Monday, March 12, 2018

‘ஆண்ட்ரப்ரென்யூர்’னா என்னங்கய்யா?

கல்லூரிக் காலங்களில் (ஒரு வருடம் முன்னர்தான்) தை, மாசி மாதங்களில் திடீரென்று ஒரு கூட்டம் கோட்டுசூட்டு போட்டுக்கொண்டு அங்குமிங்குமாய்த் திரிந்துகொண்டிருந்தபோது, “இவனுங்க யாருடா கோமாளிங்க!” என்ற ரீதியில் இருந்தது. “அடிக்கிற வெயிலுக்கு நீ ஸ்வெட்டர் போடும்போதே நெனைச்சேன்என்றசிவா மனசுல சக்திபட வசனம்தான் நினைவுக்கு வந்தது. தம்மைத்தாமேஆண்டர்ப்ரென்யூர்ஸ்என்று அழைத்துக்கொள்ளும் ஒரு கோஷ்டி (தமிழில்கோஷ்டியைகோட்டிஎன்று எழுதலாமா என்று தெரியவில்லை; கோட்டி எனும் சொல்லுக்குப் பைத்தியம் என்றொரு அர்த்தம் இருக்கிறது. இந்தக் கோட்டுசூட்டுக் கும்பலை அப்படி சொல்வதொன்றும் தப்பாகிவிடாது என்பது என் எண்ணம்) இரண்டு, மூன்று நாட்களுக்கு விழா ஒன்றை நடத்தியது. மாணவர்களுக்குள் இருக்கும் சுய தொழில் ஆளுமைகளை வெளிக்கொணர்வதற்கான ஒரு வாய்ப்பு என்றெல்லாம் பீலா விட்டுதமிழகத்தின் மாபெரும் குரல் தேடலுக்கு இணையான களேபரத்தைக் கூட்டிக் கொண்டிருந்தனர்.

நல்ல விஷயம்தானே பங்கு!” என்று கேட்கும் முன்பாக “இன்னும் கொஞ்சம் டீப்பாப் பாப்போம்”. அக்குழுமத்தின் நிர்வாகக் குழுவில் இருந்த மாணவர்கள் அனைவரும் பத்துத் தலைமுறைக்குச் சொத்துச் சேர்த்துக் கொழுத்த குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களொன்றும் தொழில் தொடங்குவதைப் போன்ற முடிவிலிருந்ததாகவும் தெரியவில்லை; அப்படியே தொடங்கினாலும் திவாலானால் காப்பாற்ற துபாயிலும், சவுதியிலும் எண்ணெய்க் கிணற்று முதலாளிகளுக்குக் காலணி துடைத்த பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டி விடலாம். ஆனால், அவர்களின் மாயையில் மயங்கி உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் பலர் ஊரின் ஒதுக்குப்புறங்களிலிருந்து வந்த மாணவர்கள். இந்த அப்பாவி ஜீவன்களை வைத்து எடுபிடி வேலைகளைச் செய்து, தாங்கள் மட்டும் கோட்டுசூட்டுடன் புகைப்படத்திற்குக் காட்சி தந்தனர், எம் பெருமைக்குரியஆண்ட்ரப்ரென்யூர்ஸ்’. வருகை புரிந்த சிறப்பு விருந்தினரில் ஒருவர் தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர் அண்ணன் ஹிப் ஹாப் ஆதி என்பது கூடுதல் கொசுறு.

இதையெல்லாம் எதுக்கு மாப்ள போட்டு உடைச்சிட்டிருக்க!” என்று கேட்கும் பெருமக்களே, நிற்க. நாம் குப்பைகளைக் காசாக்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? அதாங்க இந்த மின்கழிவுகளைக் கொட்டி ஒரு நாட்டையே குப்பைக்கூடமாக்கி அதற்கு விலையாகப் பிச்சைக்காசைத் தூவி எறியும் ஒரு வியாபாரம். அதைப் போலவே, எழுத்தைக் காசாக்கும் ஒரு நிறுவனத்தின் மாண்புமிகு நிறுவனரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரது பெருமுயற்சியில் வெளிவந்த எமது கல்லூரி மாணவர் ஒருவர் எழுதிய கண்டங்களையும், பிரபஞ்சங்களையும் தாண்டிய ஒரு நாவல் குறித்து அம்மாணவர் பெருமையாக உரையாற்றியது தனி வரலாற்று நிகழ்வு (ஆசையாக அப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்கி 225 ரூபாய் (+ 50 ஷிப்பிங் கட்டணம்) செலுத்திய பாவத்திற்காக அதை வலிந்து படித்துப் பின்னர் ஆங்கிலமே படிக்க வேண்டாம் என்று நான் முடிவெடுத்த கதை ஒரு தனி அத்தியாயமாக எழுதக்கூடிய சுவாரசியம் கொண்டது). 25000 ரூபாயோ, 50000 ரூபாயோ கொடுத்தால் கண்ட கழிசடைக் குப்பையையும், பளபள அட்டையுடன் பதிப்பிக்கும் நிறுவனம் அது.

எப்படியோ சர்க்கஸ் கூடாரம் போல் நடந்து முடிந்தது திருவிழா. உண்மையிலேயே கல்லூரிப் பருவத்தின்போது சுண்டியிழுக்கும் ஒரு கருத்தாக்கம், ஆண்ட்ரப்ரென்யூர்ஷிப் எனப்படும் சுயதொழில் தொடங்கும் ஆவல். இது கல்லூரி அத்தியாயம்.

இப்போது நான் வேலைசெய்யும் நிறுவனத்திற்கு வருவோம். இங்கு இதே போல சுண்டியிழுக்கும் சில சொலவடைகள் உண்டு. ‘க்ரோத் ஹேக்கர்’, ‘தாட் லீடர்என்று இது ஒரு தனி அகராதி. அதாவது, “நாம பொருளை விக்கல, பொய்யை விக்குறோம்என்றவேலைக்காரன்திரைப்பட வசனத்தில் வரும்பொய்யை விற்கும்ஆசாமிகள் இவர்கள். “பர்சனலி திங்க்என்று ஆரம்பித்து, ஒரு நீண்ட பத்தியைத் தட்டச்சு செய்து முடித்து, பின்னர் வெறுமையாகத் தோற்றமளிக்கும் அப்பத்தியில் எம்.பி.. வகுப்புகளில் பயன்படுத்தும் சில கவர்ச்சிகரமான வார்த்தைகளை மலைச்சாரல் போல் ஆங்காங்கே தூவிவிட்டால் முடிந்தது கதை.

இப்படிப் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்களும், வாயில் வடை சுடுபவர்களும், உண்மையானஆண்ட்ரப்ரென்யூர்களை விடப் பவிசு காட்டுவார்கள் (கல்லூரியில் இந்த ஆண்டும் இரண்டாவது சீஸனாக அந்த கோட்டுசூட்டு விழா பல்லிளித்ததாகச் செய்தி) என்பது பலர் அறியாத உண்மை.

ஒருவழியாகப் புலம்பல்கள் முடிந்தன. இப்போது நம் கதைக்கு வருவோம் (நாஞ்சில் நாடனின் கதைகள் சில இப்படித்தான் தொடங்கும்; உதாரணத்திற்குக்கிழிசல்என்ற சிறுகதையைப் படித்துப் பார்க்கவும்). திருவான்மியூரில் நான் தங்கியிருக்கும் தெருவில் ஒரு பானிபூரி கடை உண்டு. ரொட்டி, கட்லெட் போன்ற சமாச்சாரங்களெல்லாம் அவர்களைப் போல நம்மால் செய்யவே முடியாது. நான்கைந்து பேர் கொண்ட குழு அது. ஒரு 13 வயது மதிக்கத்தக்க பையன், ஒரு 25-30 வயது ஆடவன், ஒரு 35-40 வயது ஆண், ஒரு 18-20 வயது இளைஞன் - இவ்வளவுதான் கடை. திருவான்மியூர் ஆர்.டி. அலுவலகத்திற்கருகில் சாலையோரமாக ஒரு கடையும், என் தெருவில் இன்னொரு கடையுமாக அமர்க்களமான வியாபாரம். இன்று அவர்கள் விற்கும் விலைக்குப் பத்து மடங்கு தர வேண்டுமானாலும் நான் அங்கு உண்ணத் தயார்; ஏனெனில், ஒரு நாள் நான் இருமலுடன் சென்றால், “அண்ணா, ஜொரத்தோட ரொட்டி சாப்படாதீங்க; இட்லி கானாஎன்று தமிழும், இந்தியுமாகக் கலந்து பேசுவர். தன் கடைக்கு வருமானம் வரும் வாய்ப்பிருந்தும், வேண்டாமென மறுக்கும் எத்தனை உணவகங்கள் இங்கிருக்கின்றன?

விஷயம் என்னவென்றால், சமீபத்தில் அந்த ஆர்.டி. அலுவலகம் அருகில் சாலையோரம் இருந்த கடைகளையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டனர். இது நடந்தது கடந்த வாரம். செவ்வாய் அல்லது புதன் இருக்கலாம். அன்று இரவு உணவிற்காகச் சென்றபோது, வழக்கமான உற்சாகம் வடிந்திருந்ததுபையாவிடம். “க்யா ஹுவா பையா?” என்று எனக்குத் தெரிந்த ஒரு வாக்கியத்தை அவிழ்த்து விட்டேன். ஆனால், பையாவிற்கு என் வண்டவாளம், தண்டவாளமெல்லாம் தெரியும்; அவனே மழலைத் தமிழில் விளக்கினான். மூடப்பட்ட கடையிலிருக்க வேண்டிய ஆட்கள் இருவரும் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டிருந்தனர்.

என்னண்ணே பண்ணுவ இப்ப?” என்று கேட்டதற்கு, “ஒரு ஒன் வீக் பாக்கலாம் பையா. அல்லாம் செரி ஆயிடும். சரி ஆகலைன்னா யோசிக்கணும், ஊருக்குப் போறதான்னுஎன்றான். பீஹாரிகள் அவர்கள். அங்கு சரியான வேலை இல்லாததால்தான் இங்கு வந்திருந்தனர். ஆனால், அவன் சொன்னதிலிருந்து எனக்கு ஒன்று புரிந்தது; திரும்ப ஊருக்குப் போவது நல்ல முடிவல்ல என்பது அவனுக்கும் தெரிந்துதான் இருந்தது.

அதன்பிறகு இன்றுதான் கடைக்குச் சென்றேன். சிரித்துக்கொண்டே உபரியாக ஒரு குலாப்ஜாமூனை நீட்டினான். “என்ன இன்னிக்கு நீயே குடுக்குற? காசு நெறைய வேணுமா என்ன?” என்று நக்கலடித்தேன். “புது கடை தொறந்தாச்சு பையா; இஷ்வீட் எடுத்துக்கோங்கஎன்று கையில் திணித்தான். விசாரித்தபோதுதான் தெரிந்தது. மருந்தீஸ்வரர் கோவில் அருகில் .சி.ஆர். பேருந்துகள் நின்று செல்லும் இடத்தை ஒட்டிய ஒரு சந்தில் புதிதாக ஒரு கடையைத் திறந்துவிட்டனர். “வாடகை தோடா ஜாஸ்தி, தோ ரேட்டு ஜாஸ்தி பண்ணியாச்சுஎன்று அசால்ட்டாகச் சொன்னான். இந்த வார இறுதிக்குள் அந்தத்தோடா ஜாஸ்திகடைக்கு ஒருமுறை செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

நம் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை உணர்ந்து, விடாமுயற்சியுடன் செயல்பட்டுச் சிறிய அளவிலோ, மாபெரும் அளவிலோ தொழிலில் வெற்றி பெறுபவர்தான்ஆண்ட்ரப்ரென்யூர்’. இந்த பையாவைச் சிறப்பு விருந்தினராகக் கோட்டுசூட்டுக் கோஷ்டிக்குப் பரிந்துரைக்கலாம் என நினைத்திருக்கிறேன். நிச்சயம் நிராகரிக்கப்படுவேன். ஏனெனில், அவர்களைப் பொறுத்தமட்டில் அலங்கார உடைகளும், மேற்கத்திய ஆங்கிலமும், குளிர்சாதன அறையில் ஏற்பாடு செய்யப்படும் ஒரு கேலிக்கூத்துமே சுயதொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள்.


வாருங்கள், நாமும் பானிபூரிக்குப் போட்டியாகப் பகோடா தொழில் தொடங்குவோம். ‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா’; ‘அச்சே தின் ஆயேகா’.

Wednesday, February 28, 2018

பாட்டி எனும் மனிதி

மம்மியும் டாடியும் ஆண்ட்டியும் அங்கிளும்
ரெட் சட்னியும் வைட் சட்னியும் மிண்ட் சட்னியும்
ரைசும் டாலும் டொமாட்டோவும் ஆனியனும்
எங்கும் பரவிய சிங்கார நகரத்திலும் கூட
மாறாத ஒரே பொதுப்பெயர்
பாட்டிதான் போலும்

கட்டிலில் படுத்தபடி வெற்றுவாயில் எச்சிலூற
அண்டசராசரத்தையே அரைத்துச்
செரிமானக் குழாய்க்குள் தள்ளுவாள்
என் பாட்டி
கண் மங்கிச் செவியடைத்துத்
தோல் சுருங்கி மயிர் நரைத்து
வலுவிழந்து எடை குறைந்து
தனித்து விடப்படும் நிலையிலும்
தன்னைச் சுற்றிய, தனதான
எல்லையில்லாப் பரப்புடன்
எந்நேரமும் உரையாடும் பாட்டிக்குப்
புத்தகங்களல்ல
காற்றுதான் உற்ற துணை

டி.எஸ். பட்டணம் பொடி மட்டையைப்
பிரித்துச் சலித்து
ஒரு சிட்டிகைப் பொடியைக்
கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே வைத்து
காற்றின் துணையுடன் உறிஞ்சுவாள்
அழகாக;
அலாதியான நட்பு பாட்டிக்கும் காற்றுக்குமானது.
அவள் பொடியுறிஞ்ச உதவும் காற்று
அவளது கடந்தகாலக் கதை கேட்டுச் சிலிர்க்கும்;
என்றும் ஓயாத தன் ஓட்டத்தைக் காற்று பகிர
ஓய்ந்து சாய்ந்த தன் வாழ்க்கையைப் பாட்டி பேசுவாள்;
தனியாய்ப் பேசுகிறாள் என்று சொல்வோம் நாம்.

புட்டி மருந்தும் உருண்டை மாத்திரையும்
இவைபோக அவ்வப்போது
பாட்டியின் அமைதியைத் துளைக்கும் ஊசியும்
பிரதான உணவுகளான பின்னர்
அவள் என்ன ருசிப்பாள்? எப்படிப் புசிப்பாள்?
வாய் கோணி, கண்ணை இறுக்கி மூடுவாள்
ஒருமுறை இருமுறை
மும்முறை பலமுறை
நாம் பார்க்கும் வரையில்
பரிதாபமாய்.
உச்சுக்கொட்டலினூடே கொடுக்கப்படும்
ஒரே பிஸ்கட்டை
வேணாம்டாஎன்றபடி அணைப்பாள்
இருகரம்கொண்டு.
உடலுக்குத்தானே சர்க்கரை நோய்?
மனத்திற்கும் உண்டோ பிணி!

என்னைத் தெரியுதா பாட்டி?” -இவ்வினாதான்
பாட்டியைத் தொந்தரவு செய்யும்.
அருகில் வந்து அமர்பவர் அனைவரும்
நினைவின் சூன்யத்தால் அந்நியரான பொழுதில்
துருபிடித்த காலச்சக்கரத்தைச் சுழற்றுவாள்
பின்னோக்கி;
பயனில்லை என்று அவளுக்குத் தெரியும்,
நமக்கும்தான்.
கண்ணைச் சுருக்கி உற்றுப் பார்ப்பாள்;
மூக்குக் கண்ணாடியின் இருமருங்கிலும்
இருகரம் குவித்துக்
கட்டுக்குள் அடக்க முயல்வாள்
நினைவோடையை.

தெரியாத அடையாளமும், அறியாத மானுடரும்
அடக்கியதில்லை
அவளது பாசத்தை!
தலைகோதிக் கன்னத்தை வருடுவாள் - பின்னர்
வருடிய கரங்களைத் தலையிலிடித்துச்
சொடுக்கெடுப்பாள் வாஞ்சையாய்;
திருஷ்டிஎன்று சிரிப்பாள்
இருமலினூடே.

கடலூரின் கூத்தப்பாக்கத்திலும் மருதாடிலும்
குமரப்ப நாயக்கன் பேட்டையிலும்
சென்னையின் ஆர்..புரத்திலும்
திருச்சியின் தில்லை நகரிலும்
இன்னும் பல இடங்களிலும்
பாட்டிகள் இருந்தார்கள்
இருக்கிறார்கள்
இருக்கப்போகிறார்கள்
அனைத்துப் பாட்டிகளும் அவ்வாறேதான்.

நிலையாமையால் வருந்தும் காற்று
தவிக்காமல் வீசும் - தம்
இயலாமையிலும் கதைபேசும்
பாட்டிகளுக்காக
என்றென்றும்

எப்போதும்!

Monday, February 19, 2018

இவனும் அகதியே

வசவுகளுக்குப் பழக்கப்பட்ட
வடகிழக்கிந்தியன்
திருவான்மியூர் சிக்னலில்
மிதிவண்டியில்
குரங்குப் பெடல் போடத் தயார் நிலையில்
பச்சை விளக்கிற்குக் காத்திருக்கிறான்

பச்சை ஒளிர்ந்த நொடிப்பொழுதில்
பின்னிருந்து ஒலியெழுப்பி
“*ம்மாளஎன்றபடி கடக்கிறான்
ஃபோர்டு எண்டேவர்க்காரன்


மிரண்டொதுங்கி
விழிபிதுங்கி
தடுமாறி நிற்கும்
வந்தேறியின் கண்களில் வழிய மறுக்கும்
கண்ணீரினூடே தெரிகிறது
அந்நியனெனும் பீதி

ஃபோர்டும், அதைத் தொடர்ந்து
இரண்டு பேருந்துகளும்
மூன்று ஆட்டோக்களும்
நான்கைந்து வண்டிகளும்
சீறிப் பாய்கின்றன

அவை எழுப்பிய புகை
கண்களை மறைக்க
தெளிவற்ற சாலையில்
நிலையற்ற வாழ்வின் ஒரு நாளைக் கடக்க
எத்தனித்துச் செல்கிறான்
புறக்கணிப்பின் அடையாளமாய்

அவனுக்குச்சாவு கிராக்கியும் தெரியாது;
கயித கஸ்மாலமும் புரியாது

புரிந்தென்ன ஆகப் போகிறது?

Sunday, January 14, 2018

இன்னாத்துக்கு அண்ணாத்தே எழுதுற?

கடந்த திங்கட்கிழமை - ‘ஒரே வேலை நாளில் எவ்வளவு வலைப்பதிவுகள் எழுத முடியும்?’ எனும் வினாவைச் சுயபோட்டியாக அமைத்துக் கொண்டேன். வாரத்தொடக்க வேலை நாளாதலால், வழக்கமான களைப்பும், கூடுதலான எரிச்சலும் சேர்ந்தே உளைச்சலைக் கூட்டினாலும், அதையே சவாலாக எடுத்துக்கொண்டு எழுதியபோது, நான்கு பதிவுகளை எழுத முடிந்தது.

சமீபத்தில் குறைந்திருந்த சில கேள்விகள் மீண்டும் எழத் தொடங்கின. அவற்றுள் முக்கியமானவை, “ப்ரோ, நீங்க ஏன் ஒரு புக் எழுதக் கூடாது? இல்ல, இதையே புக்கா ஏன் போடக் கூடாது?”, “எப்புடி இவ்ளோ எழுதுறீங்க?” இரண்டுக்குமான விடையளிப்பது அவசியம் என்ற நோக்கில் இதைத் தட்டச்சு செய்கிறேன்.

முதலில் சற்றே குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தஎப்புடி இவ்ளோ எழுதுறீங்க?”-வை அலசுவோம். முத்தாய்ப்பாக, சில எண்ணிக்கைகளை ஆராய்வோம். சென்னைப் போக்குவரத்து என்பது அனைவரும் பொருத்திப் பார்க்கக் கூடிய ஒரு விழுமியமாக இருக்கும் என நினைக்கிறேன். திருவான்மியூரிலிருந்து கோயம்பேடு செல்வதற்கான கால அவகாசம் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் 45 நிமிடங்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளலாம். இக்கால அவகாசத்தையும், கடக்கிற தூரத்தையும் அளவுகோலாக வைத்துக்கொண்டோமெனில், சராசரியாக ஒரு சென்னைவாசி ஒரு நாளைக்கு அரைமணி நேரத்தையேனும் பயணங்களில் செலவு செய்கிறார் என்று கிட்டத்தட்ட அப்படி-இப்படியான ஒரு முடிவிற்கு வரலாம். இதை மனத்தில் வைத்து ஆராய்வது இன்னமும் சுலபம்.

ஆங்கில-தமிழ்த் தட்டச்சு வழிமுறைகள் வந்த பிறகு கணிப்பொறியில் தமிழ் எழுதுவது என்பது எளிதான காரியமாகிவிட்டது. உங்கள் கணினியில் மென்பொருள் இல்லாவிட்டாலும், ‘இங்கிலிஷ் டு தமிழ் ஃபொனிட்டிக் டைப்பிங் ஆன்லைன்என்று கூகுளைக் கேட்டால், இணையத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யச் செய்யத் தமிழ்ச் சொற்களாக மாற்றும் இணைப்புகளைக் காண்பிக்கிறார் ஆண்டவர் (கூகுளாண்டவரைச் சொன்னேன், ஆழ்வார்பேட்டை ஆண்டவரை அல்ல).

இவ்வழிமுறையில் தமிழ்த் தட்டச்சு செய்யும்போது, அறிமுகமில்லாதவர் கூட, நிமிடத்திற்கு 12-லிருந்து 15 சொற்களைத் தட்டச்சு செய்ய முடியும். 12 சொற்கள் * 30 நிமிடங்கள் = 360 சொற்கள். மேலதிகமாக ஒரு பத்து நிமிடங்களைச் செலவிட்டால், சற்றேறக்குறைய 500 வார்த்தைகளைக் கொண்ட ஒரு கச்சிதமான வலைப்பதிவு தயார். என்ன எழுத வேண்டும் என்ற சிந்தனைக்கும், எழுத வேண்டும் என எண்ணும் கதை/கட்டுரை/இப்பதிவைப் போன்ற எதிலும் சேராத ஒரு மொக்கை குறித்த, கையேட்டிலோ, கைப்பேசியிலோ கிறுக்கப்பட் சில குறிப்புகளுக்கும் உபரியாக ஒரு 10 நிமிடங்களைச் சேர்த்து, குற்றம், குறைகளைச் சரிபார்ப்பதற்கு மேலும் ஒரு 10 நிமிடங்களை ஒதுக்கினால், ஒரு மணி நேரத்தில் ஒரு பதிவு முழுமையடைந்து விடும். அதாவது, பேருந்துப் பயண நேரத்தில் பாதிப் பதிவை முடித்திருக்க முடியும்.

எழுதலாம் என்ற எண்ணம் தோன்றினால் மட்டும் போதும், “ஐய்யய்யோ, அவன் நம்ம எழுதுனதப் படிச்சிட்டு கலாய்ப்பானோ?” என்ற எண்ணத்தைத் தூக்கி எறிவது மிக முக்கியமானது. சுமார் 110 பதிவுகளைத் தொட்டிருக்கும் எனது வலைப்பூவின் முதல் பதிவை இன்று வாசித்தால், எனக்கே சிரிப்பாக இருக்கிறது. இப்பதிவை இன்னும் ஒரு மூன்றாண்டுகளுக்குப் பின்னர் வாசிக்கும்போதும் சிரிப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், அச்சிரிப்பிலும், ஒரு பெருமிதம் தோன்றுகிறதல்லவா? என்னுடைய பழைய எழுத்துகளைப் பார்த்து நான் சிரிக்கிறேன் எனில், எனது தற்போதைய எழுத்தில் முன்னேற்றம் இருக்கிறதென்றுதானே அர்த்தம்?

மேலும், முதன்முதலில் எழுதத் தொடங்கும்போது, நம்மை ஊக்குவிக்கும் சில நபர்களைக் கூடவே வைத்திருப்பது அவசியம். எனக்கு என் பெற்றோர். கழிசடையான ஒரு பதிவிற்குக் கூடக் கைதட்டி ஆதரவளிக்கும் தாய்-தந்தை இருவரும் எனக்கான ஊக்கமருந்து. ஆனால், அவர்கள் செய்யும் மிக முக்கியமான மற்றொரு வேலை, என் எழுத்தை மெருகூட்டுவதற்காக அவ்வப்போது சில கட்டுரைகளையும், கதைகளையும் பரிந்துரைப்பது. அவற்றை வாசிக்கும்போது தோன்றும் சுயவிமர்சனங்களே எனது எழுத்தில் தெரியும் முன்னேற்றதிற்கான காரணம்.

இப்போது, மிக முக்கியமான கேள்வியானநீங்க ஏன் புக் எழுதக் கூடாது?/இதையே ஏன் புக்காப் போடக் கூடாது?”-க்கு வருவோம். ‘புக்என்று அவர்கள் குறிப்பிடுவது சில இடங்களில் நாவல் எழுதுவதையும், வேறு சில இடங்களில் இதைப் போன்ற குப்பைப் பதிவுகளையுமாக இருக்கும். எனக்கு நாவல் எழுதுவதற்கான பக்குவம் இன்னும் வரவில்லை. ஒரு கதையை எப்படித் தொடங்கி, பல்வேறு நிகழ்வுகளை இணைத்து, சிலவற்றை வர்ணித்து, சிலவற்றைத் தவிர்த்து, கோர்வையாக முடிப்பது எனும் ஆயக்கலை எனக்கு இன்னும் கைவரவில்லை. இதுதான் சத்தியம். உண்மையைத் தவிர வேறில்லை.

இரண்டாவதாக, இதைப் போன்ற பதிவுகளை ஏன் ஒரு புத்தகமாக எழுதக் கூடாது எனும் வினாவிற்கான விடை, இது புத்தகத்திற்கான எழுத்து அல்ல. இது என் யாகமோ, நோக்கமோ, தேடலோ அல்ல. எப்படிச் சிலருக்குத் திரைப்படங்கள் பார்ப்பதும், விளையாட்டு நிகழ்வுகளைப் பார்ப்பதும், வண்டியோ மகிழுந்தோ ஓட்டுவதும், வெளியூர்களுக்குப் பயணம் செய்வதும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தருமோ, அது போல எழுதுதல் எனக்கு அமைதியைத் தருகிறது. என் எண்ணவோட்டங்களை மேம்படுத்துகிறது. புதிதாக யோசிக்க வைக்கிறது. அவ்வளவே.

மூன்றாவதாக, இப்பதிவுகளை ஏன் புத்தகமாக வெளியிடக் கூடாது என்ற கேள்வி. நான் ஒன்றும் ஆசையே அற்ற ஞானி அல்ல. எனக்கும் இது போன்ற ஆசைகள் இருந்திருக்கின்றன. எழுதத் தொடங்கிய காலங்களில்ஃபேமஸ் ஆகணும், மத்தவங்கள கவனிக்க வெக்கணும்என்ற நோக்கத்தில் சில பதிவுகளை எழுதியிருக்கிறேன். அது ஒரு கட்டத்தில் உடைபட்டது. நான் குப்பையான சில புத்தகங்களை வாசித்தபோதுயோவ், பதிப்பகத்துல இதையெல்லாம் படிச்சுப் பாத்துட்டுத் தான் பதிப்பிச்சாங்களா?” என்று தோன்றியிருக்கிறது. அவ்வாறான வெளிப்பாடுகள் என்னுடைய இப்புத்தகத்திற்கு வந்துவிடக் கூடாது எனும் சுயநல எண்ணத்தில்தான் அதைச் செய்வதில்லை.

ஒரு நூல் என்பது ஒரு மொழியின் செழுமைக்கான வெளிப்பாடு. மொழியின் மகத்துவத்தை உணர்த்தும் ஒரு கருவி. அந்த எண்ணம் வந்த பிறகுதான் ஆங்கிலப் பதிவுகள் எழுதுவதை முற்றாகக் குறைத்தேன். அவ்வப்போது ஆங்கிலத்தில் எழுதும் பழக்கம் விட்டுப் போய்விடக் கூடாது என்பதால் எழுதுவதுண்டு. ஆங்கிலத்தில் நான் பெரிய பருப்பு கிடையாது என்பதுதான் நிதர்சனம். இப்படி இருக்கும்போது என் தமிழ் மொழிக்கு நான் செய்யக்கூடிய ஆகப்பெரிய துரோகம், அவசரகோலத்தில் கண்டதையும் வெட்டி ஒட்டிப் புத்தகமாக வெளிக்கொணர்வதுதான்.

இவற்றையும் தாண்டி, இலக்கியத்தையும், இசையையும், இன்ன பிற கலைகளையும் வணிகப் படுத்துவதோ, எதிர்பாலினத்தைக் கவர்வதற்கான ஒரு உபாயமாகப் பயன்படுத்துவதோ என்னைப் பொருத்தவரையில் கேவலத்தின் உச்சக்கட்டம். அதைவிட மட்டமான செயல் வேறேதுவும் இருக்க முடியாது. எனவே, “ப்ரோ, புக் எழுதலாமே!” எனும் பரிந்துரையை ஏற்கும் நான், “ப்ரோ, புக்கு கிக்கு ஏதாச்சும் போட்டீங்கன்னா ஃபேமஸ் ஆகலாம்ல? பொண்ணுங்க எல்லாம் கவனிப்பாங்கஎனும் வாக்கியம் முடியும் முன்னரே நாபிக்கமலத்திலிருந்து எச்சிலைத் துப்பியிருப்பேன் என்பதையும் புரிந்து கொள்ளவும்.


எழுத்து என்பது கலை அல்ல, அது ஒரு நிலை. ஒரு மனநிலை. இதைப் புரிஞ்சவன்லாம் கிங்கு, மத்தவனுக்கு சங்கு. நன்றி!

Saturday, January 13, 2018

இனியும் தாமரை வெல்லட்டும்!

ஆங்கிலத்தில் ‘கிளிக் பெயிட்’ என்றொரு சொல்லாடல் உண்டு. அதாவது, ஓரிரு வார்த்தைகளையோ, ஒரு புகைப்படத்தையோ பொறியாகப் பயன்படுத்தி, இணையதளத்தில் காண்பிக்கப்படும் இணைப்பைச் சொடுக்க வைப்பதற்கான ஒரு இலகுவான வழிமுறை. ‘வெல்லட்டும்’ எனும் சொல், ‘தாமரை’ எனும் சொல்லைத் தொடர்ந்து வரும்போது இணைப்பைச் சொடுக்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

ஆனால், வாசகப் பெருமக்களே, இது இந்தியாவை அடக்கும் - மன்னிக்கவும், ஆளும் - தாமரை பற்றியதன்று. மாறாக, இருபது வருடங்களாகத் தமிழ்த் திரையுலகில் உண்மையான தமிழ்ப் பாடல்களை எழுதி வரும் கவிஞர் தாமரை குறித்த பதிவு இது. எனவே, முழுமையாகப் படிக்காமல் “நீ அவங்க ஆளு தானேடா ****!” என்று கிளம்பாதீர்.

பரத்வாஜ் ரங்கனின் சமீபத்திய பதிவைப் படித்த பின்னரே, தாமரை எனும் கவிச்சுடர் திரையுலகில் நுழைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன எனும் உண்மையை அறிந்தேன். தாமரை என்றாலே கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் பாடல்கள் இயற்றுபவர் எனும் என் எண்ணத்தை உடைத்த திரைப்படம் ‘நானும் ரௌடிதான்’. ஆனால், ‘நந்தா’, ‘தெனாலி’ என்று அவரது பயணம் எப்போதோ தொடங்கியிருக்கிறது என்பது இன்றுதான் எனக்குத் தெரிந்தது (‘தெனாலி’யில் இடம்பெறும் ‘இஞ்சேருங்கோ’ என்ற பாடல் இவர் எழுதியதுதான்).

தாமரையின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிப் பேசுவதன்று இப்பதிவின் நோக்கம். தாமரை எனும் பாடலாசிரியரின் - கவிஞர் என்று குறிப்பிட்டால் திருவாளர் ஜெயமோகனும், அவரது பக்தாளும் என்னைப் பந்தாடுவார்கள் - ரசிகன்/விசிறி எனும் முறையில், அவரது பாடல்களின் சில தனித்துவமான நுணுக்கங்களைப் பேசுவதே விழைவு.

ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, அனிருத் ஆகியோரின் இசையைத் தாண்டி, தாமரை அவர்களின் பாடல்கள் மனத்தில் பதிவதற்கும், மீண்டும் மீண்டும் முணுமுணுக்கப்படுவதற்குமான காரணங்கள் மிகுதி. அவற்றையும், என் சிற்றறிவிற்கெட்டிய வரை, நான் கவனித்த சிலவற்றையும் எழுத ஆசைப்படுகிறேன். இப்பதிவு கோனார்த் தமிழுரையின் நெடுவினா போன்ற உணர்வைத் தருமாயின் அது என்னுடைய மொண்ணையான எழுத்துத் திறமேயன்றி, வேறில்லை.

அகவுணர்வுகளின் பேரெழுச்சி:

‘இதயம் துடித்தது’, ‘கண்கள் வியர்த்தன’ என்பது போன்ற வரிகளைக் கவிஞர் பலரும் காதல் கணங்களை விவரிக்கப் பயன்படுத்துவர் (நாம் கண்ணதாசனின் காலம் குறித்துப் பேசவில்லை. தற்போதைய - அதாவது, 2000க்குப் பிறகான - திரையுலகப் பாடல்கள் குறித்தே பேசுகிறோம்). புற உணர்வுகளுக்கும், புறச் சூழ்நிலைக்குமான விவரணைகளாகவே அமையும் அப்பாடல்கள் கேட்கக் கேட்கச் சலிப்பை ஏற்படுத்தக் கூடியவை; இவ்வகையான பாடல்கள் புறத்தின் மூலமாக அகவயத்தை அணுக முற்படுபவை. இத்தகைய பாடல்களில் வெகு சில, இசையமைப்பாளரின் மேதைமையால், காலம் கடந்து நிற்கும் பேறு பெற வாய்ப்புண்டு.

ஆனால், தாமரையின் பாடல்கள் அகவுணர்வுகளின் எழுச்சியால் புற உலகின் நிகழ்வுகளை அணுகுபவை. ‘நில்லாமல் வீசிடும் பேரலை, நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை’, ‘பார்த்த முதல் நாளே, காட்சி பிழை போலே’ போன்ற வரிகளில் தொனிக்கும் தனித்துவமே தாமரை எனும் கவிஞரின் (ஜெயமோகனை அலட்சியம் செய்கிறேன், ‘கெடக்குது களுத’ என்ற எக்காளத்துடன்) ஆற்றல்.

இவை தாண்டி, முதல் வரியிலேயே கேட்போரை வசீகரிக்கும் இனம்புரியாத ஏக்க உணர்வு தாமரையின் பாடல்களை அடையாளம் காண்பதற்கான எளிதான வழிமுறை. ‘ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே’ (‘ஹோசன்னா’ - விண்ணைத் தாண்டி வருவாயா), ‘நீயின்றி நானும் இல்லை, என் காதல் பொய்யும் இல்லை’ (வாரணம் ஆயிரம்) போன்ற வரிகள் அவற்றைத் தொடர்ந்து வரும் வரிகளுக்கான முத்தாய்ப்பாக அமைந்து, ரசிகரை உள்ளிழுக்கும் தன்மைகள் நிறைந்தவை.

வானம், மழை, முகில், மேகம்:

வானம் எனும் எல்லையற்ற பரப்பைக் கவித்துவம் நிறைந்த வரிகளில் வடிக்கும் தாமரையின் மகத்துவம், அழகியம் நிறந்த ஒன்று.

தொடுவானம் சிவந்து போகும்
தொலைதூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே
(‘ஓ சாந்தி சாந்தி’ (அ) ‘நீயின்றி நானும் இல்லை’ - வாரணம் ஆயிரம்)

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே
போகப் போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே
(‘நீயும் நானும்’ - நானும் ரௌடிதான்)

சொல்லா வார்த்தையின் சுகமே
மயில்தோகை போலவே என் மீது ஊறுதே;
எல்லா வானமும் நீலம்
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே
(‘அடியே கொல்லுதே’ - வாரணம் ஆயிரம்)

வண்ணம் நீயே, வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
(‘கண்கள் நீயே’ - முப்பொழுதும் உன் கற்பனைகள்)

போன்ற வரிகளில் தென்படும் வானம் சார்ந்த வர்ணனைகள் அனைத்துமே மனம் சார்ந்த உணர்வுகளையும், காலம் கடந்த தவிப்பின் விழுமியங்களையுமே விவரிக்கின்றன.

தாமரையின் தாமரை:

தாமரை எழுதும் நீர் அல்லது மழை குறித்த காட்சிகள் அனைத்திலும் தவறாமல் இடம்பெறும் அங்கம், தாமரை. பல்வேறு இடங்களில் தாமரையின் இயல்புகளை விளக்குவது, தன் பெயர் மேல் கொண்ட காதலா, மழையின் மீது கொண்ட அன்பா அல்லது இரண்டும் கலந்த விவரிக்க முடியாத உணர்வா என்பது கவிஞர் கூற வேண்டிய பதில். ஆனால், விளம்பரமாகத் தெரியாத அளவிற்கு அர்த்தம் பொதிந்த, ரசனை மிகுந்த வரிகள் அவை.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
(வாரணம் ஆயிரம்)

தாமரை இலைநீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
(‘கருகரு விழிகளால்’ - பச்சைக்கிளி முத்துச்சரம்)

ஒரு தாமரை நீரினில் இல்லாமல் இங்கே ஏன்
இரு மேகலைப் பாதங்கள் மண்மீது புண்ணாவதேன்
(‘நான் பிழைப்பேனோ’ - எனை நோக்கிப் பாயும் தோட்டா)

என்று எழுதும் அவர், உதடுகளை மலரிதழ்களுடன் ஒப்புநோக்கும் வரிகள் மேலும் அழகானவை.

இதழென்னும் மலர்கொண்டு கடிதங்கள் வரைந்தாய்(‘மறுவார்த்தை பேசாதே’ - எனை நோக்கிப் பாயும் தோட்டா)

இருவர் இதழும் மலரெனும் முள்தானே’ (‘தள்ளிப் போகாதே’ - அச்சம் என்பது மடமையடா)

அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரமாக அமுதம் ஊற்றெடுப்பது போலவே, தாமரையின் கவிதைகள் பெருகி வருகின்றன.

முதல் நீ, முடிவும் நீ; அலர் நீ, அகிலம் நீஎனும் வரிகளை ஆதிப் பெருவெடிப்பு நிகழ்ந்த காட்சியுடன் சேர்த்துப் பலமுறை சிந்தித்திருக்கிறேன். ஆதியும் அந்தமுமாய்ப் பெருவெடிப்பு நிகழ்ந்த அந்நொடியில் மலர் விரிவதைப் போல் சிதறி, பூமி எனும் கோளம் பிறப்பதான காட்சியின் உருவகமாகவே நான் இக்காதல் வரிகளைக் கருதுகிறேன்.

கேள்விகளும், எதிர்ப்பதச் சொற்களும்:

சற்றே கவனித்துப் பார்த்தால் தாமரையின் பாடல்களின் முதல்வரியிலோ, பாடலின் பெயரிலோ ஆசைகள் அல்லது நிறைவேறாத ஏக்கங்கள் ஆகியவையும், அவை சார்ந்த துடிப்புகள் தெளிவாகத் தென்படும். அவற்றின் வெளிப்பாடாக வரும் எதிர்ப்பதச் சொற்கள் கவித்துவத்தின் உச்சம்.

தள்ளிப் போகாதே - எனையும்
தள்ளிப் போக சொல்லாதே
(அச்சம் என்பது மடமையடா)

மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
(எனை நோக்கிப் பாயும் தோட்டா)

மறுபக்கம், கேள்விகளாக வெளிப்படும் பல்வேறு உணர்வுகளும் ரசிக்கத் தூண்டுபவை.

ராசாளி பந்தயமா?
நீ முந்தியா நான் முந்தியா பார்ப்போம்
(அச்சம் என்பது மடமையடா)

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே?
(‘ஹொசன்னா’ - விண்ணைத்தாண்டி வருவாயா)

நொடிப்பொழுதில் தோன்றிய சில பாடல்களின் வரிகளில் பிடிபட்ட பொருட்களையும், அழகையும் வைத்து மட்டுமே இப்பதிவை எழுதியிருக்கிறேன். முனைவர் பட்டம் பெறும் ஒருவரின் ஆராய்ச்சி மனோபாவத்துடன் அலசினால், இன்னும் பல்வேறு ஆச்சரியப்பட வைக்கும் புதையல்கள் சிக்கும் என்பதில் ஐயமில்லை.

சில நாட்களுக்கு முன்பு வரை, ‘திரைத்துறையில் பணியாற்றும் ஒரு பெண்ணைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் யாரைச் சந்திக்க ஆசைப்படுவாய்?’ எனும் சுய கேள்விக்கு நயன்தாரா, பார்வதி மேனன், அனு வர்தன் போன்றோரை மட்டுமே விடையாக வைத்திருந்தேன். தாமரையை விட்டுவிட்டதில் வருத்தமடைகிறேன் என்று சொல்லும் அதே இடத்தில், தரவரிசைப் பட்டியல் மறுசீரமைக்கப்பட்டு, தாமரை எனும் பெண் அதில் இப்போது முதலிடம் பெறுகிறார் என்று சொல்லவும் விழைகிறேன்.

தாமரையின் பாடல்கள் ஆழ்ந்த அமைதியை விதைக்கக் கூடியவை. அவரது பாடல்களின் பெருமைக்கும், அவை ஏற்படுத்தும் உள்ளமைதிக்கும் தலைவணங்கி, அவரது வரிகளையே அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்.


நீ வேண்டுமே, இந்த பிறவியைக் கடந்திட நீ போதுமே!

Monday, January 8, 2018

அடக்குனா அடங்குற ஆளா நீ: #கேஸ்ட்லெஸ்_கலெக்டிவ் கான்சேர்ட் எனும் குரல்

கல்லூரிக் காலங்களில், “எதுக்குடா கேஸ்ட் பேஸ்ட் ரிசர்வேஷன்? எக்கனாமிக் பேஸ்டா இருந்தாத்தானே நல்லது?” போன்ற கேள்விகளைக் கேட்டு கத்திக் கருவிக் கொண்டிருந்த பலருள் நானும் ஒருவன். பட்டப்படிப்பை முடித்து வேலைசெய்யத் தொடங்கிய பின்னர்தான், என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் பொதிந்திருக்கும் மனிதர்களிடையேயான ஏற்றத்தாழ்வு மெல்லமெல்லப் புலப்படத் தொடங்கியது. வேலை செய்யும் இடத்தில் இருந்த பல்வேறு படிநிலைகள் - நான் சொல்வது மேனேஜர், பாஸ், எம்ப்ளாயீ எனும் படிகளல்ல - சிந்தனையோட்டத்தைச் சற்றே தூண்டிவிட்டது. வேலைபார்க்கும் நிறுவனம் தொடர்பான வேலை செய்பவர்களை ஒரு குழாமாகக் கருதினால், அதற்குக் கீழேயுள்ள படியில் வருபவர்கள், நிறுவனம் தொடர்பான வேலை செய்பவர்களின் வசதிக்காக வேலை செய்பவர்கள், அதற்கும் கீழே இருப்பவர்கள் மேலே சொன்ன இரு படிகளில் இருப்பவர்களின் சக்கைகளாகப் பயன்படுத்தப்படுபவர்கள் (ஒரு சிறிய உதாரணம்: முதல் படி: சாஃப்ட்வேர் தெரிந்த இஞ்சினியர், இரண்டாம் படி: அவரைக் கொண்டுவந்து கூட்டிச்செல்லும் மகிழுந்து ஓட்டுநர், மூன்றாம் படி: இவர்கள் எல்லாம் சாப்பிட்ட தட்டைக் கழுவுபவர்கள், கழிப்பறைகளைச் சுத்தம் செய்பவர்கள்).

இதில் முதல் படியில் இருப்பவர்கள்தாம் இரண்டு மற்றும் மூன்றாம் படியில் இருப்பவர்களை தள்ளுகிறார்கள் என்று பார்த்தால், இரண்டாம் படியில் இருப்பவர்களும் மூன்றாம் படியிலிருப்பவர்களைத் தள்ளுகிறார்கள். இந்த பல்வேறு தட்டுகளைக் கொண்ட சமூகக் கட்டுமானத்தின் பாதாளத்தில் தொங்கிக் கொண்டிருப்பவர்களின் ஒரு எழுச்சிக் கொண்டாட்டமேநீலம் பண்பாட்டு மையம்கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடத்தியகேஸ்ட்லெஸ் கலெக்டிவ்இசை நிகழ்ச்சி.

கீழ்பாக்கம் சி.எஸ்.. பெயின்ஸ் பள்ளி மைதானத்தில் மாலை ஆறு மணிக்கு நிகழ்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 6.05-க்கு உள்ளே சென்ற எனக்கு ஆச்சரியம். நான் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. ‘போறோம், சேர்ல உக்காந்து கெத்தா நம்ம சென்னைக் கானா, ராப் எல்லாத்தையும் கேட்டுட்டு வர்றோம்என்ற மிதப்பில் வந்த என்னை அந்த ஆரவாரம் அடக்கியது. எனது கல்லூரியின் கலைவிழாவானடெக்கோஃபெஸ்ஸிற்கு இணையாக மேடை அமைக்கப்படிருந்தது. இறுதி ஒலிப் பரிசோதனைகள் நடந்தேறிக்கொண்டிருந்தன. மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில்கபாலி’, ‘மெட்ராஸ்திரைப்படங்களின் காணொளிக் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.

சரியாக 6.15 மணியளவில் குழுமியிருந்த அனைவரின் தன்னிச்சையான, ஒட்டுமொத்த ஆரவாரக் குரலுக்கு மத்தியில்கோட், சூட்சகிதம் சுமார் இருபது பேர் மேடையேறினர். திறந்தவெளி அரங்கையும் மீறி, அப்பெருமிதக் கூச்சல் காற்றில் கலந்துவிடாமல் அரங்கின் சுற்றுப்புறங்களிலேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்தது போலத் தோன்றியது.

முதலில் சென்னையைப் பற்றிய கானா பாடலில் தொடங்கிய நிகழ்ச்சி, அடுத்தபடியாக வந்த உரிமைகள் குறித்த ராப் பாடலில் சூடுபிடித்தது. “எங்க உரிமை எங்க கையில, நீங்க சொன்னத ஏண்டா செய்யிலஎனும் ஒற்றை வரி ஓட்டுப்போடும் அப்பாவி மக்களின் ஆள்காட்டி விரல் மையிலிருந்து, காலங்காலமாக ஏமாற்றும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியைப் பட்டவர்த்தனமாகக் காட்டியது. தொடர்ந்து வந்தது மெதுவான தாள லயத்தில் ஒலித்த ராக் வகையிலானமெட்ராஸின் மகிழ்ச்சிஎனும் பாடல். இம்மண்ணிற்கே உரிய இசையின் தன்மையை லேசாகக் கோடிட்டுக் காட்டுவதாகவும், ‘அந்நிகழ்ச்சி ஏன் நடக்கிறது?’ என்பதற்கான ஒரு மேலோட்டமான பதிலாக அமைந்தது இது. ‘மெட்ராஸின் மகிழ்ச்சி, அது நாம் தானே மச்சி; இது கானா நிகழ்ச்சி, இனி செய்வோம் புரட்சிஎனும் வரிகள் உணர்த்திய கருத்துக்கள் ஏராளம்.

இசைக் கலைஞர்கள் அனைவருமே ஆக்ரோஷமான இசை அம்சங்கள் கூடிய ஒரு பாடலுக்கு நடுவே, சற்றே மிருதுவான ஒலியமைப்புடன் கூடிய பாடல்கள் இடம்பெறுமாறு செய்திருந்தனர் என்பது, நான்காவதாக வந்த சென்னை மக்களின் இழிவைச் சொல்லும் பாடல். ‘ஊருக்குச் சொந்தக்காரன் ஊருக்கு வெளிய நின்னான்; பேருக்குச் சென்னைக்காரன் ஏதேதோ சட்டம் சொன்னான்’ எனும் ஒற்றை வரியில் கண்ணகி நகரின் அவலத்தைப் பேசிய ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாடலின் அடிநாதத்திற்குச் சற்றும் சளைக்காததாக இருந்தது இப்பாடல்.நீ வந்து சென்ற ஊரு டா, நான் இங்கயே பொறந்த வேரு டாஎனும் வரிகள்கருத்தவன்லாம்…’ பாடலின் ரௌத்திரத் தொனியாக இருந்தது.

நிகழ்ச்சியில் பாடிய, இசையமைத்த, மேற்பார்வை செய்த அனைவருமே சிறந்த கலைஞர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லையென்றபோதிலும், அறிவு (எ) அறிவரசன் எனும் ராப் பாடகர்/கவிஞரின் பாதிப்பு மட்டும் என் மனத்தில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். குடிமைப் பணித் தேர்வுகளுக்காக அவர் படித்துக் கொண்டிருப்பதாக நிகழ்ச்சியின் இறுதிக்கட்டங்களில் இயக்குநர் பா. ரஞ்சித் அறிவித்தது ஒரு காரணம் என்றே வைத்துக்கொண்டாலும் கூட, அறிவு-வின் பாடல்களின் அழுத்தமும், அவரது குரலின் வேகமும், அவ்வேகத்திலும் பிழையற்ற தமிழ் உச்சரிப்பே பிரதானமான காரணமாயிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

நம்ம நாட்டுல ரெண்டு வகையான கொலை நடக்குது; ஒண்ணு, மீனவக் கொலை; இன்னொண்ணு, ஆணவக்கொலை” என்று சீறிய அவர், “தள்ளுபடி செய்யுறாண்டா பணக்காரன் கடன, வெவசாயியத் தள்ளுறாண்டா கெணத்துல உடனே” எனும் வரியில் ஈர்த்தார்.

ஊருக்கு முன்னால பேசுறடா நீதிய, யாருக்குமே தெரியாம கேக்குறடா சாதிய”, “தலமுற தலமுறையாச் சாதி பாக்குற, நான் படிக்க வந்த அதையும் ஏன்னு கேக்குற” எனும் இட ஒதுக்கீட்டையும், அது சார்ந்த அரசியல் படிநிலைகளையும் பேசிய பாடல் மிக முக்கியமான ஒன்று.

ஜெய் பீம்” ராப் சிலிர்ப்பை ஏற்படுத்தியது எனில், தொடர்ந்து வந்த மீனவக்கொலை தொடர்பான பாடல் மற்றும் மனித மலங்களை மனிதரே அள்ளும் அவலம் பற்றிய பாடல் ஆகியவை நெகிழ்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தின.

ஒவ்வொரு பாடலின் ஒவ்வொரு வரியுமே சமூகத்தின் மீதான கேள்விகளை அடுக்கின, சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தாக்கின என்றாலும், மேலே குறிப்பிட்டவை தவிர்த்து சில வரிகள் மிக முக்கியமானவை:

கருவாடு கருவாடு நீ செத்துப் போனாக் கருவாடு
ஒரவாடு நீயும் ஒரவாடு வாழுற வரைக்கும் ஒரவாடு

ஐந்தறிவு உள்ளவரெல்லாம் மிருக ஜாதிடா
ஆறறிவு மனிதருக்கு ஒரே நீதிடா

வடசென்ன எப்புடி இருக்கும் யாருக்காச்சும் தெரியுமா
உண்மைய எடுத்து சொன்னா ஒருத்தனுக்கும் புரியுமா

உன் பாட்டனெல்லாம் வெச்சாண்டா என் பாட்டனுக்கு வேட்டு
அதனால தாண்டா தரான் இப்போ கோட்டாவுல சீட்டு

நாங்க ப்ளாட்ஃபாரம் எங்க நெலம எப்ப மாறும்?’ எனும் கடைசிப் பாடலின் மெட்டை அசைபோட்டுக்கோண்டே இதைத் தட்டச்சு செய்கிறேன். இவ்வேளையில், தமிழ்வாணி என்ற பெண் இசைக்கலைஞரை உள்ளடக்கிய (அவரே பேசும்போது சொன்னார், “பொதுவாக கானான்னா ஆம்பளைங்களத்தான் பாத்திருப்பீங்க. இப்போ லேடிஸோட உரிமையப் பேசுறதுக்கு, பாடுறதுக்கு நான் இருக்கேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது) சுமார் இருபது பேர் கொண்ட குழுவின் அனைத்து உறுப்பினர்களும் நிகழ்ச்சியின் முழு அவகாசத்திலும் ஒன்றாகவே இருந்தது சொல்லியே ஆக வேண்டிய ஒற்றுமைக்கான குறியீடு.

சுய அறிமுகத்திற்கான நேரத்தில் ஒவ்வொருவரும் தன்னை இசைக்கு அறிமுகப்படுத்தியதாக மற்றொருவரைக் குறிப்பிட்டதும், தாராவியின் குடிசைப் பகுதியிலிருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்களைச் சென்னைக் கலைஞர்களுடன் இணைத்த அம்மேடையும் காலத்தின் குரலாக எப்போதும் நினைவுகூறப்படும்.


இறுதியாகப் பேசிய ஒரு இசைக்கலைஞர் கூறிய “இனிமே லுங்கி கட்டின்னு தான் பாடணும்னு எங்கள யாரும் சொல்லக்கூடாது; நாங்களும் கோட், சூட் போட்டுன்னு பாடுவோம்” எனும் அறிவிப்பும், ரஞ்சித் கூறிய கம்பீரமான “இது அரசியல் மேடைதான். இசை எனும் கலையின் வழியே இங்கே அரசியல்தான் பேசப்பட்டது” எனும் கூற்றும் அடக்குமுறை எதிர்ப்பின் குரலாக ஒலித்துக்கொண்டேயிருக்கும்.