் தியரிக்கள் ஒரு இங்கிதத்துடன் இருப்பதுதான் பொதுவான இயல்பு, அல்லது நகைப்புக்குரியதாக இருக்கும். ஆனால், நம் தமிழ்த்திரையுலகின் முக்கியமான இயக்குனராகப் போற்றப்படும் மணிரத்னம் () மணி சாரின் திரைப்படங்கள் குறித்தான அவரது தொண்டர்கள்/பக்தாள்களின் கருத்தாக்கங்கள்அதுக்கும் மேலரகம். தெரியாத்தனமாக கேமராவை ஒரு இடத்தில் வைத்துப் படம்பிடிக்கப்படும் ஒரு காட்சி கூடஅது மணி சாரால தான் அப்டி யோசிக்க முடியும். ஹீ ஹேஸ் ட்ரைட் டூ கேப்ச்யூர்…” என்று புகழப்படுகிற இடத்தில் அவர் வைக்கப்படுள்ளதால் தான், ‘காற்று வெளியிடைபோன்ற குப்பைகளை எடுத்துவிட்டு அவரால் இன்றும் திரையுலகில் வண்டி ஓட்ட முடிகிறது (மணிரத்னம் ஒரு நல்ல இயக்குன்ரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் அவர்தான் தலைசிறந்தவர் என்று சொல்வதை விட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது).

இப்படி மணி சாரைப் புகழ்ந்து, போற்றி, வணங்கி, வழிபட்டு, ஆராதித்து, பூஜித்து, தெய்வமாக மதிக்கும் ஒரு விசிறிக்கு மூளையில் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. மணி சாரின் காவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப் புளகாங்கிதம் அடைந்த அவர், ‘வேலைக்காரன்திரைப்படத்தைப் பார்க்கச் செல்கிறார். அவரது அனுபவங்களும், அனாலிஸிஸுமே இனிவரும் பத்திகள்.

——

படம் பாக்கப் போனேன்டா அம்பி. ஒரே கூச்சலும், விசிலும், சத்தமுமாத் தியேட்டர்ல உக்கார முடியலை. டீசன்ஸி தெரியாத ஆடியன்ஸா இருக்கா அவா எல்லாரும். ஆனா நல்ல வேளை நம்ம பரத்வாஜ் ரங்கன் இருந்தார். அவர்கூட உக்காந்து படத்தைப் பாத்துட்டேன்.

(1) ‘நாயகன்’கள்: என்னத்துக்கு இப்போ சிவகார்த்திகேயனும், ஃபஹத் ஃபாசிலும் நடிக்கணும்? இருக்கவே இருக்கா நம்ம மாதவனும், அரவிந்த சாமியும். ஒண்ணும் சொல்றதுக்கில்லை. என்னத்தையோ கண்றாவியா எடுத்து வெச்சுருக்கான் இந்த மோகன் ராஜா.

(2) தலைப்பு: எதுக்கு இப்டி ‘வேலைக்காரன்’னு லோக்கலாப் பேரு வெச்சுருக்கான்னே தெரியலை. படம்தான் கம்யூனிஸம் பேசறதோல்லியோ? அழகாக் கவித்துவமாசெக்கச் சிவந்த வேலைன்னு வெச்சுருக்கலாம். செவப்பு தானே எப்புடியும் அவாளோட கலர்! ஹ்ம்அதெல்லாம் இந்த மோகன் ராஜா சண்டாளனுக்கு எங்க தெரியப் போறது?

(3) வசனங்கள்: நீளம், நீளமாப் பேசிண்டே இருக்கா, “உலகத்தின் மிகச் சிறந்த சொல், ‘செயல்’”ன்னு. “சிறந்தது செயல்”ன்னு சின்னதா முடிச்சிருக்கலாம். டையலாக்கே எழுதத் தெரியலை இவாளுக்கு. சுஹாசினி மேடம் பெருசு பெருசா எழுதினாலும் எப்டி ஒரு லிட்டெரரி வேல்யூ இருக்கும்! இங்க அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எதோ எழுதி வெச்சுருக்கான்.

(4) பாடல்கள்: எதுக்கு மூணரை நிமிஷத்துக்குப் பாட்டு ஓடறது? அதுவும் அந்த மாதிரி மூணு பாட்டு வெச்சுருக்கான். ஒரே பாட்டை மட்டும் வெச்சு அதையே பிச்சுப் பிச்சுப் படம் முழுக்க அங்கங்க இன்க்லூட் பண்ணிருக்கலாம். அதுக்கெல்லாம் உலக சினிமா அறிவு வேணும், ஒரு ரசனை வேணும். எல்லாரும் மணி சார் ஆயிட முடியுமா? பாட்டுக்கு நடுவுல பேசிண்டே இருக்கணும். அப்போதான் இயல், இசை, நாடகம்ன்னு எல்லாத்தையும் ஸ்க்ரீன்ல ஒரே நேரத்துல காமிக்க முடியும். அந்த ஸ்ட்ராட்டெஜி எல்லாம் இந்த லோக்கல் பய மோகன் ராஜாவுக்கு எங்க தெரியும்?

(5) லொக்கேஷன்: படத்துல ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாட்டுல மட்டும்தான் ரயில்வே ஸ்டேஷனே வருது. இவா படம் எடுத்துருக்கற கம்யூனிட்டியச் சுத்தி எத்தனை ரயில்வே ஸ்டேஷன் இருக்கு? வாஷர்மேன்பேட், சென்ட்ரல் அதெல்லாம். அங்க போயிட்டு ஒரு மூணு சீன் எடுத்துருக்கலாம். தட் வுட் ஹேவ் ஆடட் மோர் வேல்யூ டு த மூவி வாட்சிங் எக்ஸ்பீரியன்ஸ். பிகாஸ், ரயில்வே ஸ்டேஷன்ல எல்லாம் போர்ட்டர்ஸ் இருப்பாளோன்னோ? அவா எல்லாரும் செவப்பு ட்ரெஸ் தான் போட்டுண்டிருப்பா. அப்டியே கேமராவ அங்க ஃபோக்கஸ் பண்ணி கம்யூனிஸம்ங்கற ஐடியாலஜியக் கன்வே பண்ணிருக்கலாம். ரயில்வே ஸ்டேஷன் இல்லாத படம் எப்டி ஒரு க்வாலிட்டியக் குடுக்க முடியும்? இம்பாசிபிள்!

(6) தியரி: மோகன் ராஜா மணி சாரோட டெக்னிக்ஸ் எல்லாம் நெறைய அப்ஸார்ப் பண்ணிருக்கார். அதுனாலதான் இந்தப் படம் ஓரளவுக்குப் பாக்கற மாதிரி இருக்கு.  அஃப் கோர்ஸ், மணி சாரோட இன்ஸ்பிரேஷன் இல்லாம உலக சினிமால யாருமே படம் எடுக்க முடியாது. நாம இதெல்லாம் சொன்னா ஒத்துக்க மாட்டா. சோ, நான் என்னோட தியரியச் சொல்லிடறேன்.

படத்தோட ஸ்டார்ட்ல சிவகார்த்திகேயன் ஒரு ரேடியோ சேனல் ஆரம்பிக்கறார். அது மாடில இருக்குற ஒரு ரூம்ல செட்டப் எல்லாம் பண்ணி வெச்சுட்றார். ஆனா, ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாட்டுக்கு டேன்ஸ் ஆட்றதுக்குக் கீழ வர்றார். சோ, மேல இருந்து கீழ எறங்குற ஒரு ‘சைனுசாயிடல் கேர்வ்’ ஆரம்பிக்கறது இங்கதான். இது ஒரு மெட்டஃபர். அதாவது லோக்கல் ஆடியன்ஸ்க்குப் புரியுற மாதிரி சொல்லணும்னா ‘குறியீடு’.

அந்தப் பாட்டுல ‘தக்காளி’ன்னு ஒரு வார்த்தை வருது. அது ஒரு மைண்ட்ப்ளோயிங் தாட் ப்ராஸஸ். என்னன்னு நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், தக்காளி என்ன கலர்ல இருக்கு? செவப்பு. அதாவது, தக்காளி இஸ் ய சிம்பல் ஆஃப் கம்யூனிஸம். அதே போல, தக்காளியோட வெலை எப்புடி இருக்கு? ஏறி, எறங்கிண்டே இருக்கோல்லியோ? அந்த மாதிரி இந்த வேலைக்காராளோட வாழ்க்கை ஒரு ஸ்டெபிலிட்டி இல்லாம இருக்குன்னு சொல்ல வரா. இதுவும் அந்த ‘சைனுசாயிடல் கேர்வ்’ ரெஃபெரன்ஸ் தான்.

இதோட கண்டின்யுவேஷன் அடுத்த எல்லாப் பாட்டுலயும் தெரியறது. ‘இறைவா’ சாங்ல நயன்தாராவோட காஸ்ட்யூம் கலர யாராவது நோட் பண்ணேளா? செவப்பு. அகெய்ன் ய கம்யூனிஸம் ரெஃபெரன்ஸ். அதுல பாத்தேள்னா ‘எரிமலையிலும் நீராடலாம்’ன்னு ஒரு லைன் வருது. இதுவும் ஒரு மெட்டஃபர். எரிமலை காவிக்கலர்ல இருக்கும்; நீர் நீலக்கலர்ல இருக்கும். அதாவது, ஹிந்துத்துவாவையும், ஸப்ரெஸ்ட் பீப்புளையும் கன்வேர்ஜ் பண்ற பாயிண்ட் அதுதான். இதுவும் ஒரு கம்யூனிஸ்ட் தாட் ப்ராஸஸ்ன்னு வெச்சுக்கோங்கோளேன்.

‘எழு வேலைக்காரா’ பாட்டுல கூட பாத்தேள்னா, கம்யூனிஸ்ட் கொடியெல்லாம் வெச்சுண்டு ஆடிண்டிருக்கா எல்லாரும். சோ, படத்தோட நேரேஷன் ஒரு ஸீம்லெஸ்ஸாப் போறது. இப்போ இந்தப் பாட்டுல சில பெக்யூளியாரிட்டிஸ் எல்லாம் நாம பாக்க வேண்டியிருக்கு. “ஓயாதே, தேயாதே, சாயாதே”, “ஆறாதே, சோராதே, வீழாதே”ன்னு ரெண்டு லைன் வருதோன்னோ அந்தப் பாட்டுல? அதுல கேர்ஃபுல்லாக் கவனிச்சேள்ன்னா “சாயாதே” அண்ட் “வீழாதே” ரெண்டு வார்த்தைலயும் கரெஸ்பாண்டிங்கா இருக்குற ஸ்வரங்கள் வந்து அஸெண்டிங்கா இருக்கும். அதுல என்ன சொல்ல வரான்னா, லேபரர்ஸோட ஒரு ரெவல்யூஷனை, ஒரு அப்ரைஸ் அகெய்ன்ஸ்ட் த கேப்பிடலிஸ்ட்ஸை எக்ஸ்ப்ளெய்ன் பண்றா.

இது எல்லாத்தையும் வெச்சுப் பாக்கும்போது மணி சார் அளவுக்கு யாராலயும் படம் எடுக்க முடியாதுங்கறது மறுபடியும் ப்ரூவ் ஆயிருக்கு. இருந்தாலும், நம்ம மணி சாரோட இன்ஸ்பிரேஷன்ல படம் எடுத்த மோகன் ராஜா இன்னும் கொஞ்சம் ‘கடல்’, ‘காற்று வெளியிடை’ எல்லாம் ரிப்பீட்டடாப் பாத்தார்னா ஒரு க்ளியரான விஷனோட அவரால படம் பண்ண முடியும்னு தோண்றது.


——

Wednesday, March 21, 2018

பாலை மட்டும் கொடுத்தாப் போதும், காமதேனு!

கௌதம் வாசுதேவ் மேனன்டூயல் ஜானர்திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று நடிகர் செம்மல் தொப்பை சிலம்பரசனை நடிக்க வைத்துஅச்சம் என்பது மடமையடாஎன்றொரு காவியத்தைப் படைத்தார். ‘எங்கப்பா டீ.ஆரு, நான் அடிப்பேன்டா பீருஎன்று படப்பிடிப்புக்கு வராமல்பெப்பேகாட்டிய சிம்புவை முன்பின்னாக எப்படியோ படம்பிடித்துப் படத்தை ஒப்பேற்றி விட்டார்கள். ஆனால் பிரச்சனை அதுவல்ல; ‘டூயல் ஜானர்படமாக வந்திருக்க வேண்டியது, ‘இடைவேளைக்கு முன், இடைவேளைக்குப் பின்என்று இரண்டு வெவ்வேறு திரைப்படங்களையே பார்ப்பது போன்ற குழப்பத்தை ஏற்படுத்தியதுதான்.

இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தை விளக்குகிறேன். சமீபத்தில்தமிழ் இந்துகுழுமம், ‘காமதேனுஎன்ற வார இதழ் ஒன்றைத் தொடங்கியுள்ளது. ஒன்றரை இதழ்களைப் படித்து முடித்துவிட்ட நிலையில், இந்தமள்டிப்பிள் ஜானர்பிரச்சனை அப்பட்டமாகத் தெரிகிறது. பாலை மட்டுமே கொடுக்க வேண்டியகாமதேனுவிடம் சாராயம், தண்ணீர், ரசாயனம் என அனைத்தையும் கறக்க முயன்று தோற்றிருக்கின்றனர். இதிலிருக்கும் குழப்பங்களைப் பலவகையாகப் பிரிக்கலாம்.

(1) நாளிதழ் - வார இதழ்:

முதலில் ஒரு வார இதழோ, மாத சஞ்சிகையோ நாளிதழைப் போல் அனைத்து வகையான செய்திகளையும் தொகுக்கத் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. ‘காமதேனுவின் முதல் சறுக்கல் அங்குதான் தொடங்குகிறது. விளையாட்டு, திரைப்படங்கள், சமூகம், ஆக்ரோஷமான பதிவுகள், அரசியல், வரலாறு, புவியியல், பூகோளம், அறிவியல், தமிழ் (முதல் மற்றும் இரண்டாம் தாள்), ஆங்கிலம் (முதல் மற்றும் இரண்டாம் தாள்) என்று ஏதோ பொதுத்தேர்வின் மாதிரி வினாத்தாள் போல அனைத்தையும் குழப்பியடித்து ஏதோ முயற்சி செய்திருக்கிறார்கள். சற்றே விசனத்துடன், “கேவலமா இருக்கு; தயவு செஞ்சு இப்டிக் கூமுட்டத்தனமாப் பண்ணாதீங்கஎன்றுதான் மன்றாட வேண்டியிருக்கிறது.

(2) தெளிவின்மை:

ஆனந்த விகடனில் இலக்கியத்திற்கான பெரிய பரப்பு இல்லையென்று ஆசிரியர் குழுவிற்குப் புரிந்த பின்னர், சற்றே மெனக்கெட்டுதடம்என்ற இதழை வெளியிடுகிறார்கள். வெகுசன இலக்கிய வெளியில்தடம்ஒரு முக்கியமான பத்திரிக்கை. ‘ஆனந்த விகடனின் பரந்த வாசகர் வட்டமும், இலக்கிய ஆர்வமுள்ளவர்களும் படிப்பதற்கான ஒரு பொதுப்புள்ளியாக இருக்கிறதுதடம்’. திராவிட இலக்கியம், தமிழ் இடதுசாரிப் படைப்புகள் குறித்த சில தொடக்க நிலை புரிதலுக்காகவேனும் கண்டிப்பாக அது உதவுகிறது (என்ன ஆச்சரியமென்றால், “இலக்கியம் புனிதமானது; திராவிட இலக்கியம் குப்பைஎன்று உளறிக்கொண்டிருக்கும் ஜெயமோகன் மாதிரியான ஆட்களும் எழுதுகிறார்கள். எங்கே போயிற்றோ இலக்கியப் பாசமும், நேசமும்? ஆனால் அந்த அதிமேதாவி  தடத்தில் எழுதும் விஷயங்களில் தற்பெருமைதான் முக்கால்வாசி நிறைந்திருக்கிறது என்பது முக்கியமானது). இதைத்தான் செய்யப்போகிறோம் என்பதில் தெளிவான ஒரு வரையறைகளை வைத்துக்கொண்டு அவர்கள் செயல்படுவதுதான்தடத்தின் வெற்றிக்குக் காரணம்.

ஆனால், ‘காமதேனுவை எப்படிக் கொண்டுசேர்ப்பது எனும் ஆசிரியர் குழுவின் தெளிவின்மை, தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. ‘ரூல்ஸ் ராமானுஜம்அம்பியைப் போல் சமூக விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கும்போது, “அய்யய்யோ, ரொம்ப நேரமா கருத்து சொல்லிட்டோமோ!” என்று சுதாரித்து, உடனேரெமோவாக மாறி, கிசுகிசு பக்கங்கள் வருகின்றன.

(3) வரிசையின்மை:

‘தினத்தந்தி’யைப் போல் கண்ட இடத்தில் கண்ட செய்தியைப் பதிவிடும் நாளிதழை நான் இதுவரை கண்டதில்லை. வார இதழ்களில் ‘காமதேனு’விற்கு நிச்சயம் அந்த இடத்தைக் கொடுக்கலாம். ஒரு வரைமுறையேயின்றி, திடீரென்று ஒரு விளையாட்டுச் செய்தி, அடுத்தது அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஏதோ ஒரு பெட்டிச் செய்தி என்று ‘ஏனோதானோ’ செய்திருக்கிறார்கள். 25 ரூபாய் கொடுத்து வாங்கும் இளிச்சவாயன்கள் எல்லாம் ‘இந்து’ என்ற ஒரே பெயருக்காக மட்டுமே வாங்குகிறோம் என்பதை ஆசிரியர் குழு விரைவில் உணர்தல் நலம். “உன் பேருக்குப் பின்னாடி இருக்குர சுப்பிரமணியம்ன்ற பேர எடுத்துட்டா உனக்கு அடையாளமே கெடையாது” என்ற வி.ஐ.பி. திரைப்பட வசனம் போல, இவர்களும் குழுமத்தின் பெயரைக் கூவி விற்றுக் காசாக்க முடியாது என்பதைக் கூடிய சீக்கிரம் அறிய வேண்டும்.

(4) வாசகர்களைக் குறைத்து மதிப்பிடல்:

‘காலச்சுவடு’, ‘உயிர் எழுத்து’, ‘உயிர்மை’ போன்ற  இதழ்கள் குறுகிய வாசகர் வட்டம் உடையவை. ஆண்டுச் சந்தா, ஆயுள் சந்தா கட்டும் உறுப்பினர்களை நம்பியே நடத்தப்படும் இதழ்கள் இவை. ஆழமான இலக்கிய உரையாடல்களும், படைப்புகளும் நிறைந்து வழியும் அவற்றை லேசாக மாற்றியமைத்தால் கூட அவர்களது வியாபாரம் கணிசமாகப் பெருகும். ஆனால், இலக்கியத்தையும், இதழியலையும் வெறும் வியாபாரமாக மட்டுமே பார்க்காமல் இயங்கும் ஆசிரியர் குழுக்கள் மேற்கூறிய அனைத்து இதழ்களிலும் உண்டு (மனுஷ்யபுத்திரன் குறித்து கருத்து கூற விரும்பவில்லை).

தரமான படைப்புகளை வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டுமென்ற நோக்கில், நீண்ட நெடிய 16 பக்க, 24 பக்க நேர்காணல்களையும், கதைகளையும் அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். ‘அட்டேன்ஷன் ஸ்பேன்’ என்று சொல்லப்படும் விஷயம் இணைய உலகில் குறைந்துகொண்டே வந்தாலும் கூட, தரத்தில் எவ்விதக் குறைபாடும் இல்லாமல் இயங்கிவரும் இதழ்களுக்கு மத்தியில், எந்தக் கட்டுரை/கதை/இன்ன பிற இதர விஷயங்களையுமே இரண்டு, மூன்று பக்கங்களுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வது கயமைத்தனம்.

இந்த மூன்று பக்க நெரிசலின் விளைவு, வாசகனுக்கு அவசரகோலத்தில் ‘எடிட்’ செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவமே கிடைக்கிறது. ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெஸ்ஸர்ட் என்று ‘பார்பெக்யூ புஃபே’ சாப்பிடும்போது ‘ஆர்கஸம்’ போன்ற ஒரு பரவச நிலை கிட்டினாலும், அந்த நாள் முழுவதும் மயக்கமாக, வயிற்று வலியுடன் அவஸ்தைப்படுவதைப் போல, நிறைய படித்ததைப் போலிருந்தாலும், கடைசியில் ஒரு திருப்தியே இல்லை.

(5) ஈயடிச்சான் காப்பி:

‘இந்தியா டுடே’, ‘புதிய தலைமுறை’யிலிருந்து முதல் ஐந்தாறு பக்கங்களுக்கான வடிவமைப்பைத் திருடிக்கொண்டவர்கள், ‘ஆனந்த விகட’னில் வரும் அந்தக் குறும்புக் குரங்காரை மாற்றி இங்கும் ஒரு கோமாளியை அலைய விட்டிருக்கிறார்கள். முக்கியமாக அந்தக் குரங்கு கூறும் ஒற்றைவரி நையாண்டிகள் சிரிக்க வைப்பதும், சிந்திக்க வைப்பதுமாக இருக்கும்; இங்கோ, எதையோ சொல்ல வேண்டுமென்ற நோக்கில் ஒற்றைவரி நக்கல்களை அங்குமிங்குமாய்த் தூவி விட்டிருக்கிறார்கள்.

இன்னும் நிறைய வருத்தங்களும், கோபங்களும் இருக்கின்றன. ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், “50 ரூபாயை இந்த ரெண்டு இதழ்களுக்கு வேஸ்ட் பண்ணியிருக்க வேண்டாமோ?” என்ற கேள்விதான் எழுகிறது. வரும் நாட்களில் கொஞ்சம் அறிவுடன் செயல்படுவார்கள் என நம்புவோம். ஏனெனில், “எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிட்டிருக்கோம்என்று வேறு யாராவது சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், ‘இந்துகுழுமத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் குழு அப்படிச் சப்பைக்கட்டு கட்டினால், அது முழுப்பொய்.


கேட்டதெல்லாம் கிடைக்கும்என்று அட்டையில் அவர்களது தாரக மந்திரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘ஆன்மீக அரசியல்என்ற சொற்பதத்திற்குப் பிறகு நான் அறியும் இரண்டாவது முட்டாள்தனமான பதம் இதுதான். கேட்டதெல்லாம் கிடைப்பதற்கு இது ஒன்றும்நீல்கிரிஸ்’, ‘மோர்போன்ற சூப்பர் மார்க்கெட் அல்ல; வார இதழ்.

Tuesday, March 20, 2018

துதிக்கை உடைய குழந்தைச் செல்வங்கள் - ராமன் சுகுமாரின் ‘என்றென்றும் யானைகள்’

விலங்குகள் குறித்த அறிவியல் பூர்வமான தரவுகளும், தகவல்களும் என் ஆர்வத்தைத் தூண்டியதேயில்லை. ஒரே விதிவிலக்கு, அவற்றின் எண்ணிக்கை குறைவது குறித்த செய்திகள் மட்டுமே. எளிதில் கோபத்தை வரவழைக்கக் கூடியவை அத்தகைய செய்திகள். அதன் நீட்சியாகக் கோயிலில்ஒப்படைக்கப்படும்யானைகள், ‘கோடை விழாவில் சவாரி செய்யப் பயன்படுத்தப்படும் ஒட்டகங்கள், குதிரைகள் போன்றவற்றில் ஈடுபாடும் இருந்ததில்லை (சின்ன வயதில் யானையிடம் ஆசி வாங்கியதை நினைத்து வெட்கப்படுகிறேன்). வீட்டுப் பூனைக் குடும்பமான டுப்பியும் அதன் வாரிசுகளும், பிறகு பப்புவும் அதன் வானரங்களுமாக எனது அன்பைப் பிற ஜீவராசிகளுக்கும் வெளிப்படுத்த வழிசெய்தன (திருவான்மியூரில் நான் தின்பண்டம் ஊட்டி வளர்த்த தாய்ப்பூனை குட்டி ஈன்றபோது, பப்புவின் மறுபிறப்பாகவே அதைக் கண்டேன் - மூடநம்பிக்கையையும், பகுத்தறிவையும் ஒதுக்கிவைத்து).

விலங்குகள் பற்றியதாக நான் வாசித்த முதல் புத்தகம், ஜெயமோகனின்யானை டாக்டர்’. கார்ட்டூன் நெட்வொர்க்கில் காட்டுவதை விட ஒரு நூலில் வார்த்தைகளால் தத்ரூபமாக ஒரு புதிய அனுபவத்தைக் கடத்த முடியும் என்ற நினைப்பே புதியதாகவும், கிளர்ச்சி தருவதாகவும் இருந்தது.

அதன்பின், இப்போதுதான் மற்றொரு விலங்கு தொடர்பான நூலைப் படிப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. ‘யானை டாக்டரை வாசிக்கத் தூண்டிய அப்பா தான் ராமன் சுகுமார் எழுதி, டாக்டர் ஜீவானந்தத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டஎன்றென்றும் யானைகள்எனும் நூலையும் அறிமுகம் செய்துவைத்தார். இரண்டுமே யானை தொடர்பானவை என்பது முற்றிலும் ஆச்சரியமாக இருந்தாலும், யானைகள் குறித்த ஒரு சிறிய அறிமுகத்துடன் இப்புத்தகத்தை அணுகுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இவர் ஒரு ரிஸர்ச் ஃபெல்லோ. அவரோட தீஸிஸ்க்காகக் காட்டுல எல்லாம் இருந்தப்போ கெடைச்ச எக்ஸ்பீரியன்ஸ எல்லாம் தொகுத்து எழுதிருக்கார்என்றபடி அப்பா இந்த நூலைக் கொடுத்தபடியால், கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாகப் படிக்காமலே வைத்திருந்தேன். ‘தீஸிஸ்என்ற ஒற்றை வார்த்தைதான் தயக்கத்திற்கான காரணம். தகவல் களஞ்சியமாக, இயந்திரத் தனமாக, மந்த கதியில் பயணிக்கும் நூல் எனும் அபத்தமான கண்ணோட்டத்துடனேயே இந்நூலை வாசிக்கத் தொடங்கினேன். அதற்காக நெடுஞ்சாண்கிடையாக நூலாசிரியரின் காலடியில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோருகிறேன். ஏனெனில் 96 பக்கங்கள் கொண்ட இந்நூலின் ஒரு வரியிலோ, சொல்லிலோ கூடநான் ஒரு ..எஸ்.சி. ஆராய்ச்சியாளன்எனும் அகந்தை தென்படவில்லை (அதே மூச்சில் இதையும் சொல்லிவிடுகிறேன்; ‘யானை டாக்டரில் ஜெயமோகனின் சில அகஸ்மாத்தான மேதாவித்தனங்களை நினைவில் அசைபோட முடிகிறது).

ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள (ஆறாவது அத்தியாயமான பின்னுரையைக் கணக்கில் சேர்க்கவில்லை) புத்தகத்தின் முதல் பத்தியிலேயே நூலின் சாராம்சம் வாசகனுக்குக் கடத்தப்படுகிறது. ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் எறக்காமல்’, ஒரு குழந்தையின் மனநிலையிலிருந்தே ஆசிரியர் எழுதியிருக்கிறார் என்று அடித்துச் சொல்லலாம். ஜார்ஜ் . ஷெல்லர் எனும் விலங்கியலாளரின் வாசகத்துடன் தொடங்குகிறதுபெரும் பிரச்சனைஎன்று தலைப்பிடப்பட்டுள்ள முதல் அத்தியாயம். பருவமெய்திய பிலிகிரி எனும் யானைக்கு முதன்முறையாக மதம் பிடிக்கும் காட்சியை அசலாக வார்த்தைகளில் விவரிக்கிறார் ஆசிரியர் (இந்நூலைப் படித்துமுடித்துவிட்டு, யானைகள் குறித்த பல காணொலிகளைக் கண்டபோது, அவர் சொல்வது அனைத்தையும் மூன்றாம் பரிமாணத்தில் அனுபவிப்பது போன்ற அமிழுணர்வு ஏற்பட்டது என்பது சத்தியம்). 1980-1990 என கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தைச் சத்தியமங்கலம் மற்றும் அதனைச் சுற்றிய வனப்பகுதிகளிலும், மலைகளிலும் கழித்த ஒருவரின் முதல் விவரணை 16 வயது யானைக்கு மதம் பிடிப்பதாகத் தொடங்குகிறது என்பது முற்றிலும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி.

முதல் வயதில் பால்குடி மறவாப் பச்சிளம் குழந்தையாக அலையும் அழகியலும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் வயதில் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்களும் யானைகளின் மேல் இனம்புரியாத ஒரு பாசத்தை வரவழைக்கின்றன. உதாரணத்திற்கு யானைகளில் கண்கள் கீழ்நோக்கும் இயல்பானது இரண்டாம் வயதிலிருந்துதான் தொடங்குகிறது என்பது எவ்வளவு முக்கியமான பதிவு!

மனிதன் தோன்றிய ஆதிகாலத்தில் பெண்ணே ஒரு கூட்டத்திற்குத் தலைவியாயிருந்தாள் என்பது ஒரு வரலாற்றுப் பதிவாக மாறிப்போன இன்றைய நிலையில், யானைக் கூட்டத்திற்கு இன்றும் ஒரு பெண் யானையே தலைமை தாங்குகிறது என்பது ஆறுதலளிக்கக் கூடிய விஷயம். மூர்க்கத்தனத்தை நொடிப்பொழுதில் வெளிப்படுத்தும் ஆண்யானை கூடப் பெண்யானைக்குக் கட்டுப்படுகிறது. ஆனால், ஆபத்து நேரத்தில் களிற்றின் மூர்க்கத்தை விட, பிடியின் மூர்க்கம் பலமடங்கு அதிக சக்தி வாய்ந்தது என்பது வியப்பளிக்கிறது. முக்கியமாகபுட்புட்புட்என்று காலைத் தரையில் அடித்துச் சன்னமான, ஆனால் நீண்ட தூரம் ஒலிப்பதான ஒரு சப்தத்தின் மூலமாக ஆபத்து வருவத்தை யானைகள் மற்ற யானைக்கூட்டங்களுக்குத் தெரிவிக்கின்றன என்பது உண்மையாகவே மூக்கில் விரலை வைக்கத் தூண்டும் தகவல். "அவ்வோசை குறித்த ஒரு முழுமையான புரிதல் கடைசிவரை ஏற்படவேயில்லை" என்று தெரிவிக்கிறார் ஆசிரியர்,

நூல் முழுவதும் ஆசிரியருக்கு உதவி புரிந்த பல்வேறு ரேஞ்சர்களையும், பாதுகாவலர்களையும், சமையற்காரர்களையும் இன்ன பிற இதர உதவியாளர்களையும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார். அவர்களின் நுண்மையான உதவிகளைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கிறார். ஒரு கட்டத்தில் யானை வேட்டையில் இட்டுபட்டிருந்த வீரப்பனைப் பிடிக்கக் களத்தில் இறங்கி, வீரமரணம் அடைந்த சிதம்பரம் எனும் அதிகாரியைப் பற்றிநேர்மையும், உறுதியும் கொண்ட சிதம்பரம் போன்ற நல்ல வன அலுவலர் சுட்டுக்கொல்லப்படுவது பெரிய துரதிருஷ்டமே. எனக்கு நல்ல நண்பரான அவரது இழப்பு எனக்கு மட்டுமல்ல, காட்டுக்கும், கானுயிர்களுக்கும் பெரும் இழப்புதான்என்று பதிவு செய்கிறார்.

மீனாட்சி, செம்பகா என்று பெண்யானைகளுக்குப் பெயர் வைத்து அதனதன் கூட்டங்களை ஆய்வு செய்கிறார். இவை தவிர, காதில் கீறல் விழுந்திருக்கும் யானை, ஒற்றைத் தந்தம் உடைய விநாய் என்று பல்வேறு யானைகள் ரத்தமும், சதையுமாக உயிர்வாழும் முக்கியப் பாத்திரங்களாகவே நூலெங்கும் வலம்வருகின்றன. செந்நாய்கள், புலிகள் போன்ற விலங்குகளால் ஆபத்து ஏற்படும்போது யானைகள் ஒன்று கூடுகின்றன; குட்டி யானைகள் கூட்டதின் நடுவே பத்திரமாகக் காக்கப் படுகின்றன. பொதுவாகக் குழுவாக நடந்து செல்லும்போது மூத்த பெண்யானை முன்னேயும், ஆண்யானை பின்னேயுமாகச் செல்கின்றன என்று பல்வேறு சம்பவங்களை அனாயசமாகத் தெரிவிக்கிறார்.

ராமன் சுகுமார் எனும் ஆய்வாளரும், அவருக்கு உதவிய ஒரு சில நண்பர்களும், அலுவலர்களும் என்று ஒருசில மனிதக் கதாபாத்திரங்களே நூலை ஆக்கிரமித்திருந்தாலும், அவர் பயணிக்கும்ஜீப்ஒரு குறிப்பிடத்தக்க அங்கம் வகிக்கிறது. அவ்வப்போதுமக்கர்செய்யும் ஹைதர் காலத்து ஜீப்பானது, சே குவேராவின் சுயசரிதையானமோட்டார் சைக்கிள் டைரிஸ்’-ன் சில அத்தியாயங்களை நினைவுபடுத்தியது. சே அந்த வண்டியை வைத்துக்கொண்டு பட்ட பாட்டைப் போலவே, ராமன் அவரது ஜீப்புடன் அல்லோலகல்லோலப்படுகிறார். ஜீப் பள்ளத்தாக்கின் நுனியில் போய் அதலபாதாளத்தை நோக்கி நிற்கும்பொழுது, அவ்வழியே போகும் ஒரு லாரியிலிருந்து ஓட்டுனரும், பிறரும் உதவி செய்து ஜீப்பை மீட்கின்றனர். இதுபோன்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகள் வாசிப்பனுவத்தைச் செப்பனிடுகின்றன.

ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தில் புகைப்படம் எடுத்து யானைகளிடம் மாட்டுவது, அவற்றின் மோப்ப சக்தி வளையத்திற்குள் மறைந்து கொண்டு நோட்டமிட்டு மாட்டுவது என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கத்தி மேல் நடக்கும் வாழ்க்கையையே ஆசிரியர் வாழ்ந்திருக்கிறார் என்பது கண்கூடாகத் தெரிகிறது; எனினும், அவற்றை ஒரு மெல்லிய ஹாஸ்ய வர்ணனையுடன் அவர் விளக்குவதுதான் சுவையைக் கூட்டுகிறது.

தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது அதிகமானது, இறக்குமதி செய்யப்பட்ட தந்தங்களுக்கான வரியைக் கூட்டியபின்னர்தான் என்பது அதிர்ச்சியைத் தருகிறது. இத்தந்த வேட்டைக்குக் காரணம் தந்தங்களிலிருந்து செய்யப்படும் சிற்பங்கள்தாம் என்பது மிகுந்த வலியையும், வேதனையும் அளிக்கிறது. தொழில்நுட்பத்திலும், வேட்டையாடும் தந்திரங்களிலும், ஆயுதங்களிலும் மேம்பட்ட கடத்தல்காரர்கள்/கொலைகாரர்கள் ஒரு புறம் இருக்க, அவர்களை எதிர்க்கக் கிட்டத்தட்ட நிராயுதபாணிகளாகவே நிற்கும் வனச்சரக அலுவலர்களையும், ரேஞ்சர்களையும் நினைக்கும்போதே ரத்தம் சில்லிடுகிறது.

இந்த எல்லையற்ற நாசவேலையின் விளைவாக 3:1லிருந்து 5:1 வரை இருக்கவேண்டிய பெண்:ஆண் யானைகளின் விகிதம், 10:1 வரையெல்லாம் 1990-களின் தொடக்கங்களில் வீழ்ச்சியடைந்ததாகத் தெரிவிக்கிறார் ஆசிரியர். 90களுக்குப் பிறகு இவர் முதுமலைப் பகுதிகளிலும் யானைகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீர்குலையும் இயற்கையின் சமநிலை குறித்த ஒரு கையறுநிலை அவரிடம் தென்படுகிறது. நூலின் தொடக்கப் பக்கங்களிலேயே இடம்பெறும் ஒரு பத்தி, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.

நான் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற பின்னர் எனது இயற்கை அழகு ரசனை உருவானது எனலாம். மனிதன் நிலவைத் தொட்ட காலம் அது. பூமியை விடவும் நிலவின் மீது உலகம் அதிகம் கவனம் செலுத்திய காலம். அதேவேளையில் மனிதனின் வாழ்வாதாரமான பூமியும், இயற்கையும் வரலாறு காணாத மாசுபடுதலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறது.”

இயற்கையைக் காத்தல் எனும் ஆசிரியரின் இலக்கில், யானைகள் என்பவை ஒரு முக்கியமான அங்கமாக மாறிவிட்டன என்றே கூற வேண்டும். யானைகளின் வாழ்வு, உணவு, பழக்கவழக்கம் எனத் தொடங்கி, பருவ மாற்றத்தால் அவை சந்திக்கும் பிரச்சனைகள், தண்ணீரின்றி இறக்கும் அவலம் என்று விரிந்து, கடத்தல், கொள்ளை என அதிர்ச்சியில் ஆழ்த்தி, நல்ல எதிர்காலத்திற்கான ஒரு எதிர்பார்ப்புடன் முடியும் இந்நூல் விலங்கு ஆர்வலர்கள் மட்டுமின்றி, இயற்கை குறித்த புரிதல் வேண்டுமென நினைக்கும் அனைவருமே அவசியம் படிக்க வேண்டிய நூல். தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ள டாக்டர் ஜீவானந்தம் பாராட்டுக்குரியவர். மூலத்தின் சுவை குறையாமல் - இன்னும் சொல்லப் போனால், சுவையைக் கூட்டி - தமிழுக்குக் கொண்டுவந்திருப்பது கவனத்திற்குரியது.

நூல்: என்றென்றும் யானைகள்
ஆசிரியர்: ராமன் சுகுமார்
தமிழில்: டாக்டர் ஜீவானந்தம்
வெளியீடு: தமிழினி பதிப்பகம்
பக்கம்: 96

விலை: 60